2016 - 2021 நவம்பர் வரையான காலப்பகுதியில் 31,810 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் 142 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் அதிகமானவை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாக காணப்பட்டாலும் மறுபுறும் சிறுவர்களினால் இழைக்கப்படும் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே சிறுவர்கள் வன்முறைகளுக்கு ஆளாகாமல் இருக்கவும் குற்றங்களுடன் தொடர்புடைய பின்னணியை கொண்டிருக்காமலும் இருப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகின்றது. இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் 21.9 சதவீதம் அதிகரித்து வருவதாக யுனிசெப் நடத்திய அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் சிறுவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் மற்றும் சிறுவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைபாடுகள் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் ஆகியவற்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
சிறுவர் மீதான வன்முறைகள்
நாட்டில் ஒவ்வொரு வருடமும் 5000 க்கும் மேற்பட்ட சிறுவர் வன்முறை தொடர்பான முறைபாடுகள் பதிவு செய்யப்படுவதாகவும் 2016 - 2021 நவம்பர் வரையான காலப்பகுதியில் 31,810 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் 142 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை சிறுவர் முறைப்பாட்டு அறிக்கையின் படி, 2020 ஆம் ஆண்டு 8522 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இவற்றில் அதிகமாக பாடசாலை இடைவிலகல் தொடர்பா 3126 முறைபாடுகளும் சிறுவர் திருமணம், சிறுவர் கர்ப்பம் தொடர்பாக 607 முறைப்பாடுகளும் உளவியல் து~;பிரயோகம் தொடர்பாக 859, பாலியல் து~;பிரயோகம் தொடர்பாக 507 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
சிறுவர்களை உடல் ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக பீதியடையச் செய்தல், பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல், புறக்கணித்தல், வர்த்தகம் அல்லது வேறு விடயங்களுக்காக அவர்களை சுரண்டுதல் போன்றவற்றின் மூலம் அவர்களின் ஆரோக்கியம், உயிர்வாழ்தல், வளர்ச்சி மற்றும் கௌரவம் போன்றவற்றுக்கும் பாதிப்பை ஏற்படுத்துதல் போன்றவை சிறுவர் துஸ்பிரயோகங்கள் எனப்படுகின்றன.
அதேபோன்று பெற்றோர் அல்லது பராமரிப்பாளரின் கவனயீனம், அவர்களின் அக்கறையற்ற தன்மையின் காரணமாக ஏற்படும் காயம், மரணம், உணர்ச்சி ரீதியான பாதிப்பு அல்லது ஒரு குழந்தைக்கு பாரிய தீங்கு ஏற்படக் கூடிய ஆபத்தான நிலை என்பனவும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் எனப்படுகின்றன.
இலங்கையில் சுமார் 80 சதவீதமான சிறுவர்கள் அறியாமையினாலேயே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர் என ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு கூறுகின்றது. இலங்கையில் உள்ள சிறுவர்கள் பாலியல் மட்டுமல்ல குடும்ப வன்முறைகளினாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர் துஸ்பிரயோகங்களில் அதிகமானவை நம்பிக்கைக்குரிய நெருங்கிய உறவினர்களாலே பெரும்பாலும் ஏற்படுத்தப்படுகின்றன என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது.
கொவிட் தொற்றினால் இலங்கை நாடளாவிய ரீதியில் முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் அதிகாரசபைக்கு கிடைத்திருந்தமையும் இங்கு கவனத்திற்குரிய விடயமாகும். சிறுவர் துஸ்பிரயோகங்கள் சிதைவுற்ற குடும்பங்களில்தான் அதிகம் இடம்பெறுகின்றன என்பது மற்றுமொரு உண்மையாகும். அதாவது குடும்பத்தாரால், தாய் அல்லது தந்தையால் கைவிடப்பட்ட பிள்ளைகள், குடும்ப வாழ்வாதார பிரச்சினைகளுக்காக வெளிநாடு செல்லும் பெற்றோரின் பிள்ளைகள்தான் அதிகம் பாலியல், உடலியல். உளவியல் ரீதியான கொடுமைக்கு ஆளாகுகின்றனர் என்று சிறுவர் உரிமைகள் தொடர்பாக செயற்படும் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சிறுவர் பாதுகாப்பு நிலையங்களிலுள்ள சிறுவர்கள்
சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களும் அதிகரித்துள்ளன. சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றமிழைத்தவர்கள் என பலரும் உள்ளனர். நாட்டில் சிறுவர்கள் உத்தியோகபூர்வமாக பராமரிக்கும் நிலையங்களாக 379 சிறுவர் இல்லங்கள் காணப்படகின்றன. இவற்றில் 14 தடுப்பு இல்லங்கள், 4 சிறுவர் பாதுகாப்பு இல்லம், 9 சான்றுபடுத்தப்பட்ட பாடசாலை, அங்கீகரீக்கப்பட்ட பாடசாலையொன்று, 9 அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட சிறுவர் இல்லம், ஒரு சிறுவர் தடுப்பு இல்லம், 4 சிறுவர் பயிற்சி மற்றும் போதனா மத்திய நிலையம், 331 தொண்டு சிறுவர் இல்லம், 6 ஏனைய இல்லங்கள் என்பன இவற்றில் உள்ளடங்குகின்றன.
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய நிலையில் 2019 ஆம் ஆண்டு 3018 சிறுவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உடல், உள மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள், சிறுவர் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், யாசகம் பெறுதல், இயற்கை காரணங்களால் விபத்துக்குள்ளாதல், கடத்தல், பாலியல் தொல்லை, பெற்றோர் இறத்தல், பெற்றோர் அங்கவீனமாதல் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், கைவிடப்படுதல், கவனிப்பற்றவர்கள், பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள், விற்பனை, மனித வியாபாரம், ஆட்கடத்தல் போன்ற காரணங்களின் அடிப்படையில் இவர்கள் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு குற்றமிழைத்தமைக்காக 364 சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் திருட்டு, கொள்ளை, வீடுகளை உடைத்தல் என்பவற்றுடன் தொடர்புடையவர்களாவர். போதைப்பொருள் பாவனை, விற்பனை, மதுபாவனை, மது விற்பனை, சிறுவயது திருமணம், விபசாரம், பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தல், கொலை, தாக்குதல் போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய சிறுவர்களும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே 2019 ஆம் ஆண்டில் மொத்தமாக 10,632 சிறுவர்கள், பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4017 ஆண் பிள்ளைகளும் 6615 பெண் பிள்ளைகளும் உள்ளடங்குவர். இவர்களில் நீதிமன்றத்தின் ஊடாக 5199 பேரும் அரசாங்கத்தின் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஊடாக 15 பேரும் மாகாண சிறுவர் பராமரிப்பு நிலைய ஆணையாளரின் கட்டளைக்கிணங்க 3976 பேரும் நேரடி பாதுகாவலர் ஊடாக 1302 பேரும் பொறுப்பாளர் அல்லாத வேறு நபர்களுக்கூடாக 88 பேரும் காரணம் தெரியாத நிலையில் 41 பேரும் ஏனைய காரணங்களுக்காக 11 பேரும் சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
என்ன காரணம்?
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களினாலேயே முன்னெடுக்கப்படுகின்றது. பெற்றோரினால் சிறுவர்கள் கைவிடப்படுதல் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் இருக்கும் சிறுவர்கள் அதிகமாக வன்முறைகளுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்கள் அண்மைய இலங்கை சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மலையகத்தைச் சேர்ந்த ஹிசாலினியின் மரணத்துக்குப் பின்னாலான விசாரணைகள் சிறுவர்கள் மீதான வன்முறையினை தெளிவாக எடுத்துக்காட்டியது. புhடசாலை இடைவிலகல், வறுமை, சிறுவர் தொழிலாளர்கள், போதைப்பொருள் பாவனை என்பன சிறுவர்களின் வாழ்வியலை வேறு பாதைக்கு எடுத்துச் செல்கின்றது. இலங்கையில் போதைப்பொருள் வியாபாரிகள் பாடசாலை சிறுவர்களை இலக்குவைத்து தங்களது வியாபாரங்களை முன்னெடுக்கின்றனர்.
சிறுவர்கள் மீதான வன்முறைக்கு குடும்ப மற்றும் சமூக ரீதியான விடயங்கள் காரணமாக அமைந்தாலும் சட்டரீதியாக சிறுவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பும் தாமதமாக கிடைக்கும் நீதியும் சிறுவர்கள் மீதான வன்முறையினை கட்டவிழ்த்து விடுபவர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றது.
2019 ஆம் ஆண்டு சிறைச்சாலைத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுவர்களும் 16 - 22 வயதுக்குட்பட்ட 11,203 இளைஞர்களும் சிறைகளில் குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகளாக நேரடியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும ; 16 முதல் 22 வயதுக்குட்பட்ட 1,933 இளைஞர்கள் சிறைச்சாலையில் நேரடியாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 2016 ஆம் ஆண்டு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட சிறுவர் செயல்பாடு கணக்கெடுப்பு 43,714 பேர் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 39,007 பேர் சுரங்கம், கல் உடைத்தல், கட்டுமான தளங்கள், மீன்பிடித்தல் மற்றும் நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 2020 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 3926 முறைப்பாடுகளுக்கு நிரந்தர தீர்வுகளும் 2589 முறைபபாடுகளுக்கு தற்காலிக தீர்வுகளும் 1796 முறைப்பாடுகள் ஏனைய நிறுவனங்களுக்கு நடவடிக்கைளுக்காக கையளிக்கப்பட்டுள்ளன. எனவே முறைப்பாடுகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எவ்வாறு தடுப்பது?
தொழில் செய்வதற்கான ஆகக்குறைந்த வயதினை 14 வயதிலிருந்து 16 வயதாக அதிகரிப்பதற்கான தீர்மானத்தினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்கள் 16 வயதுவரை கட்டாய கல்வியினை பெற்றுக்கொள்வதற்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் தகவல்களின்படி பாடசாலை இடைவிலகல் தொடர்பில் 1402 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டாய கல்வியினை சிறுவர்கள் பெற்றுக்கொள்ள வழிசெய்வது பெரும்பாலான சிறுவர் வன்முறைகள் குறைவதற்கு வழிவகுக்கலாம்.
குடும்ப வறுமையினை பயன்படுத்தி சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் நிலை காணப்படுகின்றது. ஹிசாலியின் மரணத்துக்குப் பின்னர் சிறுவர்களை வீட்டுக்கு அமர்த்துவது தொடர்பில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைக்கு எதிராக காணப்படும் சட்ட பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
முதலாவதாக சிறுவர்களின் பாதுகாப்பினை குடும்பங்கள், பாடசாலைகள் என்பனவும் உறுதி செய்ய வேண்டும். வீடுகளிலும் பாடசாலைகளிலும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் என்பன பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் கொழும்ப பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான பல சட்டங்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருத்தப்பட்டன. அவற்றில் கடை காரியாலய ஊழியர் சட்டம், பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தல் சட்டம், தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம், இந்திய தொழிலாளர்கள் சம்பளச் சட்டம் போன்ற தொழிற்சட்டங்கள் திருத்தப்பட்டன. இந்தச் சட்டங்கள் திருத்தப்படுவதற்கு முன்னர் இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஆகக்குறைந்த வயதாக 14 வயது இருந்தது. ஆனால் இந்த தித்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பின்னர் இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான வயது 16 ஆக உயர்த்தப்பட்டது. எனவே 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களை இலங்கையில் எங்கும் வேலைக்கு அமர்த்த முடியாது. அவ்வாறு வேலைக்கு அமர்த்கப்படுவாராயின் வேலைக்கு அமர்த்துபவர் குற்றத்தவறை இழைத்தவராக கருதப்படுவார்.
இதேவேளை 16 வயதுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை எல்லா வகையான வேலைகளிலும் அமர்த்த முடியாது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி உருவாக்கப்பட்டது. இந்த ஒழுங்கு விதியில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை ஆபத்தான வேலைகளில் அமர்த்துவதை தடை செய்கின்றது. இந்த ஒழுங்கு விதியின் கீழ் 71 வகையான வேலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் வீட்டு பணியாள் என்பதும் அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் 18 வயதுக்கும் குறைந்த ஒரு பிள்ளையினை வீட்டு பணிக்கு அமர்த்த முடியாது.
இதைவிட இலங்கையில் 18 வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் பாலியல் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமாகும். அத்துடன் எந்தவொருவரையும் கட்டாய வேலையில் ஈடுபடுத்த முடியாது எனவும் தண்டனைச் சட்டக்கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கல்வி கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டாய கல்வி வயது 5 - 16 ஆக காணப்படுகின்றது. 16 வயது அடையும் வரை அவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டும். தொழில் சட்டங்களும் 16 வயதுக்கு உட்பட்டவர்களை வேலைக்கும் உட்படுத்த முடியாது. அத்துடன் பல்வேறு சர்வதேச சமவாயங்களையும் இலங்கை ஏற்று அங்கீகரித்துள்ளது. சிறுவர் உரிமைகள் சமவாயம், சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் கீழான இலக்கம் 138, இலக்கம் 182 சமவாயங்கள் என்பன அவையாகும். எனவே சர்வதேச சட்டங்களுடன் இலங்கையின் சட்டங்களும் இணங்கி போகும் நிலை காணப்படுகின்றது. இலங்கையில் சிறுவர் வேலைக்கு அமர்த்துதல் சட்டங்கள் திருப்திகரமாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சட்டங்கள் பயன்தர வேண்டுமானால் அவை வினைதிறன் உள்ளவகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.’ என தெரிவித்தார்.
அதேவேளை சிறுவர் குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை துரிதப்படுத்த வேண்டும். இலங்கையில் சிறுவர் குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் காணப்படுவதால் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலை காணப்புடுகின்றது. எனவே சிறுவர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மீள ஆராய வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஆத்துடன் தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறும் சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
‘16 வயதுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை எல்லா வகையான வேலைகளிலும் அமர்த்த முடியாது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி உருவாக்கப்பட்டது. இந்த ஒழுங்கு விதியில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை ஆபத்தான வேலைகளில் அமர்த்துவதை தடை செய்கின்றது. இந்த ஒழுங்கு விதியின் கீழ் 71 வகையான வேலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் வீட்டு பணியாள் என்பதும் அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் 18 வயதுக்கும் குறைந்த ஒரு பிள்ளையினை வீட்டு பணிக்கு அமர்த்த முடியாது.’

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக