கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2016

தந்த வேட்டை

இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வொன்று அண்மையில் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது. சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 359 யானைத் தந்தங்கள் அரச சமய நிகழ்வுகளுடன் அழிக்கப்பட்டன. தெற்காசியாவில் இவ்வாறானதொரு சம்பவத்திற்கு முன்னுதாரணமாக இலங்கையே இருக்கின்றது. இதனால் சட்டவிரோதமாக கடத்தப்படும் யானைத் தந்தங்கள்  இனி இலங்கையை ஊடறுத்துச் செல்ல வாய்ப்பில்லை என நம்பலாம். ஆனால் அதிகமான சட்டவிரோத யானைத் தந்தங்களை ஏற்றுமதி செய்யும் ஆபிரிக்க நாடுகள் அல்லது அதிகமாக இறக்குமதி செய்யும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் இலங்கையில் இடம்பெற்ற இந்த வரலாற்று நிகழ்வை கண்டு அஞ்சிவிடுமா?
யானைத் தந்தங்களை  பெற்றுக்கொள்ள சட்டவிரோதமாக யானைகள் கொல்லப்படுகின்றமையே உண்மை. உலகில் வருடமொன்றுக்கு 25,000 - 50,000 வரையான யானைகள் இவ்வாறு சட்டவிரோதமாக கொல்லப்படுகின்றன. யானைத் தந்தங்களுக்கு உலகளவில் காணப்படுகின்ற அதிகரித்த சந்தை வாய்ப்புகளே இந்த சட்டவிரோத யானைத் தந்த சந்தைகளை திறந்து விடுகின்றன. சர்வதேச கடல் மார்க்கங்களினூடே இவை அதிகமாக கடத்தப்படுகின்றன. எனவே கடல் மார்க்க பாதுகாப்பை அதிகரிப்பது இதனைத் தடுப்பதற்கு சிறு முயற்சியாகும். இலங்கையில் அழிக்கப்பட்ட 359 யானைத் தந்தங்களின் மொத்த பெறுமதி 3 மில்லியன் அ. டொலர்கள். 1.5 தொன்கள் எடையுள்ள இந்தத் தந்தங்கள் 2012 ஆம் ஆண்டு இலங்கை சுங்கத் திணைக்களத்தால் பறிமுதல் செய்யப்பட்டவையாகும். கென்யாவிலிருந்து டுபாய்க்கு சட்டவிரோதமாக இலங்கை கடல் வழியாக கடத்தப்பட்ட போதே இந்த பறிமுதல் இடம்பெற்றது.

மருத்துவ தேவைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள், அணிகலன்கள் உருவாக்குவதற்காக யானைத் தந்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை யானைகள் யானைத் தந்தங்களுக்காக கொல்லப்படுகின்றன. ஸ்பெயின், நியூஸிலாந்து,  துருக்கி போன்ற நாடுகளுக்கு குறைந்தளவிலும் ஆசிய நாடுகளில் சீனாவுக்கு மிக அதிகமாகவும் இந்த சட்டவிரோத யானைத் தந்தங்கள்  ஆபிரிக்காவிலிருந்து கடத்தப்படுகின்றன. ஏற்கனவே மனித பாதுகாப்புக்காக யானைகள் கொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது சட்டவிரோத தொழில்களுக்காகவும் கொல்லப்படுவது உலகில் யானைகள் அருகிவரும் இனமாக மாற்றமடைய வழிவகுக்கிறது.

கடந்த கால் நூற்றாண்டு காலப்பகுதியில் 90 சதவீதமான யானைகள் ஆபிரிக்காவில் கொல்லப்பட்டுள்ளன. சியாரா லியோன் 2009 இல் தனது இறுதி யானைக் கொலையை மேற்கொண்டது. செனகலில் பல்லாயிரக்கணக்கான யானைகள் அழிப்புகளின் பின் இத்தொழில் தடுக்கப்பட்டுள்ளது. கபோனில் 11,000 வரையான யானைகள் கடந்த காலங்களில் கொல்லப்பட்டுள்ளன. கென்யா, தன்சானியா போன்ற நாடுகள் சுற்றுலாப் பயணிகளின் வேட்டையாடுதல் தளமாக இருக்கின்றன. இதன்மூலம் 100,000 வரையான யானைகள் ஆபிரிக்காவில் 2010 - 2012 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொல்லப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வயதான ஆண் யானைகள் வேட்டையாடல் மூலம் அதன் மிக நீளமான தந்தங்களுக்காக கொல்லப்படுகின்றன. பெரும்பாலும் வயதான யானைகளை இலக்கு வைப்பதற்கு அவை தனித்திருப்பதே பிரதான காரணம். அத்தோடு ஆண் யானைகள் ஆபத்தான பலத்தினை கொண்டவை. எனவே அவற்றை நவீன ஆயுதங்கள் மூலம் வேட்டையாடுவதால் ஒரே நேரத்தில் மொத்த யானைக் குடும்பத்தையும் இவர்களால் வீழ்த்த முடிகிறது. யானைத் தந்தங்களின் சட்டவிரோத கடத்தலானது அதிகமான இலாபமீட்டும் சட்டவிரோதத் துறையாக இருக்கிறது. வருடத்துக்கு 19 பில்லியன் அ.டொலர்கள் இந்த சட்டவிரோத கடத்தலின் மூலம் பெறப்படுகிறது.

மனிதனின் சட்டவிரோத தொழில்துறையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்பு அதிகமாக ஈடுபடுவது இந்த யானைத் தந்தங்களின் கடத்தலில் தான். இந்த சட்டவிரோத தொழில்களில் தங்கம், சிறிய இராணுவ தளவாடங்கள், எண்ணெய் மற்றும் இரத்தினங்கள் என்பனவும் உள்ளடங்குகின்றன. இந்த சட்டவிரோத யானைத் தந்த கடத்தலானது 2007 ஆம் ஆண்டுக்குப் பின்பு இரு மடங்காக அதிகரிக்கத் தொடங்கியது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கின்  வீதியோரங்களில் ஒரு கிலோ யானைத் தந்தத்தின்  அல்லது அதன் தொடர்புடைய அலங்காரப் பொருட்களின் பெறுமதி 2,205 அ.டொலர்களாக காணப்படுகிறது. காண்டா மிருகத்தின் கொம்புகள் கறுப்புச் சந்தையில் ஒரு கிலோவின் பெறுமதி 66,139 அ. டொலர்களாக இருக்கின்றது. இது வைரம் மற்றும் தங்கத்தின் கறுப்புச் சந்தை பெறுமதியினை விட அதிகமாகும்.

உலக நாடுகள், மிருகங்களை நேசிக்கும் அரசாங்கங்கள் உடனடியாக சட்டவிரோத யானைத் தந்தங்கள் மற்றும் காண்டா மிருக கொம்புகளின் கடத்தல்களை தடுக்க முனைதல் அவசியமாகும். இல்லையெனில் எதிர்காலத்தில் இவ்விலங்குகளின் இருப்பை அறிய முடியாத சூழல் உருவாகும். இலங்கையில் இந்நிலை எவ்வாறுள்ளது என்பதை அறிவது முக்கியமானது. இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களத்தின்  2011 ஆம் ஆண்டு கணிப்பின்படி 5,879 யானைகள் காடுகள் மற்றும் தேசிய சரணாலயங்களில் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஆபிரிக்காவில் யானைகள் வேட்டையாடப்படும் நிலையினைப் போல இலங்கையில் இல்லை.

இலங்கையில் சட்டவிரோத யானைத் தந்தங்களின் கடத்தல் சம்பவமானது அதிகளவில் இல்லாதபோதும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடு அதிகளவில் காணப்படுகிறது. மனிதர்களின் சட்டவிரோத குடியேற்றங்கள்  யானைகளுக்கு எதிராக இருப்பதால் இம்முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதன் மூலம் இலங்கையில் அதிகமான யானைகள் கொல்லப்படுகின்றன. இதனால் யானைத் தந்தங்களுக்கான கொலைகள் இல்லையென்றாலும் யானைகளின் பாதுகாப்பு இலங்கையிலும் குறைவே.

ஆசிய வலயத்தில் அதிகம் செயற்பாடுகளைக் கொண்ட கடல்வழி மார்க்கத்தை இலங்கை கொண்டுள்ளது.  இதனால் சட்டவிரோத கடத்தல்காரர்கள் இலங்கையை மையப்படுத்தி தமது கடத்தல்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு மே 22, 2012 ஆம் ஆண்டு கென்யாவிலிருந்து டுபாய்க்கு கடத்தப்பட்ட யானைத் தந்தங்களே மத்திய புலனாய்வுத் துறையினரின் தகவல்களுக்கு அமைய கைப்பற்றப்பட்டிருந்தது. இது தெற்காசிய நாடுகளில் கைப்பற்றப்பட்டதிலேயே பாரிய தொகையாகும். இந்த 359 தந்தங்களில் சில யானையின் உடலிலிருந்து அகற்றும் போதே பழுதடைந்திருந்தன. இந்தத் தந்தங்களை அழித்து விடுவதே இலங்கைக்கு சாத்தியமான தீர்வாக இருந்தது. இதனால் இலங்கை சர்வதேச வனச் சட்டங்களுக்கு உட்பட்டு காலி முகத்திடலில் இவற்றை அழித்திருந்தது. சுங்கத் திணைக்களம் இத்தந்தங்களை மீட்டு பாதுகாப்பாக இதுநாள் வரையில் வைத்திருந்த காலப்பகுதியில் அரசியல்வாதிகள், மதகுருமார்கள் அவற்றை கையாள பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டும் அவை பலனில்லாமல் போயிருந்தன.

இருப்பினும் பௌத்த மதத்தில் புனித சின்னமாக கருதப்படும் இவற்றை அழிப்பது சாத்தியமா? என்றொரு கேள்வியிருந்தது. சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட தந்தங்கள் எந்தவொரு பௌத்த மதத் தலத்திலும் ஏனைய மத நிலையங்களிலும் வைப்பதற்கு தகுதியற்றவை. பௌத்த மதத்தில் மட்டுமல்ல ஏனைய மதங்கங்ளும் மிருகங்களைக் கொன்று அவற்றின் எலும்புகளை மதத் தலங்களில் வைக்க அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று பல மதத் தலங்களில் இந்தத் தந்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை பரிசாகவும் மதத் தேவைகளுக்காகவுமே வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே மத ரீதியாக சட்டவிரோத யானைத் தந்தங்களுக்கு அனுமதியில்லை. ஆனால் சர்வதேச ரீதியில் மத நிறுவனங்களில், தந்தங்கள் உட்பட அவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் அழகுசாதனப் பொருட்கள் அதிகளவு விற்பனைக்கு விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று உலகளவில் சட்டவிரோத யானைத் தந்த வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை வேட்டையாடும் குழுக்கள், தீவிரவாதிகள், ஏனைய மாபியாக்கள் ஊக்குவித்து வருகின்றன. அதிகமான அரசாங்கங்கள் தற்போது இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையின் அண்மைய செயற்பாடு சிறந்த எடுத்துக் காட்டாகும். அதேபோலவே ஆசியாவில் குறிப்பாக சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த யானைத் தந்தங்களுக்கான நுகர்வோரின் தொகை மிக அதிகமாக காணப்படுகின்றன. அவற்றை தடை செய்வதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் சட்டவிரோத தொழிலுக்காக கொல்லப்படும் யானைகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக கைகோர்த்துள்ள சர்வதேச நாடுகள் இந்த சட்டவிரோத மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர்கால சந்ததியினருக்கு அழிந்து வரும் விலங்கினங்களை புகைப்படங்களின் மூலமே காண்பிக்கக்கூடிய நிலை உருவாகும்.

க.பிரசன்னா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக