கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

6 மே, 2022

வீட்டு வன்முறையால் விரக்தியடையும் பெண்கள்


  • 2016 - 2021 நவம்பர் வரையான காலப்பகுதியில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் 45,404 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ஒன்றாக மாறிவிட்டது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களினாலேயே பெண்கள் அதிகளவில் வன்முறைகளுக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. கொவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையுpலும் அவை வெளிவராத நிலையில் அதிக துன்பங்களுக்கு பெண்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

வீடு, போக்குவரத்து, வேலைத்தளம், இணையம் உள்ளிட்ட பெண்களின் பங்குபற்றல் காணப்படும் சகல இடங்களிலும் பெண்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நிலை காணப்படுகின்றது. எனவே அவற்றை தடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு உண்டு. பெண்களுக்கு எதிராக அதிகமாக வீட்டு வன்முறைகளே பதிவாகும் நிலை காணப்புடுகின்றது. 



‘பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதையே அவதானிக் முடிகின்றது. விழிப்புணர்வு செயற்பாடுகள், கல்வி, சட்டம் என பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இவற்றில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் அதிகமாகும். கொவிட் காலப்பகுதியில் வீட்டு வன்முறைகளே அதிகமாக இடம்பெற்றது. அதிக நேரத்தினை வீடுகளில் கழித்தல், அதிக வேலை பளு என்பவை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற காரணமாகின்றன. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாக நோக்கும் மனநிலை உருவாகும் போது அல்லது பாலியல் சமத்துவம் தொடர்பான கல்வி நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும்’ என ஊடகத்துறை பயிற்றுவிப்பாளரான எம்.எஸ்.தேவகௌரி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இலங்கையில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முறைபாடுகள் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, பெண்களுக்கான தேசிய குழு ஆகியவற்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துச்செல்லும் நிலையினையே அவதானிக்க முடிகின்றது. 

பெண்கள் மீதான வன்முறைகள்

‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமின்மையின் வெளிப்பாடே பெண்களுக்கு எதிரான வன்முறையாக மாற்றம் பெற்றுள்ளது. பெண்களுக்கு எதிரான


வன்முறைகள் பல்வேறு கோணங்களில் வெளிப்படுகின்றன. இவற்றை தடுப்பதற்கு  பல சட்டங்கள் இருந்தாலும் அவற்றை அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்களினால் குற்றவாளிகள் புரிந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் சிதந்திரமாக திரியும் நிலை காணப்படுகின்றது. எனவே சட்டங்கள் இறுக்கமாக அமுல்படுத்தப்பட வேண்டும். பெண்களும் பயப்படாமல் ஒற்றுமையாக இணைந்து வன்முறைகளை ஒழிப்பதற்கு உரத்து குரல் கொடுக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் இணைந்து வன்முறையற்ற வாழ்க்கையினை அமைத்துக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்’ என பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் லோகோஸ்வரி தெரிவித்துள்ளார்.

 நாட்டில் ஒவ்வொரு வருடமும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் நிலையில் வீட்டு வன்முறையினாலேயே அதிகமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கொலை, கொலை முயற்சி, படுகாயம் ஏற்படுத்தல், கடத்தல், து~;பிரயோகம், பாராதூரமான பாலியல் வன்புனர்வு, பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தல், கருகலைப்பு, விபசாரம், வீட்டு வன்முறை உள்ளிட்ட பல்வேறு வகையில் பெண்கள் மீதான வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. 


பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளில் இழிவு படுத்தல் அல்லது கடுமையாக புண்படுத்தல், வன்புணர்வு, அறைதல் அல்லது அடித்தல், தள்ளிவிடுதல், கழுத்தை நெறிக்க முற்படுதல், வீட்டுக்குள் முடக்குதல், தள்ளிவிடுதல், தீ வைத்தல் போன்ற செயற்பாடுகள் தனது நெருக்கமான துணையினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Women in Need அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், 2016 - 2021 நவம்பர் வரையான காலப்பகுதியில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் 45,404 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமாக பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2016 - 2021 நவம்பர் வரையான காலப்பகுதியில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் 14,023 முறைப்பாடுகளும் தாக்குதல் - காயங்கள் தொடர்பில் 22,173 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2020 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வீட்டு வன்முறைகள், குடும்ப தகராறு, சைபர் குற்றம், உடலியல் துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல், வன்புணர்வு, பராமரிப்பு மற்றும் விவாகரத்து, நில தகராறு, சிறுவர் து~;பிரயோகம், தொழில் உயர்வு, பாதுகாவலர்கள், மனித உரிமை மீறல், வெளிநாட்டு வேலைவாயப்;பு உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய 3771 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்களுக்கான தேசிய குழு தெரிவித்துள்ளது. 

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொவிட்-19 தொற்றுக்குப் பின்னர் ஒரு நாளைக்கு 100 - 200 வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதுடன் குடும்ப வன்முறை தொடர்பான முறைப்பாடுகளில் 70 வீதத்துக்கும் அதிகமாகவும், பாலியல் வன்முறை, இணைய வன்முறை மற்றும் குடும்பத் தகராறுகள் தொடர்பான முறைப்பாடுகளில் 15 வீதமாகவும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

நான்கு பெண்களில் ஒருவர் - அல்லது இலங்கையின் சனத்தொகையில் 24.9 வீதமானோர் 15 வயதிலிருந்து உடல் அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர் என்று 2019 ஆம் ஆண்டு தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் அரைவாசி பேர்அல்லது 49.3 வீதமான பேர் முறையான உதவியை நாடவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. 

எவ்வாறு தவிர்ப்பது?

‘தற்போதைய காலத்தில் நகர்புறங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்ததுபோல தோற்றமளித்தாலும் கிராமங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடச்து கொண்டே  இருக்கின்றன. சில பெண்கள் சமூக அந்தஸ்து, பயம் விரும்பாமலோ அவற்றை வெளிப்படுத்துவதில்லை. பெண்கள் பொருளாதார ரீதியில் வேறொருவரின் கீழ் தங்கியிக்கின்றமையினால் இந்நிலைமை ஏற்படுகின்றது. பிரதேச செயலக மட்டங்களில் கணவனை இழந்த பெண்கள், கணவன் கைவிட்டுச்செல்லுதல், அடித்து துன்புறுத்தல், குழந்தைகளை கைவிடுதல் போன்ற உடலியல் வன்முறைகளை விட மன ரீதியான அழுத்தங்கள் பெண்களுக்கு அதிகமாக இருக்கின்றது. 


வேலைத்தளங்களில் ஆண், பெண் பாகுபாடு சற்று குறைந்துள்ளது. பெண்கள் வேலையையும் வீடுகளையும் சமமாக பேணமுடியாமல் சில சிரமத்துக்கு உள்ளாகும் நிலை காணப்பட்டாலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் வேலைத்தளங்களில் குறைந்துள்ளன. பெண்கள் தங்களுக்கெதிரான வன்முறைகளை குறைத்துக்கொள்ள பொருளாதார ரீதியில் சுயமாக வலுவடைய வேண்டும். இவற்றுக்கு பெண் பிள்ளைகளக்கு கல்வியை கொடுத்து அவற்றை வலுப்படுத்த வேண்டும். கடன் வசதிகள், வழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பன பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறுகின்றன. எனவே தங்களுடைய திறமைகளுக்கு ஏற்றவகையில் சுயதொழிலை மேற்கொண்டு பொருளாதார ரீதியில் வலுபெறும்போது வன்முறைகளை தவிர்க்க முடியும். பெற்றோரும் ஆண் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே பெண்களுடன் சமத்துவத்தை பேணுவதற்கான வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும். ஊடகங்களுக்கு இவற்றில் மிகப்பெரிய பொறுப்புள்ளது’ என கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் திருமதி நளினி பாலசுப்ரமனியம் தெரிவித்தார். 

மகளிர் தினத்துக்கு மாத்திரம் பெண்களை கௌரப்படுத்தி விட்டு மற்றைய நாட்களில் அவர்களை எவ்வாறு அடிமைப்படுத்துவது என பலரும் யோசிக்கும் நிலை இன்று உருவாகியிருக்கின்றது. எனவே பெண்களுடைய பாதுகாப்பு முதலில் வீடுகளில் இருந்தே ஆரம்பமாக வேண்டும். பெண்களுக்கான சமவுரிமை இங்கிருந்தே வழங்கப்பட வேண்டும். அப்போது சமூகத்தில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக பெண்கள் இருக்கும் நிலை உருவாகும் வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்கெதிரான வன்முறைகளில் அதிகம் வீட்டு வன்முறைகளாக இருக்கும் நிலையில் வீடு பெண்களுக்கான பர்துகாப்பு அரணாக மாறுமாயின் பிரச்சினைகளை பாதியளவாக குறைக்கலாம். 

வேலைத்தளங்கள், போக்குவரத்து, விளையாட்டு உள்ளிட்ட பெண்களின் பயணங்கள் அதிகமுள்ள இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கயே மேற்கொள்ளும் வகையிலான திருத்தங்கள் அவசியம். ஆரம்ப கல்வி முதலே பாலின சமத்துவம் அத்தியாவசிய பாடமாக கருதப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்கு ஆண்களுக்கும் மிக்பெரிய பங்குள்ளது. 


வீட்டு வன்முறைகள் தொடர்பான முறைபாடுகளை பதிவு செய்ய 0702611111 இலக்கத்தை குடும்ப சுகாதார பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்துகளில் எதிர்கொள்ளும் வன்முறைகள் மற்றும் ஏனைய இடங்களில் எதிர்கொள்ளும் வன்முறைகளை தவிர்ப்பதற்கும் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் 1938 இலக்கத்தில் பெண்களுக்கான தேசிய குழுவிடமும் 119 பொலிஸ் துரித இலக்கம் மற்றும் 0112433333 என்ற இலக்கத்துடனும் இலங்கை போக்குவரத்து சபையின் 1955 மற்றும் 0117555555 இலக்கத்துடனும் அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடிவதுடன் www.ntc.gov.lk-complaints ஊடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம். 

பெண்கள் மீதான வன்முறைகளை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

ஆண், பெண்  பாலின அடிப்படையிலான துன்புறுத்தல் தொடர்பான தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துதல் மற்றும் அதற்குண்டான செயற்பாடுகள் 2017 தொடக்கம் 2020 வரை கீழ்க்கண்டவாறு செயற்படுத்தப்பட்டுள்ளது.     

2017 இல் இலங்கை பெண்கள் பிரிவு (oxpam) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வுக் குழு (vijipant committee) ஒன்றை நிறுவுவதற்கு கையேடொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. கரைச்சி - கிளிநொச்சி, கண்டாவளை - கிளிநொச்சி, களுத்துறை - களுத்துறை, நீர்கொழும்பு - கம்பஹா, அம்பகமுவகோரளை - நுவரெலியா, எஹலியகொடை - இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் உள்ள அனைவரினதும் ஒத்துழைப்புடன் அனைத்து கிராம சேவை அதிகாரிகள் வலயத்திலும் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

2018 இல் பொறுமையை கடைப்பிடித்தல் தொடர்பில் ஆண்கள் மற்றும் ஆண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு சம்பந்தமான வேலைத்திட்டம், ஆண், பெண் பாலின அடிப்;படையிலான துன்புறுத்தல் தொடர்பில் தேடியறிந்து அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான தெளிவூட்டல் வேலைத்திட்டம், ஆண், பெண் பாலின அடிப்;படையிலான துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பில் விழிப்புணர்வுக் குழுக்கள் மற்றும் பெண்கள் சங்கங்கள் செயற்படுத்தல் தொடர்பிலான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

2019 இல் 38 பிரதேச செயலக காரியாலயங்களில் 38 கேட்போர் கூடத்தை அமைத்தல் மற்றும் அதற்கான உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல், 2020 இல் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக வலயங்களிலும் அமைந்துள்ள குடும்பங்களுக்கு தெளிவூட்டும் 17 வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன, தற்கால இளைய சமூகத்தினரிடையே கருத்தரிப்பு தொடர்பில் தெளிவூட்டும் செயற்றிட்டமொன்று மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்டுள்ளது. 

விதவைகள் (கணவனை இழந்தவர்கள்) மற்றும் சட்டபூர்வமாகவோ அல்லது சட்டபூர்வமற்ற விதத்திலோ மற்றும் கணவன் விட்டுச்சென்ற அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத இருப்பினும் குழந்தைகள் உள்ள பெண்கள் என குடும்பத் தலைமைத்துவ பெண்களை கண்டறிந்துள்ளதோடு, அவர்களுக்காக வேண்டி வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.


வட்டியற்ற சுழற்சி முறையிலான கடன் வசதி, இதற்கு மேலதிகமாக விதவைகள் மற்றும் குடும்பத் தலைமைத்துவ பெண்களுக்காக, மனநிலை சார்ந்த சுகாதார சீர்திருத்தம் மற்றும் அது சார்ந்த தகவல் தெளிவூட்டலை பெற்றுக்கொடுத்தல். விவசாய தொழிற்றுறையை முன்னிறுத்தி செய்யப்பட்ட தேசிய தயாரிப்பை ஊக்குவித்தல் மற்றும் சுகாதாரமான, பாதுகாப்பு கொண்ட உணவு தயாரிப்புகளை ஊக்குவித்தல் ஆகிய வேலைத்திட்டங்கள் 2019 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்பட்டது. 

விதவைப் பெண்களுக்கான கடன் திட்டத்தை செயற்படுத்திச் செல்லும் பிரதேச செயலக வலயங்களில் விதவைப் பெண்களுக்கான சங்கமொன்று இயங்குகிறது. மேலும் சகல பிரதேச செயலக வலயங்கள் தோறும் பெண்கள் அபிவிருத்தி வேலைகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றினூடாக சுய தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும். 

மேலும், பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்காக சுயதொழில் சந்தர்ப்பங்களைப் பெற்றுக்கொடுத்தல். இளம் விதவைகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்காக தொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் வேலைத்திட்டத்துக்கென நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல். மீனவ விதவைகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்காக மீனவத் தொழிற்றுறை சம்பந்தமான சுயதொழில்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.      குறித்த திட்டங்களுக்காக 2017 - 2019 வரையான காலப்பகுதியில் 13,878,336.37 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. 















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக