நுவரெலியா மாவட்டத்திலிருந்து கணித, விஞ்ஞான பிரிவுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் மறுபுறம் க.பொ.த.சாதாரணத்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்பது புள்ளிவிபரங்கள் மூலம் தெளிவாகின்றது. மத்திய மாகாணத்திலிருந்து க.பொ.த.சாதாரணத்தரப் பரீட்சைக்கு முதல்தடவையாக தோற்றும் மாணவர்களில் வருடாந்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயர்தரத்துக்கு தெரிவாகும் தகுதியை இழக்கின்றனர். 2017 - 2022 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மத்திய மாகாணத்திலிருந்து சாதாரணத்தரப் பரீட்சைக்கு முதல்தடவையாக தோற்றிய 65,471 மாணவர்கள் உயர்தரத்துக்கான தகுதியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியான விடயமாகும். 2017 ஆம் ஆண்டு 11,139 மாணவர்களும் 2018 இல் 10,945 மாணவர்களும் 2019 இல் 11,831 மாணவர்களும் 2020 இல் 9841 மாணவர்களும் 2021 இல் 10,576 மாணவர்களும் 2022 இல் 11,139 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை. இவர்களில் எத்தனை பேர் இரண்டாவது தடவையாக தோற்றி உயர்தரத்துக்கு தெரிவானார்கள் என்பதில் அதிக கேள்வி நிலவுகின்றது.
இவர்களில் கண்டி மாவட்டத்தில் 31,738 மாணவர்களும் மாத்தளை மாவட்டத்தில் 12,945 மாணவர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 20,788 மாணவர்களும் உள்ளடங்குவர். அத்துடன் 2021 - 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் 1593 மாணவர்கள் எந்த பாடத்திலும் சித்தியடையவில்லை. இவர்களில் கண்டி மாவட்டத்தில் 742 மாணவர்களும் மாத்தளை மாவட்டத்தில் 396 மாணவர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 455 மாணவர்களும் இவ்வாறு எந்த பாடத்திலும் சித்தியடையவில்லை. (இவர்களில் இடைவிலகும் மற்றும் இடைவிலக்கப்படும் மாணவர்கள் உள்ளடக்கப்படவில்லை)
இப்படி மத்திய மாகாணத்தில் சாதாரணத்தர பெறுபேறுகளில் பாரிய மாணவர் தொகை பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் இவற்றுக்கான காரணம் தொடர்பில் எவராவது சிந்தித்ததுண்டா? குறிப்பாக ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் மாணவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஒப்பீட்டளவில் ஏனைய பாடங்களை விடவும் மேற்கூறிய பாடங்களில் மாணவர்களின் பெறுபேறு வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. இதற்கு ஆசிரியர்களை மாத்திரம் குறைகூற முடியாது எனினும் இவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளில் சாதாரணத்தர பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வலய கல்வி அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களில் பின்வருமாறு சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் அமைந்துள்ளன.
மாத்தளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் சாதாரணத்தரப் பரீட்சைக்கு 6347 மாணவர்கள் தோற்றியுள்ள நிலையில் அவர்களில் 4036 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 2311 மாணவர்கள் சித்தியடையவில்லை (உயர்தரத்துக்கு தகுதி பெறவில்லை) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 இல் 412 மாணவர்களும் 2016 இல் 367, 2017 இல் 431, 2018 இல் 433, 2019 இல் 220, 2020 இல் 448 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
நாவுல கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 115 மாணவர்கள் சித்தியடையவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. (உயர்தரத்துக்கு தகுதி பெறவில்லை)
கண்டி கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் சாதாரணத்தரப் பரீட்சைக்கு 6073 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 4360 மாணவர்கள் சித்தியடைந்த நிலையில் 1713 மாணவர்கள் சித்தியடையவில்லை. (உயர்தரத்துக்கு தகுதி பெறவில்லை) 2015 இல் 273 மாணவர்களும் 2016 இல் 360, 2017 இல் 239, 2018 இல் 262, 2019 இல் 537, 2020 இல் 283 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
வத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் சாதாரணத்தரப் பரீட்சைக்கு 4923 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 2827 மாணவர்கள் சித்தியடைந்த நிலையில் 2096 மாணவர்கள் சித்தியடையவில்லை. (உயர்தரத்துக்கு தகுதி பெறவில்லை) 2015 இல் 361 மாணவர்களும் 2016 இல் 370, 2017 இல் 339, 2018 இல் 331, 2019 இல் 377, 2020 இல் 318 மாணவர்களும் சித்தியடையவில்லை.
கலேவெல கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2019 வரையான காலப்பகுதியில் 940 மாணவர்கள் சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் 602 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 338 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 இல் 75 மாணவர்களும் 2016 இல் 97, 2017 இல் 54, 2018 இல் 50, 2019 இல் 62 மாணவர்களும் சித்தியடையவில்லை.
தெநுவர கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் (15 பாடசாலைகளில் சாதாரணத்தர வகுப்புகள் காணப்படுகின்றன) 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 2871 மாணவர்கள் சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் 2027 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 844 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2015 இல் 191 மாணவர்களும் 2016 இல் 181, 2017 இல் 173, 2018 இல் 116, 2019 இல் 183 மாணவர்களும் சித்தியடையவில்லை.
கட்டுகஸ்தொட்டை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் சாதாரணத்தரப் பரீட்சைக்கு 5174 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 3123 மாணவர்கள் சித்தியடைந்த நிலையில் 2051 மாணவர்கள் சித்தியடையவில்லை. (உயர்தரத்துக்கு தகுதி பெறவில்லை) 2015 இல் 385 மாணவர்களும் 2016 இல் 299, 2017 இல் 290, 2018 இல் 371, 2019 இல் 385, 2020 இல் 326 மாணவர்களும் சித்தியடையவில்லை.
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் சாதாரணத்தரப் பரீட்சைக்கு 7247 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 4230 மாணவர்கள் சித்தியடைந்த நிலையில் 3017 மாணவர்கள் சித்தியடையவில்லை. (உயர்தரத்துக்கு தகுதி பெறவில்லை) 2015 இல் 571 மாணவர்களும் 2016 இல் 549, 2017 இல் 571, 2018 இல் 456, 2019 இல் 479, 2020 இல் 465 மாணவர்களும் சித்தியடையவில்லை.
ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் சாதாரணத்தரப் பரீட்சைக்கு 879 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 294 மாணவர்கள் சித்தியடைந்த நிலையில் 585 மாணவர்கள் சித்தியடையவில்லை. (உயர்தரத்துக்கு தகுதி பெறவில்லை) 2015 இல் 111 மாணவர்களும் 2016 இல் 100, 2017 இல் 87, 2018 இல் 120, 2019 இல் 95, 2020 இல் 72 மாணவர்களும் சித்தியடையவில்லை.
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் வருடாந்தம் 2600 வரையான மாணவர்கள் சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாகவும் அவர்களில் 1800 மாணவர்கள் சித்தியடைவதுடன் 800 மாணவர்கள் சித்தியடைவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தினால் அண்ணளவான தகவல்களே வழங்கப்பட்டுள்ளதே தவிர உண்மையான புள்ளிவிவரங்கள் வழங்கப்படவில்லை. இதனால் இக்கல்வி வலயத்தின் பெறுபேறுகளை அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வலப்பனை கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் (10 பாடசாலைகளில் சாதாரணத்தர வகுப்புகள் காணப்படுகின்றன) 2015 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 3056 மாணவர்கள் சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் 1980 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 1076 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2015 இல் 194 மாணவர்களும் 2016 இல் 139, 2017 இல் 199, 2018 இல் 238, 2019 இல் 182, 2020 இல் 124 மாணவர்களும் சித்தியடையவில்லை.
ஹட்டன் கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றிய 11,668 மாணவர்களில் 7434 பேர் சித்தியடைந்துள்ளதுடன் 4234 மாணவர்கள் சித்தியடையவில்லை. இவற்றில் 2015 இல் 913 மாணவர்களும் 2016 இல் 933, 2017 இல் 619, 2018 இல் 763, 2019 இல் 1006 மாணவர்களும் சித்தியடையவில்லை. நுவரெலியா மாவட்டமானது, போசணைக் குறையுள்ள மாவட்டங்களில் பிரதானமாகும். இக்காலகட்டத்திலிருக்கும் மாணவர்களுக்கு 1 - 5 வயதாயிருக்கும் போது போதுமான போசாக்குணவு வழங்கப்படாமை காரணமாக பிள்ளைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போதைய பெறுபேறுகளில் பெரிதும் தாக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிக தாக்கத்தினை செலுத்தியிருந்தன. இதனால் அதிக மாணவர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு கடும் சவால்களை எதிர்நோக்கியிருந்தனர். அந்த தாக்கம் இன்னும் குறையவில்லையென்பது கண்கூடு. மத்திய மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றிய 40,160 மாணவர்களில் 29,584 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 10,576 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 1266 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லையென்பதுடன் 482 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
இதேவேளை 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரணத்தரப் பரீட்சைக்கு 41,737 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததுடன் 40,840 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர்களில் 29,701 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 897 பேர் பரீட்சைக்குத் தோற்றிவில்லை.
இதன் மூலம் 2021 - 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் 21,715 மாணவர்கள் சாதாரணத்தரத்தில் சித்தியடையவில்லை. பரீட்சைக்கு விண்ணப்பித்த 2143 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை. இவ்வாறு பாரியளவான மாணவர்கள் க.பொ.த.சாதாரணத்தரத்திலேயே தோல்வியடையும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? வலயக கல்விக் காரியாலயங்கள் இது தொடர்பில் பொறுப்பு கூறவேண்டும். சாதாரணத்தரத்திலேயே இவ்வாறு சித்தியடைய தவறும் மாணவர்கள் மீண்டும் உயர்தரத்துக்கு சென்றார்கள் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியுமா? அவ்வாறெனின் தவறு எங்கிருக்கிறது?
தொடரும்…


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக