மத்திய மாகாணத்தில் 2017 - 2022(2023) ஆம் ஆண்டு வரையான ஆறு வருட காலப்பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 210,940 மாணவர்களில் 130,912 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளமையை கடந்த வாரம் கல்வி அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு சித்தியடைந்தவர்களில் எத்தனை மாணவர்கள் கல்வியியற் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்துக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்றனர் என்பதும் அவர்களில் எத்தனை பேர் கற்கைநெறிகளுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர் என்பதும் முக்கியமாகும். இவ்வார கட்டுரையில் பல்கலைக்கழகத்தில் கற்கைகளை தொடர்வதற்கு தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பான அவதானிப்புகளை மேற்கொள்ளலாம்.
2022 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு 43,000 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டில் 30 ஆயிரமாக இருந்த இத்தொகை தற்போது கணிசமானளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய மாகாணத்தில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழ்மொழி மூல மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? என்பதையும் அவர்கள் தெரிவு செய்த பாடநெறிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பாடசாலைகளில் இருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை பெரும்பாலான பாடசாலைகளும் வலயக் கல்வி அலுவலகங்களும் பேணுவதில்லை என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் தரவுகளை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் காணப்படுகின்றது.
இதனால் மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகள் அல்லது தமிழ்மொழிமூல பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அல்லது பெரும்பாலான பல்கலைக்கழகங்களோ அவ்வாறான தகவல்களைப் பேணுவதில்லை என அறிவித்துள்ளன. ஒரு சில பல்கலைக்கழகங்கள் மாத்திரமே குறித்த தகவல்களை பேணுகின்றன.
வலயக்கல்வி அலுவலகங்களின் அடிப்படையில் வில்கமுவ கல்வி வலயத்தில் எவ்வித தமிழ்மொழி மூல பாடசாலைகளும் இயங்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்திலுள்ள 15 கல்வி வலய அலுவலகங்களில் வலப்பனை, கொத்மலை, கண்டி, மாத்தளை, கலேவெல, கட்டுகஸ்தோட்டை, ஹட்டன், கம்பளை, வெலிகமுவ, நாவுல ஆகிய கல்வி அலுவலகங்கள் குறித்த தகவல்களை பேணவில்லையென அறிவித்துள்ளன. வலய கல்வி அலுவலகங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில்,
ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 184 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், ஒருவர் மாத்திரமே (2018) கலைப் பிரிவில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 976 மாணவர்கள் உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றிருந்தாலும் 199 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட துறை தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டவில்லை. 2015 இல் 32 மாணவர்களும் 2016 இல் 39, 2017 இல் 27, 2018 இல் 34, 2019 இல் 23, 2020 இல் 44 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெநுவர கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 607 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். அதனடிப்படையில் குறித்த காலப்பகுதியில் 134 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். இதில் 2015 இல் 15 மாணவர்கள் கலைப்பிரிவுக்கும் 2016 இல் 18 மாணவர்கள் கலைபிரிவுக்கும் ஒருவர் வர்த்தகப் பிரிவுக்கும் தெரிவு செய்யப்பட்டனர். 2017 இல் 33 பேர் கலை பிரிவுக்கும் 2018 இல் 22 பேர் கலைபிரிவுக்கும் 8 பேர் தொழில்நுட்ப பிரிவுக்கும் இரண்டு பேர் உயிரியல் பிரிவுக்கும் தெரிவு செய்யப்பட்டதுடன், 2019 இல் 25 பேர் கலைப்பிரிவுக்கும் வர்த்தகப்பிரிவுக்கு நால்வரும் விஞ்ஞான பிரிவுக்கு நால்வரும் மருத்துவ பிரிவுக்கு ஒருவரும் தொழில்நுட்ப பிரிவுக்கு ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட கற்கைநெறிக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பரீட்சையில் காட்டிய திறமை, குறிப்பிட்ட கற்கைநெறிக்கு பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் சனத்தொகை போன்ற காரணிகளால் வெட்டுப்புள்ளி வருடத்துக்கு வருடம் மாறுபடுகின்றது. வெட்டுப்புள்ளி மற்றும் மாவட்ட திறமை மூலப்பிரமாணம் (மாவட்ட சனத்தொகை விகிதாசாரம்) என்பவற்றுக்கும் மேலதிகமாக நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு 5 வீத விசேட ஒதுக்கீடுகளும் வழங்கப்படுகின்றது.
சில வேளைகளில் சில மாணவர்கள் மீண்டுமொருமுறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் எதிர்பார்ப்புடன் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்காது விடலாம். சில மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த போதிலும் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட கற்கைநெறிக்கு மனமாற்றத்தின் காரணமாக பதிவு செய்து கொள்ளாது விடலாம். அதனால் மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளி மற்றும் கடந்த வருடத்துக்கான வெட்டுப்புள்ளிகளை கவனத்தில் கொள்ளாது தாம் விண்ணப்பிக்கத் தகுதி பெறுகின்ற ஆகக்கூடுதலான கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அதிகரிக்கப்பட வேண்டும்”
மலையகத்தில் மாணவர்களின் பல்கலைக்கழக பிரவேசத்தை அதிகரிப்பதற்கு 1ஏபி மற்றும் 1சி பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். கடந்த வருடம் நாடு முழுவதும் 44 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட போதும் மலையகத்திலிருந்து சுமார் 600 - 700 மாணவர்களே நாட்டிலுள்ள 18 பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். (திறந்த பல்கலைக்கழகமும் உள்ளடங்கும்) அவர்களில் பலர் கலை மற்றும் வர்த்தக துறையையே தெரிவு செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் மாத்திரம் சுமார் 400 மாணவர்கள் கலைப்பிரிவில் கல்வி கற்று வருவதாக பேராசிரியர் தை.தனராஜ் தெரிவித்துள்ளார்.
1960 ஆம் ஆண்டுகளில் மலையகத்தைச் சேர்ந்த 15 பேரே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் மகஜனா, கம்பளை சாஹிரா மற்றும் மாத்தளை சென்.தோமஸ் ஆகிய பாடசாலைகளிலிருந்து தெரிவானர். 1965 ஆம் ஆண்டிலேயே மலையகத்திலிருந்து நேரடியாக மூவர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். முன்னாள் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் வாமதேவன், சீடா திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் நவரட்ணம், இராகலை பி.மரியதாஸ் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்.
1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. பிரஜாவுரிமை வழங்கப்பட்ட பின்னரே பல்கலைக்கழகத்துக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது. தற்போது மலையகத்தில் சுமார் 125 பாடசாலைகளில் உயர்தர வகுப்புகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் சராசரியாக 600 - 700 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்றனர். இவை போதுமானதாக இல்லை. அவர்களில் அதிகமானோர் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுக்கே தெரிவு செய்யப்படுகின்றனர். பல்கலையில் 160 க்கும் மேற்பட்ட கற்கைநெறிகள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கு மலையகத்திலிருந்து எவரும் தெரிவு செய்யப்படுவதில்லை. (விண்ணப்பிப்பதில்லை) வருடத்துக்கு 44 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்படும் போது, சனத்தொகையில் 6 வீதத்தை கொண்ட மலையகத்திலிருந்து சுமார் 2500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். இது மிகக்குறைந்த வீதமாகும்.
பல்கலைக்கழக பிரவேசம் அதிகரிப்பதால் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மலையகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் விரிவுரையாளராக கடமையாற்றுகின்றனர். யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் 5 பேர் தற்காலிக விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தில் நால்வரும் கொழும்பு பல்கலையில் மூவரும் வவுனியா பல்கலையில் ஒருவரும் பேராதனை பல்கலையில் அறுவரும் திறந்த பல்கலையில் நான்கு பேரும் கடமையாற்றுகின்றனர். பல்கலைக்கழக கற்பித்தலில் ஈடுபடும் சுமார் 6 ஆயிரம் பேரில் மலையத்தைச் சேர்ந்த 30 பேர் மாத்திரமே விரிவுரையாளர்களாக உள்ளனர். கலாநிதி பட்டங்களை பெற்றவர்கள் கூட சுமார் 40 பேர் மாத்திரமே காணப்படுகின்றனர். 200 வருட வரலாற்றில் பேராசிரியர்களாக ஒன்பது பேர் மாத்திரமே பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போது மலையகத்தில் 18 ஆயிரம் ஆசிரியர்களும் அதிபர் தரம் கொண்ட 500 பேரும் உள்ளதுடன் இலங்கை கல்வி சேவை, நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை, நீதிபதிகள் என சிலர் கடமையாற்றினாலும் அவை சனத்தொகை விகிதத்துக்கு ஏற்ப அமையவில்லை. இவை அனைத்துக்கும் பாடசாலை கல்வியே அடிப்படையாகும். எனவே பாடசாலை கல்வி கட்டாயமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். 1ஏபி பாடசாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். தேசிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கும் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்விடயங்களின் மூலம் மூன்றாம் நிலை கல்வியை முன்னேற்ற முடியும்.
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் பலரும் தங்களது கற்கையை நிறைவு செய்வதற்கு முன்பே இடைவிலகும் சந்தர்ப்பம் காணப்படுகிறது. அவர்களில் ஒரு சிலருக்கு மகாபொல வழங்கப்பட்டாலும் பலருக்கு அவை கிடைப்பதில்லை. தொழிலாளர்களின் வருமானம் பதிவு செய்யப்படுவதால் அவர்களுக்கான மகாபொல கிடைப்பதில் சிக்கல் காணப்படுகின்றது. ஆனால் கிராமங்களில் அதிக வருமானம் கிடைத்தாலும் அவை பதிவு செய்யப்பட்ட வருமானமாக இல்லாமையால் அவர்களுக்கு மகாபொல கிடைக்கின்றது.
இதனால் மலையக மாணவர்கள் தங்களின் கல்வியை நிறைவு செய்வதற்கு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மலையகத்திலிருந்து தெரிவாகும் பலரும் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கே செல்கின்றனர். இவர்களுக்கு சராசரியாக மாதாந்தம் 15 - 20 ஆயிரம் ரூபா வரை மாத செலவுகளுக்கு தேவைப்படும். அவற்றை ஈடுசெய்ய முடியாமல் பலர் கல்வியை விட்டு வெளியேறும் நிலை காணப்படுகின்றது. எனவே மலையக மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி பாரிய சவாலாக அமைந்துள்ளது. அவர்களுக்கான உதவிகளை வழங்குவது யார்?
நன்னம்பிக்கை கல்வி நிதியம் இவ்வாறு பல்கலை. தெரிவாகும் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இதுவரை 370 மாணவர்கள் இவ்வாறு உதவிகளை பெற்றுள்ளனர். இதில் 25 மாணவர்களுக்கு (தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள்) பேராதனை பல்கலையில் 1980 ஆம் ஆண்டு பொறியியல் பீடத்தில் கல்விகற்றவர்களால் (பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள்) மாதாந்தம் 3000 ரூபா உதவிகள் வழங்கப்படுகின்றது. மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் குறிப்பிடத்தக்களவு உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே எமது சமூகத்தினரும் அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக