கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

2 ஜனவரி, 2025

குறைபாடுகளுடன் இயங்கும் கம்மடுவ பிரதேச வைத்தியசாலை



  • பிற்பகல்  2 மணிக்குப் பின்னர் வைத்தியசாலையை மூடிச்செல்ல வேண்டிய நிலை.
  • 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென கம்மடுவ மக்கள் கோரிக்கை

மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டம், அம்பன் கங்கை கோரளை பிரதேச செயலகப் பிரிவில் கம்மடுவ தோட்டம் அமைந்துள்ளது. மாத்தளை நகரிலிருந்து சுமார் 26 கிலோமீற்றர் தூரத்தில் இத்தோட்டம் அமையப்பெற்றுள்ளது. கம்மடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த பகுதியை சுற்றியுள்ள பல தோட்டங்களுக்கும் சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் கம்மடுவ பிரதேச வைத்தியசாலை மாத்திரமே காணப்படுகின்றது. இது ஒரு ஆறுதலான விடயமாக இருந்தாலும் இங்கு ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மாத்திரம் காணப்படுவதும் அவையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுவதும் இப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வைத்தியசாலைக்கென ஒரு வைத்தியரும் இரண்டு வைத்தியசாலை அலுவலக ஊழியர்களும் ஒரு சிற்றூழியர் மாத்திரமே சேவைக்கமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வைத்தியசாலையில் தங்குமிட வசதிகள் காணப்படாமையால் பிற்பகல் இரண்டு மணிக்கே வைத்தியசாலையை மூடிவிட்டு வைத்தியர்களும் ஊழியர்களும் அங்கிருந்து வெளியேறுகின்றனர். அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் குறைவாக காணப்படுவதால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கிருந்து வெளியேறும் நிலை காணப்படுகின்றது.

வைத்தியருக்கான குடியிருப்பு வசதிகளும் வாகன வசதிகளும் வழங்கப்படாமையால் அவர் தினசரி பஸ்ஸில் பயணம் செய்தே சிகிச்சைகளை மேற்கொள்வதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வைத்தியசாலையாக காணப்பட்டாலும் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி நிலையிலேயே காணப்படுவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கம்மடுவ மக்களின் சுகாதார வசதிகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக அப்பகுதிக்கு நாங்கள் நேரடியாக விஜயம் செய்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது இவ்விடயங்களை எம்மால் அவதானிக்க முடிந்தது.

இங்குள்ள வைத்தியசாலையின் நிலைமை தொடர்பில் கம்மடுவ பிரதேசத்தில் வசிக்கும் ஆரோக்கியம் ஜோதிமணி என்பவர் கருத்து தெரிவிக்கையில், “24 மணித்தியாலமும் இயங்கக்கூடிய வகையில் கம்மடுவ பிரதேச வைத்தியசாலை முன்னர் பராமரிக்கப்பட்டது. 24 மணி நேரமும் வைத்தியர்கள் சேவையில் இருந்ததுடன் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வசதிகளும் காணப்பட்டன. பின்னர் இந்த வைத்தியசாலை மூடப்பட்டு பாழடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது அந்த வைத்தியசாலை புனரமைக்கப்பட்டாலும் போதிய வசதிகள் இல்லை. மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு செல்வதாயின் இங்கு  அம்புலன்ஸ் வசதி இல்லை. தங்கி சிகிச்சை பெறக்கூடிய அறைகளும் தற்போது மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. மேலதிக சிகிச்சைகளுக்கு செல்வதாயின் வாடகை வாகனங்கள் மூலம் செல்லும் நிலை ஏற்பட்டால் பணப் பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், “நான் சமீபத்தில் என்னுடைய பேரப்பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது, மழைக்காலமாகையால் நான் அங்கு வழுக்கி விழுந்தேன். அப்போது என்னை சிகிச்சைக்காக கம்மடுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும், மேலதிக சிகிச்சைக்காக இறத்தொட்டை வைத்தியசாலைக்குச் செல்லுமாறு வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்டது. அங்கு பரிசோதித்த போது எனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மேலதிக சிகிச்சைக்காக என்னை மாத்தளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். இவ்வாறே இங்குள்ள வைத்திய சேவைகள் காணப்படுகின்றன. இந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும் எங்களுக்கு தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். வைத்தியசாலையின் தங்கி சிகிச்சை பெறும் அறையை மீண்டும் 24 மணித்தியாலங்களுக்கு திறப்பதற்கும், வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்மடுவ வைத்தியசாலையில் நோயாளர்கள் காத்திருக்கும் அறை காணப்பட்டாலும் அங்கு அவர்கள் அமர்வதற்கான எந்த வசதிகளும் காணப்படவில்லை. வைத்தியசாலைக்கென இரண்டு அறைகள் மாத்திரமே காணப்படுகின்றது. ஒரு அறையில் நிர்வாக செயற்பாடுகளும் ஒரு அறையில் சிகிச்சைகளும் இடம்பெறுகின்றன. முன்னர் 24 மணி நேரமும் இயங்கிய தங்கி சிகிச்சை பெறும் அறை தற்போது மூடப்பட்ட நிலையில் இருப்பதாக இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இங்கு நோயாளர்களை காவிச் செல்வதற்கு அம்புலன்ஸ் வண்டி இல்லாமை காரணமாக அதிக பணம் செலுத்தி வாடகை வாகனத்திலேயே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அவசர சிகிச்சைகளுக்கு தூர இடங்களிலுள்ள இறத்தொட்டை பிரதேச வைத்தியசாலை அல்லது மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்மடுவ தோட்டத் தொழிலாளியான இராசையா விஜயகுமார், “கம்மடுவ பகுதியில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வைத்தியசாலை புதிதாக திருத்தப்பட்டாலும் அதன் உட்கட்டமைப்பு வசதிகள் குறைந்தளவே காணப்படுகின்றன. அவசர சிகிச்சைக்கு செல்வதாயின் வேறு வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. வாகனத்துக்கு 2000 - 3000 ரூபா வரை செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனால் இந்த வைத்தியசாலைக்கு ஒரு 
 அம்புலன்ஸ்  வண்டியை பெற்றுக்கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கம்மடுவ பிரதேசத்திலிருந்து இறத்தோட்டை பிரதேச வைத்தியசாலையானது 19.2 கிலோமீற்றர் தூரத்திலும் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையானது 27.1 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. கம்மடுவ வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைகள் மாத்திரம் வழங்க முடியும். அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களே காணப்படுவதால் அவற்றிலும் சிக்கல் காணப்படுகின்றது. இதனால் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் இறத்தோட்டை அல்லது மாத்தளை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய மகப்பேறு காலத்தின் போது கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். வாடகை வாகனங்களில் செல்வதற்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதாலும் அவர்களின் வருமானம் குறைந்தளவில் இருப்பதும் இதற்கு காரணமாகும்.

கம்மடுவ பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்களை காவிச் செல்வதற்கேற்ற வகையிலான அம்புலன்ஸ் வசதிகள் காணப்படாமையால் அவசர சிகிச்சைக்கு வேறு வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது வாடகைக்கு வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக இப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் ஒட்சிசன் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் ஆர்.பி.சுரேஷ் குமார் கருத்து தெரிவிக்கையில், “கம்மடுவ பிரதேசத்தின் முக்கிய தேவைகயில் ஒன்றாக வைத்தியசாலை காணப்படுகின்றது. கம்மடுவ வைத்தியசாலை ஆரம்பகாலக் கட்டத்தில் சகல வசதிகளுடன் காணப்பட்டாலும் காலப்போக்கில் அது கைவிடப்பட்ட நிலைமைக்குச் சென்றுள்ளது. கடந்த சில மாதங்களாக அந்த வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு செயற்பாட்டுக்கு வந்தாலும் முன்னரைப் போன்ற வசதிகள் உருவாக்கப்படவில்லை.” என குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “24 மணி நேரம் இயங்க வேண்டிய வைத்தியசாலை பகல் 2 மணியுடன் மூடப்படும் நிலைமை காணப்படுகின்றது. இப்பகுதியில் கம்மடுவ, நாகல, பள்ளேத்தன்ன, ஹிங்குருவத்த உள்ளிட்ட பல பிரதேசங்களை உள்ளடக்கி ஒரு பொதுவான வைத்தியசாலையாக காணப்படுகின்றது. எனினும் அவசர சிகிச்சையின் போது தூரத்திலுள்ள வைத்தியசாலைக்கே கொண்டு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. விபத்து சம்பவங்களின் போது நோயாளர்களை கடும்  சிரமங்களுக்கு மத்தியிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அண்மையில் இங்கு விபத்தால் பாதிக்கப்பட்ட இருவரை இறத்தொட்டை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்பு அங்கிருந்து மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றி பின்பு அங்கிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த மக்களின் பிரச்சினைகளை கொஞ்சம் சீர்தூக்கி பார்த்து அதனை நிவர்த்திக்க வேண்டும்.” எனவும் தெரிவித்தார்.


இப்பகுதி மக்கள் தங்களுடைய சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அரசாங்கத்தின் உதவியுடன் இயங்கும் கம்மடுவ பிரதேச வைத்தியசாலைக் காணப்பட்டாலும் அவற்றில் காணப்படும் வளப்பற்றாக்குறை இப்பகுதி மக்களின் சுகாதார சேவையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தோட்டத் தொழிலை நம்பி தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் இவர்களுக்கு மிக அருகில் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.

வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் மற்றும் ஊழியர் பற்றாக்குறை என்பவற்றோடு, சிகிச்சைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படும் நிலையேற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் வைத்தியசாலைக்கென அம்புலன்ஸ் வசதியும் சாரதியும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றது.

அத்துடன் இந்த வைத்தியசாலையில் முன்னர் காணப்பட்ட 24 மணி நேரமும் தங்கி சிகிச்சைப் பெறக்கூடிய வசதி மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். 24 மணி நேரமும் சிகிச்சை பெறுவதற்குரிய வகையில் ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென்பதுடன் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் தங்குவதற்கான தங்குமிடங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இலங்கையின் சுகாதார சேவையில் பெருந்தோட்ட மக்களின் சுகாதாரம் இன்னும் கீழ் மட்டத்திலேயே இருப்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தோட்ட புறங்களிலுள்ள மருந்தகங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பிரதேச வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்குவதை அவதானிக்க முடிகின்றது. எனவே கம்மடுவ பிரதேச வைத்தியசாலையின் குறைப்பாடுகள் நீக்கப்பட்டு அப்பகுதி மக்களின் சுகாதார சேவையை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக காணப்படுகின்றது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக