கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2016

மலையக அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்களா ?

தேயிலை தோட்டங்களை தமது அடிப்படை மூலதனமாக கொண்டு செயற்பட்டு வரும் மலையக மக்களின் வாழ்வியல் போக்குகள் மிகவும் மந்தமாகவும் மோசமானதாகவுமே இருக்கின்றன. அவர்கள் இன்னும் நவீன காலத்திற்கு க்கூட  பழக்கப்பட்டவர்களாக இல்லை. காரணம் அவர்கள் பழகுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதேபோலவே பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் சில பெற்றோர்களின் பிள்ளைகளும் நவீன காலத்திற்கு பழக்கப்பட்டவர்களாக வளர்க்கப்படவில்லை என்பதும் மிகப்பெரிய அவலமாக இருக்கின்றது. இதனால் இவர்களுடைய சந்ததியினர் முழுவதும் தமது வாழ்நாளை பெருந்தோட்டங்களுக்குள்ளேயே கழிக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
ஏதோ கல்வியில் ஓரளவு அடிப்படை  அறிவு கொண்டவர்கள் தலைநகரமான கொழும்பிலும் ஒரு சில பெற்றோரின் பிள்ளைகள் அரசாங்கத் தொழிலிலும் காலூன்றியுள்ளனர். ஆனால் ஒட்டு மொத்த மலையக கல்வி வீதத்தில் இது சிறு அளவே. இன்றும் கூட க.பொ.த. சாதாரண தரத்துடனும் அல்லது அதற்கு முன்பும் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்கள் தனது பெற்றோருடன் தேயிலை தோட்டங்களுக்கு தொழிலுக்குச் சென்று விடுகின்றனர். அப்படி எல்லோரும் கல்விமான்களானால் பெருந்தோட்டங்களை யார் கவனிப்பது என்ற கேள்வி எழலாம். ஆனால் எதற்குமே மலையக சமூகம் பிறரை நம்பி வாழ வேண்டிய நிலையினை தவிர்க்க வேண்டுமாயின் சகல துறைகளிலும் பிரகாசிக்க வேண்டிய தேவையிருக்கிறது.  சமூக பொருளாதார கணிப்பீட்டு  அறிக்கையின் (1979) படி பெருந்தோட்டங்களில் சகல இனக் குழுமங்கள் காணப்பட்டாலும் பெரும்பான்மையாக இந்தியத் தமிழர்களே விளங்குகின்றனர். இவர்களே மிக குறைந்த கல்வியறிவு வீதத்தினையும் கொண்டிருக்கின்றனர். பெருந்தோட்டங்களில் வசிக்கும் 45 வீதமான தமிழர்கள் பாடசாலைக்கே சென்றதில்லை. 7.4 வீதமானோர் மட்டுமே ஆரம்ப கல்வியை பெற்றிருக்கின்றனர். அத்தோடு பெருந்தோட்டங்களில் அதிகமாக பெண்களே எழுத்தறிவு இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். 56.8 வீதமான பெண்கள் பாடசாலைக்கே சென்றதில்லை. இதை ஆண்களுடன் ஒப்பிடும் போது 26.8 வீதம் அதிகமாகும்.

ஒரு வருடத்தில் க.பொ.த சாதாரண தரத்தை சித்தியடைபவர்களில் 1.9 வீதமானோர் ஆண்களாகவும் 0.6 வீதமானோர் பெண்களாகவும் இருக்கின்றனர். இதில் 0.1 வீதம் ஆண்கள் மட்டுமே க.பொ.த உயர்தரத்திலும் மேற்படிப்பிலும் சித்தியடைகின்றனர். பெண்கள் எவரும் இவ்வுயரத்தை எட்டுவதில்லை. எனவே பெருந்தோட்டங்களில் கல்வியறிவு  எவ்வளவு மோசமாக இருந்திருக்கின்றதென்பதை இதன் மூலம் அறிய  முடிகிறது. பொதுவாக பெருந்தோட்டங்களில்  வசிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒவ்வொரு தலைமுறையும் கல்வியறிவு நிரம்பப் பெறாத தொழிலாளர்களாகவே வளர்ந்து வருகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் ஆசிரியர் தொழிலிலிருந்தால் அவர்களுடைய சந்ததியும் ஏதேவொரு உயர்தொழிலை நோக்கியே நாடும்.

ஆனால் எமது தலைமுறையினர் தொழிலாளர்களாகவே அடிமைப்பட்டு போனதால் அவர்களுடைய சந்ததியினரையும் மீட்க முடியாது போகிறது. இதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களை குறைகூற முடியாது. தொழிலாளர்களின் உழைப்பை மட்டும்உறிஞ்சிக் கொண்ட நிறுவனங்கள், அவர்களை வைத்து அரசியல் செய்த தலைவர்கள் அவர்களின் கல்வி மற்றும் தொழில் துறைகளில் அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இன்றும் கூட பெருந்தோட்டங்களிலுள்ள  காரியாலயங்களில் அதிகம் தொழில் புரிவது பெரும்பான்மையினராகவே இருக்கின்றனர். ஆனால் அவர்களை விடவும் கல்வித் தரமுடையவர்கள் மலையகத் தோட்டப் புறங்களில் இருப்பதை முகாமைத்துவம் மறந்து விடுகிறது.

இவ்வாறு முகாமைத்துவங்களே தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு சமூகத்தில் தொழில் அந்தஸ்தை வழங்க மறுப்பது கேவலமான விடயம். அண்மையில் வழங்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின்  பிள்ளைகளுக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள் 6000 ரூபா வேதனத்தில் அவர்களை இன்னும் அடிமைப்படுத்தியுள்ளது.  இதைப் பற்றி எந்தவொரு மலையகத் தலைவரும் வாய் திறப்பதில்லை. இதை காலங்காலமாக அனுபவித்து வரும் பெருந்தோட்ட தமிழர்களும் உணர்ந்து கொள்ளவில்லை. எதையுமே இவர்கள் முழுதாக போராடிப் பெறுவதில்லை. கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாய்மூடி  விடுகின்றார்கள். இந்நிலை இனியாவது மாற்றப்பட வேண்டும்.

 உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் கல்வித் தரம் மிகவும் சிறப்பானது. ஆனால் பெருந்தோட்டங்களின் கல்வித் தரத்தை தனித்து நோக்கும் போதே அதன் பிரிவினைகள் தென்படும். இன்று பெருந்தோட்டங்களில் அதிகமான உயர்தர வகுப்பைக் கொண்ட பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்குத் தரமான ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்களா  என்பதையே நோக்க வேண்டும். புள்ளிவிபரங்களுக்காக பாடசாலையின் தரங்கள் உயர்த்தப்பட்டாலும் வளப் பகிர்வில் பாரபட்சமான சூழ்நிலையே காணப்படுகிறது. இன்று கலை, வர்த்தக பிரிவுகளைக் கொண்டியங்கும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் சில, ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வருகின்றன.

பின்பு எவ்வாறு குறைந்த பட்சம் ஒரு தொழிலுக்கேற்றவாறான தகைமையினையாவது பெற்றுக் கொள்ள முடியும். சமீபத்திய ஒரு ஆய்வின் படி 436 பெருந்தோட்ட பாடசாலைகளில் 68891 சிறுவர்கள் கல்வி பயில்கின்றனர். ஆனால் அப்பெருந்தோட்டங்களில் வசிக்கும்மொத்த சிறுவர்களின் தொகை 91225 ஆகும். அவ்வாறெனின் 66 வீதமான சிறுவர்களே பாடசாலைக்கு செல்கின்றனர். பெண்களில் 41 வீதமானோர் 5 - 10 வயதுடையவர்களாகவும் 39 சதவீதமானோர் 11 - 15 வயதுடையவர்களாகவும் இருக்கின்றனர். இதன் மூலம் கல்வியறிவற்ற பெரும்பாலான சிறுவர்கள் பெருந்தோட்டங்களில் இருப்பதை அறிய முடிகின்றது.
இவர்கள் எதிர்காலத்தில் எந்தவொரு அரச தொழிலுக்கும் செல்ல முடியாதவர்களாக தலைநகருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் செல்ல வேண்டியேற்படுகிறது. இன்றும் கூட தேயிலைத் தொழிற்சாலைகளில் கடமைபுரியும் ஆண், பெண்களில் பெரும்பாலானோர் உயர்தரம், சாதாரண தரம் கற்றவர்களாக இருக்கின்றனர். போதிய தொழில்வாய்ப்புகளும் குடும்ப வறுமை நிலையும் இவர்களை இத்துறை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. கிராமப் புறங்களில் காணப்படும் தொழில் ஊக்குவிப்பு முயற்சிகள், சுயதொழில் வாய்ப்புகள் என்று எந்தவொரு வரப்பிரசாதமும் பெருந்தோட்டங்களுக்கு இல்லை.

திரும்பிப் பார்க்குமிடமெல்லாம் தேயிலையே தெரிவதால் இவர்களும் தேயிலைத் தோட்டங்களுக்கே சென்று விடுகின்றனர். இன்றும் ஒருசில பிள்ளைகள் உயர்தரம் கற்றாலும் எல்லோரும் பல்கலைக்கழகம், கல்லூரி செல்வதில்லை. அவ்வாறு செல்லாதவர்கள் அத்தோடு தமது கல்வியை முடித்துக் கொள்கின்றனர். அவ்வாறானவர்கள் பெரும்பாலானோர் இன்று தலைநகரில் அடிமை சம்பளத்திற்கு தம் குடும்ப உறவுகளை விட்டு தொழில்புரிய வேண்டிய நிலையிருக்கிறது. இதையும் மீறி வெளிநாடுகளுக்கு செல்வோரில் அதிகம் பெண்கள் உயிரோடு திரும்பாத நிலையில் இதுவும் அவர்களுக்கு சாத்தியமற்றதாக போய்விட்டது. எனவே பெருந்தோட்ட கல்வி சமூகத்தை தரமுடையதாக மாற்றுவது யார்? பெற்றோர் உழைக்கும் பணத்தில் பிள்ளைக்கு உணவு, உடைகள் என கௌரவ நிலையைக் கொடுத்தாலும் உயர்கல்விக்கு செலவழிக்கும் வகையில் அவர்களுடைய வருமானம் அமையவில்லை. பெருந்தோட்டங்களில் முறையான வளப்பகிர்வு, ஆளணி பகிர்வு என்பன மேற்கொள்ளப்படுமிடத்து ஓரளவு கௌரவ நிலையினை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அடிமட்ட தொழில் நிலைமைகளை மட்டுமே அரசியல் வாதிகள் பெற்றுக் கொடுக்கும் நிலையில் நாம் என்ன செய்ய...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக