கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 செப்டம்பர், 2022

மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் இல்லை



கல்வி அமைச்சு அறிவிப்பு

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகமொன்றை உருவாக்குவது தொடர்பிலான கருத்து 20 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முற்று பெறவில்லை. மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் கல்வியியலாளர்களினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கட்டாய இடத்தை பிடிக்கும் மலையக பல்கலைக்கழகம் இறுதியில் கனவாகி போவது வழமையான விடயமாக மாறிவிட்டது. தற்போது மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் வலியுறுத்தியிருந்தது. எனினும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த மனோ கணேசன் தலைமையில் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டும் இறுதிவரை அவற்றை அரசாங்கத்திடம் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிடமே குறித்த அறிக்கை இருக்கின்றது. ஏறக்குறைய 15 பக்கங்களுக்கும் அதிகமான பக்கங்களை கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான காரணம், அதன் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும், அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் என்பன பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமைச்சராக பொறுப்பேற்ற ஆறுமுகன் தொண்டமானிடம் மலையகத்துக்கான தனி பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலான பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதற்காக முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைமையில் புத்திஜீவிகள் உள்ளடங்களாக ஒரு குழு அமைக்கப்பட்டு முதலாவது கலந்துரையாடல் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் அந்நடவடிக்கை கைவிடப்பட்டது. 

இந்நிலையில் மலையகத்துக்கான தனி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக உயர் கல்வி அமைச்சு (தற்போது கல்வி அமைச்சு), தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு ஆகியவற்றிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. 

உயர்கல்வி அமைச்சின் தகவல்களின் படி, பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான விடயம் 04.01.2021 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2209ஃ14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழுள்ள நிறுவனக் கட்டமைப்புகளைக் கற்றாராய்ந்து தற்போதுள்ள பௌதிக வளங்களை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி, உரிய மாவட்டத்தின் உற்பத்திப் பிரிவுகளுக்குத் தேவையான நிபுணத்துவத்தை மேம்படுத்தி, வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களுக்குத் தேவையான பட்டங்களைப் பெறும் உயர்கல்வி நிறுவனங்களாக நகர பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக வழங்கப்பட்ட தகவலில், மலையகத்தில் தனி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் அமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி  அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைமையில் புத்திஜீவிகள் உள்ளடங்களாக மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டு முதலாவது கலந்துரையாடல் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. எனினும் அவ்வாறு அமைக்கப்பட்ட குழு தொடர்பில் எவ்விதமான தகவல்களும் அமைச்சில் இல்லையெனவும் அக்குழுவினால் அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்ட விடயம் ஒரு கண்துடைப்பாகவே காணப்படுகின்றது. 

தற்போது மலையகத்தில் அமைக்கப்பட உத்தேசித்திருப்பது பல்கலைக்கழகமா? பல்கலைக்கழக வளாகமா? அல்லது நகரப் பல்கலைக்கழகமா என்பதிலேயே தெளிவில்லாத தன்மை காணப்படுகின்றது. பொதுத் தேர்தலுக்கு முன்பாக மலையகத்தில் தனிப்பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பிலான விடயம் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராகவிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் குறித்த விடயம்; திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இதுவரை குறித்த அமைச்சினால் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை. 

மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பான விடயங்களை பெற்றுக்கொள்ள திறன்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிடம் தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் குறித்த தகவல் கோரிக்கைக்கு பதில் வழங்காமையினால் 27.12.2021 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது. 

இதனடிப்படையில் 10.08.2022 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திறன்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தகவல் அலுவலர் ஜீ.எஸ்.கண்ணங்கர, பணிப்பாளர் (ஊவைல ருniஎநசளவைல) கல்வி அமைச்சானது, நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென அறிவித்தார்.

எனவே முன்னாள் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல ஆகியோர் கொட்டகலை ரொசிட்டா பாம் பகுதியில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டமை மலையக மக்களை ஏமாற்றும் விடயமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இதேவேளை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சினால் மலையகத்தில் புதியதொரு பல்கலைக்கழகத்தினை உருவாக்க முடியாது. ஆனால் அதற்கான அழுத்தங்களை மட்டுமே வழங்க முடியும். எனினும் அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை. 

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகத்துக்கு முன்னபாக ஒரு வளாகத்தை அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்படுகின்றது. நாட்டில் அண்மையில் உருவான எந்த பல்கலைக்கழகமும் முழுமையான பல்கலைக்கழகமான உருவாக்கப்படவில்லை. குறிப்பாக யாழ். பல்கலைக்கழகம் பரமேஸ்வரா கல்லூரியின் ஒரு வளாகமாக ஆரம்பிக்கப்பட்டது. இதேபோன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் வந்தாறுமுல்லை மகாவித்தியாலயத்தின் ஒரு வளாகமாக ஆரம்பிக்கப்பட்டது. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது, பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் முன்னதாக ஒலுவில் வளாகம் தென்கிழக்கு பல்கலைக்கழகமாக உருவாக்கம் பெற்றது. எனவே தற்போது மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் வளாகமொன்றை நுவரெலியா மாவட்டத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மலைய தனிப் பல்கலைக்கழகத்தின் அடிப்படையாகும்.

தற்போது மலையகத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் நாடு முழுவதுமுள்ள தேசிய பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். வருடா வருடம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மலைய மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது. அத்துடன் தங்களுடைய இனம் மற்றும் மொழியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மலையக மாணவர்களுக்காக  தனியானதொரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதென்பது நியாயமான கோரிக்கையாகும்.

எனினும் மலையகத்துக்கான கல்வி வளர்ச்சியின் முக்கிய பங்கினை வகிக்கக்கூடிய பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமை மற்றும் கொள்கையற்ற அரசியல் ஆதரவினை வழங்கி செயற்படுகின்றமை பல்கலைக்கழகத்துக்கான வாய்ப்பினை தூரமாக்கியுள்ளது. எனினும் தொடர்ச்சியாக மலையக புத்திஜீவிகள் மற்றும் கல்வியியலாளர்களினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவை தொடர்பில் திடமான திட்டமொன்றை முன்வைப்பதற்கு அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மலையக பல்கலைக்கழகத்தின் பயணம்

1994 ஆம் ஆண்டின் பின் பி.சந்திரசேகரன் பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் பல்கலைக்கழக உயர்கல்வி நிலையம் ஒன்றின் அவசியம் பற்றி கருத்துக்கள் முன்வைத்தார். அதன் பின்பு அமைச்சர் டிலான் பெரேராவுடன் இணைத்து திட்ட அறிக்கையொன்றை தீட்டினர். இதில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் பலர் செயற்பட்டதாக தெரிய வருகின்றது.  

மலையகத்துக்கான பல்கலைக்கழகம் என்பது 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் தேர்தல் விஞ்ஞானத்தில் இடம்பெற்று அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.    

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மலையக பல்கலைக்கழகம் தொடர்பாக பேசப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நுவரெலியாவில் மலையக பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் ஆராயுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.

நல்லாட்சி காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியினால் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் புத்திஜீவிகள் உள்ளடங்கலான குழுவினால் மலையக பல்கலைக்கழகம் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டும் அவை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. 

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞானத்தில் மலையக பல்கலைக்கழகம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போதைய அமைச்சரான ஆறுமுகன் தொண்டமானிடம் இப்பொறுப்பு வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்கு பி.பி.தேவராஜ் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. 

2020 ஆம் ஆண்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவினர் கொட்டகலை ரொசிட்டா பாம் அமைந்துள்ள பகுதியில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான காணியினை பார்வையிட்டனர். 

மலையக பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் முன்னாள் உயர்கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் உயர்கல்வி அமைச்சில் 07.10.2020 ஆம் திகதி இடம்பெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் முன்னாள் திறன்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல ஆகியோர் அடங்கிய குழுவினர் கொட்டகலை ரொசிட்டா பாம் அமைந்துள்ள பகுதியில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான காணியினை பார்வையிட்டனர். 












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக