கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 செப்டம்பர், 2021

மூடிக்கிடக்கும் தாமரை கோபுரம்


தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரை கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு எவ்வித செயற்பாடுகளும் அற்ற நிலையில் இருந்து வருகின்றது. கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தாமரை தடாகம் 350 மீற்றர் உயரம் கொண்டதாகும். 2015 ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் நிறைவடையுமென கூறப்பட்டாலும் இன்றும் எவ்வித செயற்பாடுகளும் இல்லாமல் மர்மமான முறையிலேயே இருந்து வருகின்றது. இங்கு பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவதில்லை. 50 தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் 35 வானொலி அலைவரிசைகளின் சமிக்ஞைகளின் பரிமாற்ற வசதிகளை வழங்குவதற்காகவும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கும் பயன்படுமென கூறப்பட்டது.

கொழும்பு மத்திய பகுதியில் தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகள் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தற்போது 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அவை பயன்பாட்டுக்கு விடப்படவில்லையென்பது கேள்விக்குறியாகும். தற்போதைய நிலையில் தாமரை கோபுரத்தினால் எவ்வித வருமானத்தையும் அரசாங்கம் பெற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை தாமரை கோபுர நிர்மாணபணிக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கு வட்டியாக ஆண்டுக்கு 560 மில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

தாமரை கோபுர செயற்றிட்டம் 912 நாட்களில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒப்பந்தகாரரின் கோரிக்கையின் அடிப்படையில் 2017 அக்டோபர் வரை ஒப்பந்தகாலம் நீடிக்கப்பட்டது. இதேவேளை செயற்திட்டத்தின் ஆரம்பத்தில் சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்படாமை, செயற்றிட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட காணிபகுதி முறையாக கையேற்கப்படாமை, மின் உயர்த்திகள் மற்றும் படிக்கட்டுகளுக்கான உப ஒப்பந்தம் கையளிக்கும் செயற்பாடுகள் முறையாக இன்மை, நிர்மாண ஒப்பந்தம் தாமதம், கடன் பணம் வரையறுக்கப்பட்டமை போன்ற பல்வேறு குறைபாடுகள் கணக்காய்வாளர் திணைக்களத்தின் ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது. 

தாமரை கோபுரத்தின் பணிகள் நிறைவு பெற்று எப்போது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுமென தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம்  (TRC/RTI/2020/16)  முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கையின் அடிப்படையில், தாமரை கோபுரத்தின் கட்டுமானத்துக்கான ஒப்பந்தக்காரர் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஒப்பந்தகாலத்தையும் தாண்டி மிகநீண்ட காலத்தை எடுத்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் நிறைவடையாமலேயே அரசியல் இலாபத்துக்காக 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் கட்டுமானப்பணிகளுக்காக மீண்டும் மூடப்பட்டது. 

தாமரைக்கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்து ஒப்பந்தகாரரிடமிருந்து கட்டிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தகாரரினால் திட்ட பொறியியலாளருக்கு 2019.05.30 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கட்டுமானப்பணிகள் 03.06.2019 - 27.06.2019 நிறைவடையுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் கட்டுமானப்பணிகள் நிறைவடையாமையினால் மீண்டும் மூடப்பட்டது.

தாமரை கோபுரத்தில் 50 தொலைக்காட்சி நிலையங்கள், 35 வானொலி நிலையங்களுக்கான தொலைதொடர்பு வசதிகள், முதல் மாடியில் வர்த்தக கடைத்தொகுதியொன்றும் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் வைபவங்கள் நடத்துவதற்கான மண்டபங்களும் ஆறாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள உணவகமானது, சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், தொலைத்தொடர்பாடல் அருங்காட்சியகம் என பல வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டாலும் நாட்டுக்கு வருமானம் தரக்கூடிய தாமரை கோபுரம் ஏன் இன்னும் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை.

தாமரை கோபுரத்தினை பராமரிப்பதற்கு மாதாந்தம் எவ்விதமான செலவுகளும் மேற்கொள்ளப்படுவதில்லையெனவும் எந்தவொரு நிறுவனமும் அதன் பராமரிப்புகளை மேற்கொள்வதில்லையெனவும் இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறாயின் அங்கு எவ்விதமான செயற்பாடுகளுமே இடம்பெறவில்லையென கருத முடியும். சுமார் 3 ஆண்டுகளாக எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்காமல் மின்விளக்குகளை மாத்திரம் ஒளிரவிடுவதற்கு 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இங்கு வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய எந்தவொரு சேவையையும் ஆரம்பிப்பதற்கு இதுவரை கேள்விகோரல்கள் மேற்கொள்ளப்படவில்லை. தாமரை தடாகத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதுவரை எந்தவொரு நிறுவனமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் தற்போதைக்கு நாட்டுக்கு வருமானம் தரக்கூடிய எந்தவொரு செயற்பாடுகளும் இங்கு நடைபெறவில்லை. மாறாக மாதாந்தம் மின்கட்டணம் மாத்திரம் பொதுமக்கள் பணத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகின்றது. அதேவேளை கொழும்பு தாமரை கோபுரத்தின் பராமரிப்புக்காக எவ்வித பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் திட்ட பிரிவின் ஆலோசகர்களினால் மேற்பார்வை செய்யப்படுகின்றது. 

பத்து ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுர திட்டத்துக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் நிலத்துக்கு கீழ் நான்கு மாடிகளுடன் ஆரம்பிக்கின்றது. கோபுரத்திற்கு அதிவேக மின்சார லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நிமிடங்களில் 85 - 90 மாடிகளை இதன் மூலம் அடையலாம். இக்கட்டிடம் முழுமையாக இலங்கையர்களால் பயன்படுத்தப்படுமெனவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்படுமெனவும் கூறப்பட்டாலும் நடைமுறையில் அவை சாத்தியமற்றதாகவே இருக்கின்றது. 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக