நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து இராகல புகையிரத நிலையம் வரையிலாக பிரதான புகையிரத நிலையங்கள் ஐந்தும் சிறிய புகையிரத நிலையங்கள் ஐந்தும் காணப்பட்டன. இதில் நுவரெலியா புகையிரத நிலையமும் ஒன்றாகும். இப்புகையிரதப்பாதையில் தேயிலை கொண்டு செல்லப்பட்டதுடன் பயணிகளும் பயணித்துள்ளனர் (தகவல்: இலங்கை புகையிரத திணைக்களம் (RTI) - PL987 பதிவு இல.289). தற்போதும் நானுஓயா நுவரெலியா புகையிரதப்பாதை காணப்பட்டிருக்குமாயின் அது சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இதன் பின்னர் தற்போது நானுஓயா நுவரெலியா வரையிலான பகுதிகளுக்கிடையில் கேபிள் கார் அமைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு 2019.07.02 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதும் இதுவரை காலப்பகுதியில் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த கேபிள் கார் திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நுவரெலியா மாநகர சபையிடம் தகவல்களை கோரியிருந்த போதும் (பதிவு இல. 71) திட்டம் இன்னும் முழுமைபெறாததால் சரியான தகவல்களை வழங்கமுடியாத சூழல் காணப்படுவதாக கூறி பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிடமிருந்து (MPI/PMMD/03/CP-V) சில தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் கேட்கப்பட்ட விடயங்களுக்கான பதில்கள் எவையும் முழுமையாக வழங்கப்பட்டிருக்கவில்லை.
இலங்கை முதலீட்டுச் சபையின் வேலைத்திட்டமெனும் வகையில் கேபிள் கார் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி (AMP/19/1772/117/053) வழங்கப்பட்டிருந்தது.
சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக கேபிள் கார் கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல் எனும் அமைச்சரவை தீர்மானத்துக்கு (2019.07.02) அமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் நட்சத்திர கவர்ச்சி பொருந்திய சிறப்பான சூழலைக் கொண்ட நுவரெலியா இலங்கையின் உயர் மையத்தில் அமைந்துள்ளதுடன் அதன் வசீகரத்தை அதிகரிக்கும் மேலதிக நடவடிக்கையொன்றாக, நானுஓயாவிலிருந்து Single Tree மலை மற்றும் கிறகரி வாவி வரை கேபிள் கார் கருத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் முகமாக கருத்திட்ட பிரேரிப்பொன்று Outdoor Engineering Lanka (Pvt.) Ltd. நிறுவனத்தினாலும் அதன் வெளிநாட்டு பங்காளரான Doppelmayr Cable Car நிறுவனத்தினாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பெட்டியிலும் பத்து ஆட்கள் பயணிக்கக்கூடிய 86 பெட்டிகளை உள்ளடக்கி அவற்றில் 43 பெட்டிகள் இதன் முதற் கட்டத்தின் கீழ் தாபிக்கப்படும் பொருட்டு நுவரெலியாவிலுள்ள நானுஓயா புகையிரத நிலையம், குதிரைப்பந்தயத் திடல் (Racecourse) மற்றும் Single Tree மலை ஆகியவற்றை இணைத்து 21 கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய பிரதேச சபைகளின் உருவாக்கத்துக்குப் பின்னர் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியாக நானுஓயா காணப்படுவதால் அத்திட்டத்தில் நுவரெலியா பிரதேச சபையின் பங்கும் முக்கியத்துவமுடையதாக காணப்படுகின்றது. அதேவேளை இத்திட்டத்தை நுவரெலியா மாநகர சபையே செயற்படுத்தவுள்ளது. இதனால் கேபிள் கார் திட்டத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தை பங்கிட்டு கொள்வதிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. அத்துடன் நுவரெலியா மாநகர சபை ஐ.தே.க.விடமும் நுவரெலியா பிரதேச சபை இ.தொ.கா.விடமும் காணப்படுகின்றமை உட்பூசல்களை இன்னும் அதிகரித்திருக்கிறது. அண்மையில் நானுஓயா பகுதியில் கேபிள் கார் திட்டத்துக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், பிரதேச சபையின் அனுமதியின்றி பிரதேச சபையின் எல்லையில் அத்துமீறி திட்டமொன்றுக்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறி நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கேபிள் கார் திட்டம் அமையப்பெறவுள்ள காணிகள் நுவரெலியா மாநகரசபைக்கும் மற்றும் நுவரெலியா பிரதேச சபைக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இத்திட்டத்துக்காக நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான 0.6 ஹெக்டெயர் காணியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஒரு ஹெக்டெயர் காணி, இலங்கை புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான 0.2 ஹெக்டெயர் காணி, களனிவெளி பெருந்தோட்ட நிலையம் 3 ஹெக்டெயர் காணி, விளையாட்டு அமைச்சு 0.5 ஹெக்டெயர் காணி, தனியார் காணிகள் 0.2 ஹெக்டெயர், வேறு காணிகள் 6 ஹெக்டெயர் என மொத்தமாக 11.5 ஹெக்டெயர் காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பின்வரும் அரசியலமைப்பு ரீதியான அரச திணைக்களங்களிடம் கேபிள் கார் வேலைத்திட்டத்துக்கு அனுமதி பெறுதல் அவசியமாகும். நுவரெலியா பிரதேச சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, இலங்கை மின்சார சபை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, இலங்கை புகையிரத திணைக்களம், சிவில் விமானசேவை அதிகாரசபை, வனபாதுகாப்பு திணைக்களம், சுரங்க மற்றும் தொல்பொருள் திணைக்களம், இலங்கை விமானப் படை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் என்பவையே அவையாகும்.
கடந்த பெப்ரவரி மாதம் கேபிள் கார் திட்டத்துக்கான பணிகளை ஆரம்பித்து ஆறு மாத காலப்பகுதியில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் இன்னும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கே தீர்வு காணப்படவில்லை. தற்போது நுவரெலியட நகருக்கு செல்வதற்கு தரை மார்க்கமான போக்குவரத்து காணப்பட்டாலும் ரயில் சேவையானது நானுஓயா வரையிலுமே காணப்படுகின்றது. வான்வழி போக்குவரத்தில் சீபிளேன் சேவை காணப்படுகின்றது. ஆனால் அவை இலகுவான பயணங்களாக இருப்பதில்லை. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தற்போது வீதிப்போக்குவரத்தையே பயண்படுத்துகின்றனர். தற்போது கேபிள் கார் திட்டத்தின் மூலம் முச்சக்கரவண்டி, வேன், பஸ் போன்றவற்றின் சேவை குறைவதுடன் வருமானமும் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று பலரும் அஞ்சும் நிலையும் காணப்படுகின்றது.
பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதால் மலைநாட்டுக்கு அவர்கள் பெரும்பாலும் ரயிலிலேயே பயணிக்கின்றனர். நுவரெலியாவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் நானுஓயா வரை ரயில் மூலமாக பயணம் செய்து பின்னர் முச்சக்கரவண்டி, பஸ் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதி வாகன உரிமையாளர்கள் ஓரளவுக்கு வருமானத்தை பெற்றுக்கொள்ளும் சூழல் காணப்படுகின்றது. அதனால் பலரும் அப்பாதிப்பினை விரும்பாதவர்களாகவே இருக்கின்றனர். அத்துடன் கேபிள் கார் திட்டம் நிறைவு பெறுமாயின் அதன் மூலமான வருமானம் முழுமையாக நுவரெலியா மாநகர சபைக்குச் சென்றடையும் வாய்ப்பு காணப்படுகின்றது. இது மாநகரசபை, பிரதேசசபைக்கிடையிலான போட்டியாக மாறியிருக்கின்றது.
கடந்த பெப்ரவரி மாதமே கேபிள் கார் திட்டத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் இன்னமும் அவை தொடங்கப்படவில்லை. இதனால் இத்திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்ட திட்டமாகவே காணப்படுகின்றது. தற்போது ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மாற்றம் கண்டிருக்கிறது. இதனால் இத்திட்டங்கள் ஆரம்பமாகும் நிலை குக்ஷ்த்து இதுவரையும் எவ்வித தீர்மானமும் வெளியிடப்படவில்லை ஆனால் புதிய ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யக்கூடிய விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்த நிலையில் இந்த கேபிள் கார் திட்டத்தினையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை கொண்டாலும் தற்போதைய நிலையில் அரசியல் போட்டிகளால் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு முக்கிய பங்குவகிக்கக்கூடிய ஒரு அபிவிருத்தித்திட்டம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது என்பது உண்மை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக