
இன்று மனிதனின் பண்பாட்டு கலாசாரங்களில் மேலைத்தேய கலாசாரமும் அதிகளவில் பங்கு போட்டு கொண்டுள்ளது. உணவு, உடை, தொழில் என்பவற்றை தவிர்த்து தற்போது வாழ்க்கை முறையிலும் இதனை அதிகம் காணக்கூடியதாக இருக்கிறது. அப்படியொரு புதிய கலாசாரம் தான். “சேர்ந்து வாழ்தல்' (Living Together) இவை பழையது என சொன்னாலும் தற்போது இதன் வளர்ச்சி அதிகம். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்தலைக் குறிக்கும். ஆனால் இவர்களின் வாழ்க்கையில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களும் இடம்பெறும் என்பது தான் தமிழ் கலாசாரத்தை விரும்புபவர்களுக்கு தெரியும் கசப்பான உண்மை.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் என்ற வரையறைக்குள் வாழ விரும்பாமல் மனமொத்து சேர்ந்து வாழ்தலையே குறிக்கும். இதனை நாம் பிரபலங்களின் வாழ்க்கையில் அதிகமாக காணலாம். கமல்ஹாசன் கௌதமி,ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இதில் ஏஞ்சலினா ஒரு குழந்தை பிறந்த பின்பே அண்மையில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் பிரபலம் என்பதால் சமூகத்தில் இவ்விடயம் பெரிதாக பேசப்படுவதில்லை. ஆனால் எமது சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளவுமில்லை.
உலகில் புரிந்துணர்வுடன் திருமணம் செய்து கொண்டவர்களே 3 மாதத்திற்குள் விவகாரத்து கேட்டு நீதிமன்றம் செல்லும் நிலை உருவாகியிருக்கும் நிலையில் இந்த சேர்ந்து வாழ்தல் முறையானது பல வருடங்கள் பிரிவு இல்லாமல் நீடித்து செல்வதை அவதானிக்க முடிகிறது. இதற்காக இந்த முறை சிறந்தது என்று கூற முற்படவில்லை. கலாசாரம் என்ற வகையில் பார்க்கும் போது தவறாக தெரியலாம். ஆனால் நம் சட்டங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் இன்று வரை சேர்ந்து வாழும் முறையைப் பற்றி தெளிவான, சரியான புரிதலை ஏற்படுத்தவில்லை.
இம்முறை இலங்கையில் அதிகம் குறைவு என்றாலும் தெற்காசிய நாடுகளில் இதன் பரவல் அதிகம். திருமணத்துக்குப் பிறகும் பிடித்தால் இணைந்து வாழ்வதும் சரியாகாவிட்டால் விட்டு விலகுவதும் இன்று சகஜமாகிப் போனது ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் திருமணத்துக்கு முன்பே இணைந்து வாழ்வது பிடித்திருந்தால் அப்படியே தொடர்வது, முரண்பாடுகள் அதிகரித்தால் சத்தமின்றி பிரிவது என்கின்ற கலாசாரமும் பெருகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் திருமணம் என்கின்ற எல்லைக்குள் கிடைக்கின்ற அங்கீகாரமும் பாதுகாப்பும் இத்தகைய உறவுகளில் நிச்சயம் இருக்காது.
தற்போதைய காலத்தில் திருமணம் புனிதம் இழந்து போய்விட்டது. இது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் பெற்றோரால் நிச்சயித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் பொருந்தும். பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பை விட திருமணமான பின்பே அதிக வன்முறைகள் இடம்பெறுகின்றமை யாவரும் அறிந்ததே. இந்த சம்பவங்களே இன்றைய இளைஞர், யுவதிகளை திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்குள்தள்ளுகின்றது. இதனாலேயே இவர்கள் துணையும் வேண்டும். ஆனால் திருமணம் மூலம் உண்டாகும் பிரச்சினைகளில் இருந்தும் விடு பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.
இலங்கையைப் பொறுத்த வரை 18 வயதிற்கு முன் மனம் ஒத்து வாழ்ந்தால் கூட அது சட்டப்படி குற்றமாகும். சில வேளை சிறுவர் துஷ்பிரயோகமாகவும் அமையும் ஆனால் மேலைத்தேய நாடுகளில் அவ்வாறில்லை. பெற்றோரே இதற்கு வழிசமைத்து கொடுத்து விடுவார்கள். ஆனால் அந்த வாழ்க்கை முறை நிலையானதல்ல. இதனை தற்கால சமூகமும் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. திருமண உறவில் சட்டச் சிக்கல் வரும் போது Alimony (ஜீவனாம்சம்) என்ற ஆங்கில வார்த்தை மனைவிக்கு கணவன் கொடுக்கும் ஜீவனாம்சத்தை சில நேரம் கணவனுக்கு மனைவி கொடுப்பதையும் குறிக்கிறது. அடூடிட்ணிணதூ என்றால் சேர்ந்து வாழும் முறையில் ஒரு ஆணுடன் இணைந்து வாழும் ஒரு பெண்ணுக்கு நஷ்ட ஈட்டைக் குறிக்கிறது. அவை எமது நாடுகளில் இல்லை. முதன் முதலில் கல்போர்னியா உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் பிரபலமடைந்த சொல். அந்த நாட்டின் நீதிமன்றங்கள் வாய்மொழி அல்லது எழுத்து மூலம் சேர்ந்து வாழ்தலில் ஒப்பந்தம் ஒன்று தேவை என சில தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளன. இதேபோல் இப்படி லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளாலேயே அமெரிக்காவில் வன்முறைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் இம்முறை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவேளை இப்படி வாழும் போது குழந்தை பிறந்துவிட்டால் அவற்றுக்கு இந்திய சட்டங்கள் பின்வருமாறு பதில் கூறுகின்றன. இவ்வாறு வாழ்பவர்களை குறிப்பாக பெண்களை கீப் என்று சில வழக்குகள் குறிப்பிட்டுள்ளன. சேர்ந்து வாழும் உறவுமுறையின் மூலம் பிறக்கும் குழந்தைகள் பிரிக்கப்படாத மூதாதையர் சொத்தில் பங்கு கோர முடியாது.
மேலும் பெற்றோரின் சுய வருமானத்தில் மட்டுமே அத்தகைய குழந்தைகளுக்கு உரிமையுண்டு. இதற்காகவே திருமணத்திற்கு முன்பு உளவியல் ஆலோசனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இவற்றில் அக்கறையில்லாத தன்மையினால் தான் விவாகரத்துக்குப் பிறகு மறுமணத்திற்குப் பதிலாக திருமணமில்லாத உறவில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சில வேளைகளில் இவ்வாறான உறவுகளின் மூலம் குழந்தை பிறந்து பிரிந்து விட்டால் அந்தப் பெண்ணின் பாதுகாப்பு, குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குரியாகி விடும். இதை ஒரு சிலர் தனிமனித சுதந்திரம் என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு சேர்ந்து வாழ்பவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. மேலும் இவ்வாறு வாழ்பவர்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் செல்லுபடியாகாது. மேலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இம்மாதிரியான உறவுகள் வராது என்றும் சில சட்டங்கள் உறுதியளிக்கின்றன. பிள்ளைகளின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பெற்றோரே காரணம் என்று கூற முடியாது. வீட்டில் கிடைக்காத அன்பு, அரவணைப்பு, பாசம் இம்முறையினூடாக கிடைக்கலாம் என்று நினைப்பதே இதற்கு காரணம். மாறாக வெறும் பாலியல் தேவைகளுக்காக மாத்திரம் இவ்வாறு செல்வதில்லை.
சில வேளைகளில் அவசர முடிவு என்று சொல்லி அவசரமாகவே விலகி வருகிறார்கள். ஆனால் பிரச்சினை அப்போதே முடிவதில்லை. பழகிய காலங்களின் நினைவுகள், குற்ற உணர்ச்சிகள் இறுதியில் அவர்களை மன அழுத்தத்திற்கு இட்டுச் செல்கின்றது. தற்போது மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்நிலைமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். திருமணம் என்ற பந்தத்தை விரும்பாதவர்களே இந்நிலையை அடைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்களிடம் குறிப்பாக இந்நிலையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி 75.6 வீதமான 20 29 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் திருமணம் செய்யவில்லை. 1980 இல் 26 ஆக இருந்த திருமண வயது 2000 ஆம் ஆண்டில் 30 ஆக உயர்ந்துள்ளது. 29 வீத ஆண்கள் ஒருபோதும் திருமணம் செய்ததில்லை. இவர்கள் குடும்பம், பிள்ளைகள் என்பதை விடுத்து சுதந்திரமாகவே வாழ முற்படுகின்றனர். இதுவே இந்நிலைக்கு காரணம். விட்டுக் கொடுப்பின்மை, சீதனப் பிரச்சினைகள், குடும்ப வன்முறைகள் என்பனவே திருமணம் என்ற எல்லைக்குள் செல்ல இவர்களை அனுமதிப்பதில்லை. ஆனால் கட்டுப்பாடில்லா ஒன்றை அவர்கள் அனுபவிக்க விரும்புகின்றனர். அவற்றின் விளைவே இந்த திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் முறையாகும்.
இவை கலாசாரத்திற்கு கேடு விளைவிக்கும் செயல் என்று நாம் கருதுவோமேயானால் முதலில் கலாசாரங்களில் உள்ள பாரம்பரிய கட்டுப்பாடுகளை தற்கால இளைஞர், யுவதிகளுக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் கலாசாரங்களும் அதன் மீதுள்ள கட்டுப்பாடுகளும் பிறர் விரும்பும் வகையில் அமைந்தால் மட்டுமே நாம் நினைக்கும் இந்நிலையினை தவிர்க்க முடியும். சில வேளை திருமணம் என்பது எதிர்காலத்தில் கடினமாகிப் போனால் நிச்சயம் உங்களால் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்தலை தடுக்க முடியாமல் போகும்...
க.பிரசன்னா
26/11/2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக