கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2016

மலையகத்தில் நல்லாட்சி ?

நல்லாட்சி என்ற பெயரில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்பு மலையகத்திலும் ஆட்சி மாற்றங்கள் மலையக மக்கள் வாழ்வியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் உருவாக்கப்பட்ட ‘பூல் பேங்’ (கணிடூடூ ஆச்ணடு) என்று அழைக்கப்பட்ட அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் மலையக இளைஞர், யுவதிகளுக்கு குறிப்பாக பெருந்தோட்ட தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு கிடைக்கப்பெற்ற தொழிற்பயிற்சிகள் முடங்கிப்போயுள்ளமை நல்லாட்சியின் செயலாக ஏற்றுக்கொள்ள முடியும்.
இந்த தொழிற்பயிற்சி நிலையமானது, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இயங்கிவந்தாலும் அடிப்படையில் இது சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டுவந்தது. இதுவே அடிப்படைப் பிரச்சினை. இந்த சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றமானது மலையகத்தில் மிகப்பெரும் தொழிற்சங்கமாக அடையாளப்படுத்தப்படும் இ.தொ.கா. வினால் மத்திய அரசில் பெற்றுக்கொள்ளப்படும் அமைச்சின் கீழேயே செயற்பட்டு வந்தது. அதில் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமும் ஒன்றாகும். கடந்த காலங்களில் இது ஆறுமுகன் தொண்டமான் வகித்துவந்த கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்தது. தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்பு இது திகாம்பரத்தின் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின்கீழ் செயற்பட்டு வருகின்றது. அரசியலில் இவர்கள் இருவருக்கும் இடையில் காணப்படும் போட்டித்தன்மையால் இன்று இந்த தொழிற்பயிற்சி நிலையம் யாருக்கும் பயன்படாத  வகையில் செயற்படாமல் இருக்கின்றது. இதற்கு அமைச்சர் திகாம்பரம் தரப்பில், இத்தொழிற் பயிற்சி நிலையத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட பெயரான ‘பூல்பேங்’  என்றே அடையாளப்படுத்தப்பட வேணடுமென கூறப்படுகிறது.

ஆக மலையக தலைவர்களின் தற்போதைய பிரச்சினை தொழிற்பயிற்சி நிலையம் மூடப்பட்டதல்ல. தொழிற்பயிற்சி நிலையம் யாரின் பெயரில் இயங்குகிறது என்பதேயாகும். அது சிறந்த அரசியல்வாதிகளுக்குரிய பண்பல்ல என்பது அவர்களுக்கே தெரியும். தற்போது முடங்கிப்போயிருக்கும் இத்தொழிற்பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகளால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் பெற்றுவந்த தொழிற்பயிற்சி எனும் வரப்பிரசாதம் முற்றாக செயலிழந்து போயிருப்பதை இவர்கள் அறிவார்களா? பெருந்தோட்ட பகுதிகளில் தொழிற்பயிற்சிகள் என எதுவும் கிடையாது. இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையால் நடத்தப்படுகின்ற தொழிற்பயிற்சிகளுக்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக செலுத்தப்படவேண்டும். ஆனால் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தால் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சிகள் முற்றிலும் இலவசமானதுடன் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அதே தொழிற்பயிற்சி நடைமுறைகளே பின்பற்றப்படும். 1970 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சௌமியமூர்த்தி தொண்டமானால் தச்சு தொழில், மேசன் தொழில் மற்றும் கணினி தொழிற்பயிற்சி என்பன அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் 16 வகையான துறைகளில் தமிழ் மொழிமூலமான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவற்றில 10 தொழிற்பயிற்சிகள் தேசிய தொழிற்தகைமையினை கொண்டதாகும்.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தின் முக்கிய நோக்கமே பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி மூலம் தொழிற்பயிற்சியினை வழங்குவதாகும். ஏ தரத்தினை பெற்ற இத்தொழிற்பயிற்சி நிலையமானது வருடமொன்றுக்கு 500 வரையான இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சியினை வழங்குவதோடு, மேலதிக பயிற்சிகளுக்கு தொழில் நிலையங்களில் அனுமதியையும் பெற்றுத் தருகிறது. இத்தொழிற்பயிற்சிகளில் குறிப்பிட்ட சில பாடநெறிகளுக்கு இந்திய அரசின் உதவியுடன், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசனையில் இந்திய விரிவுரையாளர்கள் அழைக்கப்பட்டு பாடநெறிகளுக்கு பொறுப்பாக்கப்பட்டிருந்தனர். மேலும் தூர பிரதேசங்களிலிருந்தும் வருகைதரும் இளைஞர், யுவதிகளுக்கு பாதுகாப்புடனான இலவச தங்குமிடவசதி, உணவு என்பனவும் ஏனையோருக்கு இலவச பஸ் கட்டணங்களும் வழங்கப்பட்டன. இவ்வாறு பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிறைவானதொரு பயிற்சியினை பெற்றுத்தந்த தொழிற்பயிற்சி நிலையத்தினை மூடி வைத்திருப்பது நியாயமானதா? குறிப்பிட்ட நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெயர் இவர்களை எந்தரீதியில் தாழ்வு பெறச் செய்யப்போகிறது?

இதன்மூலம் பயன்பெறுபவர்கள் இவர்களை நம்பி வாக்களித்த மக்களின் பிள்ளைகள் என்பதை மறந்து விட்டார்களா? ஏற்கனவே டிக்கோயாவில் இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிளங்கன் வைத்தியசாலைக்குரித்தான கட்டிடங்கள் இதே பெயர் வைப்பதில் ஏற்பட்ட சர்ச்சையினால் மிக நீண்ட காலமாக முழுமையான மக்கள் பாவனைக்கு திறந்து விடப்படாமல் இருக்கிறது. இதன்மூலம் தொழிலுக்காக காத்திருப்போரும் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உருப்படியானதொரு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க முடியாதவர்கள் தங்களுடைய அரசியல் போட்டிக்காக இலவசமாக கிடைத்த சுயதொழில் பயிற்சியையும் இடைநிறுத்தி வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? ஏற்கனவே ஆசிரியர் உதவியாளர் நியமனம் என்ற போர்வையில் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகள் ஏமாற்றப்பட்டனர். வழங்கப்பட்ட நியமனத்தில் 200 பேர் தொழிலை விட்டு இடைவிலகியுள்ளனர். ஏன் அவர்கள் இடைவிலகினர் என்று ஆராய்ந்தால் அவர்களின் வறுமை நிலையே முன்நிற்கும். தற்போது வழங்கப்படும் வேதனத்தில் அவர்கள் என்னதான் செய்ய முடியும்? வெகுதூரம் சென்றுகற்பித்து வரும் இவர்களுக்கு இவ்வேதனம் பஸ் கட்டணத்திற்கு மட்டுமே போதுமானது?

இவ்வாறு வறுமையில் இருகச்க மேலும் வறுமைக்கு இவர்கள் ஆளாக்கப்பட்டுவிட்டார்கள். தொழிற்பயிற்சியினை இலவசமாக வழங்கினாலாவது சுயதொழில் செய்தாவது பிழைத்துக் கொள்வார்கள். ஆனால் அங்குமில்லாமல், இங்குமில்லாமல் இன்று இரண்டு அரசியல் போட்டிக்குழுவிடம் சிக்கிக் கொண்டு சிதைந்து போவது மட்டுமே மிச்சம். கடந்த 2 வருடகாலமாக உள்வாங்கப்படாத மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பபட்டிருக்கின்றன. ஆனால் வயதெல்லை 23 வயதிற்குட்பட்டிருப்பதால், கடந்த இரண்டு வருடகாலம் காத்திருந்த வயதெல்லை தாண்டிய எவரும் விண்ணப்பிக்க முடியாது. இது அரசியல் வாதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களை தெரிவு செய்த மக்களுக்கு மட்டும் உரித்தான பாதிப்பு.
சனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக