கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

4 நவம்பர், 2019

தீபாவளி கடன்?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்ற வேளையில் மலையக பெருந்தோட்ட மக்கள் தீபாவளி பண்டிகையினையும் இன்று கொண்டாடுகின்றார்கள். வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவர்கள் விரும்பும் பண்டிகையினைகூட கடன் இல்லாமல் கொண்டாடுவதற்கு அவர்களுக்கு வருமானம் கிடைப்பதில்லையென்பது வருந்தத்தக்க உண்மையாகும். கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் கோரிய 1000 ரூபா சம்பளவுயர்வு கோரிக்கை தவிடுபொடியானது. அதன்பின்னர் மேலெழுந்த 50 ரூபா கோஷமும் ஆடி அடங்கிப்போனது. தற்போது 5000 ரூபா கோஷம் மேலெழுந்துள்ளது. இன்று தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் பெருந்தோட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாவினை தீபாவளி முற்பணமாக வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்திருந்த நிலையில் மேலதிகமாக 5000 ரூபாவினை அமைச்சரவை அனுமதியுடன் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு தேயிலை சபையினூடாகவே அந்நிதி பெறப்படவிருந்தது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக தேயிலை சபையினூடாக வழங்கப்படவிருந்த 5000 ரூபா தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருப்பதால் 5000 ரூபாவும் மாயமானது.

தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளியினை கொண்டாடுவதற்கு 10 ஆயிரம் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையானது 1000 ரூபா என்ற அடிப்படையில் 10 மாதங்களுக்குள் மீண்டும் தொழிலாளர்களின் மாதச்சம்பளத்திலிருந்து அறவிடப்படும். எனவே ஒரு நாள் தீபாவளியினை சந்தோஷமாக கொண்டாடப்போகும் தொழிலாளர்கள் எதிர்வரும் 10 மாதங்களுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 1000 ரூபா என்பது தொழிலாளர்களுக்கு  இருநாள் வருமானமாகும். இதை புரிந்து கொள்ளாத தலைவர்கள் தொழிலாளர்களை மீண்டும் கடனாளியாக்கிவிட்டு வெற்றி (வெத்து) பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களால் 5000 ரூபா நிதி போனஸாக பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால் அது சிறந்த வெற்றியாக அமைந்திருக்கும். ஆனால் இவர்களால் 50 ரூபாவே பெற்றுக்கொடுக்க முடியாத போது அதற்கு சாத்தியமில்லை. தற்போது தேயிலை சபையிடமிருந்து இலகுவாக கடனை பெற்று கடன் கொடுக்க முடிந்தது போல தொழிலாளர்களின் வேதன உயர்வுக்காக வழங்கப்படவிருந்த 50 ரூபாவுக்காக ஏன் இலகுவாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் கடனை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் தொடர்பிலேயே தேயிலை சபையும் இருக்கின்றது. 50 ரூபா வழங்கினால் பதவியை விட்டு விலகிவிடுவேன் என கூறிய கைத்தொழில் அமைச்சர் எந்த முகத்தோடு ஹட்டனுக்கு வந்தார் என்பது தெரியவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை தவிர்த்து ஏனைய தனியார் நிறுவனங்களில் கடமைபுரிகின்ற பெரும்பாலான மலையகத்தவர்களுக்கு குறைந்தளவாவது போனஸ் கொடுப்பனவு வழங்கப்படுவதுண்டு. போனஸ் கொடுப்பனவு வழங்கப்படாவிட்டாலும் கூட மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காகவாவது சிறு தொகை ஊக்குவிப்புகள் வழங்கப்படுவது வழமையான விடயமாக இருக்கின்றது. ஆனால் அதீத உடலுழைப்பை கொடுத்தும், கம்பனிகள் முழுமையான உழைப்பை உறிஞ்சியும் அவர்களுக்கு சிறு தொகையினை கூட ஊக்குவிப்புக்காக வழங்குவதற்கு மனம் இல்லை. உழைத்து உழைத்து களைத்து போகும் அவர்களுக்கு மண்ணும் சொந்தமில்லை. பொன்னும் சொந்தமில்லை. இதனை மாற்றப்போவது யார்?. மாற்றுவதற்கு தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை எதிர்வரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.

சுகபோக வாழ்க்கையினை வாழ்வதற்கு தொழிலாளர்களை தயார்படுத்தாவிட்டாலும் கடனில்லாத வாழ்க்கைக்கு அழைத்துச் செல்வதற்கு யார் தயாராக இருக்கிறார்களோ? யாருக்கு முடியுமோ அவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு மக்களுக்கு மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் போலி வெத்து கோஷங்களை கையிலெடுத்துக் கொண்டு மக்களை திசைதிருப்பும் வேலையில் பலரும் இறங்கியிருக்கின்றார்கள். 50 வருடங்களாக ஏமாற்றப்பட்ட மக்கள், கடந்த 5 வருடங்களாக ஏமாற்றப்பட்ட மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த கட்சிக்கு சார்பான ஆட்சி மத்தியில் அமைந்தாலும் கட்சிக்காரர்களின் தேவைகள் முதலில் பூர்த்தி செய்யப்படுவதற்கும் கட்சியினை வளர்த்து வீதியில் செல்லுகின்றவர்களுக்கெல்லாம் கட்சியில் பதவியினை கொடுத்து அவர்களை வளர்த்து விடுவதற்குமே கட்சித்தலைமைகள் முயற்சிக்கின்றனவே தவிர மக்களை முன்னேற்றுவதற்கு யாரும் தயாராக இல்லை.

மலையகம் தற்போது வரலாறு காணாத அபிவிருத்தியினை கண்டுள்ளதாக கூறப்பட்டாலும்கூட அந்த அபிவிருத்திகளில் எவ்வளவு குறை இருக்கின்றதென்பதை சுட்டிக்காட்டுவதை பொறுத்துக்கொள்ளாதவர்கள் பலர் இருக்கின்றனர். குறைகளை கேட்பதற்கும் சகித்துக்கொள்வதற்கும் தைரியம் உள்ளவர்கள் கூறினால் அவை ஆதாரங்களுடன் எப்போதும் சுட்டிக்காட்டப்படும். மக்களும் அந்த தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து கூட்டிக்கொண்டு வருபவர்களுக்கெல்லாம் மாலை அணிவித்து பொட்டு வைத்து சிறப்புகள் செய்து கொண்டிருந்தால் உங்களால் சுயமாக ஒரு தலைவரையும் தெரிவு செய்ய முடியாது போகும். குறைந்தது உங்களை ஆள்பவர்களையாவது எவருடைய தலையீடும் இன்றி தெரிவு செய்யக்கூடிய உரிமையினை முழுமையாக பயன்படுத்துவதினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்தல் கால வாக்குறுதிகளாக மட்டுமே சில கோரிக்கைகள் இருந்து வருவதை நீங்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. 1000 ரூபா சம்பளவுயர்வு கோரிக்கை, மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம், லயன்களற்ற வாழ்க்கை, பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச உத்தியோகம் என இன்னும் பல கோரிக்கைகள் காலங்காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றதே தவிர, அவற்றை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எவையும் முன்வைக்கப்படவில்லை. 1000 ரூபா சம்பள உயர்வுக்கு மக்கள் வீதிக்கு இறங்கி போராடியும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆட்சியை தாங்கிப்பிடித்துக் கொண்டு இருந்தும் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது. குறைந்தது 50 ரூபாவினை கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேறுவோம் என கூறிக்கொண்டு அதிலேயே தொங்கிக் கொண்டு மாத்திரமே இருக்க முடிந்தது. கூட்டு ஒப்பந்தத்துக்கு முதல் நாள் வரை 1000 ரூபாவுக்காக போராடியவர்கள் இறுதியில் 855 ரூபாவுக்கு இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமே அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. மலையகத்துக்கான பல்கலைக்கழகம் என்பதை விட வளாகம் ஒன்று அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் வாரத்தில் ஜப்பானிய குழுவொன்று இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இலங்கை வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தும் இரண்டு வருடங்களை கடந்தும் மீண்டும் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான கோரிக்கையுடன் தேர்தலில் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். யாரை ஏமாற்றுவதற்காக இதனை செய்கின்றார்கள். ஏமாறுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் போது ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். லயன்கள் இல்லாத வாழ்க்கையினை அமைப்பதாக கூறி இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளை இவர்கள் வழங்குவதாக கூறிக்கொண்டு திரிவதும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்ட மக்களுக்கு இன்னும் வீடுகள் வழங்காமல் அரசியல் செய்வதும், வழங்கப்பட்ட வீடுகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதும், ஒப்பந்தங்களில் குழறுபடிகள் காணப்படுவதும் எமக்கு தெரியாத விடயமல்ல.

பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரச உத்தியோகம் என கூறிக்கொண்டு ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை வழங்கி அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக அலைக்கழித்து வருவதும் பலருக்கும் தெரிந்ததே. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளில் மக்களை கோர்த்து விட்டு இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஆட்சியதிகாரங்களை கேட்டு பிச்சையெடுப்பது எவ்விதத்தில் நியாயமாகும். மக்களை நம்பிதான் உங்கள் வாழ்க்கையே இருக்கிறது. ஆனால் உங்களை நம்பிய மக்களின் வாழ்க்கை நடுத்தெருவில் நிற்கின்றது. இப்போது மீண்டும் நவம்பர் 18 ஆம் திகதி முதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படுமென மொட்டு கட்சியாலும் 1500 ரூபா பெற்றுக்கொடுக்கப்படுமென அன்னக் கட்சியாலும் தேர்தல் கால வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு பெற்றுக்கொடுப்பதற்கு எந்தவித பொறிமுறையும் சட்டரீதியாக இல்லையென்பதை மலையக மக்கள் புரிந்து கொள்வார்களா?. ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தற்போதே பெருந்தோட்ட மக்கள் மீது அக்கறை வந்திருக்கின்றது. தொழிலாளர்களுடைய வேதனம் தொடர்பில் கவலை கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தவர்கள், கடந்தகால வேதனப்போராட்டங்களின் போது அமைச்சர்களாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள்.

இவர்களுடைய அமைச்சின் கீழ் செயற்படும் வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் எத்தனை வீடுகள் மலையக மக்களுக்காக கட்டப்பட்டுள்ளன. அக்கரப்பத்தனை  பெல்மோரல் தோட்டத்தில் வீடமைப்பு அதிகாரசபையினால் கடன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட 25 வீடுகள் முறையாக நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இன்றும் முழுமையாக பூர்த்தியடையாமல் கிடக்கின்றன. இந்நிலையில் என்ன அடிப்படையில் இவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென நினைக்கின்றார்கள். மக்களுக்கு என்ன செய்துவிட்டு வாக்குகளை கேட்கின்றார்கள். மக்களே சுயமாக தீர்மானிக்க வேண்டும். நம்மை ஆள்வதற்கு யார் தகைமையானவர்?.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக