கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

8 ஜூன், 2022

அதிவேக பாதையில் ஆபத்து


நாட்டின் போக்குவரத்து முறையினை நவீனமயப்படுத்தவும் வாகன நெரிசல் மற்றும் நேர விரயத்தை குறைப்பதற்கும் இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது நாட்டுக்கு வருமானம் பெற்றுக்கொடுக்கும் மார்க்கமாக அதிவேக நெடுஞ்சாலைகள் காணப்படுவதுடன் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் மைல் கல்லாகவும் இருக்கின்றது. எனினும் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் 2015 - 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1134 விபத்து சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பெற்றுக்கொள்ளப்படும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு பராமரிப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. 

நாட்டின் அபிவிருத்தி, வருமானம் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பவற்றை கவனத்தில் கொண்டு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும் தொடர்ச்சியாக நாடு முழுவதும் நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையினால் நாடு கடன் நெருக்கடியினையும் எதிர்கொண்டுள்ளது. எனவே கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் நிர்வாக மற்றும் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை உதவி கட்டுப்பாட்டு நிலையம் - சீதுவ ஆகியற்றிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. 

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒருநாளைக்கு சுமார் 27,500 வாகனங்கள் பயணம் செய்கின்றன. வாகனங்கள் போக்குவரத்து செய்வதன் காரணமாக ஒருநாளைக்கு கிடைக்கப்பெறும் சாதாரண தொகை 7.3 மில்லியன் ரூபாவாகும். 2015 - 2022 வரையான காலப்பகுதியில் இந்த வீதியூடாக 51.2 மில்லியன் வாகனங்கள் பயணம் செய்துள்ளன. 2015-2022 வரையான காலப்பகுதியில் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிடமிருந்து    பயணம் செய்யும்  சுமார் 13,779.3 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளது.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பணம் அறவிடும் நிலையங்களில் காவல் சேவையின் முறையின் கீழ் 99 கொடுக்கல் - வாங்கல் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன் சந்தை அருகில் அமையப்பெற்றுள்ளமை மற்றும் கொழும்பு - கண்டி வீதியில் கொழும்புக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகையால் பேலியகொட பகுதியில் வாகன நெரிசல் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன. 

இந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு அதிவேக நெடுஞ்சாலை, செயற்பாடு, பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ நிலையத்தின் வாகன கட்டுப்படுத்தல் பிரிவு, இலங்கை பொலிஸாருடன் இணைந்து வீதிப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் வாகனங்கள் சீர்செய்யப்படுகின்றன. 

இதேவேளை 2015 - 2022 வரையான காலப்பகுதியில் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை நிர்வகிப்பதற்கு 3276 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்து. பராமரிப்பு செலவுக்காக 663 மில்லியன் ரூபாவும் நிர்வாகச் செலவுக்காக 2613 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 2015 - 2020 வரையான காலப்பகுதியில் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் 1134 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சேதம் விளைவிக்கும் வகையில் 1088 விபத்துக்களும் மரணம் சம்பவிக்கும் வகையில் 3 விபத்துக்களும் அதிக சேதத்தை விளைவிக்கும் வகையில் 20 விபத்துக்களும் சிறியளவிலான விபத்துக்கள் 20 உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகளுக்கான தண்டப்பணம் மற்றும் கைதுகள் அதிவேக நெடுஞ்சாலையின் சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலயம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை நடமாடும் கண்காணிப்பு பொலிஸ் வலயங்களினூடாக கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை குறித்த தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

கொழும்பு - கட்டுநாயக்கா - நீர்கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை என்பது இலங்கையின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையாகும். 25.8 கி.மீ .(16 மைல்) நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரையும், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் நீர்கொழும்பு நகரம் ஆகியவற்றையும் இணைக்கிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2009 அக்டோபரில் ஆரம்பமானதுடன் 2013 அக்டோபர் 27 இல் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து பேலியகொடை வரை இரு திசைகளிலும் மூன்று வழித்தடங்களும், பேலியகொடை முதல் கட்டுநாயக்க வரை இரு வழித்தடங்களும் 226 முதல் 33.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்காக 292 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதுடன் இதில் 248.2 மில்லியன் டொலர்களை சீனாவின் எக்சிம் வங்கி வழங்கியுள்ளதுடன் இலங்கை அரசாங்கம் 45 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது. 

இந்நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் முதல் 8 கிலோ மீற்றர்களுக்கு அதிகூடியது 80 கி.மிஃ மணி வேகத்திலும், மீதமான தூரத்தை 100 கி.மீ.ஃமணி வேகத்திலும் பயணிக்க முடியும். இந்த அதிவேக நெடுஞ்சாலையின் வழியே 42 பாலங்களும், 88 மதகுகளும் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வதற்கு அதிகபட்சமாக 30 மணித்தியாலங்களே செலவாகின்றது. 

இவ்வாறான சிறப்பம்சங்களினால் அதிவேக நெடுஞ்சாலைகள் இலங்கை போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றாலும் இலங்கையில் தொடர்ச்சியாக நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகளின் காரணமாக இலங்கை மேலும் கடன் நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டதையும் மறுக்க முடியாது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை என்பன இலங்கையின் முக்கிய அபிவிருத்திகளாக கருதப்பட்டாலும் கடன் நெருக்கடியின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகின்றது. இலங்கையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 10 வருடங்கக்கு எவ்வித நெடுஞ்சாலை திட்டங்களையும் முன்னெடுக்காமல் இருப்பதற்கு நிபுணர்களினால் அறிவுறுத்தப்பட்டபோதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் இலங்கையின் பொருளாதார இருப்பை நிலைகுலையச் செய்தது. குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவுக்கு மாத்திரம் 46,393,314 ரூபா செலவு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் அதிவேகத்தினால் இலக்குகளை இலகுவாக அடைந்துக்கொள்ள முடியும் நிலை உருவாகியிருந்தாலும் விபத்துக்களும் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அத்துடன் நெடுஞ்சாலைகளுக்கும் சேதம் விளைவிக்கப்படுகின்றது. நெடுஞ்சாலைகள் வருமானம் தரும் மார்க்கமாக இருக்கின்ற நிலையிலும் அவற்றை பராமரிப்பதற்கும் அதிக தொகையினை செலவு செய்யவேண்டியுள்ளது. 


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக