கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

25 பிப்ரவரி, 2022

அடிப்படை வசதியின்றி தவிக்கும் தோத்தலா தோட்ட மக்கள்


பெருந்தோட்டங்கள் தனியாரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைமுறை பாரிய சரிவினை எதிர்கொண்டு வருகின்றன. அதேவேளை இலங்கையில் பெருந்தோட்டங்கள் தனியாரிடம் கையளிக்கப்பட்டாலும் அவை பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமான தோட்டங்கள் என இரு நிலைகளில் காணப்படுகின்றது. இவ்வாறு தனி நபர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் மஸ்கெலியா தோத்தலா தோட்டமும் ஒன்றாகும். மஸ்கெலியா நகரத்திலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இத்தோட்டத்தில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 

சுமார் 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் தேர்தல் காலங்களுக்கு மாத்திரம் வருகைத்தரும் மக்கள் பின்னர் அவர்களை கண்டுகொள்வதில்லை என தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் இதுவரை எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் இங்கு முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அரசசார்பற்ற நிறுவனத்தினால் ஒருசில அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுர்வேத செஞ்சிலுவை சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் திட்டம் தற்போது முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீரேந்துபகுதிகளின் அருகில் இம்மக்கள் வசிப்பதால் குடியிருப்புகள் பாரிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளதுடன் குடியிருப்புகளும் தாழிறங்கிவருகின்றன. தேயிலைதொழில் மாத்திரமே இவர்களுடைய பிரதான வருமானமாக காணப்படுகின்றது. மரக்கறி தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்புகள் என வேறு வருமான மார்க்கங்களை இவர்களால் முன்னெடுக்க முடியாது. 

இத்தோட்டமானது தனிநபருக்குச் சொந்தமான தோட்டமாக இருப்பதால் முதலாளி விரும்பும் வகையிலேயே தொழிலாளர்களுக்கான வேலைகளும் உரிமைகளும் வழங்கப்படுகின்றன. அத்தோட்டத்தில் உள்ளநிலங்கள் தனிநபருக்கு சொந்தமானவையாக இருப்பதால் மக்களால் விரும்பியபடி எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கமுடியாது. தோட்டத் தொழிலிருந்து ஓய்வுபெற்ற நபர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது. அவர்கள் இறந்தாலும் உடலை புதைப்பதற்கு தேவையான நிலத்தை தெரிவு செய்வதற்கு தோட்ட முதலாளியின் கட்டாய அனுமதி தேவைப்படுகின்றது. 


“எங்களுடைய மிகப்பெரிய தேவையாக இருப்பது பாதை அபிவிருத்தியாகும். தேர்தலுக்கு மாத்திரம் வரும் நபர்கள் வாக்குறுதிகளை வழங்கினாலும் பின்னர் அவர்களுக்கு இத்தோட்டம் எங்கிருக்கிறது என்பது கூட தெரியாது. கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் மூன்று கர்ப்பிணிகள் வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே இறந்துள்ளனர். முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாடகை வாகனங்களுக்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. சுவசெரிய அம்புலன்ஸ் சேவைகள் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. மழை காலங்களில் வீடுகள் ஒழுகுவதால் வீடுகளில் வசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. வீடுகளுக்கான தகரங்களை வழங்கக்கோரி தோட்ட நிர்வாகத்திடம் கோரியபோதும் இரண்டு வருடங்கள் கடந்தும் வழங்கப்படவில்லை. ஏங்களுக்கு தற்போது பிரதான அபிவிருத்தியாக இருப்பது பாதை அபிவிருத்தியாகும்.” என தோட்டத் தொழிலாளியான கெங்காதரன் தெரிவித்திருந்தார்.

தேயிலை மலைகளிலும் நனைந்துவிட்டு வீடுகளிலும் நனைந்து கொண்டு வாழவேண்டியநிலை இவர்களுக்கு காணப்படுகின்றது. மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு இதற்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர். தேர்தல் வாக்குகளுக்கு மாத்திரம் இங்கு வருகைத்தரும் அரசியல் வாதிகளுக்கு பின்பு மக்களுடைய அவலங்கள் தெரிவதில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். சிறுத்தை, அட்டை மற்றும் பாம்புகள் என சகலவற்றுடன் போராடியே 1000 ரூபா வேதனத்துக்காக உழைக்க வேண்டியுள்ளது. எனினும் 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே 1000 ரூபா வழங்கப்படுகின்றது. தேயிலைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால் விளைச்சல் குறைவாக இருப்பதால் தினசரி சம்பளத்துக்கான அறுவடையினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. 


“சுமார் 15 வருடங்களாக நாங்கள் இந்த குடியிருப்புகளில் வசிக்கின்றோம். இதுவரை அவற்றை சீரமைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடியிருப்புகளின் சுவர்கள் விரிசலடைந்த நிலையில் இருப்பதுடன் எந்நேரமும் உடைந்துவிழும் நிலை காணப்படுகின்றது. நீர்த்தேக்கத்தின் அருகில் குடியிருப்பு காணப்படுவதால் எந்நேரமும் அபாயத்துடன் வாழ வேண்டிய நிலை காணப்படுகின்றது. தற்போது குடியிருப்பு அமைந்துள்ள பகுதிகளில் நிலம் தாழிறங்கி வருகின்ற நிலையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் யார் பொறுப்புக் கூறுவது? ” என இக்குடியிருப்பில் வசிக்கும் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

குடியிருப்புகள் மிகவும் ஒடுக்கமாகவும் ஒரு அறையினை மாத்திரம் கொண்டு காணப்படுவதுடன் அங்கு 3 – 4 குடும்பங்கள் வசிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. தோட்டங்கள் இலாபத்தை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமே செயற்படுகின்றது. இங்கு வசிக்கும் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. மிகக்குறைவான மக்கள் தொகையினை மாத்திரம் கொண்டுள்ள இத்தோட்டத்தில் அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு பாரிய நிதி தேவையில்லை. அவர்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான குடியிருப்பு, பாதை அபிவிருத்தி மற்றும் நியாயமான சம்பளம் போன்ற அடிப்படை வசதிகளையே கேட்கின்றனர்.

“இரவு பெய்த கடும் மழையில் எங்களுடைய குடியிருப்பு இடிந்து விழுந்துவிட்டது. வழமையாக இங்கேயே நித்திரை கொள்ளும் நாங்கள் அன்று வேறு அறையில் உறங்கியதால் அனர்த்தத்தில் இருந்து தப்பித்துவிட்டோம். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து தருமாறு கோரிக்கை முன்வைத்தும் இதுவரை தோட்ட நிர்வாகத்தினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இங்கேயே வசிக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அருகில் நீர்த்தேக்கம் உள்ளதால் அதிக அபாயம் காணப்படுகின்றது. தேயிலை மலைகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அட்டை, பாம்புகள் காணப்படும் பகுதிகளிலேயே தொழிலை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.” என இங்குவசிக்கும் தொழிலாளியான சாந்தகுமார் தெரிவித்தார்.


இப்பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமையினால் விளைச்சல் குறைவாகவே காணப்படுவதுடன் வருமானமும் குறைந்துள்ளது. ஒரு ஏக்கர் தேயிலை நிலத்தை துப்புரவு செய்வதற்கு 20 – 30 தொழிலாளர்கள் தேவைப்படும் நிலையில் 10 பேரை மாத்திரம் கொண்டு மலைகளை துப்புரவு செய்வதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். தோட்டத்தில் 49 ஏக்கர் தேயிலை மலைகள் காடு மண்டிய நிலையில் மூடி காணப்படுகின்றது. மீதமுள்ள 38 ஏக்கர் பகுதியிலேயே தொழிலை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. உரங்கள் மற்றும் மருந்துகள் என இதுவரை தேயிலை வளர்ச்சிக்கு தேவையான எவையும் வழங்கப்படவில்லை. தோட்டங்கள் அழகாக காணப்படுகின்றது என்பதை வெளியில் காண்பிப்பதற்கு எல்லைபகுதிகள் மற்றும் முகாமையாளரின் பங்களா மாத்திரம் துப்புரவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடியிருப்புகள் தேவைப்படுமாயின் தகரங்களுக்குப் பதிலாக பொலித்தீன் சீட்டுகளே முகாமைத்துவத்தினால் வழங்கப்படுகின்றன. மண் சுவர்களின் மூலமே வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குடியிருப்பில் பல குடும்பங்கள் வசிக்க வேண்டிய நிலை காணப்படுவதால் அருகிலுள்ள வீடுகளில் இரவு பொழுதை கழிக்க வேண்டியுள்ளது. 

இந்த வாழ்க்கையினையே மஸ்கெலியா தோத்தலா மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சொகுசுகார் மற்றும் பங்களாக்களில் வசிக்கும் நபர்களுக்கு அவர்களுடைய அவலம் புரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் வாக்குகளை பெற்றுக்கொண்ட நபர்கள் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் சிலவற்றையேனும் நிவர்த்தி செய்துதர வேண்டும். அரசசார்பற்ற நிறுவனத்தினால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தற்போது முகாமைத்துவம் இன்றி காணப்படுகின்றது. அவற்றையாவது புனர்நிர்மாணம் செய்துகொடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல வருடங்களாக முதலாளிகள் வருமானம் பெறுவதற்காக உழைத்தவர்கள் வாழ்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது தோட்ட நிர்வாகத்தினதும் அரசாங்கத்தினதும் கடமையாகும். அதேவேளை தனி நபர்களுக்கு சொந்தமாகவுள்ள தோட்டங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையினை முன்வைக்க வேண்டும். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக