கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

22 நவம்பர், 2017

“தள்ளாடும்” தேசம்
க. பிரசன்னா
போதைப்பொருளானது இலங்கைக்கு மிகப்பெரும் சாபக்கேடாக அமைந்திருக்கிறது. புகையிலை மற்றும் மதுபாவனை என்பவற்றை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்ற இலங்கை அரசாங்கத்தால் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலையும் பாவனையையும் தடுக்க முடியாமல் இருக்கின்றது. இந்நிலையானது இன்று பாடசாலை மாணவர்களையும் போதைக்கு அடிமையாக்கியிருக்கிறது. எனவே சட்டவிரோத போதைப்பொருட்களின் பாவனை தொடர்பிலும் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பிலும் நாம் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். இவ்வருடத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களின் 52,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
எனவே இவ்வாறான கைதுகளை கொண்டு நோக்கும் போது இலங்கையில் இடம்பெறுகின்ற ஏனைய குற்றங்களை விடவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களின் தொகை அதிகமாகவிருப்பதை அறிய முடிகின்றது. பொலிஸ் தரவுகளின் படி ஜனவரி 1 முதல் செப்டெம்பர் 11 வரையான காலப்பகுதியில் 52,157 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், 52,072 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் கஞ்சாவுடன் தொடர்புடைய 32,673 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 32463 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் அதிகூடிய இரண்டாவது சம்பவமாக பதிவாகியுள்ளது. இவை தொடர்பாக 19,434 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 219,237 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிக அதிகமாக இவ்வருடம் 4008 கிலோ கஞ்சாவும் 290 கிலோ ஹெரோயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 220 கிலோ கிராம் கொக்கெய்னும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை, சுங்கம் மற்றும் கடற்படையினர் என சகலரின் ஒத்துழைப்புடனேயே இக்குற்றச்செயல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான சம்பவங்கள் இலங்கையரில் அதிகமானோர் போதைப்பாவனைக்கு ஆளாவதோடு போதைக் கடத்தலின் மத்திய நிலையமாகவும் இலங்கை செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற பலரே சமூகத்தில் இடம்பெறுகின்ற ஏனைய குற்றங்களிலும் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். அத்தோடு இவ்வாறு போதைக்கு அடிமையானோரை பயன்படுத்தி குற்றச்செயல்களை மேற்கொள்ளத் தூண்டப்படுகின்றன.அண்மையில் கூட கிரியெல்ல பகுதியில் மது அருந்துவதற்காக திருடமுற்பட்டவர், வீட்டிலுள்ள உயர்தர மாணவியொருவர் கூச்சலிட்டதையடுத்து அவரை கொலை செய்துவிட்டு உண்டியலை திருடிச் சென்ற சம்பவம் பதிவானது. இதில் முக்கியமான விடயமெனில் உண்டியலில் இருந்தது வெறுமனே 210 ரூபா தான்.
எனவே உயிர்களைவிடவும் போதையின் தேவை போதைக்கு அடிமையானவர்களிடம் அதிகம் இருக்கின்றது. இதனை எவ்வாறு மாற்றியமைப்பது? போதைப்பொருட்கள் இலங்கைக்குள் நுழையாமல் தடுப்பதே இதற்கு ஒரே வழியாகும். இலங்கையில் கஞ்சா ஒரு மருத்துவ பொருளாகவும் உணவுச் சேர்மானமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று சட்டவிரோதமான போதைப்பொருளாக மாற்றம் பெற்றுவிட்டது. இதனால் இதை பலர் சட்டவிரோதமாக பயிரிட்டு விற்பனை செய்துவருகின்றனர். இதனை விடவும் தென்னிந்தியாவிலிருந்து கடத்திவரப்படுகின்ற கேரள கஞ்சா, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்படுகின்ற ஹெரோயின் மற்றும் கொக்கெய்ன் என்பன இலங்கையில் அதிகம் பாவனையிலுள்ள சட்டவிரோத போதைப் பொருட்களாக இருக்கின்றன.
இதைவிடவும் பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சீனியினை இலக்காக வைத்து அக்கொள்கலன்களுடன் போதைப்பொருட்களையும் கடத்திய பல சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியிருக்கின்றன. போதைப்பொருளானது அதிவிலைகூடிய பொருளாக இருக்கின்றது. இதன் கிராமுக்கான பெறுமதியே ஆயிரங்களை தாண்டி நிற்பதால் இதன்மூலம் அதிகமான வருமானத்தை போதைப்பொருள் விற்பனையாளர்களால் பெறமுடிகின்றது. இதுவே அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் சந்தைகள் தோற்றம் பெறுவதற்கு காரணமாகும். இதில் ஆண் - பெண் வித்தியாசமின்றி சகலரும் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை இலங்கைக்கு மிக நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டு சிறைவாசம் பெற்றோரில் 46.4 வீதமானோர் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 24,086 பேர் மரண தண்டனை பெற்றவர்களாகவும் 11,171 பேர் சிறைத்தண்டனை பெற்றவர்களாகவும் இருந்ததாக சிறைச்சாலை திணைக்களத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. 2014 ஆம் ஆண்டு போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றோர் 43.5 வீதமாகவும் 2013 இல் 34 வீதமாகவும் காணப்பட்டிருந்தனர். இலங்கையில் வருடமொன்றுக்கு 985 கிலோ கிராம் ஹெரோயின் விற்பனை செய்யப்படுகின்றது. இது நாளொன்றுக்கு 2.7 கிலோ கிராமாக காணப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு ஹெரோயினுடன் தொடர்புடைய குற்றங்களில் 45,000 பேர் இனங்காணப்பட்டிருந்தாலும் 47 கிலோ கிராம் ஹெரோயினே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. 2015 இல் மிக அதிகமாக போதைப்பொருளுடன் தொடர்புடைய 82,482 பேர் கைது செய்யப்பட்டனர். இது 2014 ஆம் ஆண்டை விட 23 வீதம் அதிகமாகும். 2010 - 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 551 பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீண்டும் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகள் அமைந்துள்ள 100 மீற்றர் எல்லைக்குள் சிகரட் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை விட போதைப்பொருட்களை மாணவர்களை இலக்குவைத்து சிலகுழுக்கள் விற்பனை செய்துவருகின்றன. கஞ்சா மற்றும் ஹெரோயின் என்பன இலங்கையின் பிரதான சட்டவிரோத போதைப்பொருளாகவிருகின்றன. கஞ்சாவானது நாட்டில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. 2014 இல் கஞ்சா பயிர்ச் செய்கை செய்யப்படுமிடமாக அண்ணளவாக 500 ஹெக்டெயர்களாக கணிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உற்பத்தி அதிகரிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசந்தர்ப்பத்தில் 2014 இல் 19,644 கிலோ கிராம் கஞ்சா இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இது 2013 ஆம் ஆண்டைவிட 76 வீதம் குறைவாகும். இதன்மூலம் இலங்கையில் போதைப்பொருட்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படவில்லையென கணிக்கமுடிகின்றது. ஆனால் இலங்கையை மத்திய சந்தையாக கொண்டு இவை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் போதைப்பொருட்களை கொண்டுவந்த ஒன்பது பாகிஸ்தானியர்கள், எட்டு இந்தியர்கள் மற்றும் பிரான்ஸ், லத்வியா, நைஜீரியா, மாலைத்தீவு, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என்ற வகையில் வெளிநாட்டவர்கள் இவ்வருடத்தின் முதல் 5 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய இளைஞர்களை அதிகமாக பாதிக்கின்ற ஒரு விடயமாக போதைப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றுக்கு அடிமையானவர்களை மீண்டும் இப்பழக்கத்திலிருந்து மீட்டு சமூகத்துக்கு கொண்டுவருவதற்கு அதிக பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் இலங்கையில் 250,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இதில் 50,000 பேர் ஹெரோயினுக்கு அடிமையாகியிருப்பதாக இச்சபையின் இயக்குனர் பேராசிரியர் ரவீந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதன்படி வருடமொன்றுக்கு 2500 பேர் போதையடிமையிலிருந்து புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதும் இனியும் எவரும் இந்நிலைக்கு ஆளாகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுவே இலங்கை எதிர்நோக்கும் எதிர்கால சவாலாக இருக்கப்போகின்றது. வருடா வருடம் இலங்கையின் வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிகதொகை ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. எனவே இலங்கையின் பிரதான போக்குவரத்து மார்க்கங்களின் பாதுகாப்பை பலப்படுத்தலாம். கடல் வழியாகவே கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் இலங்கைக்கு அதிகம் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன.
இலங்கையில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட கொள்கலன்களுடனான போதைப்பொருட்கள் பின்னர் எங்கு கொண்டுசெல்லப்பட்டன என்பதே தெரியாமலுள்ளது. எனவே இவற்றுக்குப் பின்னுள்ள அரசியல் பின்னணியையும் ஆராய வேண்டும். எதிர்கால இலங்கையின் இளைஞர் சமூதாயத்தை சிறப்பாக வழிநடத்தவும் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றவும் போதைப் பொருட்களின் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். அத்தோடு சட்டவிரோத கடத்தலும் முற்றாக தடைசெய்யப்பட வேண்டும்.
27/09/2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக