கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

2 டிசம்பர், 2019

ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றாத பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்




  • அங்கீகரிக்கப்படாத ஒப்பந்தக்காரர்கள்
  • ஒப்பந்த பெறுமதி இல்லை
  • குறைவான தரங்கொண்ட மூலப்பொருட்கள்

இலங்கையில் ஒவ்வொரு அரசாங்கங்கள் முளைக்கும் போதும் உருவாக்கப்படும் அமைச்சின் மூலமாகவே பெருந்தோட்ட மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரே பெருந்தோட்ட உட்கட்டமைப்பு என்ற பெயர் மாற்றப்பட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி என்ற அமைச்சு உருவாக்கப்பட்டது. இருப்பினும் அதன் கீழ் 2005 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தினால் உருவாக்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களே செயற்பட்டு வந்தன. இந்நிலையிலேயே 2018 ஆம் ஆண்டு பெருந்தோட்ட வலயங்கள் தொடர்பான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை தோற்றம் பெற்றது. இது மலைநாட்டு மக்களுக்கு சேவை செய்யும் முதல் அரச நிறுவனமாக அமைந்திருக்கின்றது. அதேவேளை அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமானது, பெருந்தோட்ட கம்பனிகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அரச,தனியார் நிறுவனமாகவே காணப்படுகின்றது.

2015 செப்டெம்பர் 21 ஆம் திகதிய 1933/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியினூடாக பெருந்தோட்ட வீடமைப்பு நம்பிக்கை பொறுப்பு, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ள போதிலும், 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பாக பதிவு செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ள பிணையால் வரையறுக்கப்பட்டுள்ள கம்பனியொன்றாவதுடன், இந்த அகவிதியின் 44 ஆம் பந்திக்கமைய நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்படும் பணிப்பாளர்களிடையே ஐவர் அரச அமைச்சர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனம் இரு பெயர்களால் இணங்காணப்படுவதாக 2017 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெருந்தோட்டப் பகுதிகளில் அமைச்சால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பெரும்பாலும் பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கைப் பொறுப்பினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கைப் பொறுப்பினூடாக நிறைவேற்றப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பில் அமைச்சில் நிலவுகின்ற ஒப்பந்த நிர்வாகங்கள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பினூடாக நிறைவேற்றப்படும் அனைத்து ஒப்பந்த நிர்மாணங்களுக்காக அமைச்சிற்காக தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவு சங்கத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டு நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. பெறுகைகள் வழிகாட்டியின் மற்றும் பெறுகைகள் வழிகாட்டியின் 3.9.4 பந்திக்கமைய கூட்டுறவு சங்கத்திற்கு ரூபா 2 மில்லியன் கூட்டுத்தொகையை விட அதிகமான ஒப்பந்தங்கள் வழங்கப்படக்கூடாததுடன், குறிப்பானதொரு காலப்பகுதியினுள் அமைப்பொன்றினால் நிறைவேற்றப்படும் மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை மூன்றைவிட அதிகமாக இருக்கக்கூடாது. எவ்வாறெனினும், பெறுகை வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகளை மிகைத்து அந்தந்த தோட்டச் சங்கங்களுக்குரிய அனைத்து நிர்மாணங்களும் அந்த சங்கங்களுக்கு வழங்குதலும், அந்த சங்கங்களூடாக பெறுகைகள் வழிகாட்டி 3.9.1 இற்கு முரணாக உப குத்தகை வழங்குதலும் அவதானிக்கப்பட்டது. மேலும், தனியார் நிறுவனமொன்றான பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கை பொறுப்பு அமைச்சிற்காக ஒப்பந்த நிர்மாணங்களுக்காக உடன்படிக்கை கைச்சாத்திடுவதுடன், அவ்வாறு மேற்கொள்வதற்கு பெற்றுக்கொண்ட அங்கீகாரமொன்று கணக்காய்விற்கு முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

கிரீன் கோல்ட் வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலுள்ள 2017 ஆம் ஆண்டினுள் 329 வீட்டு அலகுகளை கொண்ட 18 செயற்றிட்டங்களுக்காக ரூபா 329 மில்லியன் மற்றும் அதற்கான முகாமைத்துவ கட்டணங்களுக்காக ரூபா 19.7 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2017 டிசம்பர் 31 ஆம் திகதியில் ரூபா 173.7 மில்லியன் செலுத்தப்பட்டிருந்ததுடன், ரூபா 155.2 மில்லியன் செலுத்துவதற்கும் (பொறுப்பொன்று) காணப்பட்டது. அதற்காக முகாமைத்துவ கட்டணத்தில் ரூபா 7.5 மில்லியன் செலத்தப்பட்டிருந்தது. இந்த வீடுகளின் கீழான பௌதீக பரிசோதனையில் 106 வீட்டு அலககளை கொண்ட 6 வீட்டு செயற்றிட்டங்களுக்காக செலவிடப்பட்ட ரூபா 100.5 மில்லியன் நிர்மாணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் நியமமொன்றில்லாது குறைவான தரத்தினை கொண்டவையாக இருந்ததுடன், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தி நியமமொன்றில்லாது நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

முன்பூர்த்தி ஒப்பந்த முறைமையின் கீழ் பூர்த்தி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட செயற்றிட்டமொன்றாக 50 வீடுகள் ரூபா 50 மில்லியனுக்கு நிர்மாணிப்பதற்கு அமைச்சின் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பிற்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அந்த செயற்றிட்ட நிர்மாணம், டிரேடன் தோட்டப்புற சங்கத்திற்குரிய தோட்ட கூட்டுறவு சங்கத்திற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பினால் வழங்கப்பட்டிருந்தது. அந்த தோட்ட சங்கத்தினால் அரசாங்க பெறுகைகள் நடைமுறைக்கு மீண்டும் உப ஒப்பந்தமாக 2016 டிசம்பர் 09 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட நிர்மாண ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 8.9.1 பந்திக்கமைய ரூபா 225,000 மிகைத்து எந்தவொரு வேலை ஒப்பந்தத்திற்காகவும் எழுத்துமூல ஒப்பந்த உடன்படிக்கையொன்றுக்கு உட்பட வேண்டிய போதிலும், ஒப்பந்தத்தை கையளிப்பதற்காகவும் இதுவரையிலும் பணிகளை உள்ளடக்குவதற்கு தேவையான அடிப்படை உடன்படிக்கையொன்று அமைச்சு மற்றும் மேற்படி தனியார் கம்பனி ஆகியவற்றுக்கிடையே அல்லது பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் அந்த கம்பனிக்கிடையே இருந்தமைக்கான சான்றுகள் முன்வைக்கப்படவில்லை.

பெறுகைகள் வழிகாட்டி கோவையின் 8.12.1(அ) வழிகாட்டிக்கமைய கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் பணிப்பாக செயற்றிட்டங்களின் பணிகளுக்காக செயற்றிட்டங்கள் ஒப்பந்தங்களுக்கான அனைத்து பணிகளும் மேற்பார்வை செய்யப்படுவதாகவும் மதிப்பீடு செய்யப்படுவதாகவும் உறுதிப்படுத்துவதற்காக பெறுகை நிறுவனம் (அமைச்சு) பொறுப்புக்கூற வேண்டியதுடன், கையேற்பதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள சேவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளின் தரமும் சுயாதீனமாக பரீட்சிக்கப்பட வேண்டும். எவ்வாறெனினும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பினால் நிறைவேற்றப்படும் செயற்றிட்டங்களின் ஒப்பந்தங்களுக்குரிய மதிப்பீடுகளை சான்றுறுதிப்படுத்தும் பணிகள் நீங்கலாக மதியுரை சேவைகளை வழங்குதல், ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்தல், கண்காணிப்பு, பணம் செலுத்துல் போன்றன தொடர்பில் அவ்வாறு இடம்பெறுவதில்லை என்பது தெரிவுப் பரிசோதனைகளுக்கமைய அவதானிக்கப்பட்டது.

கொட்டியாக்கல 184 வீடுகளை நிர்மாணிப்பதற்காக கேள்வியினை கையளிக்கும் போது ஒப்பந்தக்காரரின் முன் தகைமை பரிசோதிக்கப்படாததும் நான்காவது ஆகக் குறைந்த விலையினை மதிப்பாய்வு செய்யாமலும் வெளிப்படைத்தன்மையற்று, ஐந்தாவது ஆகக்குறைந்த விலையினை முன்வைத்த ஒப்பந்தகாரர் தெரிவு செய்யப்பட்டு 2016 மே 23 ஆம் திகதி ஒப்பந்தகாரருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தம் தொடர்பில் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

  • உடன்படிக்கையில் ஆரம்ப மற்றும் முடிவுத் திகதிகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
  • நிபந்தனைகள் எதுவும் குறிப்பிடப்பட்டிராததுடன் நிபந்தனைகள் இல்லாத போது எடுக்கப்படும் நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
  • ஒப்பந்த பெறுமதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
  • தாமதக் கட்டணம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறு பல விடயங்களில் தவறிழைக்கப்பட்டே வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. திறமையற்ற ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தரமற்ற மூலப்பொருட்கள் கொண்டே வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையிலும், மோசமான வகையிலேயே மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். வீட்டுத்திட்ட பயனாளிகளை விடவும் வீட்டுத்திட்ட ஒப்பந்தக்காரர்களே அதிகமான இலாபத்துடன் நன்மையடைந்திருக்கின்றார்கள். தற்போதைய நிலையில் பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கை பொறுப்பானது, ஒரு தனியார் நிறுவனமாகவே கருதப்படுகின்றது. தற்போது அமைச்சால் உருவாக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட வலயங்கள் தொடர்பான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையிடம் வீட்டுத்திட்டங்கள் கையளிக்கப்பட்டு அரச நியமங்களுக்கேற்ப திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேவேளை தற்போது பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மற்றும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களையும் மீள்மதிப்பீடு செய்தல் அல்லது அவற்றின் தரம் தொடர்பில் ஆராய்தல் அவசியமானதொன்றாக காணப்படுகின்றது. இல்லையெனில் லயத்து வீடுகளில் போலவே அபாயகரமான வாழ்க்கையை மீண்டும் தனிவீட்டுத்திட்டத்திலும் வாழவேண்டிய சூழல் மலையக மக்களுக்கு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக