கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

9 செப்டம்பர், 2019

பெருந்தோட்டங்களில் தொழிலாளர் தொகை எவ்வளவு ?

பெருந்தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையில் பல கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கங்கள் தோற்றம் பெற்றிருப்பதை முன்னைய கட்டுரைகளில் தெளிவுப்படுத்தியிருந்தேன். ஆனால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி தொழில் திணைக்களத்திடம் (P03/01/11) பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை பயன்படுத்தியே கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும் வழங்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமையை அறிந்துகொள்ள முடிந்தது. இதன்படி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை கோரி கடந்த பெப்ரவரி மாதம் தொழில் திணைக்களத்திடம் விண்ணப்பித்த போதும் மேன்முறையீடு, ஆணைக்குழுவுக்கான மேன்முறையீடு என ஜுன் மாதமே தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 383007 (2016/2017) அங்கத்தவர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் 26172 (2017/2018) அங்கத்தவர்களும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் 148242 (2017/2018) அங்கத்தவர்களும் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் - 9515 (2017/2018) ,ஐக்கிய பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் - 22759 (2017/2018), மலையக மக்கள் முன்னணி - 25919 (2011/2012), இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் - 7446 ((2016/2017) அங்கத்தவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பெருந்தோட்டங்களில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் எத்தனை?, தொழிற்சங்கங்கள் வழங்குகின்ற புள்ளிவிபரங்கள் உண்மையானவையா என்பது தொடர்பாக போதிய விளக்கமில்லாமல் இருக்கின்றது. உதாரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2016/2017 காலப்பகுதியில் 77,751,933 ரூபாவினை சந்தாப்பணமாக பெற்றிருக்கின்றது. அவ்வாறெனில் ஒரு மாதத்துக்கு அண்ணளவாக 6,479,327.75 ரூபாவினை பெற்றிருக்கவேண்டும். இதனை தற்போது தொழிலாளர்களிடம் அறவிடப்படும் 150 ரூபா சந்தாப்பணத்துடன் வகுத்தால் அண்ணளவாக 43,195 தொழிலாளர் அங்கத்தவர்களே இருப்பதாக கருதவேண்டும். இதேபோல தொழிலாளர் தேசிய சங்கம் 2016/2017 காலப்பகுதியில் 34,524,328.41 ரூபாவினை சந்தாப்பணமாக பெற்றிருக்கின்றது. அவ்வாறெனில் ஒரு மாதத்துக்கு அண்ணளவாக 2,877,027.36 ரூபாவினை பெற்றிருக்கவேண்டும். இதனை தற்போது தொழிலாளர்களிடம் அறவிடப்படும் 150 ரூபா சந்தாப்பணத்துடன் வகுத்தால் அண்ணளவாக 19,180 தொழிலாளர் அங்கத்தவர்களே இருப்பதாக கருதவேண்டும். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் 2017/2018 காலப்பகுதியில் 24,702,439.33 ரூபாவினை சந்தாப்பணமாக பெற்றிருக்கின்றது. அவ்வாறெனில் ஒரு மாதத்துக்கு அண்ணளவாக 2,058,536.61 ரூபாவினை பெற்றிருக்கவேண்டும். இதனை தற்போது தொழிலாளர்களிடம் அறவிடப்படும் 150 ரூபா சந்தாப்பணத்துடன் வகுத்தால் அண்ணளவாக 13,723 தொழிலாளர் அங்கத்தவர்களே இருப்பதாக கருதவேண்டும். ஆனால் இவை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாக இல்லை. அதனை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களே உறுதிப்படுத்த வேண்டும்.

1850 ஆம் ஆண்டு 5000 ஆகவிருந்த இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1931 இல் 700,000 ஆக அதிகரித்தது. இருப்பினும் 1934 ஆம் ஆண்டு மேற்படி குடிபெயர்வுக்கு இந்திய அரசாங்கம் தடைவிதித்த பின்னர் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியிருந்தது (தகவல்: தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும், மு.சின்னத்தம்பி). 1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் அதிகமான தொழிலாளர்களை கொண்டிருந்த பெருந்தோட்டத்துறையானது, 1972 மற்றும் 1992 காலப்பகுதியில் அதிக வீழ்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தது. அந்தவகையில் 1964 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் 459,000 பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்றதுடன் மீண்டும் இந்தியாவுக்கே சென்றுவிட்டனர். இந்நிலை 1984 வரை நீடித்தது. அதன்பின்னர் வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இலங்கை - இந்தியாவுக்கிடையிலான படகுசேவை நிறுத்தப்பட்டிருந்தது.

1972 ஆம் ஆண்டுக்குப்பின்னர் நிலச்சீர்திருத்தத்தின் கீழ் பெருந்தோட்டங்கள் அரசுடைமயாக்கப்பட்டமையினால் பெரும்பாலான குடும்பங்கள், குறிப்பாக கண்டி, கேகாலை, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இருந்து வெளியேறியுள்ளன. தென், மத்திய மாகாணங்களின் பெருந்தோட்ட மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்தனர். 1992 இல் பெருந்தோட்டங்கள் மீண்டும் தனியார் மயப்படுத்தப்பட்டதின் காரணமாக சில தொழிலாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தன்னார்வ ஓய்வு ஊக்குவிப்புத் திட்டத்தின் அடிப்படையில் பலர் குறித்த வயதுக்கு முன்னர் ஓய்வு பெற்றனர். இவர்களுள் சிலர் நிரந்தரமாகவும் சிலர் தற்காலிகமாகவும் ஓய்வு பெற்றார்கள். அதேவேளை உய்நாட்டு யுத்தம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக பலரும் இடம்பெயர்ந்தனர். 1983 க்கு பின்னரான இனவன்முறை மற்றும் சிவில் யுத்தம் காரணமாக குறிப்பிடத்தக்க தென் மாவட்டங்களைச் சேர்ந்த (கண்டி, கேகாலை, பதுளை, இரத்தினபுரி மற்றும் காலி) திட்டமிட்ட இனவன்முறைகள் காரணமாக பெருந்தோட்டங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். மேலும் மேல்கொத்மலை நீர்த்தேக்கம், விக்டோரியா நீர்த்தேக்கம், ரந்தெனிகல திட்டம், ரந்தம்பே திட்டம் மற்றும் மஹா ஓயா திட்டம் போன்ற அபிவிருத்தி திட்டங்களின் போது சுவீகரிக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் இருந்து மக்கள் வெளியேறினர். (A.S.Chandrabose, outgoing Labour and Its Impact on the Tea Plantation Sector in Srilanka)

இதேவேளை 1985 - 2008 வரையான காலப்பகுதியில் பெருந்தோட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர் எண்ணிக்கையினை அட்டவணை 1 இல் காணமுடியும். 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் பெருந்தோட்டங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டபோது பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகளின் கீழான தொழிலாளர் எண்ணிக்கை 327,123 ஆக காணப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டு 193,212 ஆக தொழிலாளர்களின் எண்ணிக்கை காணப்பட்டதாக இலங்கை தோட்ட உரிமையாளர் சங்கம் 2016 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பெருந்தோட்டங்களில் 140,000 தொழிலாளர்களே இருப்பதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி முகப்புத்தகப் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் நிதியமைச்சு வெளியிட்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான காலாண்டு அறிக்கையில் 2017 ஆம் ஆண்டு மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் முறையே 4414 மற்றும் 3247 பேர் தொழிலாளர் தரத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தோட்ட கம்பனிகளில் தொழிலாளர் தரத்தில் 144,455 பேர் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. (இவற்றில் குருநாகல், சிலாபம் மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட கம்பனிகளின் தரவுகளும் உள்ளடங்குகின்றன). மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரச பெருந்தோட்டயாக்கம் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளில் மொத்தமாக 2009 ஆம் ஆண்டு தொழிலாளர் தரத்தில் 211,556 பேரும் 2010 இல் 212,826 பேரும், 2011 இல் 207,235 பேரும், 2012 இல் 193,412 பேரும், 2013 இல் 185,165 பேரும், 2014 இல் 180,871 பேரும், 2015 இல் 172,620 பேரும், 2016 இல் 161,557 பேரும், 2017 இல் 152,116 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே தற்போதைய நிலையில் 150,000 க்கும் குறைவான தொழிலாளர்களே பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதாக கருத முடிகின்றது.

தற்போது தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்ற அங்கத்தவர்களின் தொகையினை கணித்தால் பெருந்தோட்ட மக்களின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகையினர் தொழிலாளர்களாக இருப்பதாக கணக்கிடவேண்டியுள்ளது. ஆனால் அதற்கு சாத்தியமில்லை. தொழிற்சங்கங்களே அங்கத்தவரின் தொகையினை திரித்து வெளிப்படுத்திவருகின்றன. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான செயலாற்று அறிக்கையில் பெருந்தோட்ட மொத்த சனத்தொகையானது 943,390 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 408,052 பேரும், பதுளை - 164,735 பேர், கண்டி - 91,310 பேர், இரத்தினபுரி - 106,531 பேர், காலி - 19,895 பேர், கேகாலை - 60,112 பேர், மொனராகலை - 9,084 பேர், மாத்தளை - 20,449 பேர், களுத்துறை - 39,455 பேர், மாத்தறை - 23,767 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.  அந்த வகையில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் சனத்தொகை (1911 - 2012) கணிப்பீடுகளை அட்டவணை 02 இல் காணமுடியும்.

இவ்வாறு தொடர்ச்சியாக சனத்தொகை வீழ்ச்சியை சந்தித்துவரும் சமூகமாகிய எம்மை கொண்டு அரசியல் செய்கின்ற தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் தொடர்பான தரவுகளை தம்முடைய சுயலாபங்களுக்காகவும் அரசியலில் நாங்கள்தான் ஜாம்பவான்கள் என காட்டிக்கொள்வதற்காகவும் பொதுவெளியில் முன்வைக்கின்ற தரவுகளை திரிபுபடுத்தியும் தங்களுக்கு சார்பாகவும் பயன்படுத்திக்கொள்ளும் நிலை காணப்படுகின்றமையால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொகையை மதிப்பிடுவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. அதேவேளை தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்துக்கு வழங்கிய தகவல்களும் போலியானதாகவே காணப்படுகின்றன. அவ்வாறெனில் மிககுறைந்த அங்கத்தவர்களை கொண்டு அதிக வருமானத்தினை தொழிற்சங்கங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்கின்றன என்ற கேள்வி எழுகின்றது. மிககுறைந்த அக்கத்தவர்களை கொண்டு கோடிகளில் எவ்வாறு சந்தாப்பணத்தை பெற்றுக்கொள்ள முடிகின்றது?. எனவே தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் வெளிப்படையாகவே தவறிழைக்கின்றமையினை அறிந்து கொள்ளமுடிகின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்களைத் தவிர்த்து வேறெந்த ஊழியர்களிடமும் சம்பளப்பணத்தில் சந்தாப்பணம் அறவிடப்படும் முறைகிடையாது. பெருந்தோட்ட தொழிலாளர்களிடமிருந்து மட்டுமே அறவிடப்படும் சந்தாப்பணத்தில் இவ்வளவு தொகையினை இலாபமாக பெற்றுக்கொண்டது எவ்வாறு என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக