கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

6 மே, 2022

‘கோட்டா கோ ஹோம்’ ராஜபக்சாக்களுக்கு மட்டுமல்ல: மலையக அரசியல்வாதிகளுக்குமான எச்சரிக்கை



நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுடைய பிரச்சினைகள் மறக்கப்பட்டு அரசியல்வாதிகளின் நலன்கள் மற்றும் சலுகைகளை காப்பாற்றிக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு ஒரு தரப்பினரும் கவிழ்ப்பதற்கு ஒரு தரப்பினரும் செயற்படும் போக்கு காணப்படுகின்றது. இதற்கு மத்தியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எந்த தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது என்பதில் குழம்பியிருக்கும் நிலையில் மறுபுறும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இதனால் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கி போராடத்தொடங்கியுள்ளனர். ‘கோட்டா கோ ஹோம்’ என்பது ராஜபக்சாக்களுக்கு மட்டுமல்ல மலையக அரசியல்வாதிகளுக்குமான எச்சரிக்கை என்பதை அரசியல் தலைமைகள் என்று சொல்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

2022 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் காணப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால் தொழிலாளர்களின் வேதனங்களில் ஒருபோதும் அதிகரிப்பு ஏற்படவில்லை அல்லது நிவாரணங்கள் வழங்குவதற்கு கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தில் கோதுமை மாவினை நிவாரணமாக வழங்குவதற்கு முன்மொழியப்பட்டு பாரிய விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு திட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் அவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா பெற்றுக்கொள்வது தேசிய பிரச்சினையல்ல என்பதை அரசாங்கம் பரிந்து கொள்ளவில்லை. 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரதான உணவாக அரிசி மற்றும் கோதுமை மாவுடன் தொடர்புடைய உணவுகள் காணப்படுகின்றன என்பது உண்மையானாலும் தற்போது அவற்றை பெற்றுக்கொள்வதற்கு தொழிலாளர்கள் பன்மடங்கு உழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வேலைநாட்கள் குறைக்கப்பட்டு அவர்களுக்கு வாக்குறுதியளித்த 1000 ரூபா வேதன உயர்வும் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கைச் செலவை சமாளிக்க போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசாங்கத்திலிருந்து எவ்வித உதவிகளும் அற்று அவர்கள் தனித்துவிடப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு முன்னோக்கிச் செல்வார்கள் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. 


அரிசி, கோதுமை மா, பருப்பு, பால்மா உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய முறையில் எவ்வித உணவுப் பொருட்களும் வழங்கப்படுவதில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த ஊதியம் பல்வேறு செலவுகளை ஈடுசெய்ய வேண்டும். உணவு, மருத்துவம், கல்வி, கடன் என சகலவற்றையும் அந்த ஊதியத்திலிருந்தே வழங்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கே ஊதியம் போதாத நிலை காணப்புடுகின்றது. 

மக்களுடைய நலன்களுக்காக அரசாங்கம் செயற்படும் நிலை மாறி தற்போது அரசியல்வாதிகளின் நலன்களுக்காக மாத்திரம் செயற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கு முன்னிற்க வேண்டும். அதைவிடுத்து இன்னும் அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்த்து நடப்பார்களாயின் அவர்களால் இன்னும் பல தசாப்தங்களுக்கு மீளமுடியாத நிலை ஏற்படும்.


தற்போதும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் இடம்பெற்று வரும் நிலையிலும் மறுபுறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நள்ளிரவில் அதிகரிக்கப்படுகின்றன. எதிர்வரும் மாதங்களில் இந்நிலைமை இன்னும் மோசமாக இருக்குமென்பது நிபுணர்களின் கருத்து. எனவே தற்போதைய நிலைமையில் குறைந்த வருமானங்களை பெறும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கைச் செலவை சமாளிக்கப் போகின்றனர். இவை தொடர்பில் எவரும் சிந்திக்கவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளமும் உறுதிசெய்யப்பட்ட வேலைநாட்களும் கிடைத்திருக்குமாயின் அவர்களால் நிலைமையினை ஓரளவுக்கு சமாளித்திருக்க முடியும். பெரும்பாலான தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்தில் 10 க்கும் குறைவான நாட்களே தொழில் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலைமையில் அவர்களால் எவ்வாறு வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியும்?

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலிலும் மலையக் மக்களின் வாக்குகள் கணிசமான வெற்றியை பதிவு செய்வதற்கு உதவியிருந்தன. எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய அரசாங்கமும் நிலைத்திருப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது. அடுத்து இடைக்கால அரசாங்கமோ அல்லது புதிய அரசாங்கமோ அமையுமாயின் பெருந்தோட்ட மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படுமா? ஏன்பதிலும் சந்தேகம் இருக்கின்றது. இந்நேரத்தில் மலையக மக்கள் சுயமாக தீர்மானம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அல்லது அவர்களை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு எவரும் தயாராக இருக்கின்றார்களா?

இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ள அ.அரவிந்தகுமார் மக்களின் கடும் எதிர்ப்பினை பெற்றுள்ள நிலையில் சகல அரசியல்வாதிகளும் இவ்வாறே செயற்படுவர் என்ற பொதுவான மனநிலைக்கு மக்கள் சென்றுவிட்டனர். இதனால் அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை என்பதனாலேயே பெருந்தோட்டங்களில் சுயமாகவே இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இது ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான போராட்டமாக மாத்திரம் கருதப்படக்கூடாது. ராஜபக்சக்களுக்கு எதிராக அணிதிரண்ட மலையக மக்களுக்கு மலையக அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுவதற்கு வெகுநேரம் ஆகாது. இனிமேலும் மக்களை ஏமாற்றுவதற்கு அரசியல்வாதிகளால் முடியாது. அதற்கான நேரம் கடந்துவிட்டது. 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக