2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் வலப்பனை கல்வி வலயமானது 15 கல்வி வலயங்களில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வலப்பனை கல்வி வலயத்தின் தமிழ் மொழிமூல பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகளில் போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை அறியமுடிகின்றது.
2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தர வரிசைகள் ஏற்படுத்தப்பட்டாலும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தளவே காணப்படுகின்றன. எனவே நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலப்பனை கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் அறிவதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வலப்பனை கல்வி வலய அலுவலகத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
வலப்பனை கல்வி வலயத்தில் 30 தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 1 ஏபி பாடசாலை ஒன்றும் 1 சி பாடசாலை மூன்றும் வகை 2 பாடசாலை ஆறும் வகை 3 பாடசாலை இருபதும் காணப்படுகின்றன. இவற்றில் 27 பாடசாலைகள் க.பொ.த. சாதாரணத் தரத்தினையும் நான்கு பாடசாலைகள் க.பொ.த. உயர் தரத்தினையும் கொண்டுள்ளன. இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் ஆறு பிரிவுகளை கொண்டு இயங்குகின்றது. அருனோதயா இந்து கல்லூரி கலை மற்றும் வர்த்தக பிரிவுகளையும் ஏனைய இரு பாடசாலைகளும் கலை பிரிவுகளை மாத்திரம் கொண்டுள்ளன.
குறித்த பாடசாலைகளுக்கு 2015 ஆம் ஆண்டு 725 மாணவர்கள் முதலாம் தரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2016 இல் 697 மாணவர்களும் 2017 இல் 708 மாணவர்களும் 2018 இல் 784 மாணவர்களும் 2019 இல் 769 மாணவர்களும் 2020 இல் 712 மாணவர்களும் முதலாம் தரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை கல்வி வலயத்திலுள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் வருடாந்தம் 8000 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 2015 ஆம் ஆண்டு 8101 பேரும் 2016 ஆம் ஆண்டு 8186 பேரும் 2017 ஆம் ஆண்டு 8022 பேரும் 2018 ஆம் ஆண்டு 8199 பேரும் 2019 ஆம் ஆண்டு 8591 பேரும் 2020 ஆம் ஆண்டு 7709 பேரும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் 2019 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாணவர்களின் எண்ணிக்கையில் 882 பேர் குறைந்துள்ளனர். க.பொ.த. சாதாரணம் மற்றும் க.பொ.த. உயர்தரம் ஆகிய தரங்களை நிறைவு செய்து வெளியேறியிருந்தாலும் பாரிய எண்ணிக்கையிலான மாணவர்களின் வீழ்ச்சிக்கான காரணம் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனினும் வலப்பனை கல்வி வலயத்திலுள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் வருடாந்தம் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தளவிலேயே இருப்பதாக கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு 22 மாணவர்களும் 2020 ஆம் ஆண்டு 43 மாணவர்களும் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளதாகவும் 2015 - 2018 வரையான காலப்பகுதியில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கு போதிய தெளிவின்மை மற்றும் பொருளாதார ரீதியில் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு இடைவிலகல்கள் ஏற்படுகின்றது.
கல்வி வலயத்திலுள்ள 30 தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 31 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களும் 11 அதிபர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுகின்றன. ஆரம்பபிரிவுக்கு 171 ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் 181 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். மேலதிகமாக 10 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். விஞ்ஞான பாடத்துக்கு 22 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் ஒரு ஆசிரியரே பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். கணித பாடத்துக்கு மேலதிகமாக இருவர் காணப்படுகின்றனர். தமிழ் பாடத்துக்கு மூன்று வெற்றிடங்களும் புவியியல் பாடத்துக்கு மூன்று வெற்றிடங்களும் நாடகமும் அரங்கியலும் பாடத்துக்கு மூன்று வெற்றிடங்களும் காணப்படுகின்றன.
இவ்வாறான ஆசிரியர், அதிபர் பற்றாக்குறையும் மாணவர்களின் கல்வி வீழ்ச்சி மற்றும் இடைவிலகல்களுக்கு காரணமாகக் கொள்ள முடியும். 2015 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4145 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ள நிலையில் 237 மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்துள்ளனர். 2015 இல் 675 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 35 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 2016 இல் 704 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 35 மாணவர்களும் 2017 இல் 705 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 38 மாணவர்களும் 2018 இல் 684 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 38 மாணவர்களும் 2019 இல் 682 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 45 மாணவர்களும் 2020 இல் 695 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 46 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
2015 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 3056 மாணவர்கள் க.பொ.த. சாதாரணத்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ள நிலையில் 1980 மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய 1076 மாணவர்கள் உயர்தரத்துக்கான தகுதியினை பெறவில்லை. 2015 இல் 413 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 219 மாணவர்கள் உயர்தரத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2016 இல் 447 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 308 மாணவர்களும் 2017 இல் 515 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 316 மாணவர்களும் 2018 இல் 551 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 313 மாணவர்களும் 2019 இல் 566 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 384 மாணவர்களும் 2020 இல் 564 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 440 மாணவர்களும் (அழகியல் பாடம் தவிர்ந்த) உயர்தரத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை 2015 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 887 மாணவர்கள் க.பொ.த. உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 536 பேர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். எனினும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பான விபரங்கள் வழங்கப்படவில்லை. அதன்படி 2015 ஆம் ஆண்டு 137 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் 72 பேர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2016 இல் 144 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் 77 மாணவர்களும் 2017 இல் 141 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் 78 மாணவர்களும் 2018 இல் 125 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் 62 மாணவர்களும் 2019 இல் 157 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் 104 மாணவர்களும் 2020 இல் 183 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் 133 மாணவர்களும் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
2015 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயர்தரத்தின் கலைப்பிரிவில் இருந்து 373 மாணவர்களும் 59 மணவர்கள் வர்த்தக பிரிவிலிருந்தும் விஞ்ஞான பிரிவிலிருந்து மூவரும் கணித பிரிவிலிருந்து ஒருவரும் பொறியியல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 14 மாணவர்களும் உயிரியல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 76 மாணவர்களும் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
வலப்பனை கல்வி வலயத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளை விட சிங்கள மொழி மூல பாடசாலைகளே அதிகம் காணப்படுகின்றன. இவை அனைத்தும் பெருந்தோட்ட பாடசாலைகளாக காணப்படுகின்றன. அதிபர் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை தமிழ் மொழி மூல பாடசாலைகளில் காணப்படும் பிரதான குறைபாடாகும். அதேவேளை உயர்தரத்தில் சகல பிரிவுகளையும் உள்ளடக்கி ஒரு பாடசாலை மாத்திரமே காணப்படுகின்றது. இதனால் அரசாங்கத்தால் ஒரு வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களை விடவும் அதிக மாணவர்களை உள்ளடக்க வேண்டிய தேவை காணப்படுவதுடன் ஆசிரியர்களுக்கும் அதிக சுமையினை ஏற்படுத்துகின்றது. இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை தனித்தனியே அவதானிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றது. பெரும்பாலான பாடசாலைகள் அதிபர் இன்றிய நிலையில் காணப்படுவதால் நிர்வாக செயற்பாட்டினை முன்னெடுப்பதிலும் தடைகள் காணப்படுகின்றது. எனவே வலப்பனை கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக