- புதிய பிரதேச செயலகங்களுடன் இணைந்ததாக 4 உப அலுவலகங்கள் மாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
- புதிய பிரதேச செயலகங்களுக்கான அமைவிடம் தீர்மானிக்கப்படவில்லை.
- நிதி மற்றும் ஆளணி வளங்கள் ஒதுக்கப்படவில்லை.
- 6 கிலோமீற்றர் இடைவெளியில் இரண்டு பிரதேச செயலகங்கள்
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச சபைகளை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி இரண்டு வருடங்களை கடக்கின்ற நிலையிலும் இதுவரை புதிய பிரதேச செயலகங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் அவற்றை தடுக்கும் வகையில் உப பிரதேச செயலக அலுவலகங்களை நிறுவும் சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு கிடைக்கப்பெற்ற அனுமதியை அமுல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் சனத்தொகைக்கு ஏற்ப பிரதேச செயலகங்களையும் அதிகரிப்பது தொடர்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் 2019.05.07 ஆம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் உயர் சனத்தொகை அடர்த்தி மற்றும் உள்ளடக்குவதற்கான பாரிய விஸ்தீரணம் கொண்ட பிரதேசம் காணப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு பொதுச்சேவைகளை வழங்கும் போது எதிர்நோக்கப்படும் சிரமங்களையும் அனுகுவழியில் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்களையும் தவிர்க்கும் பொருட்டும் 2012 எல்லை நிர்ணயக்குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டும் நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட, நீல்தன்டாஹின்ன, தலவாக்கலை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு மற்றும் நோர்வூட் ஆகிய புதிய பிரதேச செயலக பிரிவுகளை தாபிப்பதற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, அம்பகமுவ கோரளை, நோர்வூட், கொத்மலை (கிழக்கு) , கொத்மலை (மேற்கு), நில்தண்டாஹின்ன, வலப்பனை, நுவரெலியா, தலவாக்கலை, ஹங்குராங்கெத்த, மத்துரட்ட ஆகிய 10 பிரதேச பிரதேச செயலகங்கள் உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையானது, 12 ஆக அதிகரிக்கப்படவேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகமானது, அம்பகமுவ கோரளை, நோர்வூட், மஸ்கெலியா என மூன்றாகவும் நுவரெலியா பிரதேச செயலகமானது, நுவரெலியா, தலவாக்கலை, அக்கரப்பத்தனை என மூன்றாகவும் கொத்மலை பிரதேச செயலகமானது, கொத்மலை, பூண்டுலோயா என இரண்டாகவும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலகமானது, ஹங்குராங்கெத்த, ஹேவாஹெட்ட என இரண்டாகவும் வலப்பனை பிரதேச செயலகமானது, வலப்பனை, இராகலை என இரண்டாகவும் அதிகரிக்கப்படவேண்டுமென்றே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக பத்து பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களின் உருவாக்கத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி நுவரெலியா மாவட்ட செயலகத்திடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில்,
பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்ட ஆணையின் படி, நுவரெலியா மாவட்ட செயலகம் 10 பிரதேச செயலகங்களுக்கான மறுசீரமைப்புகளை மேற்கொண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவு, குடும்பங்கள் எண்ணிக்கை, சனத்தொகை என்பவற்றை வகைப்படுத்தியுள்ள போதும் அவற்றை உத்தியோகபூர்வமாக அமுல்படுத்துவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. (அட்டவணை 1) ஆனால் புதிய பிரதேச செயலகங்களுடன் இணைந்ததாக 4 உப அலுவலகங்களை மாத்திரம் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய 10 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான சனத்தொகை குடும்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டாலும் அவற்றை அமுல்படுத்துவதிலுள்ள தடைகள் தொடர்பில் வினவிய போது எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்பதுடன் மேன்முறையீடுகளுக்கும் பதில் வழங்கப்படவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி உள்நாட்டு இராஜாங்க அமைச்சுக்கு (HA/RTI/05/11(divisional)II) முன்வைத்த தகவல் கோரிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்ட தகவல்களில் பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுவதாகவே தெரிகின்றது. நுவnரிலியா மாவட்டத்துக்கான புதிய பிரதேச செயலகங்களுடன் நாட்டில் உருவாக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட ஏனைய பிரதேச செயலகங்கள் மற்றும் அமுல்படுத்தப்பட்ட விதம் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை.
தற்போது 5 பிரதேச செயலகங்கள் நுவரெலியா மாவட்டத்தில் இயங்கி வருவதுடன் மேலதிகமாக தற்போது 5 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் புதிய பிரதேச செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஆளணி தொடர்பான விடயங்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பிரதேச செயலகங்கள் அமையவுள்ள இடங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2147/28 ஆம் இலக்க 2019.10.29 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் உள்நாட்டு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சிடம் 2019 ஆம் ஆண்டு ((HA/RTI/05/11/161)) பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் பின்வருமாறு காணப்படுகின்றன.
தற்போதுவரை நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்கள் செயற்பட்டு வருவதோடு புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது செயற்படுகின்ற ஹங்குராங்கெத்த, நுவரெலியா, வலப்பனை, அம்பகமுவ கோரளை, கொத்மலை பிரதேச வலயங்களிலும் புதிய பிரதேச செயலகக் காரியாலயங்களான மத்துரட்ட, தலவாக்கலை, நில்தண்டாஹின்ன, நோர்வூட், கொத்மலை தெற்கு போன்ற வலயங்களிலுள்ள மக்கள் தொகை தொடர்பான தகவல்களை நுவரெலியா மாவட்ட செயலகத்திலேயே பெற வேண்டும்.
புதிய பிரதேச செயலகம் அமைப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் கேட்டபோது, அமைப்பதற்குரித்தான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதோடு அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதேச செயலகங்களின் உருவாக்கத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான விபரங்களை கோரிய போது, பிரதேச செயலகங்கள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதோடு, அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உபகரணங்கள், வாகனம் என்பன மானியமுறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
புதிய பிரதேச செயலகங்களின் கட்டிடங்கள் அமையவுள்ள இடங்கள் மற்றும் புதிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்கள், மக்கள் தொகை தொடர்பிலான தகவல்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சனத்தொகை தொடர்பான விபரங்கள் மாத்திரமே பேணப்படுவதுடன் ஏனைய எவ்வித தகவல்களும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய பிரதேச செயலகங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கம் அசமந்தமாக செயற்படுவதற்கு அரசியல் தலைவர்களும் உடன்படுவதாகவே தெரிகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் குறைந்த சனத்தொகை கொண்ட மக்களுக்கு அதிக கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படுகின்ற போதும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகின்றன.
புதிதாக உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்ட தலவாக்கலை பிரதேச செயலகமானது, 139,255 சனத்தொகையினை கொண்டுள்ளதோடு 34 கிராம சேவகர் பிரிவுகளை மாத்திரம் கொண்டுள்ளது எனினும் பிரதேச செயலகத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நோர்வூட் பிரதேச செயலக பிரிவானது, 169,815 சனத்தொகையினை கொண்டுள்ளதோடு 35 கிராம சேவகர் பிரிவுகளை மாத்திரம் கொண்டுள்ளது. பிரதேச செயலகம் அமுல்படுத்தப்படவில்லை.
ஆனால் புதிதாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப் பிரிவின் சனத்தொகை 48,496 ஆக காணப்படுவதுடன் 63 கிராம சேவகர் பிரிவு காணப்படுகின்றது. ஹங்குராங்கெத்த பிரதேச செயலகப் பிரிவின் சனத்தொகை 60,676 ஆக காணப்படுவதுடன் 79 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவின் சனத்தொகை 36,355 ஆக காணப்படுவதுடன் 52 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. எனவே இங்கு பாரபட்சமான பகிர்வுகள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படையாகவே தெரிகின்றது. எனவே பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்படுவதுடன் கிராம சேவகர் பிரிவுகளும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது.
2147/28 ஆம் இலக்க 2019.10.29 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, 1992 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, அதிகாரம் ஒப்படைத்தல் (பிரதேச செயலாளர்கள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் நுவரெலியா நிர்வாக மாவட்டத்துக்கு உரித்தாக நிலவுகின்ற ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகள் திருத்தியமைக்கப்பட்டு, அப்பிரதேச செயலகம் உள்ளடங்களாக புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் 10 ஆகவும் காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நுவரெலியா மாவட்டத்தின் சனத்தொகைக்கேற்ப பிரதேச செயலக அதிகரிப்பு போதுமானவையாக இல்லையென்பதுடன் எதிர்வரும் காலங்களில் நோர்வூட், தலவாக்கலை, நுவரெலியா பிரதேச செயலகங்களை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது நில்தண்டாஹின்ன மற்றும் மத்துரட்ட பிரதேச செயலகங்கள் ஆறு கிலோமீற்றர் இடைவெளியில் அமைந்திருப்பதால் அதில் ஒரு பிரதேசசபை மக்கள் இலகுவாக சென்றடையக்கூடிய வகையில் இராகலையில் அமையவேண்டுமென்றும் கொத்மலை கிழக்கு பிரதேச செயலகமானது பூண்டுலோயா நகரத்தில் அமைய வேண்டுமென்பதுவுமே பெரும்பாலானோரின் விருப்பமாக காணப்படுவதுடன் அதுவே நியாயமானதாகவும் இருக்கின்றது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை அமுல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளமைக்கு நியாயமான காரணங்கள் எவையும் இல்லை. இவற்றை திட்டமிட்ட வகையில் புறக்கணிப்பதற்கான செயற்பாடுகள் அரச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை மலையக தலைமைகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உப பிரதேச செயலகங்களை மாத்திரம் நிறுவுவதற்கு உடன்பட்டுள்ளனர். புதிய பிரதேச செயலகத்தினை பெற்றுக் கொள்வது மலையக மக்களுக்கான பாரிய வாய்ப்பாகும். எனவே இவ்விடயத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு புதிய பிரதேச செயலகத்தை பெற்றுக்கொள்வதற்கு குரல் கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக