காலி முகத்திடல் போராட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையென்பது அதியுயர் பாதுகாப்பு நிறைந்த மர்மமான பகுதியாகவே இருந்தது. அங்கு என்ன நடக்கின்றதென்பதும் இரகசியமாகவே இருந்தது. எனினும் காலி முகத்திடல் போராட்டத்தின் போது கொழும்பு ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டதன் பின்னர் அதன் இரகசியங்கள் உடைக்கப்பட்டன. எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்படும் ஜனாதிபதியொருவருக்கு உத்தியோகபூர்வமாக ஒரு வாசஸ்தலம் வழங்கப்படுவது வழமையான செயற்பாடு எனினும் நாட்டில் ஆங்காங்கே வாசஸ்தலங்களை நிர்மாணித்து அதற்கு மக்கள் பணத்தை செலவிடுவது எதற்காக?
இந்நிலையில் ஜனாதிபதி வாசஸ்தலங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக ஜனாதிபதி செயலகத்துக்கு 20.12.2021 ஆம் ஆண்டு தகவல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் பாதுகாப்பு காரணங்களால் தகவல் வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டது. இதனால் 25.03.2022 ஆம் திகதி குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு விண்ணப்பிக்கப்பட்டது. குறித்தளிக்கப்பட்ட அதிகாரியும் தகவல் வழங்காத நிலையில் 06.06.2022 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர் 25.01.2023 ஆம் திகதி ஆணைக்குழுவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு 29.02.2023 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தால் பகுதியளவில் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. சுமார் 14 மாதங்கள் கடந்து தகவல் கோரிக்கைக்கு பகுதியளவில் மாத்திரமே தகவல் வழங்கப்பட்டன.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் ஆறு ஜனாதிபதி மாளிகைகள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விடயங்களுக்கு பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. எனினும் எந்தவொரு ஜனாதிபதி மாளிகையிலும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஜனாதிபதி மாளிகையினை பராமரிப்பதற்காக மக்கள் பணத்தில் பல கோடிகளை செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
தற்போது கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், நுவரெலியா, கதிர்காமம், மஹியங்கனை ஆகிய பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விடயங்களை தவிர வேறு காரணங்களுக்காக அவை ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை.
ஜனாதிபதி மாளிகைக்கான பராமரிப்பு செலவுகள், நீர் மற்றும் மின்சாரத்துக்கான செலவுகள் என்பன ஜனாதிபதி செயலகத்தின் ஒரே செலவு விடயத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதனால் ஜனாதிபதி மாளிகைகளுக்கமைய வெவ்வேறாக செலவுகளை கணக்கிட இயலாதென தலைமை கணக்காளர் அறிவித்துள்ளதாக தகவல் அதிகாரியினால் பதில் வழங்கப்பட்டது.
மேலும் அந்ததந்த ஜனாதிபதி மாளிகைகளில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் ஜனாதிபதி அந்த மாளிகையில் தங்கும் நாட்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை பாதுகாப்பு காரணமாக வழங்க முடியதெனவும் ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளருமான எஸ்.கே.ஹேனாதீரவால் அறிவிக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு விசாரணைகளுக்குப் பின்னர் தகவல் உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட தகவலில், 2015 - 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மாளிகைகளின் நிர்மாணம், புனரமைப்பு, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுக்காக 1987.56 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் கட்டிட நிர்மாணங்கள், புனரமைப்புகள், புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக 952 மில்லியன் ரூபாவும் மின்சாரம், நீர் கட்டணங்களுக்காக 1035.47 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் நிதி நெருக்கடியில் சிக்கிய போதும் பல மக்கள் நலத் திட்டங்கள் நிதி பற்றாக்குறையினால் இடைநிறுத்தப்பட்ட போதும் அனைத்து ஜனாதிபதி மாளிகைகளுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் காலப்பகுதியிலேயே இவ்வாறு அதிகமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கம்பரெலிய வேலைத்திட்டம், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் என்பன போதிய நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளாமையால் இன்றும் கைவிடப்பட்ட திட்டங்களாக காணப்படுகின்றன. எனினும் ஜனாதிபதியால் எப்போதாவது பயன்படுத்தப்படும் ஜனாதிபதி மாளிகைகளுக்காக பல மில்லியன் மக்களின் பணம் வீண்விரயம்; செய்யப்பட்டுள்ளது.
தற்போது காட்சி பொருளாக மாத்திரம் காணப்படும் நாட்டிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளுக்காக 2015 ஆம் ஆண்டு 281.88 மில்லியன் ரூபாவும் 2016 ஆம் ஆண்டு 262.44 மில்லியன் ரூபாவும் 2017 ஆம் ஆண்டு 327.68 மில்லியன் ரூபாவும் 2018 ஆம் ஆண்டு 344.66 மில்லியன் ரூபாவும் 2019 ஆம் ஆண்டு 312.05 மில்லியன் ரூபாவும் 2020 ஆம் ஆண்டு 231.34 மில்லியன் ரூபாவும் 2021 ஆம் ஆண்டு 227.49 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தகவல் வழங்கப்படவில்லை. அவற்றுக்கான தகவல்கள் வழங்கப்படும் பட்சத்தில் ஜனாதிபதி மாளிகைகளுக்கான செலவுகள் இன்னும் அதிகமானதாக இருக்கலாம்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை ஜனாதிபதி பதவியேற்கும் ஜனாதிபதிகளே அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். அத்துடன் காலி முகத்திடல் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட பின்னர் அதனை மக்கள் பணத்தில் மீண்டும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வித பயனும் இன்றிய நிலையில் காணப்படும் இக்கட்டிடங்களுக்கு மக்களின் பணத்தை வீண்விரயம் செய்வது முறையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக