பீட்ரூ தோட்டத்தின் ஸ்கிராப் பிரிவில் 30 வீடுகளை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலப்பகுதி |
இந்திய அரசாங்கத்தினால் இரண்டாம் கட்டமாக 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன. முதலாம் கட்டமாக 4000 வீடுகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டு அவை பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக உதவிகள் வழங்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை 12.05.2017 ஆம் திகதி திறந்து வைக்கும் நிகழ்வில் 10 ஆயிரம் தனி வீட்டுத் திட்டம் தொடர்பில் அறிவித்தார். 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி 2018.02.16 ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் 2018.08.12 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டத்துக்காக இந்திய நன்கொடையாக 9500 மில்லியன் ரூபாவும் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பாக 1500 மில்லியன் ரூபாவும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
எனினும் அதன் பின்னரான ஆட்சி மாற்றம், கொவிட் தொற்று பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையில் வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வீட்டுத்திட்டத்துக்கான நிதியை அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் முன்னர் வீடொன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வீடொன்றுக்கு அதிக செலவு என மதிப்பிடப்பட்டது. இதற்கான மேலதிக நிதியை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 11.10.2023 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
10 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்காக 11.10.2023 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் |
முதல் கட்டமாக 3525 தனி வீடுகளும் இரண்டாம் கட்டமாக 3944 வீடுகளும் மூன்றாம் கட்டமாக 2531 வீடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது ஒரு வீட்டுக்கு 3.1 மில்லியன் ரூபா (31 இலட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் 2023 ஆம் ஆண்டு 3500 மில்லியன் ரூபாவும் இலங்கை அரசாங்கம் 680 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தீர்மானமெடுக்குமெனவும் இலங்கை அரசாங்கம் அதில் தலையீடு மேற்கொள்வதில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. வீட்டுத்திட்டத்துக்கான நில ஒதுக்கீடுகள் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் 14 பிரிவுகளில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய வீட்டுத்திட்டங்களுக்கான காணி ஒதுக்கீடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் பெருந்தோட்ட மக்கள் இலங்கை வருகைத் தந்து 200 வருடங்கள் நிறைவு பெற்றதை நினைவுகூரும் வகையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் 02.11.2023 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நாம் 200 தேசிய நிகழ்வில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 10 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை காணொளி வாயிலாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் முதற் கட்டமாக 1300 வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 19.02.2024 ஆம் திகதி நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சால் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 1300 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் |
2020 ஆம் ஆண்டுக்குப்பின் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று பரவல் மற்றும் அதன் பின்னரான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பன வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அத்துடன் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்பு காரணமாகவும் அமைச்சுக்களின் மூலம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. 2020 ஆம் ஆண்டுப் பின்னர் ஐந்து முறை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றதுடன் அமைச்சுக்களுக்கான உரிய நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு ஒதுக்கப்பட்டமை தொடர்பிலும் சர்ச்சைகள் எழுந்தது. குருநாகல் மாவட்டத்தில் வில்கொட சௌமிய மாவத்தையில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட 25 வீடுகள் தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத நகர்புற மக்களுக்கு வழங்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் பீட்ரூ தோட்டத்தின் ஸ்கிராப் பிரிவில் 30 வீடுகளை அமைப்பதற்காக ஒரு வீட்டுக்கு 10 பேர்ச்சஸ் வீதம் தேயிலை காணிகள் துப்பரவு செய்யப்பட்ட போதும், வீடமைப்பு அதிகார சபை அந்த இடத்தில் வீடுகளை கட்டுவதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட தேயிலைகள் அகற்றப்பட்டமை தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பயனாளிகள் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தங்களுடைய ஆதரவாளர்களை முன்னிலைப்படுத்தி வீடுகளை வழங்குவதால் பயனாளிகள் தெரிவுகளில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முன்னுரிமை அடிப்படையில் வீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர்.
கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டங்களில் வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் பலர், தங்களுக்கு கிடைக்கப் பெற்ற வீடுகளை வாடகைக்கு வழங்கியுள்ளதுடன் பலர் வீடுகளை விற்பனை செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. தனி வீடுகள் வழங்கப்பட்ட பின்னர் லயன் வீடுகள் அழிக்கப்படாமையால் பயனாளிகள் மீண்டும் லயன் வீடுகளில் வசிப்பதுடன் தனி வீடுகள் வாடகைக்கோ அல்லது விற்பனையோ செய்யும் நிலை காணப்படுகின்றது.
தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாகியுள்ள போதும், தனி வீட்டுத்திட்டத்தை உருவாக்குவதற்கு போதுமான காணிகள் இல்லையெனவும் அவ்வாறு உருவாக்கப்பட்டால், பாரிய தேயிலை நிலங்களை இழக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியதுடன் அதற்கு தீர்வாக மாடி வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்மொழிந்தது. எனினும் இதற்கு கடும் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக பெருந்தோட்டங்களில் பயிரிடப்படாத நிலையிலுள்ள காணிகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டது.
இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு வரையான தகவல்களின் அடிப்படையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நியத்துக்குச் சொந்தமான எழு பிராந்தியங்களில் வசிக்கும் தோட்ட சேவையில் ஈடுபடும் குடும்பங்களுக்கு 104,939 வீடுகளும் தோட்டங்களிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 251,896 வீடுகளும் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் 2019 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 6706 வீடுகள் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இதில் 4000 இந்திய வீட்டுத்திட்டமும் உள்ளடங்கும். ஒவ்வொரு அரசாங்கத்தின் கொள்கைகள் மக்களுக்கான அபிவிருத்தியில் பாரிய இடைவெளியை உருவாக்குகின்றன. இந்திய அரசாங்கத்தால் 10 வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ள போதும், அவற்றை நடைமுறைப்படுத்த தயாரில்லாத அரசாங்கங்கள் பெருந்தோட்ட மக்களின் தனி வீட்டுக் கனவை நிறைவேற்றும் என்பது கனவாகவே இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக