கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

22 நவம்பர், 2017

வேட்டை நாய்க்கு இரையான ஏழு மாத சிசு
பெரும்பாலானோர் நாய்களைத் தம்வீட்டு செல்லப்பிராணியாகவும் தனிமையில் இருப்போருக்கு காவலாகவும் வளர்த்து வருகின்றனர். அதுபோலவே நாயும் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம். ஆனால் நாம் யாரும் இதுவரை பார்த்திராத துன்பநிகழ்வொன்று தம்புள்ளை பொது வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது. கடந்த 12 ஆம் திகதி பிறந்த ஏழே நாளான சிசுவை ஒரு நாய் தனக்கு இரையாக்கியிருப்பதாக அங்குள்ள வைத்தியர் குழாம் தெரிவித்துள்ளது. இச் சிசு நாயிற்கு இரையாவதை தாய் நேரடியாக கண்டுள்ளார். இந்தக் கதையை கேட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்தியசாலை சேவகர்கள் மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக உயிருடன் நாயிற்கு இரையானது பிறந்து ஏழே நாட்களான சிசுவாகும்.
அம்மா நிரோஷா குமாரி (24 வயது), அப்பா சம்பத் குமார (வயது 26) தனது மூன்று பிள்ளைகளுடன் மண் குடிசையில் பல கனவுகளுடன் வாழ்ந்திருந்தனர். இவர்களுடைய மிகப்பெரிய கனவு கூலித்தொழில் செய்து சீமெந்து வீடொன்றை அமைத்துக் கொள்வதாகும். ஆனால் கூலித் தொழிலில் கிடைக்கும் கொஞ்சப் பணம் இவர்களின் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கே போதாது. மூத்த மகளுக்கு 6 வயது, இளைய மகளுக்கு 2 1/2 வயது. இச்சந்தர்ப்பத்திலேயே மூன்றாவதாக ஆண்குழந்தையான அவிஸ்க சந்துருவான் கிடைத்தான். ஒரே ஆண்வாரிசு என்பதால் இராஜாவாக பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது இவர்களது நினைப்பு.
மகன் அழகானவன் அவனை மண்வீட்டில் தரையில் வைப்பதற்கே இவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் பிள்ளையை வைக்கக்கூட இவ்களிடம் மெத்தையில்லை. இவ்வாறு வீட்டில் மிகவும் செல்லமான அவிஸ்க சந்துருவான் என்ற ஏழு நாள் சிசு. கலின் பிந்துனவெவ, நாமல் புரவைச் சேர்ந்தவன். ஆனால் இவ்வுலகில் ஏழு நாட்கள் மட்டுமே நாம் வாழத் தகுதியானவன் என்பதை அச்சிசு அறிந்திருக்க வாய்ப்பேயில்லை. இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஊரார் முதலில் கேட்ட கேள்வி, இந்த தாய், தந்தை யாருக்கு என்ன பாவம் செய்தார்கள் என்பதே. தம்புள்ளை வைத்தியசாலையில் சிசுவுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சிசுவின் சடலத்தை வீட்டுக்கு கொண்டுவர பணமில்லாது உறவினர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தை விசேட வைத்தியர் அஜித் அர்த்தநாயக்க, வைத்திய அதிகாரி காமினி சேனாநாயக்க அடங்கிய வைத்தியக் குழுவினர் எல்லோரும் சேர்ந்து சடலத்தை ஊருக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உதவியாக 50,000 ரூபாவை வழங்கியிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் முழுமையாக அறிய நாமல்புர, ஆசிறிகமவை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. நாயிற்கு இரையான கவிஸ்க சந்துருவானின் எச்சங்களை துணியில் சுற்றி வீட்டின் சாலையில் பெட்டியில் கிடத்தியிருந்தனர். சடலத்தை வைத்து இருவர் கூட நிற்க முடியாத சிறிய வீடு, அது. மின்சாரமும் இல்லை.
அருகில் தாய் நிரோஷா குமாரியும், தந்தை சம்பத் குமாரவுடன் வீட்டைச் சுற்றி ஊரார் குழுமியிருந்தனர். ஊரிலுள்ள அதிகமானோர் படிக்காதவர்களாகவும், பொருளாதாரப் பிரச்சினையை எதிர் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். கவிஸ்க சந்துருவானின் மரணம் இக்கிராமத்தை பற்றிய விபரங்களை வெளிக்கொண்டு செல்ல உதவியிருக்கிறது. கவிஸ்கவின் மரணம் ஊரிலுள்ளவர்களுக்கு பெரியதொரு விடயமாக தென்படவில்லை. ஏனென்றால் இவர்கள் வேட்டையாடுபவர்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் கவிஸ்கவின் தாய் விபரிக்கையில்; எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள். இறந்தது 3 ஆவது ஆண் பிள்ளை. பிள்ளை கிடைத்து ஏழு நாள். இந்த ஏழு நாளும் கணவனுக்கு வேலைக்குப் போக வழியில்லை. காட்டுக்குச் சென்று மூங்கில் வெட்டுவது, தேன் எடுப்பது, வேட்டையாடுவது இதுவே இவர்களின் வாழ்க்கை. சம்பவத்தன்று பிள்ளைகளின் பசிபோக்க ஏதாவது கொண்டுவர கணவர் காட்டுக்குச் சென்றார். நாம் வாழ்வது மண்ணாலான சிறிய குடிசை. நான் பிள்ளையை அறையின் நடுவில் பாய் விரித்து தூங்கவைத்துவிட்டு சமையலறை பக்கம் சென்றேன். மூத்த பிள்ளையை குழந்தையின் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள சொல்லியும், அவள் இருட்டுக்குப் பயந்து அம்மாவிடமே சென்றுவிட்டாள். வீட்டின் முன்பக்கம் மாத்திரமே கதவு இருக்கிறது. பின்பக்கம் மண்ணால் மூடியிருக்கிறது.
மற்றைய பிள்ளைகளுக்கு ஏதாவது உணவு கொடுப்பதற்கு, ஆச்சி வீட்டுக்கு போய் இரவு சமைப்பதற்கு இரண்டு சுண்டு அரிசி வாங்கிவரும்படியும் அப்பா காட்டிலிருந்து வந்ததும் வாங்கித் தருவதாகவும் மூத்த பிள்ளையிடம் சொன்னேன். அதுவரைக்கும் நான் தண்ணீர் கொண்டுவர கிணற்றடிக்குச் சென்றேன். வந்து பானையில் தண்ணீரை ஊற்றி நெருப்பை மூட்டிய போது இரண்டாவது மகள் தம்பி துள்ளுவதாக கத்தினாள். அச்சமயத்தில் நான் முன் அறைபக்கம் செல்லும் போது நாய் பிள்ளையின் தலையை தின்று கொண்டிருந்தது. நான் நாயை விரட்டிவிட்டு பிள்ளையை தூக்கி கொண்டு மெனிக்கே அக்கா வீட்டிற்கு ஓடினேன். அந்த நாயை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அதுவொரு சாம்பல் நிற நாய்.
உடனடியாக அருகாமையிலிருந்த வாகனத்தில், ஹபரண வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை உயிருடன் இருந்தது. தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற பின்பே உயிரிழந்திருந்தது. அந்த நாயை ஊரில் இதுவரை யாருமே கண்டதில்லை. பிள்ளையை கொண்டு செல்ல வந்த எமன் என்றே பலரும் கதைத்துக் கொண்டார்கள். இச்சம்பவம் தொடர்பில் சந்துருவானின் தந்தை குறிப்பிடும் போது; நான் அன்று வீட்டில் இருக்கவில்லை. காட்டுக்கு போயிருந்தேன். அப்போது இன்னொருவருடைய தொலைபேசிக்கு அழைப்பு வந்தே விடயத்தை தெரிந்து கொண்டேன். நான் வரும்போது பிள்ளையை தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.
அதனால் நான் இரவு செல்லவில்லை. காலையில் போனேன். போகும்போதே மகன் இறந்ததை தெரிந்து கொண்டேன். அயல் வீட்டார் ஒருவர் கூறும்போது; மாலை வீட்டிலுள்ளவர்கள் கத்தும் சத்தம் கேட்டது. வெளியே வரும்போது சாம்பல் நிற நாய் ஓடுவதை கண்டேன். அது என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. இதற்கு முன் நானும் அந்த நாயை கண்டதில்லை. வீட்டில் அம்மா, பிள்ளைகள் அழும் சத்தம் கேட்டது. சண்டையென்று நான் நினைத்தேன். இரவு தான் தெரியும் நாய் கடித்ததென்று. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் இந்தப் பூமியில் வாழும் மிகவும் பின்தங்கிய மக்களாக இருக்கின்றனர்.
மேலும் பெயர்குறிப்பிட விரும்பாத, ஊரில் கொஞ்சம் கல்வியறிவுள்ள, மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும், கிராமத்துக்கு ஏதாவது செய்ய நினைக்கும் ஒரு சிலர் பின்வருமாறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்தச் சிசுவின் மரணம் கேட்ட ஊருக்கு வெளியிலுள்ள பலரையும் கவலையில் ஆழ்த்தியது. ஆனால் இதே ஊரிலுள்ளவர்களுக்கு இவை தொடர்பில் எதுவித கவலையுமில்லை. ஏனென்றால் இவர்கள் வேட்டையாடுபவர்கள். இறைச்சி விற்பது, தேன் எடுப்பதே இவர்களது தொழில். இதனால் ஊரிலுள்ள எல்லா இடத்திலும் வேட்டை நாய் பழக்கப்படுகிறது. அப்பகுதிக்கு தெரியாமல் ஆடு, மாடு வந்தால் நாய் கடித்து குதறிவிடும். ஊரிலுள்ளவர்களுக்கு வேறு தொழிலில்லை. இதனால் பிள்ளைகளை பார்த்துக் கொள்வதற்கு வேட்டையாட வேண்டியுள்ளது.
ஆசிரிகம என்று சொன்னால் பலருக்கும் தெரியும் இது வேட்டையாடும் கிராமமென்று. அதனால் ஊரிலுள்ளவர்களுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் எதுவும் அறிவுரை சொல்ல முடியாது. அவர்கள் படிக்கவில்லை. மிருகங்கள் போலவே நடந்து கொள்வர். காலை முதல் இரவுவரை குடியில் மூழ்குகின்றனர். எவருமே ஒழுங்காக வாழ்க்கையை வாழப் பழகவில்லை. யாருமே அவர்களை மாற்றுவதற்கு முன்வருவதில்லை. பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் யாராவது வருவது ஏதாவது விசேடங்களுக்கு இறைச்சி ஓடர் பண்ணுவதற்கு மட்டுமே. இங்கு ஒரு கிலோ இறைச்சி 300 ரூபா. இந்த வேட்டைத் தொழிலினால் தான் இந்த மரணம் கூட அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. தயவு செய்து இவர்களுக்கு வேறு தொழிலையும் பிள்ளைகளுக்கு கல்வியையும் ஏதாவது வேலைத்திட்டத்தையும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவும், போன்றவைகளை இறந்த சிசுவின் ஞாபகார்த்தமாக செய்ய வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற பல சம்பவங்கள் நடக்கலாம்.
இறந்த சிசுவின் இறுதிச் சடங்குகள் ஊர் விகாரதிபதி ரத்னபுரே சீலரத்ன தேரரின் தலைமையில் நடைபெற்றது. தேரர் மிகவும் அழுத்தமாக ஊர் மக்களுக்கும் பிள்ளையின் உறவினருக்கும் பின்வருமாறு கூறியிருந்தார். வேட்டையாடப்படும் விலங்குகளும் ஓர் உயிர்தானே. அதனால் இந்த உயிர் போயிருக்கலாம். அந்த பாவம் தான் இது. இந்த சம்பவத்துக்கு கிராம அதிகாரிகளும் பிரதேச அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும்.
ஊர் மக்கள் இவ்வாறான பாவ வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமாயின் இவர்களுடைய இறைச்சி விற்பனையை தடுக்க வேண்டும். அப்போதுதான் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதென்று தெரிவித்திருந்தார். ‘இது வேட்டையாடும் நாய். வீட்டிலுள்ள நாய் ஒருபோதும் உணவுக்காக மனிதரை கொல்லாது’ என்பதே இங்குள்ள பெரும்பாலானோரின் எண்ணம். எது எப்படியாயினும் மற்ற பெற்றோருக்கு ஒரு நல்ல பாடமாக இச் சம்பவம் இருக்கும்.
இலங்கையில் ஏற்படும் விபத்துகளில் மிக அதிகமாக 33 வீதமானவை விலங்குக் கடியால் ஏற்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நாளொன்றுக்கு 1000 நாய்க் கடிகள் தொடர்பான சம்பவங்கள் பதிவாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் 95 வீதமான ரேபிஸ் நோயானது நாய்க் கடியின் மூலமே ஏற்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் நாட்டில் 300,000 பேர் ரேபிஸ் நோய்க்கு ஆளாகின்றனர். கடந்த வருடம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரேபிஸ் நோய்க்கு ஆளாகிய 30,000 பேர் அனுமதிக்கப்பட்டனர். நாட்டில் முதல் 3 1/2 மாதங்களில் ரேபிஸால் 6 பேர் இறந்ததுடன் கடந்த வருடம் 20 பேர் உயிரிழந்திருந்தனர். எனவே நாய்க் கடி இலங்கையில் மிக ஆபத்தானதொரு விடயமாக மாறியிருக்கிறது. இவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதும் அவசியமாகின்றது.
நாமல்புர ஆசிரிபுரயைச் சேர்ந்த ஏழு நாள் சிசுவான சந்துருவானுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. சந்துருவானுக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயமே உயிர் பிரிவதற்கு பிரதான காரணமாகும். சிறு குழந்தைகள் நாய்க்கடிக்கு ஆளாகும் போது பிரதானமாக தலை மற்றும் கழுத்துப் பகுதிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன. குழந்தைகளின் தலை சிறியதாக இருக்கின்றமையும் ஒரு காரணமாகும். எனவே வீட்டில் நாயை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களும் அயல் வீட்டில் நாய்களின் நடமாட்டம் காணப்படுகின்றதெனினும் தெருக்களில் நாய்களின் பெருக்கம் அதிகம் காணப்படுகின்றதெனினும் அவதானமாக இருக்க வேண்டும். நிலத்தில் குழந்தையை கிடத்தும் போது விலங்குகள் வீட்டினுள் நுழைய முடியாதவாறு கதவுகளை மூடுவது நல்லது.
சந்துருவானின் குடும்ப பொருளாதார நிலைமையால் அவனுடைய வீடே அவனுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் வசிக்கின்ற பிள்ளைகளின் பாதுகாப்புக் கூட இவ்வாறு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இனிமேலும் தாயின் கதறுலுக்கு சந்துருவான் செவிசாய்க்கப்போவதில்லை. ஆனால் அக்கதறல் பிள்ளையை பெற்ற சகல தாய்மார்களுக்கும் ஏதோவொரு சங்கதியைச் சொல்லும்.
01/10/2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக