கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

6 ஜனவரி, 2020

2020 இல் மலையகம்

இன்னும் இரு நாட்களில் நாம் புதிய வருடத்துக்குள் காலெடுத்து வைத்துவிடுவோம். சினிமாவில் ஐந்து நிமிட பாடலில் முன்னேறுவது போல நாம் இந்த இரண்டு நாட்களில் மாற்றம் கண்டுவிடுவோம் என்று நாம் பொய் கூறப்போவதில்லை. ஒவ்வொரு வருடப் பிறப்பிலும் இம்முறையாவது ஏதாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மனித இனம் கி.பி. 2020 வருடங்களை கடந்துள்ளது. இவற்றில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தவர்கள் என்ற அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட வருடங்களை மலையக் பெருந்தோட்டங்களில் நாம் கழித்துள்ளோம். இந்த 200 வருடங்களில் நாம் எந்தளவுக்கு முன்னேறியிருக்கின்றோம் என்பதை நாமே நம்மிடம் அளவிட்டுக்கொள்ள முடியும். ஆனால் அந்த அளவீடுகள் எவையும் முழுமைபெறாது. மலையக மக்களாகிய நாம் கடந்த ஒவ்வொரு காலத்திலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கமைய உரிமைகளையும் சலுகைகளையும் எதிர்ப்புகளையும் பெற்றுள்ளோம். பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது முதல் மீண்டும் பிரஜாவுரிமை பெற்றது வரையும் பஞ்சத்தில் பிழைப்பு நடத்தியதையும் பெருந்தோட்டங்கள் அரசமயமாக்கப்பட்டு பின்னர் தனியார் மயமாக்கப்பட்டதிலும் லயத்திலிருந்து தனிவீட்டுக்குச் சென்றதிலும் 1000 ரூபா சம்பளத்துக்காக அல்லோலப்பட்டதையும் கடந்த வருடங்கள் நமக்கு பரிசாக கொடுத்திருக்கின்றன.

இந்த 2020 இல் எதை விட்டுவிட்டு எதை பிடிக்கப்போகின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும். இன்னும் நாம் லயத்திலிருந்து முற்றாக வெளியேறவில்லை. 1000 ரூபாவுக்காக இன்னும் போராடிக்கொண்டே இருக்கின்றோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் ஆசிரியர் உதவியாளர் நியமனங்களில் பாரபட்சத்தை எதிர்கொண்டுள்ளோம். தபால்சேவையில் இடம்பெறும் அசமந்தங்களால் வாய்ப்புக்களை இழக்கிறோம். சுகாதாரசேவையில் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம். நீர்வளம் மிக்க பிரதேசத்திலும் குடிநீருக்காக போராடுகிறோம். பாதை சீரின்மையால் இன்னும் பாதையிலேயே குழந்தைகளை பிரசவிக்கின்றோம். தங்கப்பதக்கங்கள் பல பெற்றாலும் இன்னும் வாய்ப்புகள் இல்லாமலேயே முடங்கியிருக்கின்றோம். இன்னும் அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாகவே இருக்கின்றோம். இன்னும் எத்தனை எத்தனையோ விடயங்களில் பின்தங்கியே நாம் இருக்கின்றோம்.

2020 ஆம் ஆண்டுக்குள் மலையகத்தில் 50 ஆயிரம் தனிவீடுகள் அமைக்கப்படுமென ஐ.தே.க. அரசாங்கத்தில் அங்கம் வகித்த மலையக அரசியல்வாதிகள் கூறியிருந்தனர். ஆனால் 10 ஆயிரம் வீடுகளே முழுமைபெறாத நிலை காணப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு நிறைவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களினால் தனிவீட்டுத்திட்டம் முற்றாக முடங்கிப்போயுள்ளது. அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளும் ஐ.தே.க. அரசில் வழங்குவதாக கூறப்பட்ட 25 ஆயிரம் வீடுகளும் இன்னும் விடை தெரியாமலேயே இருக்கின்றன. இந்திய அரசாங்கம் 14 ஆயிரம் தனிவீட்டுத்திட்டத்தை வழங்கியிருக்காவிட்டால் இன்னும் நாம் லயச் சிறைகளிலேயே அடைபட்டிருப்போம்.
வழங்கப்பட்டுள்ள 7 பேர்ச் காணி அளவீடுகளிலும் இன்னும் சிக்கல் நிலை இருக்கின்றது. அதிலும் அமைச்சுக்கள் அவ்வப்போது மாறிப்போவதால் அபிவிருத்திகளும் அவ்வப்போது மாறிப்போகின்றன. அவர்கள் வந்தால் தனிவீடு, அவர்கள் வந்தால் மாடிவீடு. இதில் கட்சிகள் அடிப்படையில் வீடுகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வேறு. இன்னும் மலையகத்தலைவர்களிடையே ஒற்றுமை வளரவில்லை. பின்னர் அவர்களால் எப்படி ஒரு சமூகத்துக்கு சிறந்த தலைமைத்துவத்தை கொடுக்க முடியும்.

அடுத்ததாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வுக்கு வருவோம். 50 இல் தொடங்கி 1000 இல் முடிந்த வாக்குறுதிகள் இன்னும் கிடப்பிலேயே கிடக்கிறது. வாக்கு வேட்டைக்கான மூலதனமாக தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளவுயர்வு மாறிப்போய் விட்டது. சஜித் வந்தால் 1500, கோட்டா வந்தால் 1000 என மலையகம் முழுக்க பிரசார வெடிகள் போடப்பட்டாலும் இன்னும் தொழிலாளர்களுடைய சம்பளம் 750 இலேயே நிற்கின்றது. மீண்டும் தை மாதத்தில் 1000 ரூபா பெற்றுக்கொடுக்கப்படுமென வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்குறுதிகளை மட்டுமே வழங்குவது அரசியல் தலைமைகளின் கடமையாக இருக்கும் நிலையில் அதையே வேதவாக்காக கொண்டு நாமும் அவர்களுக்கு சேவகர்களாக மாறிவிட்டோம். அட்டை கடியிலும், பாம்புக் கடியிலும் சிறுத்தை தாக்குதலிலும் காடுகளாய் போன தேயிலை தோட்டங்களிலும் படும்பாடு இவர்களுக்கு எங்கே தெரியப்போகின்றது. முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட நிர்வாகமும் அடிக்கும் மத்தளத்துக்கே அரசியல்வாதிகள் ஆட்டம் போடுகின்றார்கள். தொழிலாளர்களையும் அதற்கேற்பவே ஆட்டுவிக்கின்றார்கள். இது 2020 இலும் தொடர்வதற்கான வாய்ப்புகளை அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

இலவசக்கல்வி நாடுமுழுவதும் அறிமுகத்தில் இருந்தாலும் இன்னும் ஒருசில பாடசாலைகளில் வசூல் வேட்டைக்கு குறைவில்லை. இன்னும் சில பாடசாலைகளுக்கு வளப்பகிர்வுகளே கிடைப்பதில்லை. தகரக்கொட்டில்களிலும் களஞ்சிய சாலைகளிலும் இயங்கும் பாடசாலைகள் மலையகத்தில் அதிகம். காடுகளையும் மேடுகளையும் கடந்து பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள், போக்குவரத்து வசதியில்லாமல் தமது கல்வியையே தொலைத்து விடுகின்றார்கள். சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு கற்பித்தலை செயற்படுத்த ஆசிரியர்கள் இல்லை. அப்படியே நியமனங்கள் வழங்கப்பட்டாலும் அரசியல் சிபாரிசில் மாற்றம் பெற்றுக்கொள்கின்றனர். மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் தசாப்தங்களையும் கடந்து பேச்சுவார்த்தையிலேயே இருக்கின்றது. அறிக்கை அறிக்கையாக தயாரித்தும் அனுமதியை கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை. மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வியமைச்சு மத்திய அரசாங்கத்தில் இராஜாங்க கல்வியமைச்சு என பதவி வகித்தாலும் சுயலாபங்கள் தேடிக்கொள்ளப்படுகின்றதே தவிர பொதுநலன்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

சுகாதார நலன்களில் நாம் இன்னும் தேசிய ரீதியில் பின்தங்கியே இருக்கின்றோம். வைத்தியசாலைக்கும் வாழ்விடத்துக்கும் பல கிலோமீற்றர்கள் இடைவெளி இருப்பதால் பாதையிலேயே பிரசவங்கள் நடக்கின்றன. மரணங்கள் ஏற்படுகின்றன. பெருந்தோட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களை தேசியமயமாக்க இன்னும் எத்தனை தலைவர்கள் மலையகத்தில் பிறக்க வேண்டுமோ தெரியவில்லை. வாக்குகளை பெற்றுக்கொண்ட தலைவர்கள் மட்டும் தனக்கான சிகிச்சையினை வெளிநாட்டிலும் தனியாரிலும் பெற்றுக்கொள்ளும் வசதியிருக்கும் எமது தேசத்தில் நாம் இன்னும் வைத்தியசாலை வளங்களுக்காக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. மலசலகூட வசதிகள் கூட எமக்கு ஆங்கிலேயரின் பிச்சையாகவே இருக்கின்றது. இன்னும் ஆறுகளிலும் ஓடையிலும் இந்தக்கடன்களை கழிக்க வேண்டிய துர்பாக்கியம் நமக்குள்ளது. சொந்த நிலத்தில் சொந்த வீடு என முழக்கமிடும் எத்தனை தலைவர்களுக்கு தெரியும் எங்களுக்கு கக்கூஸ் கட்டக்கூட இன்னும் காணி கிடைக்கவில்லை என்பது.

அரசியல்வாதிகளை விடவும் இன்று அல்லக்கைகளின் சத்தம் மலையகத்தில் அதிகரித்துவிட்டது. இவர்கள்தான் மலையக அரசியலை புரட்டிப்போடுவது போலவும் அபிவிருத்திகளை கொண்டுவருவதுபோலவும் மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகின்றார்கள். இதுவரை அரசியல்வாதிகள்தான் மக்களை ஏமாற்றினார்கள். இன்று அல்லக்கைகளும் ஏமாற்றுகின்றார்கள். ஆங்கிலேயரிடமிருந்தும் அந்நிய நாட்டிடமிருந்தும் விடுதலை பெற்றுவிட்டோம் என மார்தட்டிக்கொள்ளும் நாம், இன்று உள்ளூர்வாசிகளிடம் முழந்தாளிட்டுக்கிடக்கின்றோம் என்பது நமக்கு இன்னும் புரியவில்லை.

நாமே நமக்காக உழைக்கின்றோம். நாமே நமது உரிமைகளுக்காக போராடுகின்றோம். நாமே நமக்கு சிறந்த தலைமைகளாக இருக்கின்றோம். பின்னர் ஏன் நாம் அரசியல்வாதிகளுக்கு அடிபணிய வேண்டும். எவ்வளவோ உழைப்பாளிகள், கற்றவர்கள், திறமைசாலிகள் நமது சமூகத்தில் இருக்கும்போது நாம் இன்னும் ஏன் முன்னேறாமல் இருக்கின்றோம். நமது முன்னேற்றத்தை தடுப்பது எது. இன்னும் நாம் கட்சிகளாலும் அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டே நிற்கின்றோம். நாமே முதலில் ஒன்றிணைய வேண்டும். நாமே முதலில் மாற்றங்களை விரும்ப வேண்டும். நாமே முதலில் முயற்சிக்க வேண்டும். நாமே முதலில் வெற்றி பெறவேண்டும். 2020 ஆம் ஆண்டில் நாம் முதலில் சுயமாக முயற்சிப்போம். இல்லையென்றால் முயற்சிப்பவர்களுக்கு கைகொடுப்போம். நாம் இதுவரை காலமும் பெற்றுக்கொண்ட அபிவிருத்திகள் என்ன என்பதை சிந்திப்போம். நாம் ஏன் இன்னும் மற்ற சமூகங்களைப்போல் முன்னேறவில்லையென்பதையும் சிந்திப்போம். 2020 ஆம் ஆண்டிலாவது எமது மலையக சமூகம் மாற்றத்தை காணும் என நம்புவோம். 2020 இல் எமது மலையகம் எப்படியிருக்கவேண்டுமென நாமே தீர்மானிப்போம். அனைவருக்கும் புதுவருடம் புதிதாக இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக