கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

10 டிசம்பர், 2020

1000 ரூபாவில் ஒளிந்துள்ள அரசியல்



கடந்த 20 வருட காலத்தில் அடிப்படைச் சம்பளத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 599 ரூபாவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 602 ரூபாவுமே சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் கொரோனா நோய்த்தாக்கம் அதிகரித்துச் செல்லும் அதேவேளை சுகாதார பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் அனைத்தும் 1000 ரூபா என்ற போர்வையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 1000 ரூபா நாளாந்த அடிப்படைச் சம்பளம் என்பது தற்போதைய சூழலில் இலகுவாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்க முடியாது. 2019 ஆம் ஆண்டு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டது. 

இக்கூட்டு ஒப்பந்தத்தின் படி தற்போதைய அடிப்படைச் சம்பளத்தில் 40 வீத அதிகரிப்பை மேற்கொண்டு 700 ரூபாவும் தேயிலை/ இறப்பர் விலைக் கொடுப்பனவாக 50 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 750 ரூபா சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான 105 ரூபாவினையும் சம்பளத்துடன் சேர்த்தே 855 ரூபா மொத்த சம்பளமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மீண்டும் 1000 ரூபாவுக்கான பேச்சு எழுந்துள்ளது.

1000 ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமாயின் தற்போதைய அடிப்படைச் சம்பளத்தில் 300 ரூபா அதிகரிப்பு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு 300 ரூபா அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிக்கப்படும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா கிடைக்கப்பெறுவதுடன் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்து 1000 ரூபாவுக்கும் அதிகமான தொகையினை பெற்றுக்கொள்ள வழி ஏற்படும்.

ஆனால் கடந்த 20 வருட காலத்தில் அடிப்படைச் சம்பளத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 599 ரூபாவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 602 ரூபாவுமே சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் இன்னும் ஒரு மாத காலத்தில் 300 ரூபா அதிகரிப்புடன் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என்பது ஏமாற்று கதையே. கடந்த 2000 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுடைய அடிப்படைச் சம்பளமாக 101 ரூபா காணப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு அத்தொகை 700 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டது. எனவே தோட்டத் தொழிலாளர்கள் 599 ரூபாவினை பெற்றுக்கொள்ள 20 வருடங்கள் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 

1000 ரூபா சம்பளவுயர்வு கோரிக்கையானது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமையினால் உரிய காலத்தில் கூட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டதுடன், அதற்காக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. 

2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது 2015 ஆம் ஆண்டில் காலாவதியாகிய நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாட்சம்பளக் கோரிக்கையினை முன்வைத்து புதிய கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டமையினால் 2015 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய கூட்டு ஒப்பந்தம் சுமார் 18 மாதங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு 500 ரூபா நாளாந்த அடிப்படைச் சம்பளத்துக்கே கைச்சாத்திடப்பட்டு தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர். 1000 ரூபா அடிப்படைச் சம்பளக் கோரிக்கை 5 வருடங்களைக் கடந்து பயணித்தாலும் பெருந்தோட்டக் கம்பனிகளை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையினை அரசாங்கம் கையிலெடுக்காத வரை 1000 ரூபா என்பது சாத்தியமே இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. 


உதாரணமாக 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்துக்குப் பின்னர், அரசாங்கத்தினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானியக்கொடுப்பனவாக நாளாந்த கொடுப்பனவுடன் 50 ரூபாவினை வழங்குவதற்கு தீர்மானித்திருந்த நிலையிலும் பெருந்தோட்ட அமைச்சரின் காரணமாக அவை சாத்தியமில்லாது போனது. இவ்வாறு அரசாங்கத்துக்கு 50 ரூபாவே வழங்க முடியாத நிலையில் 1000 ரூபாவை ஒருபோதும் அரசாங்கம் வழங்கப்போவதில்லை. அதனை பெருந்தோட்டக் கம்பனிகளே தீர்மானிக் வேண்டும். வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஒருபோதும் கம்பனிகளை கட்டுப்படுத்தாது என்பது பொதுவான கருத்து.

2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய குறைந்தபட்ச சம்பளச் சட்டமானது சகல வேலையாட்களினதும் அடிப்படைச்சம்பளமாக 400 ரூபாவாக இருக்க வேண்டுமென்றும் மாதாந்த அடிப்படைச்சம்பளம் 10000 ரூபாவுக்கும் குறையாமல் இருக்க வேண்டுமென்றும் குறிப்பிடுகின்றது. எனவே அச்சட்டத்தில் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக மாற்றுவதன் மூலம் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளத்தையும் 1000 ரூபாவாக மாற்ற வேண்டியத் தேவை கம்பனிகளுக்கு சட்டரீதியாக ஏற்படுமென்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இளையதம்பி தம்பையா சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அரசாங்கம் கம்பனிகளுடன் போராடாமல் சட்ட ரீதியாக பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கலாம். ஆனால் கம்பனிகளை பகைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லாத போது இதுவும் சாத்தியமில்லை. 

2000 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான சுமார் 20 வருடங்களில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 599 ரூபாவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 602 ரூபாவுமே சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்டு 700 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டது. எனவே 2021 ஆம் ஆண்டு முதல் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கவேண்டுமாயின் கம்பனிகள் அடிப்படைச் சம்பளத்தை 300 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அட்டவணையில் 2000 - 2019 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் குறைந்தபட்ச நாளாந்த கூலியாக ரூபா 1000 இனைக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஆரம்பித்ததுடன் அதனை தொடர்ந்து அடிப்படை நாளாந்த கூலியானது 500 ரூபாவிலிருந்து ரூபா 700 க்கு அதிகரிக்கப்பட்டது. எனினும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்ட வருகை மற்றும் உற்பத்தித்திறன் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டமை காரணமாக மொத்தச் சம்பளத்தில் ரூபா 20 மட்டுமே அதிகரிப்பு காணப்பட்டதாக மத்திய வங்கியின் 2019 ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு தொடர்ச்சியாக கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதையும் அறிய முடிகின்றது. ஆனால் கூட்டு ஒப்பந்தமானது, கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் அரசியல் முன்னெடுப்புக்கு பயன்படுவதால் அவற்றிலிருந்து வெளியேறுவதற்கு தயக்கம் காட்டுகின்றன. 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்~ வரவு - செலவுத்திட்டத்தில் பரிந்துரைத்துள்ளார். ஆனால் அதனை உடனடியாகவே முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்திருந்தது. அத்துடன் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் தற்போதைய கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ளது. எனவே புதிய கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போதே மீண்டும் 1000 ரூபா தொடர்பிலான கோரிக்கைகள் முன்னெடுக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. 

2016 ஆம் ஆண்டு தேசிய குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தை திருத்துதல் அல்லது கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி புதிய பொறிமுறையொன்றை தயாரித்தல் என்ற இரண்டு வழிமுறைகளின் மூலமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதைவிடுத்து ஜனாதிபதியோ பிரதமரோ 1000 ரூபாவை வாக்குறுதியாகவே வழங்க முடியும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக