கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 நவம்பர், 2022

இந்திய நன்கொடை வீட்டுத்திட்டம் ஏன் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை?


என்னுடைய வீட்டினை முழுமையாக நிர்மாணித்துக்கொள்ள என்னிடம் போதிய பண வசதி இல்லை. கணவர் இறந்த பிறகு நான்கு பிள்ளைகளின் கல்வி தேவையினையும் எங்களுடைய உணவு தேவையினையும் பூர்த்தி செய்வதே பாரிய பிரச்சினையாக இருக்கிறது. கடும் காற்று, மழைக்கு ஈடுகொடுக்கும் வகையில் எங்களின் வாழ்விடங்கள் அமையவில்லை. இதை பல்வேறு அரசியல் தலைவர்களிடம் எடுத்துகூறியும் தற்காலிக வாழ்விடத்தையேனும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கணவன் இறந்த பின்னர் என்னுடைய தங்கைக்கு சொந்தமான நிலத்திலேயே சொந்த செலவில் தற்காலிக வாழ்விடத்தை அமைத்து பிள்ளைகளுடன் வசிக்கிறேன்’ மஸ்கெலியா வாழமலை தோட்டத்தில் தொழிலாளியாக கடமையாற்றும் சரஸ்வதியின் கதையாக இது இருந்தாலும் மலையக பெருந்தோட்டங்களில் பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் நிலையும் இவ்வாறே அமைந்துள்ளது.

மலையக பெருந்தோட்ட வீடமைப்பு பெரும்பாலும் எவ்வித அடிப்படை வசதிகளும்

இன்றிய தொடர் வீடுகளாகவே காணப்படுகின்றது. ஆங்கிலேயேர் காலத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்விடங்களிலேயே 200 வருடங்கள் கழிந்தும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த தொடர் வீடமைப்பு முறையானது ஒற்றை, இரட்டை வரிசை தொடர் வீடுகளாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் (வரிசையில்) 12 தொடர் அறைகளையும், இரண்டு வரிசையில் 24 தொடர் அறைகளையும் கொண்டுள்ளன. இதில் ஒரு அறையின் நீளம், அகலம் 12x10 (120 சதுர அடி) என்று அளவுத்திட்டத்தில் ஆங்கிலேயர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வாழிடங்கள் ஆகும். இவற்றில் ஒரு அறையில் ஒரு குடும்பம் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் இட நெருக்கடிக்கு மத்தியில் வாழும் நிலை காணப்படுகின்றது. அத்துடன் சில வேளைகளில் பொது மலசலகூடங்களை பாவிக்கும் நிலை காணப்படுவதுடன் அவை தற்போது பராமரிப்பற்ற நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றன.

தற்போது நாட்டிலுள்ள 454 பெருந்தோட்டங்களை 32 பெருந்தோட்ட கம்பனிகள் நிர்வகிக்கின்றன. இங்கு 2020 டிசம்பர் வரையில் 39,799 தனி வீடுகளும் 29,567 இரட்டை வீடுகளும் 73,130 தனி தொடர் வீடுகளும் 68,628 இரட்டை தொடர் வீடுகளும் 1637 மாடி தொடர் வீடுகளும் 15,480 தற்காலிக குடில்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்குச் சொந்தமான ஏழு தோட்ட வலயங்களில் மொத்தமாக 111,645 குடும்பங்கள் தொடர் மற்றும் தற்காலிக வீடுகளில் வசிக்கின்றன. இவற்றில் நுவரெலியா வலயத்தில் 28,242 குடும்பங்களும் ஹட்டன் வலயத்தில் 29,428 குடும்பங்களும் வசிக்கின்றன. இவற்றை விடவும் நாட்டில் மொத்தமாக பெருந்தோட்டங்களில் 258,602 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்காக 2019 டிசம்பர் வரையில் 6,706 வீடுகள் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனினும் தோட்டங்களில் குடியிருக்கும் அனைத்து குடும்பங்களுக்காகவும் 251,896 வீடுகள் தேவைப்படுவதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி   நிதியம்   தெரிவித்துள்ளது. இவற்றில் நுவரெலியா வலயத்தில் 56,856 வீடுகளும் ஹட்டன் வலயத்தில் 55,063 வீடுகளும் தேவைப்படுகின்றன.

எனவே   பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கான வீட்டுத்தேவையினை பூர்த்தி செய்வதற்கு பாரிய நிதியொதுக்கீடுகள் தேவையென்பது புலப்படுகின்றது. கடந்த காலங்களில் அரசாங்கத்தால் பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் முறையான நிதி ஒதுக்கீடுகள் இன்மையால் முழுமைபெறாத நிலையில் காணப்படுகின்றது.  இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தது.


இந்திய நிதியுதவியிலான வீட்டுத்திட்டம்

மலையக பெருந்தோட்ட மக்களின் தொடர்வீட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களின் நீண்டகால கனவான தனி வீட்டுத்திட்டத்தை உருவாக்கி குடியமர்த்தும் நோக்குடன் இந்திய அரசாங்கத்தினால் மலையக மக்களுக்கு 14,000 தனி வீட்டுத்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றில் முதற் கட்டமாக 4000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தினால் இரண்டாம் கட்டமாக 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையினை திறந்து வைக்கும் நிகழ்வில் இத்திட்டம் தொடர்பில் அறிவித்தார். 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி 2018.02.16 ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தனிகராலயத்தில் 2018.08.12 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டத்துக்காக இந்திய நன்கொடையாக 9500 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தின் பங்களிப்பாக 1500 மில்லியன் ரூபாவும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதேவேளை 2022 - 2024 ஆம் ஆண்டுக்குள் 10,000 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டும் இன்னும் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை.



‘இந்திய அரசாங்கத்தின் நிதியதவியின் கீழ் நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் மூன்று கட்டங்களில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக 10,000 வீடுகளை பெருந்தோட்டங்களில் அமைக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இவற்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்ட 262 பெருந்தோட்டங்களில் குறித்த வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களிடம் மதீப்பீட்டு அறிக்கையினை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் மாறினாலும் வீட்டுத்திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. பயனாளிகள் தெரிவு நீண்ட சுற்றை கொண்டமையினால் அவற்றுக்கான வாய்ப்பு குறைவென இந்திய உயர்ஸ்தானிகராலயம்’ 
தெரிவித்துள்ளது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் தகவல்களின்படி, 10,000 தனி வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா பிராந்தியத்தில் 5875 வீடுகளும் பதுளை பிராந்தியத்தில் 1400 வீடுகளும் கண்டி பிராந்தியத்தில் 975 வீடுகளும் மாத்தளை பிராந்தியத்தில் 250 வீடுகளும் கேகாலை பிராந்தியத்தில் 750 வீடுகளும் இரத்தினபுரி பிராந்தியத்தில் 350 வீடுகளும் குருநாகல் பிராந்தியத்தில் 100 வீடுகளும் காலி பிராந்தியத்தில் 100 வீடுகளும் மாத்தறை பிராந்தியத்தில் 50 வீடுகளும் களுத்துறை மற்றும் மொனராகலை பிராந்தியங்களில் தலா 75 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீட்டுத்திட்டங்களை அமைக்க தலா 7 பேர்ச்சஸ் காணி வுPதம் நலன்பெறுனர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும் அந்த வீடுகளுக்கான காணி அளவுக்கு மேலதிகமாக உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் உள்ளடக்கி ஒரு நன்பெறுனருக்காக ஆகக்குறைந்தது 12 பேர்ச்சஸ் காணி தேவைப்படுமென கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2019 ஆண்டுக்குப் பின்னர் அரசாங்கம் மாறியமையினால் வீட்டுத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தேர்தல் வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டமையால் வீட்டுத்திட்டம் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் 4000 வீட்டுத்திட்டத்தினை முழுமையாக பூர்த்தி செய்தால் மாத்திரமே 10000 வீடுகளுக்கான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுமென இந்திய அரசாங்கம் அறிவித்தது. உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பட்ஜெட்டிலும் போதிய நிதி ஒதுக்கிடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பிரச்சினை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரை சென்ற நிலையில் இந்திய வீடுகளுக்கான நிதியினை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்பின்னரே கட்டுமானம் நிறைவடைந்த வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியும் வீட்டமைப்பு திட்டத்துக்கான பொறுப்பதிகாரியுமான பழனி விஜயகுமார் தெரிவித்தார்.’

இந்திய அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட வீட்டுத்திட்டத்தில் 2022 ஆம் ஆண்டு 3525 வீடுகளும் 2023 ஆம் ஆண்டு 2531 வீடுகளும் 2024 ஆம் ஆண்டு 3944 வீடுகளும் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் எனினும் வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளும் நிலையில் இன்னும் அவை தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்திட்டத்தில் ஒரு வீடுகள் கூடமுழுமை பெறவில்லை. அதிகரித்துள்ள பணவீக்கம், கட்டுமானப் பொருட்களுக்கான பற்றாக்குறை, விலையில் ஏற்ற இறக்கம், வீட்டுக்கான செலவு தொடர்பான மதிப்பீடுகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளாமை போன்றவற்றினால் வீட்டுத்திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

10,000 வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதா?

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 16.02.2020 அன்று அட்டன் வெளிஓயா தோட்டம் மேற்பிரிவில் முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் உரையாற்றியிருந்த முன்னாள் அமைச்சர் அமரர் அறுமுகன் தொண்டமான், ‘இந்திய அரசாங்கம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு மட்டுமே நிதி வழங்கும். தண்ணீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். கடந்த ஆட்சியின்போது இந்த நடைமுறை உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. வீடுகள் கட்டப்பட்டிருந்தாலும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும்போதே வீதி, மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை பெறுவதற்கான வேலைத்திட்டமும் எம்மால் ஆரம்பிக்கப்படும். சாவியை பயனாளியிடம் கையளிக்கும்போது அது முழுமைப்படுத்தப்பட்ட வீடாக இருக்கும். கடந்த ஆட்சியின்போது இடம்பெற்றதுபோல் கட்சி அடிப்படையில் வீடுகள் வழங்கப்படாது.’ என தெரிவித்திருந்தார்.

இத்தனி வீடுகளில் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் அமைக்கப்படவிருந்தன. அத்துடன் வீட்டிற்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் வசதிகள், வீதி மற்றும் வடிகாலமைப்பு போன்றன சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதன் பின்னரான ஆட்சி மாற்றத்தினால் 10,000 வீட்டுத்திட்டம் முழுமையாக முடங்கிப் போனது.


10,000 வீட்டுத்திட்டம் எப்போது அரம்பிக்கப்படும்?

2020 ஆம் ஆண்டு 10,000 வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னரான கொவிட் தொற்று பரவல் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் திட்டத்தை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. கட்டுமானப் பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு என்பவற்றினால் திட்டமிட்டவாறு ஒரு மில்லியன் ரூபாவில் புதிய வீடுகளை முழுமையாக அமைக்க முடியாது. பகுதியளவிலேயே அமைக்க முடியும். ஒரு வீட்டுக்கான நிதியினை அதிகரித்தால் 10,000 வீடுகளை விட குறைந்தளவான வீடுகளையே ஒதுக்க முடியும். அவ்வாறெனில் மேலதிகமான நிதி ஒதுக்கீட்டினை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டும்.

‘இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் முதல் கட்டமாக வழங்கப்பட்ட 4000 வீடுகளுக்கு 2019 ஆம் ஆண்டு வரை உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. பின்னர் இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான பொறுப்பேற்ற பின்னர் 684 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாத வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டதுடன் புதிதாக 300 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. 10,000 வீட்டுத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போதைய விலையேற்றத்துக்கு ஏற்றவகையில் குறித்த நிதியில் வீடுகளை அமைக்க முடியாது. அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்ய ஒரு வீட்டுக்கு 2.4 மில்லியன் ரூபா செலவு ஏற்படுகின்றது. எனவே இந்திய வீட்டுத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு மேலதிக நிதியினை இந்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். தற்போது இந்திய உயர்ஸ்தானிகராலயமானது செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதி தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக’ முன்னாள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியிலான விட்டுத்திட்டத்தினை ஐக்கிய நாடுகளின் மானிட குடியிருப்பு நிகழ்ச்சித்திட்டம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சம்மேளனம், மானுடத்திற்கான நிழல் (HforH) மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை என்பன முன்னெடுத்து வருகின்றன. குறித்த நிறுவனங்களிடம் புதிய மத்திப்பீட்டு அறிக்கைகள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்னும் அவை கையளிக்கப்படவில்லை.

கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு இந்திய வீட்டுத்திட்டம் இடைநிறுத்தப்பட்டமைக்கு காரணமாக கூறப்பட்டாலும் முதற்கட்டமாக வழங்கப்பட்ட 4000 வீட்டுத்திட்டங்களை நிறைவு செய்வதில் ஏற்பட்ட தாமதம், தரமற்ற கட்டுமானங்கள் என்பனவும் 10000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது. புதிய மதிப்பீட்டு அறிக்கையின் பின்னர் வீட்டுத்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டாலும் வீட்டுத்திட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் என்பதற்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை.

பெருந்தொட்டங்களில் இருந்து புதிய வீடுகளை அமைப்பதற்கான காணிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம், ஒப்பந்த பிரச்சினைகள், அரசியல் தலையீடு, பொருட்களின் விலையேற்றம், ஆட்சி மாற்றம் என்பவற்றினால் தனிவீட்டுத்திட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை விரைவாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் உதவிகள் பயனற்றதாகிவிடும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக