கொழும்பு - ஹட்டன் பஸ் வழித்தடம்
கொழும்பு மத்திய பஸ் நிலையம் தொடக்கம் ஹட்டன் பஸ் நிலையம் வரையான 132.5 கிலோ மீற்றர் தூரத்தை இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களின் மூலம் கடப்பதற்கு 4 – 5 மணித்தியாலங்கள் வரை செல்லும். அதேவேளை அதிக வளைவுகளை கொண்ட பாதை என்பதால் பயணிகள் இலகுவில் களப்படையும் நிலை காணப்படுகின்றது. இதனால் குறித்த வழிதடங்களில் பயணிக்கும் பஸ்கள் தேநீர் அருந்துவதற்காக குறிப்பிட்ட உணவகம் ஒன்றில் நிறுத்தப்படுவது வழமையாகும்.
எனினும் அவ்வாறு நிறுத்தப்படும் உணவகங்கள் தரமானவையா அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சேவையினை வழங்குகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கோ அல்லது பொறுப்பு கூறுவதற்கோ எவரும் முன்வருவதில்லை. அதேவேளை அவ்வாறு நிறுத்தப்படும் உணவகங்கள் தொடர்பில் பயணிகளால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொழும்பு மத்திய பஸ் நிலையம் தொடக்கம் ஹட்டன் பஸ் நிலையம் வரையான வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் நிறுத்தப்படும் உணவகங்கள் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவிலிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் (SLTB/GT/DM/2021/07) பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
கொழும்பு - ஹட்டன் பஸ் நிலையம் வரையான வழித்தடத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 23 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இதன்மூலம் தினசரி 282,900 வருமானம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (வருமான அளவு மாறுபடலாம்) கொழும்பிலிருந்து ஹட்டன் அல்லது ஹட்டனிலிருந்து கொழும்புக்கு செல்லும் பயணிகளில் அதிகமானோர் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அத்துடன் தனியார் பஸ்களில் சாதாரண பஸ் சேவை மற்றும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. விசேட காலங்களில் அதிகமான இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன் தேவையேற்படின் அதிகமான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பெருந்தோட்டங்களை இணைக்கும் பிரதான போக்குவரத்து மையமாக ஹட்டன் காணப்படுகின்றது. ஹட்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலேயே தொழில் புரிவதாலும் சாதாரண கட்டணத்தில் பயணிக்க முடியுமென்பதாலும் குறித்த வழிதடத்தில் அதிகமானோர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் தினசரி கொழும்பு - ஹட்டன் வழித்தடங்களில் பொதுப் போக்குவரத்து மூலம் அதிகமானோர் பயணம் செய்யும் நிலை காணப்படுகின்றது.
இதனால் தினசரி கொழும்பு - ஹட்டன் வழித்தடங்களில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் தேநீர் அருந்துவதற்காக தங்களுக்கு நெருக்கமானவர்களின் ஹோட்டல்களில் நிறுத்துவதுண்டு. கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு செல்லும் பொதுப்போக்குவரத்து பஸ்கள் கித்துல்கல பகுதியில் அமைந்தள்ள உணவகத்திலேயே நிறுத்தப்படுவதுண்டு. இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவினால் இரண்டு உணவகங்களில் தங்களது பஸ்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிப்போ தெரிவித்துள்ளது. 15 – 20 நிமிடங்களுக்கு இங்கு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான இ.போ.ச. பஸ்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இரண்டு உணவகங்களில் பயணிகளுக்கு தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்படுதல் மற்றும் அதிக விலை கொண்ட உணவுகள் குறித்து எவ்விதமான முறைப்பாடுகள் வழங்கப்படாமையினால் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.போ.ச. பஸ்கள் தரித்து நிற்கும் உணவகங்கள் தொடர்பில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படுவதில்லை. அதேவேளை ஹட்டன் டிப்போவினால் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவகங்களில் இருந்து எவ்விதமான வருமானமும் டிப்போவுக்கு கிடைக்கப் பெறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண தூரத்தின் அடிப்படையில் நிறுத்தப்படும் உணவகங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து கண்டி, ஹட்டன், பலாங்கொட, வவுனியா போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஒரு உணவகத்தில் மாத்திரமே நிறுத்தப்படும். யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் போன்ற பகுதிகளுக்கு பயணிக்கும் போக்குவரத்து பஸ்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட உணவகங்களில் நிறுத்தப்படும். எனினும் கொழும்பிலிருந்து இரத்தினபுரி, அவிசாவளை, களுத்துறை, கம்பஹா போன்ற பகுதிகளுக்கு பயணிக்கும் பஸ்கள் எந்த உணவகத்திலும் நிறுத்தப்படாது.
பயணிகளின் நலன் கருதி மாத்திரம் உணவகங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. நிறுத்தப்படும் உணவகங்களில் சாரதிக்கும் நடத்துனருக்கு இலவசமாக உணவும் ஏனைய செலவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் தரமான உணவுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் பயணிகளுக்கு விற்கப்படும் உணவுகள் தரமில்லாதவையாகவும் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மதிய மரக்கறி சாப்பாடு 300 ரூபாவுக்கும் சிற்றுண்டி வகைகள் 100 ரூபாவுக்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும் வேறு எங்கும் உணவுகளை கொள்வனவு செய்யமுடியாது என்பதால் அதிக விலைக்கே உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனால் பஸ்களில் பயணிப்பதற்கான கட்டணத்தினை விட அதிக தொகையினை உணவுக்கு செலவளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தினசரி அதிக பஸ்கள் அங்கு நிறுத்தப்படுவதால் உணவகங்கள் அதிக இலாபத்தை பெற்றுக்கொள்கின்றன. அதேவேளை தினசரி அதிகமானோர் அங்குள்ள மலசலகூடங்களை பயன்படுத்தும் நிலை காணப்பட்டாலும் அவை முறையான சுகாதாரத்துடன் பேணப்படுவதில்லை. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் அங்குள்ள மலசலகூடங்களை பயன்படுத்தும்போது அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவை தொடர்பான எவ்வித பிரச்சினைகளுக்கும் சம்பந்தப்பட்ட டிப்போக்கள் பொறுப்பு கூறுவதில்லை. அதற்கான எந்த நடைமுறைகளும் இலங்கை போக்குவரத்து சபையோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினாலோ மேற்கொள்ளப்படுவதில்லை.
நீண்டதூர வழிதடங்களில் பயணிக்கும் பஸ்கள் இவ்வாறு உணவகங்களில் நிறுத்துவது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனினும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அதேவேளை பஸகள் தரித்து நிற்கும் தரமற்ற, அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யப்படுவது தொடர்பில் எங்கு முறைப்பாடுகளை பதிவு செய்வது என்பது தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்றது. இபோ.ச. பஸ்கள் தரித்து நிற்கும் உணவகங்கள் தொடர்பில் குறித்த டிப்போக்களில் முறைப்பாடுகளை பதிவு செய்யமுடியும். உணவுகளின் தரம் தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தனியார் பஸ்களாயின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான எவ்வித செயல்முறைகளும் இல்லை. தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டுமென்பதால் தனியார் பஸ்கள் நிறுத்தப்படும் உணவகங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். பயணிகளின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது குறித்த நிறுவனங்களின் பொறுப்பாகும்.
எனவே இ.போ.ச. பஸ்களை நிறுத்தக்கூடிய உணவகங்களுக்கான அனுமதியை டிப்போக்கள் வழங்கும் போது குறித்த உணவகத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் மேற்பார்வை செய்து விதிமுறைகளுடன் அனுமதியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியார் பஸ்களுக்கான விதிமுறைகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும். பஸ்கள் பயணிக்கும் வழித்தடங்களில் பஸ்களை தரிக்கக்கூடிய வகையிலான பஸ் நிலையங்களை தெரிவு செய்து அவற்றில் பயணிகளின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் பொதுப்போக்குவரத்து துறையில் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக