நாட்டின் வீதி வலைப்பின்னலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் ஒன்றாக அதிவேக நெடுஞ்சாலைகள் காணப்படுகின்றன. இலங்கையில் இது வெற்றிகரமான திட்டமாக ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அவற்றின் மூலம் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியாமலுள்ளதுடன் திட்டத்தை பூர்த்தி செய்வதிலும் தொடர்ந்து இழுபறிகள் காணப்படுகின்றன. அதேவேளை கட்டுமானத்தின் தாமதம் காரணமாக பல பில்லியன்களை இழக்க வேண்டிய நிலை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.
மத்திய அதிவேக வீதியில் கொழும்பு கண்டி அதிவேக வீதி கவனத்தில் கொண்டு மத்திய அதிவேக வீதி நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் 1990 அக்டோபர் 04 ஆந் திகதி வழங்கப்பட்டிருந்ததுடன் அந்த அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக நிர்மாணித்தல், செயற்படுத்துதல், ஒப்படைத்தல் (BOT) என்ற அடிப்படையை ஈடுபடுத்துவதற்கான அங்கீகாரம் 2002 செப்டெம்பர் 18 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.
வடக்கு அதிவேக வீதியானது, துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சால் 2012 ஜூலை 19 ஆம் திகதி அமைச்சரவை விஞ்ஞாபனம் சமர்ப்பித்து 2007 – 2017 ஆண்டுகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்ட பெருந்தெருக்கள் பாரிய திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்டுள்ள 06 அதிவேக வீதிகளில் ஒன்றான வடக்கு அதிவேக வீதியாகிய கொழும்பு – யாழ்ப்பாணம் அதிவேக வீதியை வடக்கு அதிவேக வீதியாக கொழும்பிலிருந்து குருநாகல் வரை 02 பகுதிகளாகவும் கொழும்பு – கண்டி அதிவேக வீதிக்கும் இணைப்பை வழங்கி ஹேதெனிய உள்ளக இடமாறல் வரை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2015 ஜூலை 06 ஆந் திகதி உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் மூலம் இதுவரை வடக்கு அதிவேக வீதியாக இனங்காணப்படட வீதி மத்திய அதிவேக வீதியாகப் பெயரிடப்பட்டு தேசிய முனனுரிமை வழங்கப்பட வேண்டிய செயற்திட்டமாக விரைவாக ஆரம்பிப்பதற்காக 2015 ஜூலை 08 ஆந் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
2003 ஜூன் 25 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி கொழும்பு - கண்டி அதிவேக வீதியை மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் சாத்தியவள ஆய்வுக்காக சுவீடன் அரசாங்கம் மற்றும் சுவீடன் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தால் 119 மில்லியன் ரூபா மானியம் வழங்கப்பட்டிருந்தது. சாத்தியவள ஆய்விற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 119 மில்லியன் நிதி உதவியில் 85.1 மில்லியன் ரூபா வீதி அபிவிருத்தி அதிகார சபையால் செலவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான செலவு விபரங்களில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்னர் 2010 ஜூன் 23 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி மலேசியாவுடனான ஒப்பந்தம் முடிவுறுத்தப்பட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டமான கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப்பணிகள் 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை தாமதமானமையால் 8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் பாராளுமன்றத்தின் கோப் குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது. மத்திய மாகாணத்திற்கு முதலாவது அதிவேக வீதி மற்றும் பின்னர் கண்டிக்கான இணைப்பு வீதியுடன் வட மாகாணத்திற்கு அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கான முறையற்ற தீர்மானம் மற்றும் அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக உறுதியான தேசிய கொள்கை இல்லாததன் காரணமாக கூடுதலான செலவும் காலமும் செலவிடப்பட்டிருந்தது.
இந்த நெடுஞ்சாலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக மாத்திரம் 1.7 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவு செய்யப்பட்டிருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் முதலாவது சாத்தியக்கூறு ஆய்வுக்காக ஸ்மெக் நிறுவனம் கொள்முதல் நடைமுறைகளுக்கு அப்பால் தெரிசெய்யப்பட்டுள்ளதுடன் 2014 டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஸ்மெக் நிறுவனத்திற்கு ரூபா 1,759 மில்லியனும் அந்த நிறுவனத்தின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் இல்லாததன் காரணமாக இது சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகளுக்காக வெளி நிறுவனங்களுக்கு ரூபா 65 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தும் இறுதி சாத்திய வள ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
அத்துடன், 2012ஆம் ஆண்டு வடக்கு அதிவேக நெடுஞ்சாலை என மூன்று கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டம் 2015 ஆண்டாகும்போது நான்கு கட்டங்களைக் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
முதலாவது பகுதியாகிய கடவத்தையிலிருந்து மீரிகம வரையான 37.09 கிலோ மீற்றர்களை நிர்மாணிக்கும் நடவடிக்கை சீனாவின் எக்ஸிம் (Exim) வங்கியின் கடன் பணத்தின் கீழ் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தும் 2018 ஆம் ஆண்டுவரை கடன் பணம் கிடைக்காதிருந்தும் ஒப்பந்தக்காரரின் செலவில் நிர்மாண நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் இப்பகுதிக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக 2018 ஆகஸ்ட் 31 ஆந் திகதியில் ரூபா 5635 மில்லியன் செலவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு மத்தியில் இரண்டாவது பகுதியாகிய மீரிகமவிலிருந்து குருணாகல் வரை 39.9 கிலோ மீற்றரானது நான்கு பகுதிகளாகப் பிரித்து உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உள்நாட்டு ஆலோசகர்களால் தேசிய வங்கியின் கடன் பணத்தின் கீழ் நிர்மாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியின் காணிகளைச் சுவீகரிப்பதற்காக 2018 ஆகஸ்ட் 31 ஆந் திகதியில் உள்ளவாறு ரூபா 5,842 மில்லியன் செலவு செய்யப்பட்டிருந்ததுடன் அத்திகதியில் உள்ளவாறு தேசிய வங்கியின் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த கடன் ரூபா 30,855 மில்லியனாக இருந்தது.
நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படாத பொத்துஹரவிலிருந்து கலகெதர வரையான மூன்றாம் பகுதியின் காணிகளைச் சுவீகரிப்பதற்காக 2018 ஆகஸ்ட் 31 ஆந் திகதியில் உள்ளவாறு மேற்கொள்ளப்பட்ட செலவு ரூபா 1,971 மில்லியனாகும். நான்காவது பகுதியின் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்ததுடன் கொடுப்பனவு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லையென கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய என்டேரமுல்ல முதல் மீரிகம வரையும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நெடுஞ்சாலையை கடவத்தையிலிருந்து அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், இந்தத் தீர்மானம் காரணமாக மீண்டும் சாத்தியகூறு ஆய்வுகள் சிலவற்றுக்காக பெருந்தொகை பணம் செலவுசெய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு எந்தவொரு முறையான நிபுணத்துவ ஆலோசனையும் இன்றி அமைச்சரவையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கோப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தையிலிருந்து மீரிகம வரையான பகுதி வடக்கு அதிவேக நெடுஞ்சாலை என்ற பெயரிலிருந்த திட்டத்தில் பொத்துஹர முதல் ஹீன்தெனிய வரையில் கட்டுமானங்களை மேற்கொள்ள கொள்முதல் நடைமுறையையும் மீறி MCC என்ற சீன நிறுவனத்தைத் தெரிவுசெய்ய 2015 இல் அமைச்சரவை தீர்மானம் எடுத்ததாகவும் இங்கு வெளிப்பட்டது.
இதற்காக 159 மில்லியன் ரூபா நிதி செலவுசெய்யப்பட்டதுடன், பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழு இதுபற்றிய தீர்மானத்தை எடுத்ததுடன், கொடுப்பனவு தொடர்பான பிரச்சினை காரணமாக இப்பகுதிக்கான கட்டுமானப் பணிகள் 04 வருடங்கள் தாமதமடைந்து 2019ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இங்கு வெளிப்பட்டது. இந்த காலதாமதத்தினால் ஏறத்தாழ 8 பில்லியன் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கோப் குழு விசாரணைகளின் போது புலப்பட்டது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது கட்டமான பொத்துஹர முதல் கலகெதர வரையிலான பகுதியின் கொள்முதல் செயற்பாடுகளில் காணப்பட்ட மோசடிகள் காரணமாக கொள்முதல் செயற்பாடுகள் பூர்த்தியடையவில்லை. விலைமனுக் கோரலுக்கு அமைய MS Taisei என்ற நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டியிருந்தபோதும் Fujita என்ற நிறுவனத்துக்கு இதனை வழங்க பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் அழுத்தம் இருந்ததால் கொள்முதல் செயற்பாடுகளில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் இங்கு வெளிப்பட்டது.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுபோன்ற குழு இருப்பதில் எந்தவிதமான தவறும் இல்லாதபோதும், பில்லியன் பெறுமதியான கொள்முதல் செயற்பாடுகளில் தொடர்புபடுவதால் இது நாட்டின் நிதி ஒழுக்கத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கோப் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதர முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழு சில சந்தர்ப்பங்களில் எழுத்துப்பூர்வமாக செல்வாக்கு செலுத்தியது என்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும், கண்காணிப்பதற்கும், ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அமைக்கப்படும் குழுக்கள் கொள்முதல் செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவது ஒரு பெரிய பிரச்சினை என்றும் எனவே, கொள்முதல் செயற்பாடுகளுக்கு ஏற்ப இந்த அதிவேக நெடுஞ்சாலையில் எதிர்காலப் பணிகளை மேற்கொள்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கடவத்தை முதல் மீரிகம வரையில் 5 வீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், மீரிகம முதல் குருநாகல் வரையிலான இரண்டாவது கட்டத்துக்கான பகுதியில் 75 வீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளைப் பூர்த்திசெய்ய முடியும் என்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம், பொத்துஹரவிலிருந்து கலகெதர வரையிலான பிரிவுக்கு கொள்முதல் செயல்முறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த ஆண்டு பணிகளைத் தொடங்க முடியும் என்றும் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக ஏறத்தாள 284 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இங்கு தெரியவந்தது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளில் சில தற்போதைய அதிவேக நெடுஞ்சாலைக்குப் பயனற்றவையாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகள் கடந்த 30 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது உருவான அரசாங்கங்களின் தீர்மானம் மற்றும் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மிகப்பெரும் காலதாமதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பொதுமக்களின் பணத்தையும் விரயமாக்கியுள்ளது. கடந்த காலங்களில் உருவாகிய அமைச்சரவையில் வழங்கப்பட்ட அனுமதிகளில் உள்ள அழுத்தங்கள் மற்றும் கொள்முதல் நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட குழறுபடிகள் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளில் அதிய செலவுகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு இத்திட்டங்கள் தேவையென சொல்லப்படும் அதேவேளை அவற்றுக்காக பெற்றுக்கொள்ளப்படும் கடன்கள் மீண்டும் மக்கள் மீதே சுமத்தப்படுகின்றது. திட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஊழல்களுக்கும் சேர்த்தே மக்கள் அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டிய தேவை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களின் ஊழல் செயற்பாடுகள் கொள்முதல் நடவடிக்கையிலேயே ஆரம்பமாகின்றன. அவற்றை தடுப்பதற்கான சரியான பொறிமுறையை அரசாங்கம் இன்னும் முன்வைக்கவில்லை. அதை ஆட்சியாளர்களும் விரும்பவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக