கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

1 மார்ச், 2024

பல்கலைக்கழக நுழைவுத் தகுதியில் வில்கமுவ கல்வி வலயம் முதலிடம்


மலையகத்திலிருந்து உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு மாணவர்கள் எவ்வாறான சிரமங்களை எதிர்கொள்கின்றார்களோ, அதைவிட அதிகமான நெருக்கடிகளை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையை முன்னெடுப்பதில் எதிர்கொள்கின்றனர். இவற்றில் பிரதானமாக பொருளாதார நெருக்கடியை குறிப்பிட முடியும். குறிப்பாக பல்கலைக்கழக கல்வி நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நெருக்கடி நிலைமைகளில் ஏழு வருடங்கள் கூட கல்வியை தொடர வேண்டிய நிலையை உருவாக்குகிறது. எனவே அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு நாம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்? இவ்வாறான விடயங்களை அரசியல் ரீதியாக மாத்திரம் தீர்க்க முடியாது. அதற்கு சமூக பொறுப்பு கொண்ட அனைவரும் முன்வருவதும் அவசியமாகும்.

பெரும்பாலான மாணவர்கள் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளையே அதிகம் தெரிவு செய்வதை பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடிகின்றது. அதற்கு எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள வளங்களும் முக்கிய காரணமாகும்.

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தாவது, “இலவசக் கல்வி கிடைப்பதில் தாமதம், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கலைப்பிரிவுகளே அதிகம் உருவாக்கப்பட்டமை போன்ற விடயங்கள் விஞ்ஞான, கணித பாடங்களுக்கான இடைவெளியை அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் கலைத்துறையை தெரிவு செய்பவர்கள் மீண்டும் ஆசிரியர்களாக இணைந்து கொண்டாலும் விஞ்ஞான பிரிவை தெரிவு செய்பவர்கள் மீண்டும் ஆசிரியர்களாக வருவது மிகவும் குறைவு. இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொள்ளாமல் கல்வியில் மேம்பட்ட சமூகத்தை உருவாக்கமுடியாது. எனவே மாணவர்கள் இல்லாதது எமது பிரச்சினையல்ல. ஆசிரியர்கள் இல்லாமையே எமது பிரச்சினை. இதற்காகவே இந்தியாவிலிருந்து துறைசார்ந்த ஆசிரியர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது” என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக்கழகத்தில் கற்பவர்களை பகுதி நேர ஆசிரியர்களாக உள்வாங்கும் ஒரு திட்டம் முதலாவதாக பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு பெறுபேற்றை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டது. பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் சமூகம் சார்ந்த தீர்மானங்களை முன்னெடுக்காவிட்டால் மலையகத்தில் இவ்வாறான பிரச்சினைகள் நீண்டு கொண்டே செல்லும். நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உயர்தரத்துக்கு வெளிமாட்ட மாணவர்களை இணைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையால் நன்மைகளும் இருக்கின்றன. அதிக மாணவர்களை வகுப்புகளில் இணைப்பதால் ஆசிரியர்களுக்கான வேலைப்பளு மேலும் அதிகரிக்கப்படுகின்றது. அத்துடன் மேலதிக வகுப்பறைகளை உருவாக்குவதற்கான இடப்பற்றாக்குறையும் உருவாகின்றது. அதனை தவிர்ப்பதற்கு இவை வாய்ப்பேற்படுத்தியது.” எனவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக அனுமதியில் மத்திய மாகாணம் தொடர்ச்சியாக தேசிய அளவில் பின்னடைவையே சந்தித்துள்ளமையை மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் அறியமுடிகின்றது. பல்கலைக்கழக நுழைவுத் தகுதிக்கான பாடசாலை பரீட்சார்த்திகளின் செயல்திறன் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயம் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கம்பளை, வலப்பனை மற்றும் வில்கமுவ கல்வி வலயங்கள் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. வத்தேகம, கட்டுகஸ்தோட்டை மற்றும் ஹங்குராங்கெத்த கல்வி வலயங்கள் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்துள்ளன. (அட்டவணை 01) எனினும் இவை பல்கலைக்கழக தெரிவில் தாக்கம் செலுத்தவில்லை.

எனவே பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்கள் எவ்வாறான துறைகளை தெரிவு செய்கின்றனர். இதுவரை மாணவர்கள் உள்வாங்கப்பட்ட துறைகள் என்ன என்பதை நாம் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

பெருந்தோட்ட பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி பெற்று கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மாணவர்கள் தொடர்பான தகவல்களை நாடுமுழுவதுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும் 2 வருடங்களின் பின்னர் சில பல்கலைக்கழகங்கள் தகவல்களை வழங்கிய போதும், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தகவல் கோரிக்கையை புறக்கணித்திருந்தன.

களனி பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்தில் நகர், கிராமம், தோட்டத்துறைகளில் இருந்து மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது. களனி பல்கலைக்கழகத்தில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெருந்தோட்ட மாணவர்கள் என்ற அடிப்படையில் தகவல்கள் சேமிக்கப்படவில்லை. 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறானதொரு தரவுத்தளம் உருவாக்கப்பட்டது. ஆனால் அவை உண்மையான மதிப்பீடுகளில் இருந்து மாறுபடலாமெனவும் தெரிவிக்கப்பட்டது.

களனி பல்கலைக்கழகத்தில் 2020 ஆம் ஆண்டு மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், தினசரி கூலித் தொழில் செய்பவர்களின் பிள்ளைகளான 12 பேர் எட்டு கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு கல்வி கற்கின்றனர். இவர்களில் நான்கு ஆண்களும் எட்டு பெண்களும் உள்ளடங்குவர். (அவை தொடர்பான விபரங்களை அட்டவணை 02 இல் காணலாம்)






“மாற்றத்தை எம்மிலிருந்தே
உருவாக்க வேண்டும்”


கந்தலோயா தோட்டம் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் நஸ்டத்தில் இயங்கும் தோட்டமாகும். இங்கு கிழமைக்கு 3 நாட்களே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஏனைய நாட்களில் கூலி வேலையை நம்பியே இங்குள்ள மக்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவமளிக்க தவறியதில்லை. இதுவே கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.கருணாகரன் தெரிவித்தார்.

கந்தலோயா தமிழ் வித்தியாலயம் 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு அதிபரை மாத்திரமே கொண்டியங்கிய பாடசாலையாகும். 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு ஆசிரியர் நியமனம் கிடைக்கப்பெற்றது. 2006 ஆம் ஆண்டு ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அரசாங்கத்தால் புதிய கட்டிடம் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் உடைந்த தொழிற்சாலையிலேயே இயங்கி வந்தது.

ஆரம்பத்தில் கந்தலோயா பாடசாலை தரம் 9 வரையே காணப்பட்டது. “உதவி நண்பர்கள்” அமைப்பின் ஊடாக 2012 இல் 10 ஆம் வகுப்பும் 2013 இல் சாதாரணத்தரமும் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களின் உதவியுடனேயே 2016 இல் உயர்தர கலைப்பிரிவும் 2018 இல் உயர்தர வர்த்தக பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வரை சாதாரணத்தரத்தில் 80 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 37 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். இதில் கந்தலோயா தோட்டத்தில் மாத்திரம் 27 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர்.

மாணவர்களுக்கான தயார்ப்படுத்தல்கள்

மாணவர்கள் இங்கு பரீட்சைக்கு மாத்திரமல்லாது, கடுமையான சமூக சேவைக்கும் பழக்கப்படுத்தினோம். எங்களுடைய பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்த போதும் சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சையின் பின்னர் பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் தங்களுடைய பெறுபேறுகள் வரும் வரையும் பல்கலைக்கழகம் சென்றவர்கள் விடுமுறை காலத்திலும் தொண்டர் ஆசிரியர்களாக எமது பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதனால் ஆசிரியர் பற்றாக்குறை பெரிய சவாலாக இருக்கவில்லை.

மீராபாரதி என்பவரால் தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் பயனாக லங்கா ஹெல்ப் பவுண்டேஷன் எனும் அமைப்பால் ஆண்கள், பெண்களுக்கான விடுதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமையால் மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்கள் இரவிலும் அதிகாலையிலும் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

எமது பாடசாலை தூர நோக்குடன் செயற்பட்டமையால் பல்கலைக்கழகத்திலிருந்து விடுமுறைக்கு வரும் மாணவர்கள் கந்தலோயா பாடசாலையிலேயே தங்களுடைய விடுமுறையை கழிப்பார்கள். இதில் ஒரு கட்டமாக கொவிட் காலப்பகுதியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட போதும், குறித்த சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுத்தமையால் அந்த வருடம் 12 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து 10 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றிருந்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறை சவாலான விடயமா?


நுவரெலியா மாவட்டத்தை தவிர்த்து மலையகப் பாடசாலைகளில் பொதுவாக ஆசிரியர் பற்றாக்குறை என்பது பரவலாக பேசப்படும் விடயமாக இருந்தாலும் ஆசிரியர்களை உருவாக்குவதற்கான நடவடிக்கையை நாங்களே மேற்கொள்ள வேண்டும். கந்தலோயாவில் தற்போது 27 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். எதிர்காலத்தில் கந்தலோயா பாடசாலை முழுவதுமாக கந்தலோயா மாணவர்களை கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்பப்படும்.

உலகம் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியிருக்கும் நிலையில் மலையகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி பின்தங்கியிருப்பதால் மலையக பாடசாலைகள் பின்தங்கியுள்ளதாக பலரும் குறிப்பிட்டாலும் எவ்வித தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையிலும் தூர நோக்குடன் செயற்பட்டமையாலும் பெற்றோர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டாக செயற்பட்டமையால் வெற்றி பெற முடிந்தது.

புதிய கல்விக் கொள்கைகள்

சாதாரண தரம், உயர்தரம் ஆரம்பிக்கும் போது எமது கல்வித்திட்டத்தை புதுமையானதாக மாற்றினோம். அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித்திட்டங்கள் இருந்தாலும் அதைவிடவும் உலகத்தரம் வாய்ந்த கல்விக் கொள்கைகளை நாங்கள் பின்பற்றினோம். அதனால் எமக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தன. முதலாவதாக பெற்றோரிடமிருந்து எதிர்ப்பு வந்தாலும் சில நேரங்களில் அவர்கள் வன்முறையை கையாளும் நிலையும் உருவானது. பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டு தாக்குதல் முயற்சிகளை கூட மேற்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு வழங்கிய விளக்கங்களின் மூலம் அவர்கள் எங்களை புரிந்து கொண்டனர். எங்களுடன் முரண்பட்டவர்களுக்கு நாங்கள் ஒரு தண்டனையை வழங்கினோம். அதுவே அவர்களின் பிள்ளைகளை சாதாரண, உயர்தரத்தில் சித்தியடைய வைத்தமையாகும்.

புலனாய்வு பிரிவின் விசாரணை

இவ்வாறான வளர்ச்சிக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. எங்களுடைய பாடசாலை வேகமாக வளர்ச்சியடைவதை சமூக ஊடகங்களில் மூலம் வெளிப்படுத்தியமையால் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. யுத்த காலப்பகுதியில் கடுமையான அழுத்தங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. புலனாய்வு அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டோம். எனினும் நாங்கள் சட்டத்துக்கு மாறாக செயற்படாமையால் அவற்றுக்கு நாங்கள் முகங்கொடுத்தோம்.

எங்களுடைய நோக்கங்களை சகலருக்கும் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தோம். அன்று சந்தேக நோக்கத்துடன் பார்த்தவர்கள் இன்று எங்களை புரிந்து கொண்டுள்ளனர். இருக்கும் வளங்களை சரியாக பயன்படுத்தியமையால் எங்களின் வெற்றி சாத்தியமானது.

மாணவர்களின் மனநிலை


மாணவர்களை தேயிலை மலைகளுக்கு அழைத்துச் சென்று மாணவர்களுக்கு தேயிலை பறிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவோம். அதனை பெற்றோர் அவதானிப்பார்கள். இதன்போது பெற்றோரின் வலிகளை பிள்ளைகள் உணரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கந்தலோயாவில் உயர்தரம் கற்கும் மாணவர்களின் கதவுகளில் “இந்த வீட்டில் ஒருவர் உயர்தரம் கற்கிறார். பெருமைக்குரிய பெற்றோர்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இங்கு உயர்தரம் கற்போருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உயர் கௌரவம் வழங்கப்படும். அது பெருமைக்குரிய நிகழ்வாகும்.


இந்த மாற்றமே பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையானது. கல்வி முறை மற்றும் சிந்தனை அனைத்தும் மாற்றப்பட்டது. கல்வியை மட்டுமல்லாது, மலையக கலை, கலாசார சிந்தனைகளையும் ஊக்குவித்தோம் எனவும் தெரிவித்தார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக