நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் பொருளாதார பிரச்சினை மற்றும் பெற்றோர் இடப்பெயர்வு காரணமாக வருடாந்தம் 200 மாணவர்கள் கல்விய இடைநிறுத்துவதாக நுவரெலியா வலய கல்வி காரியாலயம் தெரிவித்துள்ளது. இது ஒரு ஆபத்தான நிலைமையாகும். நாட்டில் கல்விக்கு அதிக ஒதுக்கீடு மற்றும் இலவசக்கல்வி, தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் விளம்பரம் மேற்கொண்டாலும் மாணவர்களின் இடை விலகல்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமை சிறுவர்களின் கல்வி உரிமையை மீறுவதாக காணப்படுகின்றது.
நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளின் கல்வி நிலைமை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக நுவரெலியா கல்வி காரியாலயத்தில் தகவல் கோரிய போதும் முழுமையான தகவல்கள் வழங்குவது மறுக்கப்பட்டுள்ளது. எனினும் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. நுவரெலியா கல்வி வலயத்தின் தகவல்களின் அடிப்படையில் 2015 - 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 1000 மாணவர்களில் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர்.
மாணவர்களின் இடைவிலகல்களில் குடும்ப சூழ்நிலை, போக்குவரத்து வசதிகள் மற்றும் காலநிலை என்பனவும் தாக்கம் செலுத்துகின்றது. அதிக குளிர் மற்றும் மழையுடனான காலநிலை மாணவர்களின் கல்வி இடை விலகல்களை அதிகரிக்கின்றது. பெற்றோரின் அரவணைப்பில் இல்லாத பிள்ளைகள் மற்றும் தாத்தா, பாட்டியுடன் வளரும் பிள்ளைகள் அதிகம் காணப்படுவதுடன் பெற்றோர் வெளிநாடு செல்லுதல், வேறு திருமணம் செய்தல் என்பனவும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கின்றன.
நுவரெலியா கல்வி வலயத்தில் 156 பாடசாலைகளில் 124 தமிழ் பாடசாலைகள் காணப்படுவதுடன் குறித்த பாடசாலைகளில் தற்போது 37,365 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 81 வீதம் தமிழ் மாணவர்களைக் கொண்டே நுவரெலியா கல்வி வலயம் இயங்கி வருகின்றது. 19 வீதமான சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனினும் வலய கல்வி காரியாலயம் வழங்கிய தகவல்களில் 34,435 தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 2699 தமிழ் மாணவர்கள் வருடாந்தம் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இறுதியாக வெளியான தரம் 5 புலமைப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 3043 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் வெட்டுப்புள்ளிக்கு மேல் 147 மாணவர்கள் பெற்றுள்ளனர். 70 புள்ளிகளுக்கு மேல் 2495 மாணவர்களும் 69 புள்ளிகளுக்கு கீழ் 548 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
சாதாரணத்தரப் பரீட்சைகளில் வருடாந்தம் 1800 மாணவர்கள் சித்தியடைவதுடன் 800 மாணவர்கள் சித்தியடையாத நிலைமை காணப்படுகின்றது. இறுதி பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரப் பரீட்சைக்கு வருடாந்தம் 710 மாணவர்கள் தோற்றுவதுடன் 362 மாணவர்கள் சித்தியடையவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 1931 ஆசிரியர்கள் கடமையாற்றுவதுடன் 435 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதேவேளை 66 அதிபர்கள் கடமையாற்றுவதுடன் 58 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதுவே தமிழ்மொழி மூல பாடசாலைகளின் தற்போதைய நிலையாக காணப்படுகின்றது.
நுவரெலியா கல்வி வலயத்தில் அதிகமாக தமிழ் பாடசாலைகளே காணப்படும் நிலையில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரே வலய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பிரதி, திட்டமிடல் பணிப்பாளர்களும் பெரும்பான்மையினத்தவர்கள். முன்னைய வலய கல்வி பணிப்பாளர் மாகாண கல்வி திணைக்களத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளதுடன் பிரதி பணிப்பாளர் கொத்மலை கல்வி வலயத்துக்கு இடமாற்றும் பெற்றுச் சென்றுள்ளார். இரு பதவிகளுக்கும் பெரும்பான்மையின அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டமிடல் பணிப்பாளர் ஓய்வு பெற்றுள்ள நிலையிலும் அதற்கும் பெரும்பான்மையினத்தவரை நியமிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. எனவே அதிக தமிழ் பாடசாலைகளை கொண்ட ஒரு கல்வி வலயத்தில் குறைந்தது பிரதி கல்வி பணிப்பாளர்களாக தமிழ் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இது தமிழ்மொழி மூல பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.
வள ஒதுக்கீடுகள், தேசிய பாடசாலைகள் தெரிவு ஆகியவற்றில் சிங்கள பாடசாலைகளே அதிகம் உள்ளடக்கப்படும் நிலை காணப்படுகின்றது. கோட்டம் 3 இல் அதிக ஆசிரியர்கள் காணப்படும் நிலையில் கோட்டம் 2 இல் குறைவான ஆசிரியர்களே காணப்படுகின்றனர். ஆசிரியர்கள் தூர பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விரும்பாமை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாகும். விஞ்ஞானம், கணித பாடங்களை கொண்ட உயர்தர பாடசாலைகள் இன்மை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. உயிரியல் அமைப்பு, பொறியியல் துறைக்கான தகுதியான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையும் காணப்படுகின்றது.
அதேவேளை பாடசாலைகள் கட்டிட வசதிகள் இன்மையால் மடுவங்களில் இயங்கி வரும் நிலை நுவரெலியா கல்வி வலயத்தில் காணப்படுகின்றது. வகுப்புக்களில் அதிக மாணவர்தொகையும் காணப்படுகின்றது. நுவரெலியா கல்வி வலயத்தில் அதிக தமிழ் மொழிமூல பாடசாலைகள் காணப்பட்டாலும வலய கல்வி அலுவலகத்திலிருந்து அதிபர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், சுற்று நிரூபங்கள், அறிவித்தல் என்பன சிங்கள மொழியிலேயே அனுப்பப்படுகின்றன. ஓன்றுகூடல்களும் சிங்கள மொழியிலேயே இடம்பெறுகின்றன. இதனால் முழுமையாக அவற்றை புரிந்து கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களே பாடசாலைகளை நிர்வகிக்கும் நிலை காணப்படுவதோடு அதிபர் தரம் கொண்டவர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆதிபர் தரம் கொண்டவர்கள் ஒரு சில பாடசாலைகளில் அதிகம் காணப்பட்டாலும் அவர்கள் தேவையான பாடசாலைகளுக்கு நியமிப்பதில் இழுபறி காணப்படுகின்றது.
தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு நுவரெலியா மாவட்டத்தில் பல ஆசிரியர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. இதற்கு அவர்களின் ஆவணங்கள் முழுமையாக ஒழுங்குபடுத்தப்படாமை காரணமாகும் அத்துடன் ஆசிரியர் உதவியாளர்களின் ஆவண கோப்புகள் மிக நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளமையால் அவர்களுக்கான நிவாரணங்கள் இழுபறியில் உள்ளன. இதேவேளை கோட்டம் 3 இல் தூர பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது பயணத்துக்காக தமது சம்பளத்தைவிட அதிக தொகையினை செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இ.போ.ச. பஸ் சேவையில் ஈடுபட்ட போதும் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் பஸ் சேவையில் ஈடுபட்டாலும் நேர ஒழுங்கு பின்பற்றப்படுவதில்லை.
அதேவேளை தமிழ்மொழி மூல பாடசாலைகளில் நிதி நடவடிக்கைகளில் நேர்மையற்ற தன்மை காணப்படுகின்றது. சில பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்காக 30000 - 50000 ரூபா வரையில் பெறப்படுகின்றது. எனினும் குறைந்த தொகைக்கே ரசீது வழங்கப்படுகின்றது. இவை தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டக் கல்வி காரியாலயங்களிலும் வளப்பற்றாக்குறைகள் அதிகம் காணப்படுகின்றன. கோட்டம் 1 இல் தமிழ் மற்றும் சிங்கள கோட்ட கல்வி காரியாலங்களுக்கான கட்டிடங்கள் தனித்தனியாக காணப்படுகின்றன. எனினும் கோட்டம் 2 மற்றும் 3 இல் கோட்ட கல்வி காரியாலயங்கள் பாடசாலைகளிலேயே இயங்கி வருகின்றன. கட்டிடம், உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இன்றிய நிலை காணப்படுகின்றது. இதனால் வினைத்திறனான சேவைகளை முன்னெடுப்பதில் தாமதம் காணப்படுகின்றது. எனவே கோட்ட கல்வி காரியாலயங்களுக்குத் தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
எனவே நுவரெலியா மாவட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்திக்க தேவையான நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும். தொழில்நுட்ப வசதிகள், கட்டிட வசதிகள், ஆசிரியர், அதிபர்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. வுலய கல்வி காரியாலயத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளின் விருத்திக்கு தமிழ் கல்வி அதிகாரிகளுக்கும் சம உரிமை மற்றும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். கடிதங்கள் மற்றும் சுற்றுநிரூபங்கள் என்பவற்றை தமிழ் மொழியிலேனும் அல்லது மொழிபெயர்ப்புடனாவது அனுப்ப வேண்டும். அதற்கு தேவையான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும். பாடசாலைகள் மாணவர் அனுமதி தொடர்பில் கவனம் செலுத்துமளவுக்கு இடைவிலகும் மாணவர்களை மீண்டும் கல்வி நடவடிக்கையில் இணைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. அவை தொடர்பான விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவை நுவரெலியா கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக