கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

11 நவம்பர், 2019

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள்


*20 நாட்களில் 1257 மில்லியன் ரூபா
* தேர்தல் காலத்தில் 10 பில்லியன் ரூபா செலவு செய்யலாம்?

ஜனாதிபதி தேர்தல் செலவு
5.5 பில்லியன்கள்
தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கான நாட்டின் ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் களத்தில் 35 வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை வாக்குறுதிகளாக மக்கள் மீது திணித்து வருகின்றனர். இலங்கை அரசாங்கம் தற்போதுள்ள கடன் நிலைமையில் வழங்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பது தெரிந்திருந்தும் கூட ஒருவரை இன்னொருவர் மிஞ்சுமளவுக்கு வாக்குறுதிகள் அள்ளித் தெளிக்கப்படுகின்றன. இதுவொருபுறமிருக்க ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியிருப்பவர்களில் சிலர் தனது பிரசாரங்களுக்காக செலவு செய்யும் தொகையானது மிகவும் பிரமிப்பான வகையில் காணப்படுகின்றது. அவற்றிலும் ஊடகங்களில் மேற்கொள்ளப்படுகின்ற விளம்பரச் செலவுகளே கோடிகளை தாண்டுவதாக அமைந்திருக்கின்றன.

இலங்கையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிகளுக்கிடையில் தேர்தல் விளம்பரங்களுக்கான கோடிகள் எங்கிருந்து பெறப்படுகின்றன. தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான நிதி கட்டுப்பாடுகளையும் மீறி செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி வேட்பாளர்கள் கடந்த 20 நாட்களில் 1257 மில்லியன் ரூபாவை (14 அக்டோபர்  நவம்பர் 04 ) செலவிட்டிருப்பதாகவும் இத்தொகையில் அதிகமானளவு பணத்தை இரு பிரதான வேட்பாளரும் செலவிட்டிருப்பதாகவும் இந்த தேர்தல் காலப்பகுதிக்குள் 10 பில்லியன் ரூபா வரை செலவு செய்யலாமெனவும் தேர்தல் வன்முறையை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரினாலேயே 1220 மில்லியன் ரூபா தேர்தல் பிரசார செலவாக மேற்கொள்ளப்பட்டது. தேசிய மக்கள் சக்தியினால் 31 மில்லியன் ரூபாவும் மஹேஷ் சேனாநாயக்க, டாக்டர் அஜந்த பெரேரா ஆகியோர் மூன்று மில்லியனுக்கு குறைவான தொகையினையும் ஏனைய 32 வேட்பாளர்களும் மொத்தமாக 20 மில்லியனுக்கும் குறைவான தொகையை செலவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அச்சு ஊடகங்களுக்கு மட்டும் வேட்பாளர்கள் 160 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளனர். இலத்திரனியல் ஊடகத்துக்கு 877 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் காலத்தில் விளம்பரங்களை பிரசுரிப்பதற்கு வழமையினைவிடவும் ஊடகங்கள் அதிகமான கட்டணத்தை பெற்றுக்கொள்கின்றன. ஆனாலும் அத்தொகையினை செலுத்தி விளம்பரங்களை மேற்கொள்ள வேட்பாளர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது. இத்தரவுகள் ஊடக நிறுவனங்களின் விளம்பர கட்டணத்தின் அடிப்படையிலேயே பெறப்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்கள் வழங்குகின்ற 15 வீத விலைக்கழிவின் அடிப்படையிலேயே தரவுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

வேட்பாளராக தெரிவு செய்யப்படும் ஒருவர் தேர்தலின் போது ஏன் அதிகமான தொகையை செலவிட வேண்டிய நிலை காணப்படுகின்றது என்பது எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கின்றது. இதில் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்பதே அனைவரினதும் ஒரே நோக்கமாக இருக்கின்றது. அதற்காக தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள்/துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை அச்சடித்தல், வெளியிடுதல், விளம்பரங்கள், கொடிகள், படங்கள், புகைப்படங்கள், சுலோக அட்டைகள் அல்லது சுவரொட்டிகள் என்பவற்றை காட்சிப்படுத்தல், தேர்தல் தொடர்பான விளம்பரங்களை தயாரித்தல் மற்றும் வானொலி அல்லது தொலைக்காட்சி என்பவற்றில் ஒலி மற்றும் ஒளிபரப்புச் செய்தல், செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் அல்லது ஏனைய வெளியீடுகளில் வெளியிடுதல். தேர்தல் கூட்டங்களுக்கு ஏதேனும் இடத்தை அல்லது உபகரணத்தை வாடகைக்குப் பெறுதல் அல்லது பயன்படுத்துதல். வேட்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் என்பவற்றை வாடகைக்கு அமர்த்துதல் போன்ற போக்குவரத்துச் செலவுகள். பொது/மூலவளங்களைத் துஷ்பிரயோகிப்பதன் மூலமாக தனிப்பட்ட பிரசாரங்களுக்காக அரசு/மக்களால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் போன்றவை ஒரு வேட்பாளருக்கு செலவினை ஏற்படுத்தும் விடயங்களாக இருக்கின்றன.

இதனை பயன்படுத்தியே தற்போது பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் கோடிகளில் செலவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 14 தொடக்கம் நவம்பர் 04 வரையான காலப்பகுதியில் அச்சு, இலத்திரனியல் மற்றும் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்காக கணிப்பீடு செய்யப்பட்ட செலவுகள் (மில்லியன்களில்) தொடர்பான விபரங்கள் அட்டவணை 01 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கணிப்பீடு செய்யப்பட்ட 1257 மில்லியன் மொத்த ரூபாய்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் 60 வீதமான தொகையினையும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் 39 வீதமான தொகையினையும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் 1 வீத தொகையினையும் தமது பிரசார செலவுகளுக்காக பயன்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இச்செலவுகள் நவம்பர் இறுதிக்காலப்பகுதி வரையினை மட்டுமே கொண்டுள்ளன. அதன் பின்னர் 10 நாட்கள் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் இத்தொகை இன்னும் அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இலங்கையில் தற்போது 75 நாளாந்த மற்றும் வாராந்த அச்சுப் பிரசுரங்களும் 20 தொலைக்காட்சி சேவைகளும் 50 வானொலி சேவைகளும் காணப்படுகின்றன. அவை தற்போதைய தேர்தல் காலங்களில் அதிக இலாபத்தினை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விளம்பரங்களுக்கு அதிக விலை நிர்ணயங்களை மேற்கொள்கின்றன. அதற்கேற்ப வேட்பாளர்களும் செலவுகளை மேற்கொள்கின்றனர்.

அரச மற்றும் தனியார் பத்திரிகைகளில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பிலான விடயங்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி (அக்டோபர் 07  31 வரை) கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அரச பத்திரிகைகள் 40.40 வீதமும் தனியார் பத்திரிகைகள் 58.46 வீதமும் முக்கியத்துவம் வழங்கியிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கு அரச பத்திரிகைகள் 51.46 வீதமும் தனியார் பத்திரிகைகள் 31.94 வீதமும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரச பத்திரிகைகள் 7.01 வீதமும் தனியார் பத்திரிகைகள் 5.16 வீதமும், மஹேஷ் சேனநாயக்கவுக்கு அரச பத்திரிகைகள் 0.20 வீதமும் தனியார் பத்திரிகைகள் 1.32 வீதமும், ஏனைய வேட்பாளர்களுக்கு அரச பத்திரிகைகள் 0.93 வீதமும் தனியார் பத்திரிகைகள் 3.12 வீதமும் முக்கியத்துவத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட காலப்பகுதிகளில் செலவு செய்யப்பட்ட 1257 மில்லியன் ரூபாய்களில் அச்சு, இலத்திரனியல் மற்றும் கள ரீதியான பிரசாரங்கள் என்பவற்றுக்காக கணிப்பீடு செய்யப்பட்ட செலவுகளுக்கான பணத்தேவை எவ்வாறு பூர்த்தி செய்யப்படுகின்றது. இவ்வாறு பாரிய தொகையினை பிரசாரங்களுக்கு கொடுத்து உதவுவதற்கு தகைமையான பணக்காரர்கள் இலங்கையில் இருக்கின்றார்களா? அவ்வாறெனின் குறிப்பிட்ட காலத்துக்குள் இத்தொகையினை எவ்வாறு செலவு செய்ய முடிந்தது போன்ற பல்வேறு சற்தேகங்கள் எழுகின்றன. சிலவேளை இவை சலவை நோட்டுக்களாகவும் இருக்கலாம் அல்லது பாதாளக்குழுக்களின் முதலீடாகவும் கூட இருக்கலாம். ஆனால் அவற்றினை ஆராய்வது நமக்கு பாதிப்பினையும் ஏற்படுத்தலாம்.

இவ்வாறு அதிகமான மற்றும் கட்டுப்பாடற்ற நிதிச் செலவீனங்களானது ஜனநாயக தேர்தலை மோசமாக பாதிப்பதாக அமையலாம். அத்துடன் போட்டிக்களத்தில் வேட்பாளர்களிடையே சமனற்ற தன்மையையும் உருவாக்கும். இவை ஊழல், இலஞ்சம், அரச சொத்துக்களின் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கும் வழிவகுக்கின்றது. இருப்பினும் இலங்கையில் பிரசார நிதியாக்கம் தொடர்பில் சட்டமோ அல்லது கட்டுப்பாட்டு பொறிமுறையோ இல்லையென தேர்தல் வன்முறையை கண்காணிப்பதற்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குபவர்கள் தேர்தல் பிரசார செலவுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மதிப்பீட்டு அறிக்கையினை வழங்குகின்றன. அந்த மதிப்பீடுகளையும் மீறி பணப்புலக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பாக கண்காணிப்புகளையும் மேற்கொள்ளலாம். இவ்விடயம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் தகவல்களை கோரிய போதிலும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் அதிகமான பிரசார செலவுகளை கோத்தாபய ராஜபக்ஷவின் சார்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுன மேற்கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அதிக செலவினை மேற்கொண்ட வேட்பாளராக இருந்ததுடன் விளம்பரங்களுக்காக 2 பில்லியன் ரூபாவினை செலவு செய்திருந்தார். மற்றைய ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன இத் தொகையில் மூன்றில் ஒருபகுதியினையே செலவு செய்திருந்தார்.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் விளம்பர செலவுகளுக்காக மஹிந்த ராஜபக்ஷ 676 மில்லியன் ரூபாவினையும் வானொலி விளம்பரங்களுக்காக 330 மில்லியன் ரூபாவினையும் செய்திப் பத்திரிகைகளில் முழுபக்க விளம்பரங்களுக்காக 700 மில்லியன் ரூபாவினையும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையினையும் மொத்தமாக விளம்பர செலவுகளுக்காக (தயாரிப்பு செலவுகள் தவிர்ந்து) 2.03 பில்லியன் ரூபா பொதுமக்கள் பணம் மற்றும் ஜனாதிபதி செயலகம், ஏனைய அமைச்சுகளின் நிதிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததாக நிதி அமைச்சின் சிரேஷ்ட அலுவலர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக