உலக தொற்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொவிட் தொற்றினை முறியடிப்பதற்கும் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் அதன்மூலம் ஏற்படுகின்ற அபாயங்களை குறைப்பதற்கும் கொவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வது முக்கியமானதென சுகாதார தரப்பு வலியுறுத்தி வருகின்றது. எனினும் இலங்கையில் கொவிட் தடுப்பூசிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் தகுதியான அனைவரும் முழுமையான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.
மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செயற்றிட்டம் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மத்திய மாகாண சுகாதார திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மத்திய மாகாணத்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்ட 1,963,474 பேரில் 265,586 பேர் இரண்டாவது டோஸை கடந்த டிசம்பர் மாதம் வரை பெற்றுக்கொண்டிருக்கவில்லை. இவற்றில் கண்டி மாவட்டத்தில் 152,504 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 38,404 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 74,678 பேரும் உள்ளடங்குவர். அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்ட 38,683 பேரில் 37,712 பேர் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் 1779 பேர் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டில் தற்போது 20 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் மத்திய மாகாணத்தில் இதுவரை இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் நுவரெலியா மாவட்டத்தினை தவிர ஏனைய மாவட்டங்களில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
இதேவேளை நாட்டில் 16 வயதுக்கும் மேற்பட்ட 99 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் 85 வீதமானோருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கொவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடைய மக்களில் 13.8 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் 4.5 மில்லியன் பேர் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில் அஸ்ட்ராசெனெகா, சினோபார்ம், மொடர்னா, ஸ்புட்னிக் வி, பைசர் போன்ற தடுப்பூசிகள் தகுதியுடைய நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. எனினும் தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட தினம் தொடர்பான தகவல் வழங்கப்படவில்லை. கண்டி மாவட்டத்தில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 14510 பேரில் 31 பேர் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்ளவில்லை. சினோபார்ம் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 109,771 பேரில் 38,771 பேரும் மொடர்னா தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 692,280 பேரில் 16,906 பேரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 149,783 பேரில் 7835 பேரும் பைசர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 90,104 பேரில் 88,961 பேர் இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவில்லை.
2020 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் 18 வயதுக்கும் மேற்பட்ட 1,140,168 பேர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனின் 16 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சேர்த்து கண்டி மாவட்டத்தில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு தகுதியான மக்கள் எண்ணிக்கை 12 இலட்சத்துக்கும் அதிகமாக காணப்படும் நிலையில் டிசம்பர் வரை 1,056,448 பேருக்கே தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதுடன் 152,504 பேருக்கு இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படவில்லை.
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கும் நடவடிக்கைகள் 08.06.2021 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இரண்டாவது டோஸ் வழங்கும் பணிகள் 10.07.2021 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் முதல் வரை 388,593 பேர் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 350,189 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். சுமார் 38,404 பேர் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்ளவில்லை.
மாத்தளை மாவட்டத்துக்கு அஸ்ட்ராசெனெகா, சினோபார்ம், மொடர்னா, பைசர் போன்ற தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 27,262 டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளும் 468,400 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளும் 200,004 டோஸ் மொடர்னா தடுப்பூசிகளும் 80,490 டோஸ் பைசர் தடுப்பூசிகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் 18 வயதுக்கும் மேற்பட்ட 413,096 பேர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனின் 16 வயதுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்டு கணிப்பிடின் இத்தொகை இன்னும் அதிகரிக்கலாம். எனவே மாத்தளை மாவட்டத்தில் தகுதியுடைய பலர் இன்னும் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் அஸ்ட்ராசெனெகா, சினோபார்ம் மற்றும் பைசர் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை நுவரெலியா மாவட்டத்துக்கு 6430 டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளும் 815,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளும் 38,084 டோஸ் பைசர் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸை 3012 பேரும் இரண்டாவது டோஸை 3041 பேரும் பெற்றுக்கொண்டுள்ளனர். சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை 476,738 பேரும் இரண்டாவது டோஸை 439,743 பேரும் பெற்றுக்கொண்டுள்ளனர். பைசர் தடுப்பூசியின் முதல் டோஸை 38,683 பேரும் இரண்டாவது டோஸை 971 பேரும் பூஸ்டர் டோஸை 1779 பேரும் பெற்றுக்கொண்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்ட 38,683 பேரில் 37,712 பேர் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்ளவில்லை. மொத்தமாக தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்ட 518,433 பேரில் 74,678 பேர் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்ளவில்லை.
2020 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் 18 வயதுக்கும் மேற்பட்ட 583,566 பேர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனின் 16 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சேர்த்து நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு தகுதியான மக்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் நிலையில் பலர் கொவிட் தடுப்பூசியினை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது உறுதியாகின்றது.
எனவே கொவிட் தடுப்பூசிகள் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு வகையில் விளம்பரங்களை மேற்கொண்டாலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் மக்களின் நாட்டம் குறைவாகவே உள்ளமையை அவதானிக்க முடிகின்றது. தற்போது பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்தாலும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு பலரும் தயாராகவில்லை. தடுப்பூசிகள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களே அதற்கு காரணமாகும். பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி அட்டையினை கட்டாயமாக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தினாலும் அவற்றுக்கு சட்ட ரீதியான தடைகள் காணப்படுகின்றன. தற்போது பூஸ்டர் தடுப்பூசியினை கட்டாயமாக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தகுதியானவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகள் அரசாங்கத்திடம் உள்ளதாக கூறப்பட்டாலும் அஸ்ராசெனெகா, சினோபார்ம், பைசர் தடுப்பூசிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் அளவுகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் ஸ்புட்னிக் வி மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கான மாற்று வழிகள் குறித்து சுகாதார அமைச்சினால் தெளிவு படுத்தப்படவில்லை. அதேவேளை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு வயோதிபர்களும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை தோட்டபுறங்களில் அதிகம் காணப்படுகின்றது. நகர்புறங்களுக்கு மாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் தோட்டபுறங்களுக்கு விஸ்தரிக்கப்படவில்லை. மேலும் தடுப்பூசி அட்டையில் குறிப்பிட்ட திகதியில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தாமதித்தே பல பெருந்தோட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நகர்புறங்களில் தடுப்பூசி செயற்றிட்டத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தோட்டபுறங்களுக்கு வழங்கப்படவில்லை. மத்திய மாகாணத்தில் அதிக பெருந்தோட்ட மக்கள் வசித்துவரும் நிலையில் அவர்களின் சுகாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக