நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வரிசையில் இருந்தே அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான ஐந்து மாதக்காலப்பகுதியில் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன் சேவைக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் நாளாந்த மற்றும் ஊதிய தொகை அதிகரிக்கப்படவில்லை. செலவுகள் அதிகரிப்புக்கேற்ப ஊதியங்கள் அதிகரிப்பு நிகழவில்லை. அரசாங்கம் அரச ஊழியர்கள் தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்தும் நிலையில் தனியார்துறை உழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது.
தினசரி ஊதியத்தின் அடிப்படையில் ஏதியம் பெறுபவர்கள் தங்களுடைய ஊதியத்தை காலத்துக்கேற்ப தாங்களாகவே அதிகரித்துகொள்ளும் நிலை காணப்புடுகின்றது. ஆரச ஊழியர்களுக்கும் ஒவ்வொரு அரசாங்கமும் வாக்குறுதிகளின் அடிப்படையில் அதிகரிக்கும் நிலை காணப்புடுகின்றது. அத்துடன் ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான தனியார்துறை ஊழியர்களின் நிலைமை முதலாளிகளின் நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி என்பது பொதுமக்கள் ஏற்படுத்திய ஒன்றல்ல. காலத்துக்கேற்ப அதிகாரத்துக்கு வரும் ஆட்சியாளர்களினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சலுகைகள், கொள்முதல்கள், திட்டங்கள், கடன்கள் என்பவற்றினால் ஏற்பட்டது என்பது தெளிவாகும். எனினும் அதன் பிரதிபலன்களை பொதுமக்களே அனுபவிக்க வேண்டியுள்ளது. இதனால் நாட்டில் தற்போது அதிக வரிசைகள் தோன்றியுள்ளன. எனவே கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் நாட்டில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் ஆராயலாம்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
நாட்டில் மீண்டும் எரிபொருள் விலைகள் கடந்த 24 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மூன்றாவது தடவையாக எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் 338 ரூபாவிலிருந்து 82 ரூபாவால் அதிகரித்து 420 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 373 ரூபாவிலிருந்து 77 ரூபாவால் அதிகரித்து 450 ரூபாவாகவும் காணப்படுகின்றது. ஆட்டோ டீசல் 289 ரூபாவிலிருந்து 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 400 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 329 ரூபாவிலிருந்து 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 445 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்வாண்டு மார்ச் 11, ஏப்ரல் 18, மே 24 ஆகிய திகதிகளில் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வருடம் ஆரம்பம் முதல் ஐந்து மாதக் காலப்பகுதியில் 200 - 280 ரூபாவால் எரிபொருள் விலைகள் மூன்று கட்டங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி 95 ஒக்டைன் பெற்றோல் 207 ரூபாவாக காணப்பட்ட நிலையில் தற்போது 243 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் 177 ரூபாவாக காணப்பட்ட நிலையில் தற்போது 243 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டீசல் 121 ரூபாவிலிருந்து 279 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் 159 ரூபாவிலிருந்து 286 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைத்தமை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவான எரிபொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நிலையும் காணப்புடுகின்றது.
போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சகல போக்குவரத்து சேவை கட்டணங்களும் அதிகரித்துள்ளன. பஸ், முச்சக்கர வண்டிகள், பாடசாலை போக்குவரத்து சேவைகள், புகையிரதங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கலன் வண்டிகள் என சகல துறைகளும் தங்களுடைய சேவை கட்டணங்களை அதிகரிக்கின்றன. இதனால் மேற்படி பொதுப் போக்குவரத்து சேவைகளை பெற்றுக்கொள்ளும் நபர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
பஸ் கட்டணங்கள் கடந்த 24 ஆம் திகதி முதல் 19.5 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஆரம்ப கட்டணம் 27 ரூபாவிலிருந்து 32 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஏப்ரல் 19 ஆம் திகதி பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய தற்போதைய ஆரம்பக் கட்டணமான 27 ரூபா கட்டணம் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 32 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 32 ரூபா முதல் 2417 ரூபா வரையிலான கட்டணங்கள் 350 பிரிவுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆரம்பக் கட்டணம் 27 ரூபாவிலிருந்து 32 ரூபா வரையிலும், 32 ரூபா கட்டணம் 38 ரூபா வரையிலும், 41 ரூபா கட்டணம் 50 ரூபா வரையிலும் அதிரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆகக் கூடிய கட்டணமான 2020 ரூபா கட்டணம் 2417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் கட்டணங்களை அதிகரிக்குமளவுக்கு இ.போ.ச.வினால் இலாபம் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. 2021 ஆம் ஆண்டு இ.போ.ச. 3.4 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இதன்படி, முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் அதன் பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டர் ஒவ்வொன்றுக்கும் 80 ரூபாவும் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் முச்கச்கரவண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணத்தை 120 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் வண்டிகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை முதல் எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் வண்டிகளின் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு
எரிபொருள் மற்றும் போக்குவரத்து கட்டணங்களின் விலை அதிகரிக்கபட்டுள்ளமையினால் உணவு பொருட்களின் விநியோகத்துக்கான செலவும் பொதுமக்களின் மீதே சுமத்தப்படுகின்றது. இதனால் அன்றாட உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதற்கும் அதிக செலவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இலங்கை அதிகமாக இறக்குமதியில் தங்கியுள்ளமையினால் இறக்குமதிக்கு தேவையான டொலர் இன்மை, ரூபாவின் வீழ்ச்சி என்பவற்றினால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலைகளும் அதிகரித்துள்ளன. பால்மா, கோதுமை மா, பருப்பு, மரக்கறி வகைகள், பழங்கள், சீனி, அரிசி, முட்டை, தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன.
ஜனவரி மாதம் தொடக்கம் மே மாத காலப்பகுதியில் மூன்று தடவைகள் கோதுமை மா விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பாண், கொத்து ரொட்டி உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளும் விலை அதிகரிக்கப்பட்டது. இதேவேளை ஜனவரி மாதம் தொடக்கம் சந்தையில் போதியளவு பால்மா இல்லாத நிலையிலும் இரண்டு தடவைகள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் காணப்படுவதால் மரக்கறிகளின் விநியோகம் குறைவடைந்துள்ளதுடன் விலைகளும் அதிகரித்துள்ளன.
டொலர் பற்றாக்குறையின் காரணமாக பழ இறக்குமதியிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள், தோடை, திராட்சை, மாதுளம் போன்ற பழங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. கோழி தீவனத்தின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எரிவாயு விலைகள் அதிகரிப்பு
எரிவாயு விலை அதிகரிப்பானது வீட்டு தேவையினை நிறைவு செய்வதில் தாக்கத்தை செலுத்தியதுடன் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடும் நிலைக்குத் தள்ளியதுடன் உணவுப் பொதிகளின் விலையினையும் சடுதியாக அதிகரித்திருந்தது. இன்றுவரை எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்கு சகலரும் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதுடன் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் அரச நிறுவனமான லிட்ரோ நிறுவனம் 12.5 கி.கி. எரிவாயு சிலிண்டரின் விலையை 45 சதவீதத்தால் அதிகரித்து 4,860 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,945 ஆகவும், 2.3 கிலோ 910 ரூபாயாகவும் காணப்படுகின்றது. லிட்ரோ கடந்த அக்டோபர் 2021 இல் சிலிண்டர் விலையை 1,493 ரூபாவிலிருந்து 2,675 ரூபாவாக அதிகரித்திருந்தது. எனினும் சந்தை பங்கில் 80 வீதத்தை லிட்ரோ நிறுவனம் கொண்டிருந்தாலும் சமீபகாலமாக அதன் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
இதேவேளை சந்தைப் பங்கில் 20 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் தனியார் எரிவாயு விநியோகத்தரான லாப்ஸ் நிறுவனம், ஆகஸ்ட் 2021க்குப் பிறகு மூன்றாவது முறையாக 12.5 கிலோ சிலிண்டரின் விலையை கடந்த மார்ச் மாதத்தில் 48 வீதத்தால் அதிகரித்திருந்தது. இதன் மூலம் 12.5 கி.கி. எரிவாயு சிலிண்டர் 1,359 ரூபாய் அதிகரித்து 4,199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. 5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை 544 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,680 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஒரு மாதகாலமாக லாப்ஸ் நிறுவனம் எரிவாயுவினை சந்தைக்கு வெளியிடவில்லை.
மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
மருந்து பொருட்கள் மற்றும் கருவிகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்கள் இன்மையால் பெரும்பாலான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இறக்குமதி குறைவினால் மருந்துகளுக்கான கேள்விகளும் அதிகரித்துள்ளன. மார்ச் 11 ஆம் திகதி மருந்துப் பொருட்களின் விலைகளை 29 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.
60 வகையான மருந்துகளின் விலைகளை 40 உயர்த்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் 29 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. அப்போதைய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் கையொப்பமிடப்பட்ட இந்த வர்த்தமானியில், மருந்தை விற்பனை செய்யும் உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளர் திருத்தப்பட்ட சில்லறை விலையை விகிதாசாரமாக 40 வுPதம் அதிகரிக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் கீழ், 500 மில்லிகிராம் அளவுள்ள பரசிட்டமால் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 4.16 ரூபாவாகவும் அமோக்ஸிசிலின் 375 மில்லிகிராம் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 83.71 ரூபாவாகவும் இருக்கும் வகையில் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மின் கட்டணங்களும் அதிகரிக்கும் வாய்ப்பு
மாதாந்த மின் கட்டண அதிகரிப்பு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் உற்பத்தி விலையுடன் ஒப்பிடும் போது ஒரு அலகு மின்சாரம் தற்போது குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படுவதால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது மசகு எண்ணெய் மூலம் ஒரு அலகு மின்சாரம் தயாரிக்க 80 ரூபா முதல் 120 ரூபா வரை செலவாகிறது. தற்போது ஒரு அலகு மின்சாரம் 17 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது, மேலும் அதிக நுகர்வு கொண்ட நுகர்வோருக்கு விலைகள் திருத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நீர் மின் உற்பத்தியின் மூலம் ஒரு அலகு மின்னுக்கு 4.17 ரூபாவும் எரிபொருள் மின் உற்பத்திக்கு ஒரு அலகுக்கு 59.65 ரூபாவும் நிலக்கரி மின் உற்பத்திக்கு ஒரு அலகுக்கு 31.19 ரூபாவும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் ஒரு அலகுக்கு 67.15 ரூபாவும் சூரிய, காற்று மின் உற்பத்திக்கு ஒரு அலகுக்கு 67.15 ரூபாவும் செலவு செய்யப்படுகின்றது.
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ள போதும் இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
மக்களின் நிலை என்ன?
இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் விலை அதிகரிப்பினை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ள போதும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப மக்களின் ஊதியம் அதிகரிக்கப்படவில்லை. எரிவாயு, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு தொடர்ச்சியாக 2-3 நாட்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இலங்கையில் விவசாயம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளமையினால் எதிர்வரும் மாதங்களில் உணவு பஞ்சம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதியளவு டொலர்கள் இன்மையால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரிக்குள்ளாகியுள்ளது. ஆரசாங்கமும் வெளிப்படையாகவே மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. எனவே தற்போதைய நெருக்கடிக்கான தீர்வினை அரசாங்கமே முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தில் கொள்ளையிட்டவர்கள் மக்கள் அல்ல. அரசியல்வாதிகளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக