கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 டிசம்பர், 2019

ஐம்பதும் இல்லை ஆயிரமும் இல்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளப்பிரச்சினையானது மிக நீண்டதொரு கட்டத்தை அடைந்தும் முற்றுபெறாமல் இருக்கின்றது. அதில் 2019 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்துக்குப் பின்னரான 50 ரூபா விவகாரமும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான 1000 ரூபா விவகாரமும் முக்கியமான கட்டங்களாகும். 50 ரூபா விவகாரம் ஜனாதிபதி தேர்தலுடன் முற்றுபெற்று விட்டது. 1000 ரூபா ஜனாதிபதி தேர்தல் நிறைவுற்று நவம்பர் 18 ஆம் திகதி முதல் வழங்கப்படுமென கூறப்பட்ட நிலையில் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 50 ரூபா கடந்து வந்த பாதையினை பின்வருமாறு நோக்கலாம்.

2019 ஆம் ஆண்டு புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆனால் இறுதியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் 750 ரூபா சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் முன்னாள் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தது. அதனடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிகமாக 50 ரூபாவினை பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

2019.03.26 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த கூலியை 750 ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு தொழிற்சங்கங்களுக்கும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்று எட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இவ்வதிகரிப்பானது போதுமானதல்ல என்று பெருந்தோட்டத்துறையில் அதிருப்தி நிலவுவதுடன் இது குறித்து செய்யப்பட்ட பிரதிநிதித்துவ கருத்துக்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தற்போது இணங்கிக்கொள்ளப்பட்ட நாளாந்த கொடுப்பனவிற்கு மேலதிகமாக 50 ரூபாவைக் கொண்ட மேலதிக படியை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்குத் தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஆனால் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாள் சம்பளத்துடன் 50 ரூபாவை வழங்கமுடியாதெனவும் திறைசேரி 600 மில்லியன் ரூபாவை வழங்கினால் நாமும் அமைச்சிலிருந்து 600 மில்லியன் ரூபாவினை வழங்குவோம். இல்லையெனில் பதவி விலகுவதாக அப்போதைய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். 50 ரூபாவை நாம் ஒரு கொடுப்பனவாக கூறினாலும் அடிப்படைச் சம்பளத்தில் இணைத்து வழங்கப்பட்டால் அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் 800 ரூபாவிலிருந்தே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அது கம்பனிகளுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்துமெனவும் கூறப்பட்டது. அதேவேளை தேயிலை சபையிலிருந்து 600 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்ததுடன் கம்பனிகள் 600 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஒத்துக்கொண்டால் மாத்திரமே கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

2019.07.30 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானம்

பெருந்தோட்டத் துறையின் எதிர்கால வாய்ப்புக்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பெருந்தோட்டத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டுள்ள அபிவிருத்தி திறமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கு 600 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கு பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

50 ரூபா கொடுப்பனவுக்கான 600 மில்லியன் ரூபா நிதியைப் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே இவ் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோதும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா மேலதிக கொடுப்பனவை நான் எதிர்க்கவில்லையெனவும் ஆனாலும் இந்தக் கொடுப்பனவை அமைச்சர் (முன்னாள்) திகாம்பரத்தின் அமைச்சுக்கு வழங்கி அந்த அமைச்சின் மூலமாக மிகுதித் தொகையையும் செலுத்திக் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் நிதியை உடனடியாக தனது அமைச்சில் இருந்து வழங்குவது சாத்தியமற்றது என தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் திகாம்பரம், இது 50 ரூபா கொடுப்பனவை இழுத்தடிக்கும் முயற்சி என குற்றம்சாட்டி அமைச்சரவை கூட்டத்திலிருந்தும் இடைநடுவில் வெளியேறியிருந்தார். இவ்வாறு தொடர்ச்சியாக சர்ச்சைகள் நீடித்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது அனைவரும் ஒரே மேடையில் இருந்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பளவுயர்வை பெற்றுக்கொடுப்போம் என கூறியது வேடிக்கையான விடயமாகவே அமைந்திருந்தது.

2019.10.29 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானம்

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஊடாக இலங்கை தேயிலை சபைக்கு 600 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் பெருந்தோட்டத் துறையின் விளைவுப் பெருக்கத்தை துரிதமாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு இந்த நிதியினை பயன்படுத்தி பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிப்பது பற்றி தீர்மானிப்பதற்கு இலங்கை தேயிலை சபைக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஏற்பாட்டினை பயன்படுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமூக நலனோம்பல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களுடைய வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் ஊடாக விளைவு பெருக்க ஊக்குவிப்பு கொடுப்பனவு முறையொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சரினாலும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தேயிலை உற்பத்தியை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் பிராந்திய தேயிலை பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 600 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் இந்த நிதி ஒதுக்கீடு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டவுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமெனவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்திருந்தது. அரசாங்கத்தின் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 140,000 தோட்டத் தொழிலாளர்கள் நன்மை பெறவுள்ளதுடன், பெருந்தோட்ட நிறுவனங்களின் உற்பத்திச் செயற்பாடுகள் மேலும் மேம்படுத்தப்படவுள்ளதுடன் தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கையின் கீழ் அவர்கள் சேகரிக்கும் தேயிலை கொழுந்துகளின் நிறைக்கு மேலதிகமாக சேகரிக்கப்படும் ஒவ்வொரு கிலோகிராம் தேயிலை கொழுந்துகளுக்காகவும் அதற்குரிய வழமையான சம்பளத்தைவிட கூடுதலான தொகை ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தேர்தல் காலம் நெருங்கியதால் தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா தீபாவளி பிற்கொடுப்பனவினையும் 50 ரூபா கொடுப்பனவினையும் பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலை தோன்றியது. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக மேலதிக 5000 ரூபா பெற்றுக்கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குளறுபடியான நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட நாளாந்த சம்பளத்துடனான மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்க எமது தரப்பு எடுத்த முயற்சி இப்போது வெற்றியடைந்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பெற்றுக்கொடுக்க கோரியுள்ள நிலையில், அதற்கு முன்பதாக வழங்குவதெனில் அனைத்து தொழிற்சங்கங்களின் உடன்பாட்டையும் கோரியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்திருந்தார். திருப்பிச் செலுத்த தேவையற்ற நாட்சம்பளத்திற்கு மேலதிகமான 50 ரூபா கொடுப்பனவை கடந்தகால நிலுவையோடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்ட அமைச்சரின் கடிதம் கிடைக்கப்பெற்ற சகல தொழிற்சங்கங்களும் தமது உண்மையானதும் பூரணமானதுமான ஒத்துழைப்பை இப்போது எழுத்து மூலம் வழங்கினால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் அவை தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த ஐந்து மாத நிலுவைப்பணமாக சராசரி 5000 ரூபா கடனாக திருப்பிச் செலுத்த தேவையற்ற கொடுப்பனவாக பெற்றுக்கொடுக்க முடியுமென கூறப்பட்டிருந்தது.

ஆனால் அந்நடவடிக்கை இறுதியை எட்டவில்லை. தொழிற்சங்கங்களின் முடிவுகள் காலதாமதமானதாலும் விருப்பமின்மையாலும் இத்திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனதுடன் ஜனாதிபதித் தேர்தலும் ஆளும்கட்சிக்கு எதிராகவே அமைந்திருந்தது. இறுதியில் அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக சகல நடவடிக்கைகளும் தடைபட்டுவிட்டன. மீண்டும் பொதுத்தேர்தலில் இந்த 50 ரூபா விவகாரம் தேர்தல் வாக்குறுதியாக வந்து சேர வாய்ப்பிருக்கிறது. தற்போதைய ஆட்சியில் பங்காளிக்கட்சியாகவிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 50 ரூபா நிலுவைக்கொடுப்பனவினையும் தாண்டி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் வாக்குறுதியான 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்த இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் சுப்பையா சதாசிவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து நடந்து முடிந்த தேர்தலின் போது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தருவதாக வழங்கிய வாக்குறுதிக்கமைய சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க வேண்டுமென மகஜர் கையளித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட இந்நடவடிக்கைகள் திருப்திகரமானதாக அமையவில்லை. அதேவேளை முதலாளிமாருடனான பேச்சுவார்த்தைகளும் திருப்பு முனையாகவும் அமையவில்லை. அடுத்த பேச்சுவார்த்தைகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எவ்விதமான தெளிவுபடுத்தல்களும் இடம்பெறவில்லை. ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்காக முன்வைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றனவே தவிர மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக அமையவில்லை.

இவ்வாறான சம்பவங்களை நோக்குகையில், எதிர்வரும் காலப்பகுதியில் இடம்பெறுவதாக எதிர்பார்க்கப்படுகின்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் நிலைப்பாட்டிலேயே 50 ரூபாவும் 1000 ரூபாவும் தங்கியிருக்கிறதோ தெரியவில்லை. ஒருவேளை ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றால் 50 ரூபா மீண்டும் முளைக்கலாம். அல்லது பொதுஜன பெரமுன வெற்றிபெற்றால் 1000 ரூபா கதை மீண்டும் தொடரலாம். இவற்றைவிடவும் சாத்தயமானதொரு சமிக்ஞை தென்படவில்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக