கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 பிப்ரவரி, 2022

அபிவிருத்தியின்றி முடங்கியுள்ள ‘புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிகாலத்தில் முதன்முறையாக பெருந்தோட்டத்தினை முன்னிலைப்படுத்தி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான ஞாபகார்த்த மன்றம் என்பன பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக காலப்போக்கில் உருவாக்கப்பட்டன. எனினும் பெருந்தோட்ட மக்களுக்கு தனியானதொரு அரச நிறுவனத்தை உருவாக்குவதில் எவரும் கவனம் செலுத்தாத நிலையில் கடந்த நல்லாட்சி காலத்தில் 2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் ‘பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ உருவாக்கப்பட்டது. தற்போது புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையென அழைக்கப்படுகின்றது. 

எனினும் அதிகாரசபை உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் முழுமையாக கடந்துள்ள போதும் எவ்விதமான அபிவிருத்தி செயற்பாடுகளும் குறித்த அரச நிறுவனத்தின் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. தற்போதுவரை எவ்வித செயற்பாடுகளும் இன்றி வெறும் பணிப்பாளர் சபையினையும் அதிகாரிகளையும் கொண்டு இயங்கி வருகின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. 30.11.2020 ஆம் ஆண்டு தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்டும் தகவல் வழங்குவது நிராகரிக்கப்பட்டமையினால் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமைவாக 03.02.2022 ஆம் திகதி தகவல் வழங்கப்பட்டது. 

2018 - 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள்  பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கு இரண்டு பணிப்பாளர் சபைகள் நியமிக்கப்பட்டிருந்ததுடன் பணிப்பாளர் சபை மற்றும் ஊழியர்களின் கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 6.84 மில்லியன் ரூபா (2019 - 2020) வழங்கப்பட்டுள்ளது. எவ்வித செயற்பாடுகளையுமே முன்னெடுக்காத ஒரு அரச நிறுவனத்துக்கு கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் இத்தொகையினை ஒதுக்குவது மக்களின் பணம் வீணாக செலவு செய்யப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. இதில் 2019 ஆம் ஆண்டு 1.94 மில்லியனும் 2020 ஆம் ஆண்டு 4.9 மில்லியனும் பணிப்பாளர் சபை மற்றும் ஊழியர்களின் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டு பணிப்பாளர் சபை

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு 14 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். தலைவராக வர்த்தகர் சந்ரா சாப்டர், உப தலைவராக சட்டத்தரணி கௌதமன், உறுப்பினர்களாக எம்.வாமதேவன், கே.விமலநாதன் (மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு), அசிஸ் மொஹமட் ஆரிப் (பொது தொழில் முயற்சிகள் அமைச்சு), மலர்மதி கங்காதரன் (நிதி அமைச்சு), ஆர்.ஏ.சூலாநந்த (வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சு), லியன பட்டபந்தி (காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு), ஏ.எஸ்.சந்திரபோஸ், நிதர்சினி பெரியசாமி (சுகாதார பிரிவு - மத்திய மாகாணம்), ரஞ்சித் (பெருந்தோட்ட அமைச்சு), லக்ஸான் டி சொய்சா (மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு), கலாநிதி ரொசான் ராஜதுறை (முதலாளிமார் சம்மேளனம்), எஸ்.சண்முகம் (பணிப்பாளர் நாயகம்) ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். 

2020 ஆம் ஆண்டு பணிப்பாளர் சபை

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு 15 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். தலைவராக காந்தி சௌந்தரராஜன், பரத் அருள்சாமி (தலைவர் - பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்), அன்வர்தீன் - பணிப்பாளர் நாயகம் (திட்டம்) - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சு, தீப்தி (மேலதிக செயலாளர் - நிர்வாகம்) - காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு, சூலாநந்த (மேலதிக செயலாளர் - வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி) - நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சு, அலவத்த (மேலதிக செயலாளர்) - சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சு, பணிப்பாளர்களாக ஜனக விஜேபத்திரன, காமினி, சாந்த குமார, மனோஜ் மனம்பேரி, ஆறுமுகம் ஜயகுமார், ருசாந்தன் (பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சு), ரத்ன குமார (மேலதிக செயலாளர் - நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சு), சுமன சேகர (மேலதிக செயலாளர் - நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு), லக்சாந்த (சிரேஸ்ட உதவி செயலாளர் - நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டு மூன்று வருடங்களில் இரண்டு பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டும் எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களும் கடந்த வருடம் வரை முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் பணிப்பாளர் சபையின் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவீனங்களுக்கு மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் 2020 ஆம் ஆண்டு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியலில் அதிகாரசபை உள்ளடக்கப்படவில்லை. இவை தொடர்பாக வினவிய போது 2021 ஆம் ஆண்டு முதல் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அதிகாரசபையும் உள்ளடக்கப்பட்டது. 

மலையகத்திற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு தனியானதொரு அரச நிறுவனம் இல்லாத நிலைமையினை போக்குவதற்கு பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை கடந்த நல்லாட்சி காலத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்டாலும் தொடர்ந்தும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழுள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலமே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கான பதவியணிகளுக்கான அனுமதி 15.08.2019 ஆம் திகதியே வழங்கப்பட்டதாகவும் அதுவரையும் எவ்விதமான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் எனினும் குறைந்தளவான பணியாளர்களுடன் 2021 ஆம் ஆண்டு முதல் அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதனால்  புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமைக்கு மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாமையே காரணம் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது அதிகாரசபைக்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும் இன்றுவரை எவ்வித செயற்பாடுகளும் அற்ற நிலையில் கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்படுகின்றது. 

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கான பதவி வெற்றிடங்கள்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் 14.02.2021 ஆம் திகதி பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கான 24 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கான கொடுப்பனவுக்காக மாத்திரம் 1,474,255 ரூபா மாதாந்தம் தேவைப்படுகின்றது. (அட்டவணை 01) பணிப்பாளருக்கு மாதாந்தம் 114,345 ரூபாவும் பிராந்தியா பணிப்பாளருக்கு 98,325 ரூபாவும் உதவி பணிப்பாளருக்கு 95,575 ரூபாவும் கணக்காளருக்கு 95,575 ரூபாவும் நிர்வாக அதிகாரிக்கு 70,580 ரூபாவும் தொழில்நுட்ப அதிகாரிக்கு 70,580 ரூபாவும் மொழிபெயர்ப்பாளருக்கு 65,145 ரூபாவும் கணக்கு உதவியாளருக்கு 50,940 ரூபாவும் அகிவிருத்தி உத்தியோகத்தருக்கு 54,960 ரூபாவும் முகாமைத்துவ உதவியாளருக்கு 49,080 ரூபாவும் சாரதிக்கு 39,490 ரூபாவும் அலுவலக உதவியாளருக்கு 37,000 ரூபாவும் மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படுகின்றன. 


பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் 2018 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சட்டத்தின்படி அதிகாரசபையானது தனது சொந்த நிதியத்தை கொண்டிருத்தல் வேண்டும். அதேபோல அதிகார சபையின் பணிகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு தேவையான பணத் தொகையையும் அதிகாரசபையின் நிதியிலிருந்தே செலுத்துதல் வேண்டும். எனினும் தற்போது அதிகாரசபையிடம் வருமானத்தை ஈட்டக்கூடிய எவ்விதமான வழிகளும் இல்லாத நிலையிலும் அதிகாரசபை தனக்கான நிதி வசதிகளை கொண்டிருக்காத நிலையிலும் அதற்கான செலவீனங்கள் அமைச்சினாலேயே ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இது அதிகாரசபையின் சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும். 

மலையக மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் என்பன சுயாதீன நிறுவனங்களாக இல்லை. இதனால் மலையக மக்களுக்கு சேவைகளை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட நேரடி அரச நிறுவனமான அதிகாரசபையினை பயனற்ற வகையில் எவ்வித திட்டங்களும் இன்றி செயலற்ற வகையில் வைத்திருப்பது மலையக மக்களுக்கு கிடைக்கவிருக்கும் வசதிகளை இல்லாமலாக்குகின்றது. எனவே அதிகாரசபையின் ஊடாக திட்டங்களை நடைமுறைப்படுத்தி மலையக மக்களுக்கான தனியானதொரு அரச நிறுவனத்தை உயிர்பெறச் செய்ய வேண்டும். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக