- அசமந்தமாக செயற்படும் தோட்ட நிர்வாகங்கள்
- வைத்தியசாலைக்கு செல்லாமலேயே மரணிக்கும் உயிர்கள்
- மறுக்கப்படும் தோட்ட தொழிலாளர்களின் வாழும் உரிமை
- நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள தோட்ட மருந்தகங்கள்
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் முதலாளி வர்க்கம் மக்களின் உயிரிலும் இலாபமீட்ட முயற்சிக்கின்றது. நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்து மாபியா செயற்படும் நிலையில் பெருந்தோட்ட சுகாதாரத்துறையின் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. தோட்ட நிர்வாகங்களை நம்பி பெருந்தோட்ட சுகாதார கட்டமைப்புகள் காணப்புடுவதால் பெருந்தோட்டங்களில் வாழும் மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீப காலங்களில் பெருந்தோட்டங்களில் இடம்பெற்ற சில உயிரிழப்பு சம்பவங்கள் பெருந்தோட்ட மக்களின் சுகாதார கட்டமைப்பின் இயலாமையினையும் தோட்ட நிர்வாகங்களின் அலட்சிய போக்கினையும் எடுத்துக்காட்டுகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளின் காரணமாக பல உயிர்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெருந்தோட்டங்கள் தோட்டத் தொழிலாளர்களின் எவ்விதமான நலன்களிலும் குறைந்தளவேனும் அக்கறை செலுத்துவதில்லை. தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்து அல்லது சேகரிக்கும் இறப்பர் பாலுக்கு ஊதியம் வழங்குவது மட்டுமே தோட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் பணியாக இருக்கின்றது. அதைவிடுத்து சுகாதாரம் உள்ளிட்ட சேமநலன்கள் தொடர்பில் எவையும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. கூட்டு ஒப்பந்தத்திலிருந்து பெருந்தோட்ட கம்பனிகள் விலகியிருந்தாலும் ஏற்கனவே வழங்கப்பட்ட சேமநலன்களில் தோட்ட நிர்வாகங்களுக்கு விலக்களிக்கப்படவில்லை. எனினும் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர் குடும்பங்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை.
தோட்ட தொழிலாளி உயிரிழப்பு
மஸ்கெலியா, மொக்கா எடம்ஸ்பீக் பகுதியினைச் சேர்ந்த 56 வயதுடைய தோட்டத் தொழிலாளியான எல்லன் கணேசன் என்பவர் கடந்த 17 ஆம் திகதி பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதற்கான எவ்விதமான பொறுப்பினையும் மொக்கா தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை கண்டித்து தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் தோட்ட தொழிலாளர்கள் கருத்து வெளியிடுகையில், இங்கு வசிக்கும் மக்கள் நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைக்குச் அழைத்துச் செல்வதற்கான வாகன வசதிகள் இல்லை. தோட்ட நிர்வாகமும் வாகன வசதிகளை வழங்குவதில்லை. தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் தனியார் வாகனங்களும் சேவையில் ஈடுபடவில்லை. எனினும் எங்களுக்கு வாகன சேவைகள் கிடைக்கப் பெறாவிட்டால் இறந்தவரை பல நாட்களாக அங்கேயே வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். 3 மணித்தியாலங்கள் கழித்தே சுவசெரிய அம்பியுலன்ஸ் வழங்கப்பட்டது. அதுவரை அவர் உயிருடன் இருந்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேச மக்களுக்கு சேவையினை வழங்குவதற்கு ஒரு சுவசெரிய அம்புலன்ஸ் மாத்திரம் காணப்படுகின்றது. மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் காணப்படும் அம்புலன்ஸ் பாதிக்கப்பட்டவரை வைத்தியசாலையில் அனுமதிக்க 33 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து செல்ல வேண்டும். (மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் தரித்துள்ள சுவசெரிய அம்புலன்ஸ் 16 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள எடம்ஸ்பீக் தோட்டத்துக்கு சென்று நோயாளியினை காவி மீண்டும் 17 கிலோ மீற்றர் கடந்து வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்) அதுவரைக்கும் நோயாளியின் நிலை தொடர்பில் அறிவதற்கு எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லை. துரிதமான அம்புலன்ஸ் சேவையோ அல்லது வேறு போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கான பாதை வசதிகளோ இல்லை.
நோய்வாய்பட்ட ஒருவரை காட்மோர் எடம்ஸ்பீக் பகுதியிலிருந்து 17 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கே கொண்டுசெல்ல வேண்டும். மேலதிக சிகிச்சைகளுக்கு செல்ல வேண்டுமாயின் 28 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கோ, 66 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கோ கொண்டு செல்ல வேண்டும். சிறியளவிலான நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தோட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் தோட்ட வைத்தியசாலைகள் காணப்பட்டாலும் தற்போது அவை செயற்பாட்டில் இல்லை. அத்துடன் தோட்ட வைத்தியசாலைகளில் மருந்துகளும் இல்லை. எனவே தற்போது மருத்துவ செலவுகளை விடவும் போக்குவரத்து செலவுகளுக்கு அதிக தொகையினை செலவு செய்ய வேண்டியுள்ளது.
மொக்கா தோட்டத்துக்குட்பட்ட பகுதியில் தோட்ட வைத்தியசாலை காணப்பட்டாலும் கடந்த ஒரு வருடகாலமாக தோட்ட வைத்தியர் இன்றிய நிலையில் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. தோட்ட வைத்திய அதிகாரியாக பணிக்கு வருபவர்களும் ஒருசில மாதங்கள் கடமையாற்றிவிட்டு விலகி செல்லும் நிலையே காணப்படுகின்றது.
‘பணியிடத்தில் விபத்துக்குள்ளாகும் அல்லது மரணிக்கும் நபர் ஒருவருக்கு நட்ட ஈட்டு கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். அதேவேளை தொழில் வழங்குநரின் கவனயீனத்தினால் மரணம் சம்பவித்திருக்கமாயின் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். தொழில் பாதுகாப்பில் நட்டஈடு முக்கிய அம்சமாகும். கூட்டு ஒப்பந்தத்தில் வேலை விடயம் மற்றும் தொழிற்சங்க விடயங்கள் காணப்பட்டனவே தவிர அவை இரத்துச் செய்யப்பட்டாலும் தொழில் சட்டங்கள் அடிப்படையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு பெறமுடியுமென’ சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்துள்ளார்.
வயிற்று வலியால் சிறுவன் மரணம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் வயிற்று வலியால் மரணித்தமை பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதி இன்மையால் சிறுவன் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சிறுவனின் பாட்டி கருத்து தெரிவிக்கையில், சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டமையினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முடிந்தளவு முச்சக்கர வண்டிகளை தேடிய போதும் எரிபொருள் இன்மையால் எவ்வித போக்குவரத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் 1990 அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முயற்சித்த போதும் அம்புலன்ஸில் வந்தவர் பேரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பின்னர் கடும் சிரமங்களுக்கு மத்தியில் மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிறுவன் இறந்தமையால் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. டீசைட் தோட்டத்திலிருந்து மஸ்கெலியா வைத்தியசாலைக்கு செல்வதற்கு 8 கிலோமீற்றர் தூரத்தை கடக்க வேண்டும். (மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் தரித்துள்ள சுவசெரிய அம்புலன்ஸ் 8 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள டீசைட் தோட்டத்துக்கு சென்று மீண்டும் 8 கிலோ மீற்றர் கடந்து வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்) எனவே சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் மூலம் 16 கிலோ மீற்றர் பயணம் செய்தே வைத்தியசாலையினை அடைய முடியும். டிக்கோயா வைத்தியசாலைக்கு 19 கிலோ மீற்றர் தூரத்தை கடக்க வேண்டும். வாகனங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காவிடின் உயிரிழந்த சிறுவனை குறிப்பிட்ட நேரத்துக்குள் வைத்தியசாலையில் அனுமதித்திருக்க முடியும்.
டீசைட் தோட்ட மக்கள் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டுமாயின் கிளுனுகி தோட்டத்துக்கே செல்ல வேண்டும். அங்கு சாதாரண காய்ச்சல் மற்றும் தலைவலி போன்வற்றுக்கான மருந்துகள் வழங்கப்படுமே தவிர ஏனைய நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு மஸகெலியா அல்லது கிளங்கன் வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டும்.
பெருந்தோட்ட சுகாதார சேவை
பல வருடங்களாகவே பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. தோட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்கள் தோட்ட நிர்வாகங்களின் கீழேயே செயற்படுவதால் அவற்றுக்கு ஒதுக்கப்படும் வளங்கள் தொடர்பில் மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுக்கள் எவ்வித கவனத்தையும் செலுத்துவதில்லை. மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் வைத்தியசாலைகளிலேயே வளப்பற்றாக்குறைகள் காணப்படும் நிலையில் தோட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களின் நிலை மோசமானதாகும்.
பெரும்பாலான தோட்ட வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. ஆனாலும் தோட்ட வைத்திய அதிகாரியின் வீடுகளில் பணம் செலுத்தி மருத்துவ சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும். எனவே தோட்ட நிர்வாகங்களும் திட்டமிட்ட வகையில் தோட்ட வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொடுப்பதில்லை. இதனால் பெருந்தோட்ட சுகாதார கட்டமைப்பு பாரிய சீரழிவினை எதிர்கொண்டுள்ளது.
குறைந்தபட்சம் அரசாங்கம் நடமாடும் சுகாதார சேவைகளையாவது தோட்டப்பகுதிகளுக்கு விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் மந்தபோசனை தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தோட்டபுற பாடசாலைகளை மையப்படுத்தி நடமாடும் சுகாதார சேவைகள் முன்னெடுக்கப்படுமாயின் அது இப்பகுதி மக்களுக்கு பாரிய வாய்ப்பாக அமையும்.
அதேவேளை தோட்ட நிர்வாகங்களும் தொழிலாளர்களின் அறியாமையினை பயன்படுத்தி தொழில் சட்டங்களை புறக்கணித்துவருகின்றன. பணியிடங்களில் தொழில்புரியும் வேலையில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் மரணங்களுக்கு தொழில் வழங்குநர் பொறுப்பு கூறுவது அவசியமாகும். அத்துடன் பணியிடங்களில் ஏற்படும் விபத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் வைத்திய சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்காமல் மரணத்துக்கு தொழில் வழங்குநர் காரணமாக இருந்தாலும் நட்டஈட்டு கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்திலிருந்து கம்பனிகள் விலகியிருந்தாலும் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழில் சமவாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் சட்டங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. எனவே பணியிடங்களில் ஏற்படும் விபத்துகள் மற்றும் மரணங்கள் தொடர்பில் வேலையாள் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக நட்டஈட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக