அதேபோலவே உள்ளுராட்சி மன்றங்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை மாத்திரமே பெருந்தோட்ட மக்கள் இதற்குமுன்னர் பெற்றிருந்தனர். 1987 ஆம் ஆண்டு பிரதேச சபைகள் சட்டத்தின் 15 ஆம் இலக்க 33 ஆவது சரத்தானது பிரதேச சபையின் நிதியினை பெருந்தோட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருந்தது. தோட்டப் பிரதேச குடியிருப்புகள் தனியாரின் உடைமையாக கருதப்படுகின்றன. உள்ளுராட்சி சபைகளின் நேரடி நிதி மூலம் தோட்டப்புறங்களுக்கு சேவையாற்ற முடியாத நிலை காணப்பட்டது. பிரதேச சபைகளும் தோட்டபுறங்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாதளவில் சட்ட சிக்கல்கள் காணப்பட்ட நிலையில் அவை கடந்த ஆட்சியில் அகற்றப்பட்டன. தற்போது தோட்டபுற லயன்கள் தோட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. எனவே சகல இடர்களுக்கும் அவையே பொறுப்பு கூற வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை. தீ அனர்த்தம் ஏற்பட்டால் தீயை அணைப்பதற்கான வசதிகள் அங்கு இல்லை. நகர மற்றும் மாநகர சபைகளும் அண்மித்து இல்லாமையும் அவர்களின் சேவைகள் தோட்டபுறங்களுக்கு வழங்கப்படாமையும் பாரிய குறைபாடாகும்.
நிலைமை இவ்வாறிருக்க அண்மையில் தொண்டமான் குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக கருதப்படும் கொத்மலை பகுதியிலுள்ள வெவண்டன் தோட்டத்திலுள்ள வெவண்டன் பங்களா தீபற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் குறித்த இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். தோட்டபுறங்களிலுள்ள லயன் குடியிருப்புகள் எரிந்தால் வராத தீயணைப்பு சேவை எவ்வாறு தோட்டப்பகுதியிலுள்ள பங்களாவுக்கு மட்டும் வந்தது என்ற சர்ச்சை எழுந்தது. தோட்டபுறங்களில் தீயணைப்பு சேவையை முன்னெடுத்திருந்தால் இதுவரை பல லயன்கள் பற்றி எரிவதையும் உடைமைகள் சேதமடைந்து, இன்றும் வீடுகள் இல்லாமல் அநாதரவாக தற்காலிக கொட்டில்களில் வாழும் மக்களின் சோகத்தை முறியடித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. அதேவேளை தீ அனர்த்தங்களின் போதான தகவல் திரட்டுகள் கூட தோட்ட நிர்வாகங்களிடமோ அரச நிறுவனங்களிடமோ இல்லை.
அரசியல்வாதிகளின் குடியிருப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அவர்களை உருவாக்கிய மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுவது நியாயம் தானே. இதனால் குறித்த தீயணைப்புச் சேவையை வழங்கிய நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு காரியாலயத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி தோட்டபுறங்களுக்கு தீயணைப்பு சேவை வழங்கப்படுவது தொடர்பில் வினவிய போது சில தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. தீயணைப்பு வண்டிகள் குறுகிய பாதைகளுக்குள் பயணிக்க முடியாத காரணத்தினால் தோட்டபுறங்களுக்குள் தீயணைப்புச் சேவைகள் வழங்கப்படுவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு தொடர்பிலான முறைப்பாடுகள் நேரடியாக தீயணைப்பு சேவை பிரிவுக்கு வழங்கப்படுவதில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதால், கொழும்பிலிருந்து தகவல் பரிமாற்றம் இடம்பெறுவது தாமதமாகின்றதாக நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவானது, தேயிலை தோட்டப்பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும் தமது சேவையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹட்டன் நோர்வுட் தோட்டம், கந்தபொல பார்க் தோட்டம், தலவாக்கலை ஹொலிரூட் தோட்டம், கொட்டகலை சென்கிளயார் தோட்டம், இராகலை அல்மர் தோட்டம், சாந்திபுர ஒலிபண்ட் தோட்டம் மற்றும் நானுஓயா உடரதல்ல தோட்டம், சமர்செட் தோட்டம், பாமஸ்டன் தோட்டம் ஆகியவற்றுக்கு தமது தீயணைப்பு சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வெவண்டன் பங்களாவில் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கொத்மலை பொலிஸ் பிரிவிலிருந்து நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே தீயணைப்புச் சேவை வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இச்சம்பவத்திலிருந்து இரு விடயங்களை விளங்கிக் கொள்ள முடிகின்றது. தோட்டபுறங்களின் பாதை சீரின்மை அல்லது அதிகதூரம் மற்றும் அனர்த்தம் தொடர்பிலான தகவல்கள் உடனடியாக போய் சேராமையே தீயணைப்பு சேவைகள் தோட்டபுறங்களுக்கு கிடைக்காமைக்கு பிரதான காரணமாக கருத முடிகின்றது.
ஆனால் தோட்டபுற பாதைகள் மோசமான நிலையிலிருப்பது 200 வருட வரலாற்றைக் கொண்டது. கொங்கிறீட் பாதைகள் தொடங்கி காபட் பாதை அமைப்பதற்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கிய நிலையிலும் பெரும்பாலான தோட்டங்கள் சீரான பாதைகள் இன்மையால் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. குறிப்பாக தோட்டபாதைகள் தோட்ட நிர்வாகங்களுக்கு சொந்தமாக இருந்தாலும் அவர்களால் எவ்வித அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. இன்றும் கர்ப்பிணிகள் வீதிகளிலேயே சிசுவை பிரசவிக்கும் நிலையிலும் நேயாளிகள் மரணித்துப் போகுமளவிலும் எமது பாதைகள் அமையப்பெற்றிருக்கின்றமை பெருந்தோட்ட மக்களின் சாபக்கேடாகும். எனவே மக்களுடைய பாதுகாப்பு வீதிகளிலும் தங்கியிருப்பதற்கு இவ்விடயம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை மற்றும் ஹட்டன் - டிக்கோயா நகரசபை ஆகியவற்றில் மாத்திரமே தீயணைப்பு சேவைகள் காணப்படுகின்றன. அவற்றை மாத்திரம் வைத்துக்கொண்டு எவ்வாறு நுவரெலியா மாவட்ட மக்களின் வதிவிடங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய சேவை நிலையங்களுக்கு தீயணைப்புச் சேவையை வழங்கமுடியும். இது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். எனவே தீயணைப்புச் சேவை தோட்டபுறங்களுக்கு சென்றடையவில்லை என்ற வாதத்தை விடுத்து, தீயணைப்பு சேவைகளை விஸ்தரிப்பதே இவற்றுக்குள்ள ஒரே தீர்வாகும்.
எவ்வாறு இவற்றை விஸ்தரிப்பது என்பது அடுத்த கேள்வி. குறைந்தது தோட்டப்புறங்களை அண்மித்துள்ள நகர்புறங்களில் தீயணைப்பு சேவைப்பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தோட்டப்புறங்களிலும் தீயணைப்பு சேவை மையங்களை உருவாக்க வேண்டும். தோட்டங்களிலுள்ள அலுவலகங்களிலேயே இதனை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு தோட்டங்களுக்கும் பொறுப்பாகவுள்ள அலுவலகர்களை இதற்கும் பொறுப்பாக நியமிக்கலாம். இதன்மூலம் உடனடியாக அனர்த்த நிகழ்வுகளை வெளிகொண்டுவர முடியும். இல்லையெனில் கிராமசேவகர்கள் மூலமாக திட்டங்களை முன்னெடுக்கலாம். அவற்றை விடவும் ஒவ்வொரு தோட்டபுற குடியிருப்புகளையும் அண்மித்ததாகவும் இலகுவாக கையாளக்கூடிய வகையிலும் தீயணைப்பான்களை (குசைந நுஒவiபெரiளாநச) பொருத்துவதுடன் அவற்றை பயன்படுத்துவது தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் தீ அனர்த்தங்கள் இடம்பெறும்போது ஆரம்பத்திலேயே அதனை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குறிப்பாக தற்போது மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் தனிவீட்டுத் திட்டங்களிலாவது குறித்த முயற்சிகளை கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டபுற லயன் குடியிருப்புகளில் தீ அனர்த்தங்கள் ஏற்படும்போது அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கு குடியிருப்புகளின் நெருக்கமும் ஒரு காரணமாகும். அவற்றை இல்லாமல் செய்வதற்கு தனி வீட்டுத் திட்டங்களே சிறந்ததாகும். ஆனால் மலையக மக்கள் அனைவருக்கும் உடனடியாக தனிவீட்டுத் திட்டங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால் தீ அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கு முதற்கட்ட முயற்சியாக தீ அனர்த்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக