இலங்கையில் தோட்டத்தொழிலாளர்கள் காலூன்றி 200 வருடங்கள் கடந்துள்ளது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு அரசாங்கங்களினாலும் புறக்கணிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகம். அவற்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயத்தை முக்கியமாக குறிப்பிட முடியும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டது. பின்னர் சம்பள நிர்ணய சபையினூடாக தோட்டத்தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. எனினும் அவற்றை பெருந்தோட்ட நிறுவனங்கள் அமுல்படுத்துவதை தவிர்த்து சட்ட போராட்டத்துக்கு தயாராகியிருந்தன.
இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன. தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைகளை சேர்ந்த தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பதால், தோட்டத்துறை நெருக்கடிக்குள்ளாகும் என அறிவித்து, அக்கரப்பத்தனை, எல்பிட்டிய உள்ளிட்ட 20 பெருந்தோட்ட நிறுவனங்களினால் இவ்வாறு எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது. தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்ற மனு மீதான பரிசீலனையின் போது, பெருந்தோட்ட நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் இன்றுவரையும் அவர்களுக்கான 1000 ரூபா நாட்சம்பளத்தை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முயற்சி எடுக்கவில்லை.
கம்பனிகளுடனான ஜனாதிபதியின் சந்திப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபா வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்விடயம் முன்வைக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அது குறித்த எதிர்கால நடவடிக்கைகளுக்காக குழுக்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவை நியமிக்கவும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்னுமொரு குழுவை நியமிக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது.
எனினும் தற்போதைய சம்பள முன்மொழிவென்பது தற்காலிக தீர்வாகவே அமையும். எமக்கு நிரந்தர தீர்வு அவசியம். எமது மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வருமானம் கிடைக்கும் வகையில் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடந்த கால கூட்டு ஒப்பந்தங்கள்
தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை கடந்த 20 வருடங்களாக தீர்மானித்த கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் 2022 ஆம் ஆண்டு விலகிய பின்னர் சம்பள நிர்ணய சபையினூடாக சம்பள அதிகரிப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அவை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.
கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என்றாலும் அவர்களுக்கான தொழில் பாதுகாப்பினை ஓரளவுக்கு வழங்கியது. அதேவேளை தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தின் மூலம் பாரிய தொகையையும் வழங்கியது. தொழிற்சங்கங்களின் அலுவலக செலவுகள் மற்றும் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இதன் மூலம் வழங்கப்பட்டதுடன் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் வழங்கிய சந்தாவின் மூலம் இலாபகரமாக இயங்கியிருந்தன.
தொழிலாளர்களின் வேலை நிபந்தனைகளும் நிலைமைகளும், அவர்களின் முறையான உரிமைகளும் பொறுப்புக்களும் தொழில் பிணக்குகளைக் தீர்க்கும் வழிவகை ஆகியவை சம்பந்தமாக தொழில் வழங்குநர், தொழிலாளர்கள் அல்லது தொழிற்சங்கம் ஆகியவற்றுக்கிடையே செய்து கொள்ளப்படும் ஒப்பந்தமே கூட்டு ஒப்பந்தமாகும்.
1998 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான 21 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 12 கூட்டு ஒப்பந்தங்களில் 11 கூட்டு ஒப்பந்தங்கள் தொழிலாளர்களுடைய சம்பள விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளன. ஆனால் அவற்றை தவிர்த்து மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்களில் எவ்வித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில், தொழில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஊதியங்கள் மற்றும் விலைபங்கு, மேலதிக நேரவேலை, வேலைநாட்களும் சம்பள முற்பணங்களும், வேலை ஏற்பாடுகள், பணி நிலையும் அது தொடர்பான பிரச்சினைகளும், மிகை விகிதங்கள், வருகை போனஸ், சுகயீன விடுமுறை, ஓய்வு பெறும் வயது, மகப்பேறு நலன்கள், தொழில் முகாமைத்துவ உறவுகள், ஒழுக்காற்று நடவடிக்கை, குறைஃபிணக்கு நடைமுறை, தொழிலுறவு என 20 சரத்துக்களை உள்ளடக்கியிருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் அவை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அத்துடன் கூட்டு ஒப்பந்த சரத்துக்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களுடைய சேமநலன்கள் இதுவரையும் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதும் கேள்விக்குரியாகும்.
ஆனால் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 20 வருட காலத்தில் அடிப்படைச் சம்பளத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 599 ரூபாவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 602 ரூபாவுமே சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுடைய அடிப்படைச் சம்பளமாக 101 ரூபா காணப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு அத்தொகை 700 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டது. எனவே தோட்டத் தொழிலாளர்கள் 599 ரூபாவினை பெற்றுக்கொள்ள 20 வருடங்கள் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
1997 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்தமானது நடைமுறைக்கு வந்தாலும் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரே தொழிலாளர்களுடைய சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. 2000 - 2021 ஆம் ஆண்டின் அரையாண்டு காலப்பகுதி வரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை அட்டவணையின் மூலம் அவதானிக்கலாம்.
மீண்டும் கூட்டு ஒப்பந்தமா? அல்லது வெளியார் உற்பத்தி முறையா?
இலங்கையின் பொருளாதாரத்துக்கு தேயிலை கணிசமான பங்கினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 2000 ஆம் ஆண்டு 2.5 சதவிகிதமும் 2010 இல் 3.8 சதவிகிதமும் 2020 இல் 4.1 சதவிகிதமென தொடர்ச்சியாக அதிகரிப்பை காட்டியுள்ளது. ஆனால் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கமும் கம்பனிகளும் தூர நோக்குடன் செயற்படவில்லை.
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களை நினைவுகூரும் தேசிய நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி உறுதியுடன் வழங்கப்படுமென உறுதியளித்தார். அத்துடன் தோட்டத் தொழிலாளர்களை சிற்றுடைமையாளர்களாக மாற்றுவதற்கும் வெளியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்துவதற்கும் கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். தற்போது கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பணிப்புரை விடுத்துள்ளார். அவ்வாறெனின் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. மீண்டும் கூட்டு ஒப்பந்தமா? அல்லது வெளியார் உற்பத்தி முறையா? நடைமுறைக்கு சாத்தியமானது என்பது தொடர்பில் அரசாங்கம் மக்கள் சார்பில் சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் இரண்டு வருடங்களுக்கொரு முறை மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்தளவில் சம்பளத்தையும் சலுகைகளையும் வழங்கவில்லை. நடைமுறைக்கு சாத்தியமற்ற சம்பள அதிகரிப்பினையே முதலாளிமார் சம்மேளனமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முன்வைத்திருந்தன. எனவே மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் சென்றால் அவற்றை நடைமுறைக்கு ஏற்ற வகையில் திருத்தியமைக்க வேண்டும்.
வெளியார் உற்பத்தி முறையானது, (Out Growing System) இருக்கின்ற தேயிலை செடிகளை தொழிலாளர்களே பராமரித்து அதன் அறுவடையை கம்பனிகளுக்கு வழங்கும் முறையாகும். தற்போது ஒருசில கம்பனிகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனினும் இந்த உற்பத்தி முறையின் கீழ் தொழிலாளர்களுக்கு நிலத்தின் மீதான உரிமையோ, தேயிலை செடியின் மீதான உரிமையோ வழங்கப்படுவதில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களை சிற்றுடைமையாளர்களாக மாற்றும் திட்டமும் சாத்தியமற்றதாக காணப்படுகின்றது.
எனவே தோட்டத் தொழிலாளர்களை தொடர்ச்சியாக கம்பனிகள் நிர்வகிக்கும் முறையை மாற்றி அவர்களை சிற்றுடைமையாளர்களாக மாற்றும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மலையக மக்கள் 200 வருடங்களை கடந்த பின்னரும் தங்களுடைய சம்பளத்துக்காக போராடும் முறையை மாற்றி புதிய முறைமையின் ஊடாக அவர்களை சுயமாக செயற்படும் நிலைக்கு உயர்த்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக