கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

6 மே, 2022

புதிய அரசாங்கத்தில் மலையக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சாக்களை அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு கோரி மிக நீண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் நிலவும் தற்போதை நெருக்கடிகளுக்கு மத்தியில்  பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தேசிய அரசியலில் நீடிக்கும் இழுபறிகளுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது. கடந்த வாரத்திலும் இந்த வாரத்திலும் இரு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது. அவை இ.தொ.கா.வின் புதிய தலைமைத்துவம் மற்றும் மத்திய அரசாங்கத்தில் நிலவும் நெருக்கடிகள் என்பனவாகும். எனினும் இவ்விரு சம்பவங்களும் மலையக மக்களுக்கு பாரிய வாய்ப்புகளை மீட்டுத்தரும் என்பதில் அதிக நம்பிக்கையில்லை.

இதற்கு முன்னைய காலங்களில் மலையக மக்களுக்கு கிடைக்கப்பெற்ற கசப்பான அனுபவங்களே காரணமாகும். கோதுமை மா அரசியல், இந்திய வீட்டுத்திட்டம், தனிப் பல்கலைக்கழகம், 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையேனும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. நாட்டின் கடன் நெருக்கடிகளை காரணம்காட்டி மக்களுக்கான அபிவிருத்திகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டனவே தவிர அரசாங்கத்தின் அத்தியாவசியமற்ற செலவுகள் ஒருபோதும் குறைக்கப்படவில்லை. 

தற்போது மீண்டும் புதிய அரசாங்கமொன்று தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது அரசியல் இலாபங்களை கவனத்தில் கொள்ளாது வாக்களித்த மக்களின் நன்மை கருதி அரசியல் தலைமைகள் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். முன்னைய காலத்தில் விட்ட தவறுகள் எவ்வாறு மக்களை பாதித்தது என்பதற்கு பின்வரும் விடங்கள் சிறந்த உதாரணங்களாக அமையும். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டு   வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்த பின்னர் பெருந்தோட்ட நிறுவனங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் நெருக்கடிகள் என பல்வேறு  பிரச்சினைகள்  எழுந்தன.  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000  ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இன்னும் அவர்கள் அத்தொகையினை பெற்றுக்கொள்ளவில்லை. தினசரி 20 கிலோ கொழுந்து பறித்தால் மாத்திரமே 1000 ரூபா வழங்கப்படுமென கம்பனிகள் அறிவித்துள்ளன. கம்பனிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கத்தினால் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியவில்லை. 

இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய 4000 வீட்டுத்திட்டங்களில் முதல் கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 1057 வீடுகளில் 659 வீடுகளுக்கு காணியுறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் மூலம் மொத்தமாக நிர்மாணிக்கப்பட்ட 4000 வீடுகளில் 3341 வீடுகளுக்கு மட்டுமே காணியுறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. 659 பேருக்கு காணியுறுதிகள் வழங்கப்படவில்லை. இதனால் தனிவீடுகளை பெற்றுக்கொண்டுள்ள 659 பேர் இன்னும் வீட்டுக்கு உரித்துடையவர்களாக மாறவில்லை. அதேவேளை காணியுறுதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மேலதிகமாக 10,000 தனி வீடுகளை அமைப்பதற்காக வழங்கப்பட்ட உதவியும் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. 4000 வீடுகளை அமைக்கும் நடவடிக்கையில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பதற்கே ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் 10,000 வீடுகள் அமைக்கும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவேயில்லை. இந்திய அரசாங்கம் வழங்கிய 10,000 வீடுகளில் 2021 ஆம் ஆண்டு 3025 வீடுகளும் 2022 ஆம் ஆண்டு 3944 வீடுகளும் 2023 ஆம் ஆண்டு 2531 வீடுகளும் என மொத்தமாக 9500 வீடுகள் நிறைவுசெய்யப்பட்டு பயனாளிகளுக்கு கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் 2022 ஆம் ஆண்டிலும் அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை. 

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையின்படி, பெருந்தோட்டங்களில் 39,799 தனி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 29,567 இரட்டை வீடுகளும் 73,130 தனி தொடர் லயன் வீடுகளும் 68,628 இரட்டை தொடர் லயன் வீடுகளும் 1637 மாடி தொடர் லயன் வீடுகளும் 15,480 தற்காலிக குடில்களும் காணப்படுகின்றன. எனவே பெருந்தோட்ட மக்களுக்கு 186,805 தனி வீடுகளுக்கான தேவை காணப்படுகின்றது. 

புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகத்தை அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென உறுதிமொழி வழங்கப்பட்டும் இரு தடவைகள் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான இடம் பார்வையிடப்பட்டதே தவிர மேலதிகமாக எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 22 வருடங்களாக இத்திட்டம் செயல்வடிவம் பெறுவதை எந்த அரசாங்கமும் விரும்பவில்லை. ஆனால் அந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளில் மலையக தலைமைகளும் இடம்பெற்றிருந்தனர். 

இவ்வாறு 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சகல மத்திய அரசாங்கத்திலும் மலையக மக்களின் வாக்குகள் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தாலும் அவற்றை பெற்றுக்கொண்டவர்கள் மக்களுக்கு விசுவாசமாக செயற்படவில்லை. தற்போது அமைச்சரவை பதவி விலகியுள்ள நிலையில் புதிய அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதில் தொடர்ந்தும் இழுபறிகள் ஏற்பட்டுள்ளன. இந்த இழுபறிகளுக்கு மத்தியில் புதிய அரசாங்கம் அமையுமாயின் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மலையகத் தலைமைகள் மலையக மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை பெற்றுக்கொடுப்பதற்கான உடன்படிக்கையினை கைச்சாத்திட வேண்டும். வாய்மொழி வாக்குறுதிகள் எவையும் அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் நிறைவேற்றப்படுவதில்லை. மலையக தலைவர்களின் வாய்களை அடைப்பதற்கு ஒருசில அமைச்சுப் பதவிகள் மாத்திரமே வழங்கப்படுகின்றன. 

தற்போதைய அரசியல் நிலவரங்களின் அடிப்படையில் கட்சி பேதங்கள் அற்ற நிலையில் சிந்திக்க வேண்டிய தேவை மலையகத் தலைமைகளுக்கு எழுந்துள்ளது. கடந்த பல அரசாங்கங்களில் மலையகத் தலைவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தாலும் அவர்கள் அரசாங்கத்துடன் உடன்படிக்கையின் அடிப்படையில் செயற்படவில்லை. இதனால் பல விடயங்களில் மலையக மக்கள் ஏமாற்றப்பட்டனர். எனவே நாட்டில் தற்போது புதிய அரசாங்கம் எழும் நிலை தோன்றியுள்ள நிலையில் அதனை சாதகமாக்கி மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக