இலங்கையில் பல்கலைக்கழக கல்வி பலருக்கும் கனவாக இருந்தாலும் அந்த இலக்கை அடைவதற்கு விடா முயற்சியுடன் செயற்பட்டாலும் இறுதியில் பகிடிவதை எனும் தடையின் மூலம் பலர் தமது வாழ்வையே தொலைக்கும் நிலை இலங்கையில் ஏற்படுகின்றது. பகிடிவதையினை தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் காணப்பட்டாலும் நாட்டிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் பகிடிவதை சம்பவங்கள் குறையவில்லை என்பதை அண்மைய யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கை எடுத்துகாட்டுகின்றது. யுனிசெப் நிறுவனம் மற்றும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணைந்து மேற்கொண்ட ஆய்வில் பங்குபற்றிய மாணவர்களில் 51 வீதத்துக்கும் அதிகமானோர் வாய்மொழி துன்புறுத்தலுக்கும், 34.3 வீதமானோர் உளவியல் வன்முறைக்கும், 23.8 வீதமானோர் உடல் ரீதியான துஸ்பிரயோகத்திற்கும், 16.6 வீதமானோர் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கையில் பகிடிவதை பாரிய சமூக சீர்கேடுகளுக்கான ஆரம்பமாக அமைகின்றன. உடல் அல்லது உள ஊறுவிளைவிக்கும் அல்லது மனவலியையோ அச்சத்தையோ ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் பகிடிவதையாக அடையாளப்படுத்தப்படுகின்றது. தற்போது உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை செயற்பாடுகள் குறைந்திருந்தாலும் முற்றாக நிறுத்தப்படவில்லை. கோவிட் தொற்று காலப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டமையால் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.
எனவே இலங்கையிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் (RTI/2020/78) இக்கட்டுரை எழுதப்படுகின்றது. நாட்டில் தற்போது 23 அரச உயர்கல்வி நிறுவனங்கள் காணப்படுவதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 2017 - 2020 வரையான காலப்பகுதியில் பகிடிவதை தொடர்பான 769 முறைப்பாடுகள் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் 2017 ஆம் ஆண்டு 134 முறைப்பாடுகளும் 2018 இல் 251 முறைப்பாடுகளும் 2019 இல் 266 முறைப்பாடுகளும் 2020 இல் 118 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் 90 முறைப்பாடுகளும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 81 முறைப்பாடுகளும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 66 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனத்தில் மிக்குறைவாக ஒரு முறைப்பாடும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தில் 31 முறைப்பாடுகளும் பேராதனை பல்கலையில் 49 முறைப்பாடுகளும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையில் 44 முறைப்பாடுகளும் களனி பல்கலையில் 44 முறைப்பாடுகளும் மொரட்டுவ பல்கலையில் 26 முறைப்பாடுகளும் உருகணை பல்கலையில் 42 முறைப்பாடுகளும் தென்கிழக்கு பல்கலையில் 49 முறைப்பாடுகளும் ரஜரட்ட பல்கலையில் 19 முறைப்பாடுகளும் வயம்ப பல்கலையில் 55 முறைப்பாடுகளும் உவா வெல்லஸ பல்கலையில் 38 முறைப்பாடுகளும் கற்புல மற்றும் அரங்ககலை பல்கலையில் 19 முறைப்பாடுகளும் ஸ்ரீபாளி வளாகமும் 8 முறைப்பாடுகளும் வவுனியா பல்கலையில் 26 முறைப்பாடுகளும் திருகோணமலை வளாகத்தில் 18 முறைப்பாடுகளும் சுதேசிய வைத்திய நிறுவகத்தில் 30 முறைப்பாடுகளும் கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தில் 6 முறைப்பாடுகளும் கொழும்பு கணினி பல்கலையில் 11 முறைப்பாடுகளும் தொழில்நுட்ப நிறுவகத்தில் 14 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை
1978 இன் 16 ஆம் இலக்க சட்டத்தின்படி மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது இதன் பொறுப்பாகும். பகிடிவதைகள் தொடர்பில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தேவையான நடவடிக்கைகளுக்காக உப வேந்தர், பல்கலைக்கழக தலைவர், பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும். பகிடிவதையின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் மாத்திரம் பதிவு செய்யப்படவில்லை. பல்கலைக்கழகம், வளாகம் மற்றும் நிறுவகங்களிலும் பதிவு செய்யப்படுகின்றன.
உயர்கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பகிடிவதைகள் காரணமாக இதுவரை குறைந்தது 18 பேர் வரையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உயர்கல்வி நிலையங்களில் பல்வேறு வழிகளில் பகிடிவதை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கல்வி நடவடிக்கைகளுக்காக செல்லும் புகுமுக மாணவர்கள் அறிமுக நிகழ்வு தொடக்கம் பகிடிவதையினை எதிர்நோக்கும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. பகிடிவதைக் காலத்தின்போது, புதுமுக மாணவர்கள் குறித்த உடைக் குறிமுறையைப் பின்பற்றும்படி சிரேஸ்ட மாணவர்களினால் வலியுறுத்தப்படும் நிலை உண்டு. பாலியல் வசைச் சொற்களால் திட்டுதல், அவற்றைக் கூறும்படி வற்புறுத்துதல், ஆடைகளைக் களையும்படி வற்புறுத்துதல் போன்ற பாலியல் துன்புறுத்தல்களும் அத்துடன் உடலியல் துன்புறுத்தல்கள் பகிடிவதையில் மேற்கொள்ளப்படுகின்றன.
பல மாணவர்கள் பகிடிவதைக்காரர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்து, பகுதி அல்லது முற்றிலும் முடங்கிவிடுகின்றனர். பலர் மனச்சோர்வு, பற்றம் மற்றும் மன அழுத்த நோய்க்குறிகளால் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் தற்போதைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த ஆண்டு பகிடிவதைக்காரர்களாக மாறுகின்றனர்.
பல்கலைக்கழக இடைவிலகல்
பகிடிவதையின் கோரத்தின் காரணமாக 2000 க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியிலிருந்து இடைவிலகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் பகிடிவதைகள் மற்றும் வன்முறைகளினால் பல்கலைக்கழக கல்வியினை இடைநிறுத்தியவர்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பேணப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 2000 மாணவர்கள் பகிடிவதை காரணமாக அரச பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதில்லை எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்கள் காரணமாக, பதிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் 1989 பேர் விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டு உயர்கல்வி அமைச்சராகவிருந்த பந்துல குணவர்த்தவினால் பகிடிவதையினால் உயர்கல்வியினை இடைநிறுத்திய மாணவர்களுக்கு நிவாரணமளிப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக நீதிபதி கலாநிதி.சலீம் மர்சூப் தலைமையில் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அத்துடன் 2014/2015 கல்வி ஆண்டு தொடக்கம் 2018/2019 ஆண்டு வரையில் பல்கலைக்கழக உயர்கல்விக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் விளம்பரங்களும் பிரசுரிக்கப்பட்டன. எனினும் ஒரு வருடங்களிலேயே அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்டதுடன் உயர்கல்வி அமைச்சு நீக்கப்பட்டு மீண்டும் கல்வி அமைச்சின் கீழ் சகல நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டன. இதனால் குழுவின் பணிகள் நிறைவு பெற்றதா என்பதும் நிவாரணங்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
உயிரை பறித்த பகிடிவதைகள்
- 1975இல், பேராதனைப் பல்கலைக்கழகத்தில், பகிடிவதையிலிருந்து தப்பிப்பதற்காக இராமநாதன் மண்டபத்தின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்த 22 மாணவியான ரூபா இரத்தினசீலி, முடக்குநோய்க்கு ஆளானார். இவர் 2002இல் தற்கொலை செய்துகொண்டார்.
- 1993இல், உருகுணை பல்கலைக்கழக மாணவரான சமிந்த புஞ்சிகேவா, பகிடிவதை காரணமாக உயிரிழந்தார்.
- 1993இல், அக்மனவைச் சேர்ந்த மாணவரான பிரசங்க நிரோசன, பகிடிவதை காரணமாக உயிரிழந்தார்.
- 1997இல், உருகுணை பல்கலைக்கழகத்தில், சிரேஸ்ட மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
- 1997இல், 21 அகவை நிரம்பிய, பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் மாணவரான செல்வவிநாயகம் வரப்பிரகாஸ், கடுமையான பகிடிவதை காரணமாக, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.
- 1997இல், அம்பாறையில் அமைந்துள்ள ஹாடி தொழினுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவரான கலும் துசார விசேதுங்க, கடுமையான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்ய வற்புறுத்தப்பட்டதாலும் அதிகப்படியாக மது அருந்தச் செய்யப்பட்டதாலும் உயிரிழந்தார்.
- 2002இல், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு முகாமைத்துவ மாணவரான சமந்த விதானகே, பகிடிவதைக்கு எதிரான கலந்துரையாடலை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
- 2010 இல் சந்தமாலி தில்ஹார விஜேசிங்க பகிடிவதையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
- 2014 இல் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக டீ.கே.நிசாந்த தற்கொலை
- 2015இல், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியான அமாலி சதுரிக்கா, பகிடிவதை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார்.
- 2019 இல், மொறட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 வயதுடைய டில்ஹான் விஜேசிங்க, பகிடிவதையினால் தற்கொலை செய்து கொண்டார். இவர் முன்னதாக யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நிலையில் உடலியல் வதை காரணமாக இடமாற்றம் பெற்றார்.
பல்கலையில் பகிவதையின் தற்போதைய நிலை
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையின் தற்போதைய நிலை தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி ஆர்.ரமேஸ் பின்வருமாறு தெரிவித்தார், ‘பல்கலைக்கழக பகிடிவதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. முன்னர் இருந்த நிலைமை தற்போது இல்லை. நகர்புறங்களிலுள்ள ஸ்ரீ ஜயவர்தன பல்கலை, மொரட்டுவ பல்கலையில் கணிசமானளவு பகிடிவதை குறைந்துள்ளது. பேராதனை பல்கலையில் பகிடிவதை குறைப்புக்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலை கட்டமைப்புக்குள் பகிடிவதை தொடர்பில் பரந்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்கிறது.
அறிமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகளில் பகிடிவதை தடுப்புக்கான சட்டங்கள், அவற்றுக்கான தண்டனைகள், பகிடிவதை தொடர்பான வரையறை போன்ற விடயங்களை உள்ளடக்கி விழிப்புனர்வு வழங்கப்படுகின்றது. இவ்விழிப்புணர்வு பகிடிவதையிலிருந்து விடுபடுவதற்கும் பகிடிவதைக்கு ஆளாகும் போது முறைப்பாடு செய்வதற்கும் வாய்ப்பு காணப்படுவதோடு பகிடிவதையினை தடுக்க இறுக்கமான பொறிமுறை காணப்படுகின்றது. பகிடிவதையினால் பல்கலை மாணவர்கள் இடைவிலகல், மன உளைச்சல், உடல், உள உபாதைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு கடந்த 5 வருடங்களாக பகிடிவதையினை தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல்கலை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஒழுக்கம் சார்ந்த விடயங்களுக்கும் விரிவுரையாளர்களும் அதிகாரிகளும் இருக்கின்றனர். இவர்கள் பகிடிவதையினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2 வருடமாக கொவிட் தொற்றானது மாணவர்கள் பல்கலைக்கு வருவதை பெருமளவில் தடுத்தமையினால் புதிய மாணவர்கள் ஒன்லைன் மூலமாகவே கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அவர்களுக்கு பகிடிவதை தொடர்பில் எதுவும் தெரியாது என்பதுடன் அதற்கு ஆளாகவும் இல்லை. இது பகிடிவதையினை தடுக்க பெரும் வாய்ப்பாக அமைந்தது. தற்போதைய முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பில் தெரியாமையினால் அடுத்துவரும் மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு.
இந்நிலை தொடர்ந்தும் பேண வேண்டும். பல்கலையில் பகிடிவதை பூச்சியத்துக்கு வரவில்லை. குறிப்பிட்டளவு இருக்கின்றது. உப கலாசாரங்களை போதிக்கும் பெயரில் சிரேஸ்ட மாணவர்களால் இவ்வாறு பகிடிவதை முன்னெடுக்கப்படுகின்றது. முhணவர் விடுதிகள், பல்கலை வளாகத்தில் ஓய்வு நேரங்கள், உணவு விடுதிகள் என்பவற்றில் பகிடிவதை காணப்படுகின்றது. ஆனால் அவை பேச்சளவில் காணப்படுவதுடன் ஆபத்தான பகிடிவதைகள் இல்லை.
பகிடிவதையில் ஈடுபடுபவர்களை இடைநிறுத்தல், பல்கலை வளாகத்துக்குள் நுழைவதை தடுத்தல், பரீட்சையில் பங்குபற்றுவதை தடுத்தல், பெறுபேறுகளை தாமதப்படுத்தல், பட்டமளிப்பு நிகழ்வுகளுக்கு உள்வாங்காமல் இருத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. புகிடிவதை தொடர்பான சட்டங்கள் இறுக்கமாக இருப்பதால் பகிடிவதையினை தடுக்க முடிகின்றது.’
பகிடிவதை தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2011 பெப்ரவரி 10 ஆம் திகதி மாணவர் ஒழுக்கம் தொடர்பிலான 946 இலக்க சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. 2010 ஜனவரி 15 ஆம் திகதி அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில் 919 இலக்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டள்ளது. 22 நவம்பர் 2019 இல் 12/2019 இலக்க சுற்றறிக்கையில் பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, பாலியல் மற்றும் வன்முறைகள் எதிர்கொள்வது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு தமது பெற்றோருடன் வருகை தரும் புதுமுக மாணவர்களுக்கு பகிடிவதை, பாலியல் மற்றும் வன்முறைகள், அவற்றுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறைகளைத் தடை செய்யும் 1998 ஆம் ஆண்டு 20ஆம் இலக்கச் சட்டத்தின் அடிப்படையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
கல்வி நிறுவனங்களுக்கு உள்ளே அல்லது வெளியே பகிடிவதையில் ஈடுபடும் அல்லது பங்கு பெறும் எந்தவொரு நபரும் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்படுவதுடன் நீதிவான் முன்னிலையில் சுருக்கமான விசாரணையின் பின்னர் இரண்டு வருடத்திற்கு மேற்படாத கடும் சிறைத் தண்டனைக்கும் மற்றும் குற்றம் இழைக்கப்பட்ட நபருக்கு இழைக்கப்பட்ட காயங்களுக்காக நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் ஒரு தொகையை நட்ட ஈடாகச் செலுத்துவதற்கும் பொறுப்புடையவராவார் என குறிப்பிடுகின்றது.
2015 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான சட்டம் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் பல்கலைக்கலக ஆணைக்குழு புதுமுக மாணவர்கள் அல்லது ஊழியர்களுக்கு பகிடிவதை அல்லது பாலியல் வன்முறை தொடர்பான முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கான பொறிமுறையை உருவாக்கியுள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு, பணிப்பாளர், தலைவருக்கு எழுத்து மூலமாக அல்லது நேரடியாக அல்லது மின்னஞ்சல் மூலமாக முறைப்பாட்டைப் பதிவு செய்தல்,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பகிடிவதைக்கெதிரான முனையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தல் ((www.eugc.ac.lk/rag அல்லது https://eugc.ac.lk/sgbv)), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குத் தொலைபேசி மூலம் முறைப்பாட்டைப் பதிவு செய்தல் (94112123700), மின்னஞ்சல் மூலமாக முறையிடுதல் (ragginghelp@ugc.ac.lk அல்லது helpme@ugc.ac.lk) சகல முறைப்பாடுகளும் தொடர்புடைய துணை வேந்தர்கள், பணிப்பாணர்களுக்கு தேவையான நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்படும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மையங்களாக விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் என்பன காணப்படுகின்றன. எனவே அவற்றை முறையாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பகிடிவதைக்கு எதிராக முதலில் மாணவர்கள் குரல்கொடுக்க வேண்டும். பகிடிவதைக்கு தூண்டுபவர்களும் செயற்படுத்துபவர்களும் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். பகிடிவதையினை முற்றாக தடை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அதனை வெளிப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். அத்துடன் பகிடிவதை மேற்கொள்ளும்போது மற்றவர்கள் அமைதியாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும். பகிடிவதை மேற்கொள்ளப்படும் சகல இடங்களிலிருந்தும் அவற்றை விரட்டியடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
கடந்த 2 வருடமாக கொவிட் தொற்றானது மாணவர்கள் பல்கலைக்கு வருவதை பெருமளவில் தடுத்தமையினால் புதிய மாணவர்கள் ஒன்லைன் மூலமாகவே கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அவர்களுக்கு பகிடிவதை தொடர்பில் எதுவும் தெரியாது என்பதுடன் அதற்கு ஆளாகவும் இல்லை. இது பகிடிவதையினை தடுக்க பெரும் வாய்ப்பாக அமைந்தது. தற்போதைய முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பில் தெரியாமையினால் அடுத்துவரும் மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக