கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

26 பிப்ரவரி, 2016

ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய 2015

உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவிக்கிடக்கும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த சர்வதேச நாடுகள் தடுமாறி வருகின்றன. அதேபோலவே கடுமையான சிரமங்களுடனும் ஆபத்தான சூழ்நிலைகளுடனும் செய்திகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களும் தீவிரவாதத்தினால் உயிரச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதும் பத்திரிகை அலுவலகங்கள் தாக்குதலுக்குள்ளாவதும் மிகவும் பலம்வாய்ந்த நாடுகளுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. 2015 ஆம் ஆண்டும் இவ்வாறு உயிராபத்துக்களை சர்வதேச ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ளனர். ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக கடந்த சில வருடங்களாக ஈராக் மற்றும் சிரியா இருந்து வருகின்ற போதிலும் மூன்றாவது நாடாக பிரான்ஸ் திகழ்கின்றது.
இஸ்லாமிய அரசின் கொடுமையான தாக்குதல்களினால் சிரியா மற்றும் ஈராக், மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகள் என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோலவே பிரான்ஸில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சார்லி ஹொப்டே பத்திரிகை அலுவலக தாக்குதல், பாரிஸ் தாக்குதல் என்பனவற்றினால் பிரான்ஸ், ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இனங்காணப்பட்டுள்ளது. பிரான்ஸ், அமெரிக்கா-, பிரித்தானியா  போன்ற நாடுகள் ஈராக் - சிரியாவில் இயங்கிவரும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கெதிராக மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் முகமாக மேற்படி நாடுகளில் இஸிஸ் தீவிரவாதிகளும் தற்கொலை தாக்குதல்கள், துப்பாக்கி சூடுகளை மேற்கொள்கின்றனர்.

அதேபோல் ஈராக் -சிரியாவில் நிகழும் யுத்த சம்பவங்களை வெளிக்கொணர செல்லும் ஊடகவியலாளர்களை பணயக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து சிரத்சேதம் செய்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளில் ஊடகவியலாளர்கள் பயணிக்க வேண்டிய நிலை கடந்த சில வருடங்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டும் இந்நிலைமை மோசமடைய வாய்ப்பிருக்கிறது. இஸிஸ் தீவிரவாதிகளின் பரவல், சர்வதேச நாடுகளில் பரவலடைந்து செல்லும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் சர்வதேச நாடுகள் தவறிவிட்டன. சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள், எதிர்வரும் ஆண்டுகளில் மேற்குலக நாடுகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுமென எச்சரித்துள்ளனர்.

எனவே இவ்வாண்டும் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான ஆண்டாகவே அமையப்போகின்றது. எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் தகவல்களின்படி-, உலகம் முழுவதும் இவ்வருடம் 110 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் 67 பேர்  தொழிலின் நிமித்தம் இலக்குவைத்து கொல்லப்பட்டதுடன் 43 பேர் முறையான காரணங்களில்லாமல் கொலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தமது தொழில் நேரங்களின்போது ஒருவரையொருவர் தாக்குவதாலும் துப்பாக்கிச்சூடு மற்றும் ஏனைய புறக்காரணிகளாலும்  கொல்லப்படுகின்றனர். கடந்த நான்கு வருடங்களாக ஈராக், சிரியா ஆகியன பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. இவ்வாறு இரு நாடுகளிலும்  இவ்வருடம் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் பணி புரிகின்றனர். அதிகமான நேரங்களில் சில ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருந்ததுடன் கொல்லப்பட்டுமிருக்கின்றனர். உலகளவில் 2005 முதல் இன்றுவரை 787 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2015 ஆம் ஆண்டே அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டு மூன்று அல்லது நான்கு பேரே யுத்த வலயங்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் 2015 இல் இது தலைகீழாக மாறியிருக்கின்றது. 2 -3 வரையானோர் உலகில் சமாதானம் நிலவும் அல்லது பாதுகாப்பான நாடுகள் என கணிப்பிடப்பட்ட இடங்களில் ஏற்பட்ட வன்முறைகளின்போது கொல்லப்பட்டிருக்கின்றனர். பாரிஸில் இடம்பெற்ற சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலக தாக்குதலை கவனத்தில் கொள்ளலாம்.

2015 ஆம் ஆண்டு 43 ஊடகவியலாளர்கள் அவர்களுடைய பணியினை கருத்தில் கொண்டே கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுடைய கொலைக்கான காரணம் தெளிவில்லாமல் இருந்தபோதும், இவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாக இருக்கின்றனர். உலகளவில் லத்தின் அமெரிக்கா, ஆசிய - பசுபிக்--,  மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க சஹாரா வலய நாடுகள் அதிகளவு ஊடகவியலாளர்கள் மீது வன்முறையை பிரயோகிக்கின்றன. இவ்வருடம் கொல்லப்பட்டவர்களில் 36 வீதமானோர் யுத்த வலயங்களிலும் 64 வீதமானோர் யுத்த வலயங்களுக்கு வெளியிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவற்றில் 97 வீதமானோர் சொந்த நாட்டவர்களாகவும் 3 பேர் வெளிநாட்டவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு யுத்த வலயங்களைவிட ஏனைய நாடுகளே ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப்பின்பு பிரான்ஸ் ஊடகவியலாளர் பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்துக்கு வந்துள்ளது. அத்தாக்குதல் சம்பவத்திலிருந்து அங்கு தொழில்புரியும் ஊடகவியலாளர்கள் கடுமையான பாதுகாப்புகளுக்கு மத்தியிலேயே வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிலர் தமது வாழ்விடங்களைகூட மாற்றிக் கொண்டுள்ளனர். இவ்வாறு சர்வதேச அளவில் பாரிய அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை எதிர்வரும் காலங்களில் இன்னும் மோசமடையும். தீவிரவாதம் சர்வதேச அளவில் ஏற்படுத்தும் தாக்கங்களில் இவ்விடயமும் ஒன்றாகிப் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

உலகில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடங்கள்
அலப்போ (வட சிரியா) - துப்பாக்கிச்சூடு

பஸார் அல் அசாத்தின் படைகள், கிளர்ச்சி படை, குர்திஸ் படை என்பவற்றின் வான்தாக்குதல்களில் சிரியாவின் அலப்போ பகுதியே தொழில்முறை பத்திரிகையாளர்கள் மற்றும்  செய்தியாளர்களுக்கு மிகவும் ஆபத்தான பகுதியாக இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டு முதல் இங்கு ஏற்பட்டுவரும் வன்முறைகளினால் கொலைகள் மற்றும் கைதுகள் அரசு சாராத படைகளால் (அல் நுஸ்ரா, சிரியா கிளர்ச்சிப்படை, இஸ்லாமிய அரசு) மேற்கொள்ளப்படுகின்றன.

மொசூல் - இஸ்லாமிய அரசின் கட்டுப்பாடு

2014 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இந்நகரம் இருக்கின்றது. ஜிகாதி படைகளால் கடந்த 18 மாதங்களில் 48 கடத்தல்கள் மற்றும் 13 மரண தண்டனைகள் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன. 60 பத்திரிகையாளர்கள், தொழில்முறையற்ற பத்திரிகையாளர்கள், ஊடக பணியாளர்கள் நகரைவிட்டு தப்பியோடியுள்ளனர். அச்சம் காரணமாகவும் பழிவாங்கல்களினாலும் இவ்வாறு தப்பித்துள்ளனர். இந்நகரின்  தொடர்பாடல் மற்றும் இணைய சேவைகள் இஸிஸின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இவர்களால்  இங்கு சிறப்பாக பணியாற்ற முடியாத நிலை காணப்படுகின்றது.

யேமன் - ஹளதி தீவிரவாதிகள்

2014 முதல் தலைநகர் சானா ஹளதிகளின் கட்டுப்பாட்டிலிருக்கிறது. கனரக ஆயுதங்களினால்-, ஷியா ஹளதிகளுடன் இணைந்துள்ள பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் சானாவில் ஹளதி  கிளர்ச்சி குழுக்களுக்கு சார்பாக மட்டுமே பத்திரிகையாளர்கள் செயற்பட்டு வந்தனர் 2015 ஆம் ஆண்டு யேமனில் 6 பத்திரிகையாளர்கள் மற்றும் 3 ஊடகபணியாளர்கள் படுகொலை/ கொலை செய்யப்பட்டிருந்தனர். நம்பமுடியாத வகையில் 15 பத்திரிகையாளர்கள்/ செய்தியாளர்கள் ஹளதிகளின் கட்டுப்பாட்டிலிருக்கின்றனர். இவர்கள் அரபு கூட்டணியால் யேமனில் மேற்கொள்ளப்படும் வான்தாக்குதல்கள் தொடர்பான வெளியீடுகளுக்காக காத்திருக்கின்றனர்.

இந்தியா - பெருகிவரும் வன்முறைகள்

 இந்திய பத்திரிகையாளர்கள் சட்டவிரோத குற்றங்களை துணிகரமாக வெளிக்கொணர்கின்றனர். அவ்வாறான நிலையில் இக்குற்றத்தோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் மீது திட்டமிட்ட வன்முறையை உருவாக்குகிறார்கள். கடந்த வருடம் 9 பத்திரிகையாளர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். இதன் மூலம் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியாவும் பதிவானது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளும் உள்ளடங்கும். தற்போது இந்திய அரசு, பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கு தேசிய செயற்திட்டமொன்றை வெளிப்படுத்தியிருக்கிறது.

மெக்ஸிக்கோ - பாதுகாப்பற்ற சூழ்நிலை

லத்தின் அமெரிக்க நாடுகளில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடாக மெக்ஸிக்கோ இருக்கின்றது. இங்கு 2015 ஆம் ஆண்டு 8 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மெக்ஸிக்கோவின் தெற்கு பிராந்தியங்களான ஹெகுரூஸ் மற்றும் ஒக்ஸகா என்பன பத்திரிகையாளர்களுக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் பகுதியாகவிருக்கின்றன.  பத்திரிகையாளர்களினால் அதிகமாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படுவதால் உள்ளூர் அரசியல்வாதிகளால் பத்திரிகையாளர்கள் திட்டமிட்டு இலக்குவைக்கப்படுகின்றனர். இதனால் பத்திரிகையாளர்கள் அடைக்கலம் தேடி நாட்டை விட்டே தப்பியோட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

2015 இல் மோசமான தாக்குதல்கள்
சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல் (பிரான்ஸ்)

கனரக ஆயுதங்கள் தரித்த இருவரால் 2015, ஜனவரி 7 ஆம் திகதி பாரிஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை தலைமையலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 8 பேர் பத்திரிகையாளர்கள், இவர்களில் கார்ட்டூனிஸ்ட் சார்ப், கபு, டிக்னோஸ், வோலின்ஸ்கி, ஹொனோரே மற்றும் செய்தியாளர்களான எல்சா, முஸ்தபா, மரிஸ் என்போர் உள்ளடங்குவர். இரண்டு நாட்களின் பின் அரேபிய தீபகற்ப அல்கொய்தா, முகமது நபியினை கேலி செய்து  சார்லி ஹெப்டோ பத்திகையில் வெளியான  கேலிச் சித்திரத்துக்கு பழிவாங்கவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்தது. இப்போருக்கு “மதத்துக்கெதிரான அவதூறு’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

கெஞ்சி கோட்டோவின் படுகொலை (சிரியா)

ஜப்பானிய சுதந்திர ஊடகவியலாளர் சிரச்சேதம் செய்யப்படுவதான வீடியோவை ஜனவரி 31, 2015 இல் இஸ்லாமிய அரசு வெளியிட்டது. சிரியாவின் யுத்தபகுதிகளில் செய்தி சேகரிப்பின்போது ஒக்டோபர் 2014 இல் கெஞ்சி கோட்டோ பிடிபட்டார். இரக்கமற்ற முறையிலான இவரது இந்த கொலையானது வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு ஒரு செய்தியாகவும், ஜப்பான் இஸிஸுக்கு எதிராக சர்வதேச கூட்டணியில் இணைவதற்கு எதிராகவும் வீடியோவாக வெளியிடப்பட்டது. தற்போதும் 10 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இஸிஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

வலைப்பக்க எழுத்தாளர்களின் படுகொகைள் (பங்களாதேஷ்)

2015 இல் 4 வலைப்பக்க எழுத்தாளர்கள் பங்களாதேஷில் தாக்கப்பட்டு இறந்தனர். இவற்றில் அவிஜித் ரோய்- 26 பெப்ரவரி, அனந்த பிஜோய் தாஸ்- 30 மார்ச், வஸிகூர் ரஹ்மான்- 12 மே, நிலோய் சக்ரபார்டி- 7 ஆகஸ்ட் ஆகியோர் உள்ளடங்குவர். கருத்துச் சுதந்திரம், சுதந்திரம் என்பவற்றை தொனிப்பொருளாக கொண்டு வலைப்பக்கத்தில் இவர்கள் எழுதி வந்திருந்தனர். அத்தோடு செய்தியாளர்களுக்கும் கூட அதிக ஆபத்தான இடமாக பங்களாதேஷ் இருக்கிறது. இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டும் இன்றுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

தப்பியோடிய பத்திரிகையாளர் படுகொலை (மெக்ஸிக்கோ)

புகைப்பட ஊடகவியலாளர் ருபன் எஸ்பினோஸா மற்றும் 4 பெண்கள் மெக்ஸிக்கோவிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றிலிருந்து இறந்த நிலையில் ஜுலை 31 இல் கண்டுபிடிக்கப்பட்டனர். கண்டெடுக்கப்பட்ட ருபன் எஸ்பினோஸாவின் உடலில் துன்புறுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டன. இச்சம்பவம் இடம்பெற்று 10 நாட்களுக்குப் பின்பே மெக்ஸிக்கோ சிட்டியில் பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஹின்டியா மொஹமட் கொலை (சோமாலியா)

சோமாலியாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான இவர் கடந்த டிசம்பர் 3ஆம் திகதி இவருடைய காரில் வெடித்த குண்டினால் உயிரிழந்தார்.  அல் சபாப் இஸ்லாமிய தீவிரவாத குழுவினாலேயே இவர் கொல்லப்பட்டிருந்தார். ஏற்கனவே பத்திரிகையாளரான இவருடைய கணவரும் லிபியாவில் வெடிவைத்து கொல்லப்பட்டிருந்தார். சோமாலியாவில் இடம்பெறும் வன்முறைகள் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளை ஊக்குவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றாலும், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தொடர்பில் அரசு முறையாக கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு சர்வதேச  அளவில் பத்திரிகையாளர்களும் செய்தியாளர்களும், ஊடக பணியாளர்களும் ஆபத்து நிறைந்த சூழலுக்கு மத்தியில் செயற்படவேண்டிய நிலையுள்ளது. இலங்கையிலும் கூட கடந்த காலங்களில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளின்போது காணாமல்போன அல்லது கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகிய போதும், அவை தொடர்பான முழுமையான விசாரணைகள் எவையும் இன்றுவரையும் இடம்பெறவில்லை. இலங்கையில் 1981- 2015 வரை 85 ஊடகவியலாளர்களின் கொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒருவர் யானைத்தாக்குதலில் 2015  ஆம் ஆண்டு உயிரிழந்தார். 85 பேரில் 56 பத்திரிகையாளர்களும், 29 ஊடக பணியாளர்களும் உள்ளடங்குவர். இவர்களின் கொலைகள் யுத்த சூழ்நிலை, அரசியல் போட்டி என்பவற்றினால் ஏற்படுத்தப்பட்டவையாகும்.

முறையான விசாரணைகள் இன்றிய நிலையில் வழக்குகள் தீர்ப்புக்கு வராமலேயே கிடப்பில் போடப்பட்டன. உலகளவிலும் இன்று 54 பத்திரிகையாளர்கள் பணயக் கைதிகளாகவும்,   153 பேர் கைதுசெய்யப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அத்தோடு சர்வதேச ரீதியில் பாதுகாப்பான நாடுகள் என அடையாளங் காணப்பட்ட நாடுகளே ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. நாடுகளுக்கு நாடு தீவிரவாதம், வன்முறைகள் தளிர்விட்டுள்ளதால் பாதுகாப்பு என்பது மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதிலும் ஆபத்தான சூழ்நிலைகளில் பயணிக்கும் இவ்வாறானவர்களின் நிலை படு மோசமானது.எனவே, ஊடகச் சுதந்திரம் தொடர்பில் சர்வதேசம் அதிக அக்கறை கொள்ள வேண்டும். இல்லாவிடின் 2016 ஆம் ஆண்டிலும்  பத்திரிகையாளர்கள் மீதான கொலைகளை தடுக்க முடியாது போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக