பொறுப்புக்கூறலை தட்டிக்கழிக்கும் அரச நிறுவனம்
- 2016 ஆம் ஆண்டு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2022 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடி தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கு விளக்கிய போதும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினால் தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான மின்வெட்டினால் மின்சார்பு கைத்தொழில், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் என சகலரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். பொருளாதார வீழ்ச்சி, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, தொழில் இழப்பு என்பவற்றுக்கு மத்தியிலும் மின்வெட்டினையும் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அனைத்து முன்னறிவித்தல்களையும் இலங்கை மின்சார சபை புறக்கணித்தமையே தற்போதைய மின்வெட்டுக்கு பிரதான காரணமாகும்.
2016 ஆம் ஆண்டு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2022 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடி தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கு விளக்கிய போதும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினால் தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக எரிபொருள் கொள்வனவு செய்வதில் பிரச்சினை மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி என்பன மின்வெட்டுக்கான காரணங்களாக கூறப்பட்டாலும் இலங்கை மின்சார சபையின் ஊழல் மற்றும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு இலங்கை மின்சார சபையும் ஒரு காரணமாகும்.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியுமென ஆய்வாளர்கள் கருதுகின்ற நிலையிலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதம், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் வளர்ச்சியை முடக்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொண்ட ஆய்வுகளின் நகல்கள் தினக்குரல் பத்திரிகைக்கு கிடைக்கப் பெற்றமையின் அடிப்படையில் இலங்கையின் மின் நெருக்கடிக்கான காரணங்களை அறியமுடிந்தது.
2015 - 2034 வரையான நீண்டகால உற்பத்தி திட்டத்தின் தற்போதைய நிலை
2015 ஆண்டு முதல் அடுத்த 20 வருடங்களுக்கான இலங்கை மிசார சபையினால் தயாரிக்கப்பட்ட நீண்ட கால குறைந்தபட்ச செலவு திட்டத்துக்கு 2016 ஆம் ஆண்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியது. (அட்டவணை 01) இவற்றை எவ்வித தாமதமும் இன்றி நிர்மாணிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. 2017 ஜூன் 29 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபையும் அனுமதி வழங்கியுள்ள போதும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
401 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் 2015 - 2020 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். எனினும் 100 மெகாவோட் மன்னார் காற்றாலை திட்டம் மட்டுமே 2021 க்குள் முடிக்கப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டிய எல்.என்.ஜி. மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2021 இல் ஆரம்பிக்கப்பட்டன. ஏனைய மின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
2018 - 2022 காலப்பகுதியில் நான்கு அனல் மின் நிலையங்கமு; ஐந்து புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையினால் 2012 மெகாவோட் மின்சாரத்தினை பெற்றுக்கொள்வது தாமதமாகியுள்ளது. (அட்டவணை 02)
வெளிநாட்டு நிதியுதவியில் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட திட்டங்கள்
- ஜப்பான் - இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான கூட்டுறவில் 500 மெகாவோட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் 18 ஆகஸ்ட் 2018 இல் கையெழுத்திடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான அரச பங்காளித்துவத்தின் கீழ் இலங்கை மின்சாரச் சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் 2018 செப்டெம்பர் 5 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- இந்தியா - இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான கூட்டுறவில் 500 மெகாவோட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் 26 ஏப்ரல் 2017 இல் கையெழுத்திடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான அரச பங்காளித்துவத்தின் கீழ் இலங்கை மின்சாரச் சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் 2018 செப்டெம்பர் 5 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- சீனா - இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான கூட்டுறவில் 400 மெகாவோட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய திட்டத்துக்கு இரு நாடுகளுக்குமிடையிலான அரச பங்காளித்துவத்தின் கீழ் இலங்கை மின்சாரச் சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் 2018 செப்டெம்பர் 5 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் 18 அக்டோபர் 2019 இல் சட்டமா அதிபரால் அங்கீகரிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.
2014 - 2022 வரை அங்கீகரிக்கப்பட்ட அனல் மின் நிலையங்களில் 3 மின் உற்பத்தி நிலையங்களுக்கு மாத்திரம் விலைமனுகோர நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2016 இல் 300 மெகாவோட் எல்.என்.ஜி. மின் நிலையம் கட்டுமானம் தொடங்கப்பட்டு 2021 இல் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 335 மெகாவோட் மின் உற்பத்தி நிலையங்களுக்கான விலைமனுகோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாமதமாகும் விலைமனுகோரல்கள்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 2018 - 2037 உற்பத்தி திட்டம் 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பை 60 வீதமாக அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. சூரியபல சங்ராமய திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டுக்குள் 1000 மெகாவோட் சோலார் மின் திட்டங்களை நிறைவு செய்யவும் தற்போதைய அரசாங்கத்தின் செழுமையான பார்வை திட்டத்தின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பை 2030 ஆம் ஆண்டளவில் 70 வீதமாக அதிகரிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு மின்சார சபையால் அங்கீகரிக்கப்பட்ட 370 மெகாவோட் திறன்கள் கொண்ட சியம்பலாண்டுவ சூரிய மின் திட்டம் மற்றும் இரண்டு பூநகரி காற்றாலை மின்திட்டங்கள் ஆகியவற்றுக்கான விலைமனுகோரல்கள் ஐந்து வருடங்கள் தாமதமானதுடன் 2022 வரையும் விலைமனுகோரல் தொடங்கப்படவில்லை.
அவசர மின்சார கொள்முதல்
இலங்கை மின்சார சபையினால் 2015 - 2020 வரையான காலப்பகுதியில் 17 தடவைகள் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இவற்றில் 16 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை 2020 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையினால் தனியாரிடமிருந்து 4,306.189 ஜிகாவோட் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்காக 102,328.751 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டமை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிய வந்தது.
தென் மாகாணத்தில் நிலவும் மின்வலுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதே முக்கிய காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 2016 - 2022 வரையில் 7 தடவைகள் இவ்வாறு மின் கொள்வனவிற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாகாண பிரச்சினைக்கு தீர்வதக 2016 இல் 100 மெகாவோட் அனல் மின் நிலையத்தை அமைக்க அனுமதி வழங்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு அமைச்சரவை உபகுழுவும் இதை வலியுறுத்தியது. 2017 இல் இ.மி.ச. பணிப்பாளர் சபையினால் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் குறைந்த செலவில் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு இ.மி.சபை நடவடிக்கை எடுக்கவில்லை.
மின் கட்டண அதிகரிப்பு
சமீப காலமாக அனல் மின் நிலையங்களின் உற்பத்தி செலவு கடுமையாக அதிகரித்துள்னது. அனல் மின் நிலையத்தின் உற்பத்தி செலவு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செலவை விட பல மடங்கு அதிகமாகும். (அட்டவணை 03) 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு அலகு மின் உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கு 30 ரூபாவை இலங்கை மின்சார சபை செலவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத்தில் மதிப்பிடப்பட்ட தொகை 36.10 ரூபாவாகும். இதேவேளை 2020 ஆம் ஆண்டு ஒரு கிலோவோட் மின் உற்பத்தி மற்றும் விநியோக செலவு 21.21 ரூபாவாக காணப்பட்டதுடன் 16.72 ரூபாவுக்கு விற்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிய வந்தது.
2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மின் கட்டணத்தில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் அதற்கு எவ்வித நடவடிக்கையினையும் இ.மி.ச. மேற்கொள்ளவில்லை. தற்போது பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் குறைந்தளவான அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின் தற்போதைய கட்டண அதிகரிப்புக்கான தேவை எழுந்திருக்காது. எனினும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?. தற்போது மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இ.மி.ச. ஏன் அழுத்தம் கொடுக்கின்றது?
அத்துடன் தென் மாகாணத்தில் மின்சார விநியோக வலையமைப்பை வலுப்படுத்த திட்டமிடப்பட்ட அம்பலாங்கொட - காலி மின்னோட்ட பாதை, பொல்பிட்டிய - அம்பாந்தோட்ட பாதை, கொத்மலை - பொல்பிட்டிய பாதை, ஹொரண - பாதுக்க மின்னோட்ட பாதை ஆகியவற்றின் நிர்மாணப்பணிகள் 5 வருடங்களுக்கு மேலாக தாமதமாகியுள்ளது.
இலக்குகளை எவ்வாறு அடையலாம்?
பல ஆண்டுகளாக கொள்கைகளும் திட்டங்களும் மின்சாரத்தின் திறனை அதிகரிக்க தவறியுள்ளன. இ.மி.சபையின் தற்போதைய கட்டமைப்பில் உள்ளபலவீனங்கள் மற்றும் சிக்கல்களே இதற்கு காரணமாகும். தற்போது 70 வீத மின் உற்பத்தி, 85 வீத மின்சார விநியோகம் மற்றும் ஏகபோக அதிகார மின்சார பரிமாற்றம் 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மின்சார சபை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இ.மி.சபைக்கே உள்ளது. இ.மி.ச. தற்போதைய வியூகம் எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்ய உகந்ததாக இல்லையென்பது அடையாளம் காணப்பட்டுள்ளமையால் அரசாங்கத்தின் 70 வீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய மின்துறை சீர்திருத்தங்கள் அவசியம். 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க இ.மி.சட்டத்தின்கீழ் இ.மி.சபையின் முகாமைத்துவகுழுவிடம் பொறுப்பாக்கப்பட வேண்டுமென திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போதைய மின் வெட்டுக்கு எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு என்பன காரணமாக கூறப்பட்டாலும் திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத இ.மி.சபையே பிரதான காரணமாகும். தற்போதைய நெருக்கடிகளுக்கு இ.மி.ச. ஊழியர்கள் பொறுப்பு கூறாமல் இருப்பதற்கான காரணம் என்ன?. இவற்றில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?. அதிகாரிகளுக்கு அழுத்தம் இருக்கின்றதா?. எனவே நெருக்கடிகளை தீர்க்கவும், மக்களுக்கு பணியாற்ற முடியவில்லையாயின் வெளியேறுவது உசிதமானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக