
உலகில் உள்ள எந்தவொரு நாட்டின் இறையாண்மையையும் எவராலும் பறித்தெடுக்க முடியாது என்பதற்கு இந்தோனேஷிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சான்று பகர்கின்றது. இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 8 பேரின் மரணதண்டனையை கடந்த செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்திய இந்தோனேஷிய நீதிமன்றம் அவர்களுக்கு நுசகம்பன்கன் தீவு சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியது. இவர்களில் போதைப் பொருள் வழக்கில் கைதான பெண் கைதியான வெலேசா என்பவருக்கான மரண தண்டனையை மாத்திரம் ஒத்தி வைத்திருக்கிறது. அவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இலங்கைத் தமிழரும் அவுஸ்திரேலிய வாழ் பிரஜையுமான மயூரன் சுகுமாரனும் உள்ளடங்குவார்.
அவுஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகள் மற்றும் அவுஸ்திரேலிய முன்னாள் ஜனாதிபதிகள், மனித உரிமை அமைப்புகள், பொது மக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையென அனைவரும் போராடியும் அவர்களுடைய தண்டனையை குறைக்கவோ அல்லது இரத்துச் செய்யவோ, ஒத்திவைக்கவோ முடியாமல் போனமை பாரிய துரதிர்ஷ்டமாகும். இவ்வாறானதொரு நிலை உலகில் இதுவரையும் எவருக்கும் ஏற்பட்டிருக்கவில்லை. அனைத்து நாடுகளின் கோரிக்கையும் இந்தோனேஷிய நாட்டின் இறையாண்மைக்கு முன்பு செல்லுபடியாகவில்லை. போதைப் பொருள் கடத்தல் என்பது அவ்வளவு கொடியதா என்பது அனைவரின் வாதமாக இருக்கலாம். ஒரு கொலையானது அச்சமயத்தில் முடியும் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால், போதைப் பொருளானது, அது பரவும் சகல இடங்களுக்கும், காலங்காலமாக பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியது. இதுவே இந்தோனேஷிய சட்டங்களின் இறுக்கத்துக்கான காரணம். ஆதலாலேயே அவர்கள் எவ்வித மன்னிப்புகளுமே இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆனால், உலக நாடுகளின் கோரிக்கைக்காகவாவது இந்தோனேஷிய ஜனாதிபதி மேற்படி எண்மரின் தண்டனையை மீள்பரிசீலனை செய்து பார்த்திருக்கலாம்.இன்று எதுவுமே பயனற்றுப் போயின. எண்மரின் சடலங்களும் புதைக்கப்பட்டுவிட்டன. ஒரு சில மணிநேரத்துக்கு முன்பு சொந்தங்களோடு உறவாடிய உயிர்கள், இன்று வெறும் சடலங்களாக மண்ணில் புதைக்கப்பட்டு விட்டன. இவர்களின் இறுதி தருணங்கள் மிகவும் கொடியவை. தமது இறப்பை அறிந்து சுமார் ஒரு மாதகாலமாக இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய சவப்பெட்டி முதல் கல்லறை சுருவம் வரை அனைத்தையும் அவர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள். இந்தக் கொடிய நிமிடத்திலேயே அவர்கள் செயற்கை மரணத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
பன்னிரெண்டு பயிற்றப்பட்ட துப்பாக்கிதாரிகளில் மூவரின் துப்பாக்கிச் சன்னங்களே அவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்று எல்லாமே முடிந்துவிட்டது. இனி அவர்கள் திரும்பி வரப்போவதில்லை. "சட்டம் அனைவருக்கும் சமம்' என்பதை மீண்டும் மீண்டும் இத்தண்டனை அழுந்தச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
பாலி ஒன்பது (Bali Nine)
இந்தோனேஷிய அரசின் சட்டங்களின் படி போதைப் பொருள் கடத்தல் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அவ்வாறு வெவ்வேறு நிலைகளில் போதைப் பொருள் கடத்தலை மேற்கொண்ட ஒன்பது பேர் பாலியில் கைது செய்யப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்தனர். இவர்களில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாரன் (வயது 33) மற்றும் அன்ட்ரூ சான் (வயது 31) அத்தோடு பிரேசிலைச் சேர்ந்த ரொட்ரிக்கோ குலர்கே, இந்தோனேஷியாவின் சைனல் அபி, நைஜீரியர்களான சில்வஸ்ரர், ரகிம் சலாமி, ஒக்வுதுலி மற்றும் ஓயத்தன்சே, கானாவைச் சேர்ந்த மாட்டின் அன்டர்சன் ஆகிய ஒன்பது பேர் இத்தண்டனைக்கு ஆஹானார்கள்.
கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி 8.3 கிலோ கிராம் ஹெரோயினை இவர்கள் இந்தோனேஷியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே பாலியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் அவுஸ்திரேலியர்களான இருவருமே முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர். இவர்களின் வழக்கு கடந்த 10 வருடங்களாக இடம்பெற்று வந்தாலும் கடந்த சனிக்கிழமையே இவர்களுக்கான மரணதண்டனை தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய காவல் துறையினரே இவர்கள் பற்றிய தகவல், பெயர், கடவுச்சீட்டு இலக்கங்கள் போன்றவற்றை இந்தோனேஷிய காவல்துறைக்கு வழங்கியிருந்தனர். இதனடிப்படையில் ஒருவாரம் இவர்களை கடுமையாக அவதானித்த பின்பே இந்தோனேஷிய காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்படும் போது 18 வயதிற்கும் 28 வயதிற்கும் இடைப்பட்டவர்களாகவிருந்தனர்.
2006இல் இவர்களுக்கு முன்னோடியாக செயற்பட்ட மயூரன் சுகுமாரன், சான் ஆகியோருக்கு சுட்டுக்கொல்லும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இப்படியான தீர்ப்பு வழங்கப்படுவது இந்தோனேஷிய நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். இந்தோனேஷிய சட்டப்படி போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை வழங்க முடியாதென மயூரன், சான் ஆகியோர் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இதனை வாசித்த 9 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு இவ்வழக்கை 2007இல் தள்ளுபடி செய்தது. ஆனாலும், 9 நீதிபதிகளில் 3 பேர் மரணதண்டனை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்தனர். போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்ட 9 பேருக்கு இந்தோனேஷியா "பாலி ஒன்பது' என பெயரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷிய சட்டப்படி கைதிகளுக்கு 72 மணி நேரத்துக்குள் தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து முறையாக அறிவிக்கப்படும். கடுமையான முயற்சிகளின் பின்பும் இவர்களின் விடுதலை உறுதிப்படுத்தப்படவில்லை. இறுதியில் இந்தோனேஷிய ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே இவர்கள் அனைவரும் நுசகம்பங்கன் தீவிலுள்ள பாதுகாப்பு மிக்க சிறைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இவர்களுடைய தண்டனை காலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைய வேண்டிய சூழ்நிலையில் கைதிகளுக்கு அவர்களுடைய உறவினர்களை கடைசியாக சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இச்சந்திப்பின் பின் மெல்பேர்ன் பாதிரியார்கள் கைதிகளுக்கு ஆறுதல் கூறியதுடன் 9 பேரின் மரணதண்டனையை நிறைவேற்ற அருகிலுள்ள காடு தயார்படுத்தப்பட்டு தண்டனை நிறைவேற்ற பயிற்சிபெற்ற 12 அதிகாரிகளின் துப்பாக்கித் தோட்டாக்கள் செவ்வாய் நள்ளிரவு கிடைத்த சமிக்ஞையின் பின்பு அவர்களின் உடல்களை பதம் பார்த்தன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பரிசோதனையின் பின்பு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இறுதியில் வெள்ளை நிறப் பெட்டியில் இவர்களின் உடல்கள் அம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன.
10 வருட சிறைவாழ்கை
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட மயூரன் சுகுமாரன், சான் ஆகியோர் தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்பாக 10 வருட சிறை தண்டனையை அனுபவித்து முடித்திருந்தனர். இந்த பத்துவருட சிறைவாழ்வில் அவர்களுடைய நடத்தை பல்வேறாக மாறியிருந்தது. இதில் மயூரன் சுகுமாரன் தனது ஓவியக் கலையை பயன்படுத்தி சிறையில் பலவித ஓவியங்களை வரைந்து அவற்றை ஏலத்தில் விற்று அவற்றின் மூலம் பெறும் வருமானத்தை உலகில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க செலவழிக்கும்படி கோரியிருந்தார்.
அதேபோலவே மற்றொரு அவுஸ்திரேலியரான அன்ட்ரூ சான் தன்னுடைய மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டு நிறைவேற்றப்பட சிலமணி நேரங்களே எஞ்சியிருந்த நிலையில் தனது நீண்டநாள் தோழியான பெப்யந்தி என்ற இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் இறுதிவரையிலும் தாம் விடுதலை செய்யப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையிலேயே வாழ்வதாக அவரே தெரிவித்தும் இருந்தார். எனினும் அவரது நம்பிக்கை தோற்றுப்போனது.
இறுதியில் ஒத்திவைக்கப்பட்ட தண்டனை
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரில் எண்மருக்கே மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணான போதைப் பொருள் வழக்கில் 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மேரி ஜேன் வெலொசோ என்பவருக்கு இறுதி நேரத்தில் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. போதைப் பொருளை கடத்துவதற்கு மேரியை தான் பயன்படுத்தியதாக கூறி பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் சரணடைந்ததாலேயே இத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.தண்டனை பெற்றுள்ள மேரியின் 6 மற்றும் 12 வயதுடைய இரு மகன்களும் சிறைச்சாலைக்குச் சென்று இவரை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வழக்கு மீள் விசாரணையின் பின் இவருடைய தண்டனை தொடர்பான விபரங்கள் வெளியிடப்படலாம்.
சர்வதேசமும் உறவுகளும்
உலக நாடுகள் பல மரணதண்டனையை ஒழிப்பதற்காக நடவடிக்கையெடுத்து வரும் சூழ்நிலையில் இந்தோனேஷியா தனது தண்டனையை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென ஐ.நா.சபை கோரியதுடன் அதன் பொதுச் செயலர், சர்வதேச சட்டங்களின் படி மிகக் கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கே மரணதண்டனை விதிக்கப்படும். ஆனால், போதை பொருள் கடத்துதல் கொடூரமான குற்றச்செயலாக கருத முடியாது எனவும் உடனடியாக தண்டனையை நிறுத்த வேண்டுமெனவும் கேட்டிருந்தார்.
அத்தோடு இத்தண்டனையை இரத்துச் செய்ய வேண்டுமென அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் தற்போதைய பிரதமர் ரொனி அபொட் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்கள் விடுதலை செய்யப்படுமிடத்து இதுநாள் வரையும் வழக்கிற்காக செலவான முழுத்தொகையையும் திருப்பித் தருவதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்திருந்தது. மேலும் தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில் இந்தோனேஷிய பிரான்ஸ் உறவுகள் கடுமையாக பாதிக்கப்படுமெனவும் பிரான்ஸ் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்தோனேஷியாவுக்கான தூதுவரை அவுஸ்திரேலியா திருப்பி அழைத்துள்ளது. பயங்கரவாத மற்றும் ஆட்கடத்தல் ஒழிப்பு விவகாரங்களில் அவுஸ்திரேலியாவின் முக்கிய பங்காளி நாடான இந்தோனேஷியாவிலிருந்து தூதுவரை மீள அழைத்துள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
இந்நிலையில் தண்டனைக்கு சிலமணி நேரங்களுக்கு முன்புகூட உறவினர்களுக்கு கைதிகளை சந்திக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதில் சுகுமாரனின் சகோதரி மயங்கி விழுந்த நிலையில் தூக்கிச் செல்லப்பட்டதுடன் அவருடைய தாயார் கண்ணீர் மல்க கதறினார். தன்னுடைய மகன் திருந்தி வாழ இன்னொரு சந்தர்ப்பம் வழங்கும் படி கெஞ்சினார். அதேபோலவே சானின் தாயாரும் கதறினார். சிறையை நெருங்கும்போது அவர்கள் மெர்சி என்று கதறினர். மேலும், உலகளவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. ஆனால், அவையாவும் இந்தோனேஷிய அரசுக்கு கேட்கவில்லை. தண்டனையை சொன்னவாறே நிறைவேற்றியது.
இன்று போதைப் பொருள் கடத்தலுக்கு கெடுமையான தண்டனை வழங்கும் நாடாக இந்தோனேஷியா மாறியுள்ளது. மன்னிப்பு என்பதை இந்தோனேஷியா மறுக்கிறது. சுனாமியால் பாதித்தபோது இந்தோனேஷிய நாட்டை எவரும் மறக்கவில்லை. மயூரன் கூட உதவியிருப்பார். ஆனால், இன்று குற்றவாளிகள் என்று அவர்களை இந்தோனேஷியா தண்டித்துவிட்டது. இன்று உலகம் முன்பு குற்றவாளிகளாக கைதிகள் தெரியவில்லை. இந்தோனேஷியாவே தெரிகிறது.
க.பிரசன்னா
03.05.2015


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக