- 2015 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்களில் பெருந்தோட்ட மக்களின் வீடமைப்புத் திட்டத்துக்காக 14,348 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 6567.71 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
- வர்த்தக அமைச்சின் உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய முறையில் கோதுமை மா வழங்கும் நடவடிக்கையும் இத்திட்டத்தின் மூலமே மேற்கொள்ளப்பட்டது.
- 2015 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்களில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 5,097 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 2,203.8 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
வரவு - செலவுத்திட்டம் என்பது அரசாங்கத்தின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும். இவ் வரவு - செலவு திட்டத்தின் ஊடாகவே அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் அடைந்து கொள்வதற்கு தேவையான நிதி வழிமுறைகள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கமானது அதன் கொள்கை இலக்குகளை அடைந்து கொள்ளும் பொருட்டு நிதிகளை திரட்டுகின்றது மற்றும் ஒதுக்குகிறது என்பதை திட்டமிடுவதற்காக இது பயன்படுத்தப்படுகின்றது. அவ்வாறு பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு அரசாங்கங்களும் தனது வரவு - செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை மேற்கொள்கின்றன. ஆனால் அந்நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதா என்பதை தற்போதைய பெருந்தோட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட முடியும்.
- 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் தோட்டத்துறையில் வீடமைப்பு அபிவிருத்திக்காக அடுத்த மூன்று (03) வருடத்திற்குள் ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேவேளை 2022 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தில் மற்றுமொரு அம்சமாக சர்வதேச சந்தையினை வெற்றி கொள்வதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, பெறுமதி சேர்க்கப்பட்ட பெருந்தோட்டத்துறையினை உருவாக்குவது எமது நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டது.
- 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 1000 ரூபா நாட்சம்பளம் வழங்குவதற்கான முன்மொழிவு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நடைமுறையில் 1000 ரூபா நாட்சம்பளம் கிடைக்கப்பெறவில்லை.
- 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்டத் துறையானது எமது ஏற்றுமதி வருமானத்திற்கு தொடர்ச்சியாக பாரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றது. அவர்களது வாழ்க்கைத்தரம் இன்றும் நியம நிலைக்கு கீழாகவுள்ளது. பெருந்தோட்ட மக்களை லைன் அறைகளிலிருந்து வீடுகளுக்கு மாற்றும் முயற்சிக்கு நாம் ஆதரவளிக்கவுள்ளோம். நடுத்தர காலப்பகுதியில் 25,000 வீடுகள் இதற்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்டத் துறையிலுள்ள வீட்டுத் தேவைகளும் உக்கிரமடைந்த நிலையில் காணப்படுவதோடு, இன்னும் சிலர் செயலிழந்த லயன்களில் அடிப்படை வசதிகளற்ற நிலையிலுங் கூட வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, அரசாங்கம், பெருந்தோட்டத் துறைக்கு 25,000 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அப்போதைய ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்கு 50,000 வீடுகள் நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அடுத்த வருடமே அரசாங்கமே இல்லாமல் போனதுடன் முன்மொழிவு ஏட்டளவிலேயே காணாமல் போனது.
இவ்வாறு அரசாங்கங்கள் தமது வரவு - செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளை மக்கள் மத்தியில் பிரசாரமாக கொண்டு சென்று விருப்பத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். இந்நிலையில் 2015 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் விடுவிக்கப்பட்ட நிதி தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிதி அமைச்சின் தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக (BD/ADM/01/04/01/2021-2022) பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
2015 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்களில் பெருந்தோட்ட மக்களின் வீடமைப்புத் திட்டத்துக்காக 14,348 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 6567.71 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7780.29 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. 2015 இல் 200 மில்லியன் ரூபாவும் 2016 இல் 1200 மில்லியன் ரூபாவும் 2017 இல் 3288 ரூபாவும் 2018 இல் 2677 மில்லியன் ரூபாவும் 2019 இல் 2900 மில்லியன் ரூபாவும் 2020 இல் 771 மில்லியன் ரூபாவும் 2021 இல் 1522 மில்லியன் ரூபாவும் 2022 இல் 1790 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் 2015 இல் 349.7 மில்லியன் ரூபாவும் 2016 இல் 726.42 மில்லியன் ரூபாவும் 2017 இல் 1794.2 ரூபாவும் 2019 இல் 2280.5 மில்லியன் ரூபாவும் 2020 இல் 768.79 மில்லியன் ரூபாவும் 2021 இல் 648.1 மில்லியன் ரூபாவும் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெருந்தோட்ட பகுதிகளுக்கான சுகாதார மற்றும் போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு வரவு - செலவுத்திட்டங்களின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்கள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் சில நிகழ்சித்திட்டங்கள் மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்களில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 5,097 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 2,203.8 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2893.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. 2015 இல் 600 மில்லியன் ரூபாவும் 2016 இல் 318 மில்லியன் ரூபாவும் 2017 இல் 732 ரூபாவும் 2018 இல் 709 மில்லியன் ரூபாவும் 2019 இல் 600 மில்லியன் ரூபாவும் 2020 இல் 604 மில்லியன் ரூபாவும் 2021 இல் 814 மில்லியன் ரூபாவும் 2022 இல் 720 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் 2015 இல் 418.38 மில்லியன் ரூபாவும் 2016 இல் 313.9 மில்லியன் ரூபாவும் 2017 இல் 310.17 ரூபாவும் 2019 இல் 361 மில்லியன் ரூபாவும் 2020 இல் 467.35 மில்லியன் ரூபாவும் 2021 இல் 333 மில்லியன் ரூபாவும் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்புக்கு வரவு - செலவுத்திட்டங்களில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்கள் அரச உத்தியோகத்தர்களாக கருதப்படுவதில்லை. இதனால் வரவு - செலவுத்திட்டங்களில் வேதன உயர்வுக்கான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படாது. தொழில் வழங்குனர்களே அவர்களுக்கான வேதனத்தை வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் கோதுமை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. வர்த்தக அமைச்சின் உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா வழங்கும் நடவடிக்கையும் இத்திட்டத்தின் மூலமே மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் வரவு - செலவுத்திட்ட திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே வரவு செலவுத் திட்டங்களின் மூலம் ஒதுக்கப்படும் நிதி பரிந்துரைகள் எவையும் பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தியில் முழுமையான பங்களிப்பைச் செலுத்தியிருக்கவில்லை என்பதை இத்தகவல்களின் மூலம் அறியமுடிகின்றது. குறித்த காலப்பகுதியில் முன்வைக்கப்பட்ட 8 வரவு - செலவுத்திட்டங்களில் பெருந்தோட்ட மக்களுக்கு 100,000 க்கும் அதிகமான வீடுகளை நிர்மாணிப்பதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் அவை முழுமையாக நிறைவுபெறவில்லை. மாறாக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் மாத்திரமே மலையக மக்களின் தனி வீட்டுத்திட்ட கனவை நிறைவேற்றியுள்ளது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையின்படி, பெருந்தோட்டங்களில் 39,799 தனி வீடுகள் மாத்திரமே (2020.12.31) அமைக்கப்பட்டுள்ளன. 29,567 இரட்டை வீடுகளும் 73,130 தனி தொடர் லயன் வீடுகளும் 68,628 இரட்டை தொடர் லயன் வீடுகளும் 1637 மாடி தொடர் லயன் வீடுகளும் 15,480 தற்காலிக குடில்களும் காணப்படுகின்றன. எனவே பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் 186,805 தனி வீடுகளுக்கான தேவை காணப்படுகின்றது. ஆனால் 2015 - 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெருந்தோட்ட வீடமைப்புக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தால் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.
அதேவேளை ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு தனியான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது மிகவும் குறைந்தளவிலேயே இருந்து வருகின்றது. மலையகத்துடன் தொடர்புடைய அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலும் கட்சியின் திட்டங்களே மக்கள் மீது சுமத்தப்படுகின்றதே தவிர மக்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக