கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

25 அக்டோபர், 2024

ஆசிரியர் உதவியாளர் நியமனம்: பட்டதாரிகளுக்கான வாய்ப்பை புறக்கணிக்கின்றதா?


நாட்டின் பெருந்தோட்டபுற தமிழ் மொழிமூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை மீண்டும் வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்து அதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்களையும் கோரியுள்ளது. எனினும் ஆசிரியர் பிரமாண குறிப்பு, பெருந்தோட்டப்புறங்களில் காணப்படும் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் ஏற்கனவே ஆசிரியர் உதவியாளர் நியமனம் மூலம் அவதிக்குள்ளான சம்பவங்கள் என்பவற்றை கவனத்தில் கொள்ளும் போது புதிய ஆசிரியர் உதவியாளர் நியமனம் மீண்டும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

இதற்கு மேலாக 2008 ஆம் ஆண்டு உயர்தர சித்தியை கவனத்தில் கொண்டு 3179 பேருக்கு பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல கட்டங்களாக பெருந்தோட்ட தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு 3021 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டு, தகைமையினை பூர்த்தி செய்த பின்னர் ஆசிரியர் தரங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் மத்திய மாகாண தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு 2017 ஆகஸ்ட் மாதமளவில் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. 

எனினும் அவை பெருந்தோட்டப் பாடசாலைகளின் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவகையில் அமைந்திருக்கவில்லை. மத்திய மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களில் தங்களுக்குரிய நிதியொதுக்கீடுகளை பயன்படுத்தி அவ்வப்போது பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருகின்றன. ஆனால் ஏனைய சமூகங்களை விடவும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு மாத்திரமே ஆசிரியர் உதவியாளர் என்ற நியமனம் வழங்கும் முறைமை பின்பற்றப்பட்டு வருகிறது. சம்பளம் வழங்குவதற்கு போதிய நிதி இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மத்திய மாகாண கல்வித்திணைக்களம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளில் 10,059 ஆசிரியர்கள் தற்போது கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் 429 அதிபர்களும் கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 1859 ஆசிரியர் வெற்றிடங்களும் 293 அதிபர் வெற்றிடங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கண்டி மாவட்டத்தில் 860 ஆசிரியர் வெற்றிடங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 859 ஆசிரியர் வெற்றிடங்களும் மாத்தளை மாவட்டத்தில் 140 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய நியமனங்கள் இல்லை

இறுதியாக இவ்வருடம் க.பொ.த. உயர்தர வகுப்புக்களில் காணப்பட்ட கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், வியாபார சந்தைப்படுத்தல் முகாமை, வெளிநாட்டு மொழிகள் போன்ற பாடங்களில் காணப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் சிங்கள மொழி மூலம் 127 பேருக்கும் தமிழ் மொழி மூலம் 43 பேருக்கும் ஆங்கில மொழி மூலம் 06 பேருக்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

சமகாலங்களில் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பட்டங்களை பெற்று வெளியேறும் மலையக மாணவர்கள் தொகையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்காமை பிரதான பிரச்சினையாகும். 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது. அதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவற்றில் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் உள்ளடக்கப்படவில்லை. 

இரத்தினபுரி மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் 31 வருடங்களாக விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. அப்பகுதிக்கு கடமைக்கு வரும் ஆசிரியர்கள் அங்கு தொடர்ந்து கடமையாற்றாமையின் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மறுபுறும் கலைத்துறையில் அதிக பட்டதாரிகளை கொண்டுள்ள சமூகத்தில் அவர்களுக்கு ஏற்றவகையிலான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காமல் ஆசிரியர் உதவியாளர் என்ற நியமனத்தை வழங்குவதற்கு மாத்திரம் தொடர்ச்சியாக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

2015 இல் வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் இழுபறி

2013.12.16 ஆம்  திகதிய அமை/13/1636/530/059 ஆம் இலக்கம் கொண்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி தமிழ்மொழி மூலம் தோட்டப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆசிரியர் உதவியாளர்களை நியமனம் செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் 08.08.2014 ஆம் திகதிய 1875 இலக்கமிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 19.05.2015 ஆம் ஆண்டு உயர்தரம் சித்தியடைந்த பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 7 கட்டங்களாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டு 8 வருடங்களின் பின்னரும் இன்னும் சிலருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு சேவைக்குள் உள்வாங்கப்பட்ட போது அவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்ட பின்னர் 2017 ஆம் ஆண்டு முதல் அத்தொகை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. 

இவ்வாறு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனமானது, நிபந்தனைகளின் அடிப்படையில், வெறும் 6000 ரூபா மாதாந்த ஊதியத்துக்கு வழங்கப்பட்டது. 10 வருடங்களில் நியமனப் பாடசாலையில் கடமையாற்றுதல், ஐந்து வருடங்களுக்கிடையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் ஒன்றினை பெறுதல் அல்லது அரசினர் ஆசிரியர் கலாசாலைகளில் பயிற்சியினை நிறைவு செய்தல் என்பன நிபந்தனைகளாக காணப்பட்டன. இதன்படி ஆசிரியர் உதவியாளர்களில் முதலாவது தொகுதியினர் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு முழுவதுமுள்ள கல்வியியற் கல்லூரிகளில் 2 வருட பயிற்சிகளுக்காக உள்வாங்கப்பட்டனர். 

பெருந்தோட்டப்புற தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர் நியமனத்துக்கான விண்ணப்பம்

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்ட பெண்கள், ஆண்கள் ஆகிய இருசாராரிடமிருந்தும் விண்ணப்பப்படிவங்கள் கோரப்பட்டுள்ளன.

உரிய எழுத்து மூலப் பரீட்சை புள்ளிகள் மற்றும் பிரயோக பரீட்சையில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் கூட்டுத்தொகையின் முன்னுரிமை வரிசையினை அடிப்படையாக கொண்டு பெருந்தோட்டப்புறப் பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், வெற்றிடங்கள் நிலவும் அரச பாடசாலைகளுக்கு 05 வருட காலப் பகுதிக்கு ஆசிரியர் உதவியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவர். ஆசிரியர் உதவியாளர்களாக தமது முதல் நியமனத் திகதியிலிருந்து 05 வருடங்களுக்கும் தாம் நியமிக்கப்பட்ட பாடத்திற்குரியதாக இலங்கை ஆசிரியர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய கல்வி அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்படும் ஆசிரியர் பயிற்சியொன்றை அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் பல்கலைக்கழகமொன்றில் அல்லது உயர் கல்வி நிறுவனமொன்றில் உரிய பாடம் தொடர்பான பட்டமொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், குறித்த ஆசிரியர் பயிற்சி அல்லது பட்டம் செல்லுபடியாகும் திகதி முதல் அவர் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1 (அ) அல்லது 3-1 (ஆ) தரங்களுக்கு நிரந்தரமாக நியமனம் வழங்கப்படும்.

ஆசிரியர் உதவியாளர்களாக தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சகல கொடுப்பனவுகளும் உள்ளடங்களாக மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவொன்று வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள்

மலையகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மற்றும் வெளிவாரி பட்டப்படிப்புகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகம் செல்பவர்களில் முதல் தரங்களை பெற்றுக்கொள்பவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வெளியேறினால் அதிகமானோர் தற்போது வேலையற்ற பட்டதாரிகளாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அண்மையில் ஹட்டன் நகரில் மத்திய மாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்த போராட்டமானது இதற்கு சிறந்த உதாரணமாகும். பட்டங்களை பெற்று பல வருடங்களாக அரச தொழிலுக்காக காத்திருக்கும் பலர் எமது சமூகத்தில் இருக்கும் நிலையில் பெருந்தோட்ட சமூகத்துக்கு மாத்திரம் ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை வழங்குவதில் உள்ள அரசியல் நோக்கம் என்ன?

இவ்விடயம் தொடர்பாக பேராசிரியர் தை.தனராஜ் கருத்து தெரிவிக்கையில், “ஆசிரியர் பற்றாக்குறையினை தீர்ப்பதற்கு புதிய நியமனங்கள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதானாலும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதே பொருத்தமான விடயமாகும். பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் போது, அவர்கள் தொழில் நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டே தங்களது பட்டமேற்படிப்பு டிப்ளோமாவை நிறைவு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாக உருவாகக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை அதிகரிப்பதானது ஒரு சமூகத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக அமையும். உயர்தரம் பூர்த்தி செய்தவர்களுக்கு நியமனம் வழங்கும் போது அவர்கள் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாக உருவாவதற்கு பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு என்பவற்றை பூர்த்தி செய்ய குறைந்தது 7 வருடங்களை கடக்க வேண்டும். இக்காலப்பகுதியில் அவர் பயிற்றப்படாத ஒரு ஆசிரியராகவே வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டியேற்படும். இலங்கையின் கல்விக் கொள்கையில் பயிற்றப்படாத ஒருவர் ஆசிரியராக இருக்கமுடியாது” எனத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “1960 - 70 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டு பின்னர் அவர்கள் கலாசாலைகளில் பயிற்சிகளை பூர்த்தி செய்தனர். தற்போது பட்டதாரிகள் வேலையற்று இருக்கும் நிலையில் அவர்களுக்கான நியமனங்களை வழங்குவதே பொருத்தமாக இருக்கும். மலையகத்தில் மாத்திரமே இவ்வாறான ஆசியர் உதவியாளர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் இவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி தொடர்பில் வழிகாட்டக்கூடிய மலையக கல்வியியலாளர்களிடம் இவற்றுக்கான ஆலோசனைகளை பெற்று ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும்” எனவும் தெரிவித்தார்.

அரசியல் ஆதாயங்களுக்காக வழங்கப்படும் நியமனங்கள்

தற்போதைய அரசியல் போட்டி நிலைமைகள் காரணமாக ஒவ்வொரு விடயங்களிலும் அரசியல் இலாபங்களை தேடிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. பெருந்தோட்டங்களுக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்கால சமூகத்தை உருவாக்கக்கூடிய ஆசிரியர் தொழிலில் அரசியல் சாயத்தை கலப்பது பொருத்தமற்ற ஒன்றாகவே பார்க்க வேண்டும். 

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரசெல்வன் கருத்து தெரிவிக்கையில், “துறைசார்ந்த ரீதியில் வெற்றிடங்களுக்கு ஏற்றவகையில் பயிற்சிகளை பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். மாணவர்களை யாரும் கையாளலாம் என்ற நிலைமை மாற்றமடைய வேண்டும். மலையகத்தில் மட்டும் ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனங்களை பெற்றவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்பட்டது. பயிற்சி முடித்து ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களின் கடமைகளையே இவர்களும் ஆற்றினர். பல வருடங்களாக இவர்களுடைய நியமனம் இழுத்தடிப்புக்கு உட்பட்டதுடன் 6000 - 10000 ரூபா வரையான ஒரு கொடுப்பனவு வழங்கப்பட்டு ஒப்பந்தங்கள் ஊடாக கல்வி அமைச்சு இவர்களை தக்கவைத்திருந்தது. இதன்போது மாணவர்களும் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். பல்வேறு போராட்டங்களின் பின்னரே அவர்கள் ஆசிரியர் துறைக்குள் உள்வாங்கப்படுகின்றனர்.”

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “தற்போது மலையகத்தில் பட்டதாரிகளாக இருக்கின்றவர்கள் ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொள்வதற்கு விரும்புகின்ற போதும், பட்டங்களை பெற்றவர்கள் மாத்திரம் ஆசிரியர்களுக்கான தகைமையினை கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கான பயிற்களை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர் கலாசாலைகளில் கல்வியை தொடர்வதற்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. பூரண பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரம் ஆசிரியர்களாக நியமகிக்கப்படும் போதே மாணவர்கள் தங்களுக்கான பூரண அறிவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படும். கல்வித்துறையில் மாத்திரமே எவ்வித பயிற்சிகளும் இன்றிய நிலையில் ஆசிரியர் உதவியாளர்களை கொண்டு கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கும் நிலைமை காணப்படுகின்றது. ஆசிரியர் உதவியாளர் என்ற பதம் நீக்கப்பட்டு ஆசிரியர் பிரமாண குறிப்புகளுக்கு ஏற்ப தகைமையானவர்களை கொண்டு வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றவகையில் தங்களுடைய அரசியலை கல்வி மூலமாக முன்னெடுக்கும் வகையில் இவ்வாறான நியமனங்களை வழங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகவிருக்கிறது” எனவும் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது வரவேற்கத்தக்க விடயமாக காணப்பட்டாலும், பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு மாத்திரம் ஆசிரியர் உதவியாளர் என்ற அடிப்படையில் நியமனங்களை வழங்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையின் கல்வித்துறையில் அரசியல் தலையீடு செய்வது எதிர்காலத்தை மிகவும் மோசமான சிதைவுக்கு உட்படுத்தும். தகைமைகளை பூர்த்தி செய்து ஆசிரியர் பயிற்சிகளை பெற்றவர்கள் மாத்திரமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் சமரசத்துக்கு வரமுடியாது.

 தகைமையானவர்கள் நேரடியாக ஆசிரியர் கலாசாலைகளுக்கு உள்வாங்கப்பட்டு பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர் நேரடியாக ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படலாம். மாறாக தேர்தலை இலக்குவைத்து நியமனங்களை வழங்கி இளைஞர், யுவதிகளை அசௌகரியப்படுத்தும் இவ்வாறான நியமனங்களை வழங்குவதை தவிர்ப்பது மலையகத்தின் எதிர்கால கல்வித்துறை வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக