நுவரெலியா மாவட்டத்தில் புதிய மதுபானசாலைகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2023 - 2024 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல்வேறு பிரதேசங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நுவரெலியா மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஓட்டரி, குயில்வத்த, சென்கிளயார், டயகம ஆகிய பிரதேசங்களில் மதுபானசாலைகளை அமைப்பதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக அங்கு மதுபானசாலைகளை அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அங்கு அதனை செயற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைவாக எதிர்க்கட்சியினரை இலக்குவைத்து அரசியல் இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உருவான பின்னர் மதுபான உரிமங்கள் மற்றும் அவற்றுக்கு சிபாரிசு வழங்கியவர்களை பெயர் பட்டியலை வெளியிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அண்மையில் பாராளுமன்றத்தில் மதுபான உரிமங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டாலும் அவற்றுக்கு பின்னணியிலுள்ள அரசியல்வாதிகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த விபரத்தின் படி மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிகளும் தென்மாகாணத்தில் 48, வடக்கு மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22, மத்திய மாகாணத்தில் 45, வடமத்திய மாகாணத்தில் 14, ஊவா மாகாணத்தில் 30 , வடமேல் மாகாணத்தில் 30, சப்ரகமுவ மாகாணத்தில் 30 என 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 2, கம்பஹா 8, களுத்துறை 8, காலி 9, மாத்தறை 5, அம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை 5, கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அனுராதபுரம் 4, பொலநறுவை 3, புத்தளம் 6, குருநாகல் 8, பதுளை 9, மொனராகலை 7, இரத்தினபுரி 6, கேகாலை 2 என 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 13.06.2024 தொடக்கம் 13.09.2024 ஆம் திகதி வரை மேலதிகமாக 14 மதுபானசாலைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனைக்கான எட்டு மதுபானசாலைகள் நோட்டன் பிரிட்ஜ், கந்தப்பளை, பத்தனை, ரொசல்ல, நில்தண்டாஹின்ன, கட்டுகித்துல மற்றும் மஸ்கெலியா பகுதிகளில் அமைக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் மூன்று மதுபானசாலைக்கான உரிமையாளர்கள் ஹட்டனைச் சேர்ந்தவர்கள். மேலும் மஸ்கெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, ஹாலி எல, ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் இதன் உரிமையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மக்களை அச்சுறுத்தும் வகையில் மதுபானசாலைகளை திறப்பதற்கான அனுமதிகள் ஏன் வழங்கப்பட்டன? குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஒவ்வொரு நகரத்திலும் அதிகளவான மதுபானசாலைகள் ஏற்கனவே நிரம்பி கிடக்கின்றன. அத்துடன் மேலதிக மதுபானசாலைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பின்னணியிலும் அங்கு மதுபானசாலைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதென்றால் அதற்கு பின்னாலுள்ள அரசியல் சக்தி தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.
அரசியல் இலஞ்சமாக மதுபானசாலைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனை முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த எந்த அரசியல்வாதிகளும் மறுக்கவில்லை. குறிப்பாக மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் மறுக்கவில்லை. இதனால் குறித்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்குப் பின்னால் இயங்குபவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக மூன்று மதுபானசாலைகளும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக 22 பியர் விற்பனையகங்களை ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களத்தின் தகவல் அதிகாரி சி.ஜே.ஏ.வீரகொடி (பிரதி கலால் ஆணையாளர் - சட்டம்) தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் 232 அனுமதி பெற்ற மதுபான நிலையங்கள் இயங்கி வந்தன. இவற்றில் 2 - மொத்த விற்பனை உரிமம், 114 - சில்லறை விற்பனை உரிமம், 38 - ஏ, பி, சி தரம் கொண்ட ஹோட்டல் உரிமம், 1 - களியாட்ட பார் உரிமம், 26 - ரெஸ்டூரண்ட் உரிமம், 4 - வாடி வீடு உரிமம், 4 - கிளப் உரிமம், 16 - பியர், வைன் விற்பனை உரிமம், 5 - வைன் விற்பனையக வளாகத்தில் அருந்தும் உரிமம், 22 - பியர் விற்பனை உரிமம் என்பவற்றுடன் 7 கள்ளு தவறணைகளும் அமைந்துள்ளன.
இந்நிலையில் மீண்டும் 2023 ஆம் ஆண்டு இறுதியில் புதிதாக ஹோட்டலுக்கான (எப்.எல்.7) உரிமமொன்றும் ஏ, பி, சி தரம் கொண்ட ஹோட்டல் (எப்.எல்.7ஃ8) உரிமங்கள் இரண்டும் சுற்றுலா சபையின் அனுமதிகளுக்கு அமைவாக 22 பியர், வைன் விற்பனையகங்களுக்கான உரிமமும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில்லறை விற்பனை செய்யும் மதுபானசாலைகளுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. எனினும் சென்கிளயார் மற்றும் குயில்வத்த பகுதிகளில் (எப்.எல்.4) சில்லறை விற்பனைக்கான மதுபானசாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓட்டரி பிரதேசத்தில் (எப்.எல்.7/8) ஏ, பி, சி தரம் கொண்ட ஹோட்டல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நோர்வூட் பிரதேச செயலகத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இதேவேளை ஏற்கனவே மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள 806 அனுமதி பெற்ற மதுபானசாலைகளில் 3 - மொத்த விற்பனை உரிமம், 227 - சில்லறை விற்பனை உரிமம், 153 - ஹோட்டல் உரிமம், 153 - ஹோட்டல் பார் உரிமம், 2 - களியாட்ட பார் உரிமம், 69 - ரெஸ்டூரண்ட் உரிமம், 10 - வாடி வீடு உரிமம், 11 - கிளப் உரிமம், 40 - பியர், வைன் சில்லறை விற்பனை உரிமம், 32 - பியர், வைன் விற்பனையக வளாகத்தில் அருந்தும் உரிமம், 20 - பூட்டிக் விலா, 86 - பியர் விற்பனையகங்கள் என்பன உள்ளடங்கும்.
நாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதாக கூறி பெருந்தோட்டங்களை இலக்குவைத்து இவ்வாறான மதுபானசாலைகள் அமைக்கப்படுவது எதற்காக என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகர்புறங்களில் 300 மீற்றர் தூரத்துக்கு ஒரு மதுபானசாலை அமைந்துள்ளது. இது சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவில்லை. மாறாக பெருந்தோட்ட மக்களின் உழைப்பை சுரண்டும் வகையிலேயே அமைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மிகச்சிறிய நகரங்களான மஸ்கெலியா நகரில் மாத்திரம் 7 மதுபானசாலைகளும் (மேலும் ஒரு மதுபானசாலையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது) அப்கட் நகரில் மூன்று மதுபானசாலைகளும் டிக்கோயா நகரில் 4 மதுபானசாலைகளும் அமைந்துள்ளன.
இதற்கு மேலதிகமாகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைவாக அரசியல் இலஞ்சமாக மேலும் 14 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இதற்கு விளக்கமளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த உரிமங்கள் அனைத்தும் கலால் துறையின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி வழங்கப்பட்டுள்ளதாகவும் உரிமம் வழங்கும் போது, கலால் ஆணையாளர் நாயகம் பரிந்துரைத்த விண்ணப்பங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. அந்த நடைமுறைக்கு வெளியே ஒரு கலால் உரிமம் கூட வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்புடைய ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தால் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 3.1 பில்லியன் ரூபாவாகும். 2024 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த முறை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 04 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தைப் பெற முடியும். இந்த அமைப்பின் வெற்றி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு முதல், குறிப்பிட்ட பகுதிகள் தீர்மானிக்கப்பட்டு, 250-300 வரையிலான கலால் உரிமங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக கூறும் ரணில் விக்ரமசிங்க மறுபுறம் அதன் பின்னாலுள்ள பிரச்சினைகளை அறிந்திருக்கவில்லை.
மதுபாவனையால் ஒவ்வொரு வருடமும் 241 பில்லியன் ரூபா பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. (மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்) மத்திய வங்கியின் அறிக்கை (2015) மற்றும் உலகளாவிய சுகாதார கண்காணிப்பு தரவுகளின்படி, நாட்டின் 2015 ஆம் ஆண்டில் மதுசார கலால் வரி மூலம் பெற்றுக்கொண்ட வருமானம் 105,234 மில்லியன் ரூபா ஆகும். அதே ஆண்டின் மது பாவனையால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார நட்டம் 119,660 மில்லியன் ரூபா என உலக சுகாதார ஸ்தாபனம் - இலங்கை, புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு மூலம் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் சாராயம், பியர் மற்றும் கள்ளு என்பனவே அதிகமாக நுகரப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 2,121,463.47 லீற்றர் பியர் விற்பனையாகியுள்ளது. இதில் நுவரெலியா பிராந்தியத்தில் 1,228,405.26 லீற்றரும் ஹட்டன் பிராந்தியத்தில் 893,058.21 லீற்றரும் விற்பனையாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 1,284,087.35 லீற்றர் சாராயம் விற்பனையாகியுள்ளது. இதில் நுவரெலியா பிராந்தியத்தில் 770,268.51 லீற்றரும் ஹட்டன் பிராந்தியத்தில் 513,818.84 லீற்றரும் விற்பனையாகியுள்ளது. இதே காலப்பகுதியில் 923491.89 லீற்றர் போத்தல் கள்ளும் விற்பனையாகியுள்ளது. இதில் நுவரெலியா பிராந்தியத்தில் 529,972.5 லீற்றரும் ஹட்டன் பிராந்தியத்தில் 393,519.39 லீற்றரும் விற்பனையாகியுள்ளது. அத்துடன் 189,857 லீற்றர் கள்ளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இக்காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 8162.41 லீற்றர் வைன், 6363.37 லீற்றர் விஸ்கி, 10,773.31 லீற்றர் பிரண்டி, 9954.11 லீற்றர் ஜின், 6213.73 லீற்றர் ரம், 9634.46 லீற்றர் வொட்கா, 6856.30 லீற்றர் வேறு மதுபானங்களும் விற்பனையாகியுள்ளன.
இவ்வாறு அதிகமான மதுபானம் விற்பனை செய்வதற்குப் பின்னால் இங்குள்ள மக்களின் அதிகளவான வருமானமும் உறிஞ்சப்படுகிறது. கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியுள்ள நுவரெலியா மாவட்ட மக்கள் மதுபான நுகர்வுக்காக பாரிய தொகையை செலவளிப்பது சாதனையான விடயமல்ல.
அரசியல்வாதிகளின் நலன்களுக்காக மக்களை இலக்கு வைத்து இவ்வாறான மதுபான வியாபாரங்களை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. மதுபானசாலைகளை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இனிமேலும் அவ்வாறான எதிர்ப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். நுவரெலியா மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மதுபானசாலைகள் ஒருபோதும் உந்துதலாக அமையாது என்பது அனைவருக்கும் தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக