கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2016

இலங்கையில் கைதான 50000 பேர்

இலங்கை பொலிஸ் திணைக்களம் கடந்த வருடம் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான விபரங்களை அண்மையில் வெளியிட்டிருந்தது. அரசியல் தீர்வு விடயங்களில் காணப்படும் அக்கறை, சமூக ஒழுக்க விடயங்களில்  இல்லையென்பதையே இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட குற்றங்களின் அளவை குறைப்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது. இவ்வாறு இடம்பெறுகின்ற குற்றங்கள் உள்ளூர் மக்களிடம் மட்டுமன்றி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் மீதும் மேற்கொள்ளப்படுவதால் சர்வதேச ரீதியில் இலங்கை மீதான நம்பிக்கையீனம் வெளிப்படுவதற்கு வாய்ப்பாக அமைகின்றது.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட கொலைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் தற்கொலைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாரினால்  இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. கடத்தல் சம்பவங்கள் கூட அதிகம் பதிவாகியுள்ளன. தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் என்பன அதிகளவில் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் கவனயீனம் ஒரு காரணம். கடந்த காலங்களில் கடத்தல் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்த சுங்க அதிகாரிகள் கூட கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
 இதேபோலவே வெலே சுதா போன்ற போதைப்பொருள் கடத்தல் காரர்களும் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர். ஆனால் குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை. இலங்கையில் போதைப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியும் இதனால் போதைப்பொருள் விற்பனையாளர்கள் பெறுகின்ற இலாபமும் உச்ச அளவில் இருப்பதாலேயே அதிகமான கடத்தல்களுக்கு இலங்கை மத்தியஸ்தமாக இருக்கின்றது. 2014 ஆம் ஆண்டு 312 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் 23,331 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 2013 இல் 317 கிலோ கிராம் ஹெரோயின் கடத்தப்பட்டிருப்பதோடு இவை தொடர்பில் 23,218 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு 46 கிலோ கிராம் அளவிலான போதைப்பொருட்களே கைப்பற்றப்பட்டிருந்தாலும் 26,492 பேர் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதன்மூலம் போதைப்பொருட்களின் கடத்தல் அளவு குறைக்கப்பட்டாலும் கடத்துபவர்களின் எண்ணிக்கையில் மாற்றமேற்பட்டிருக்கவில்லை. எனவே அதிகமான போதைப்பொருள் தரகர்களும் அதற்கான சந்தைகளும் பாவனையாளர்களும் இலங்கையில் காணப்படுகின்றமையே இதற்கான காரணமாகும். எனவே போதைப்பொருட்களுக்கான தேவை, கேள்வி இலங்கையில் குறையும் போதே குற்றங்களையும் குற்றவாளிகளையும்  குறைக்க முடியும் என்பதை புரிதல் அவசியம்.

அதேபோலவே 2014 ஆம் ஆண்டு 545 கொலைகளும் 2015 ஆம் ஆண்டு நவம்பர்  30 ஆம் திகதி வரை 447 கொலைகளும் இடம்பெற்றிருப்பதாகவும் இதன் படி 2014 ஐ விட 2015 இல் கொலைக் குற்றங்கள் குறைந்திருப்பதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் மிக மோசமான கொலைச் சம்பவங்கள் 2015 ஆம் ஆண்டு சமூகத்தில் இடம்பெற்றிருந்தமையை அனைவரும் அறிந்திராமல் இல்லை. யாழ்ப்பாணத்தில் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வித்தியா, வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சேயா சதவுமியின் கொலை மற்றும் காவத்தை பெண் படுகொலை என்பன நாட்டையே உலுக்கிய மிக மோசமான கொலைச் சம்பவங்களாக பதிவாகியிருந்தன.

 ஆதலால் கொலைச் சம்பவங்கள் குறைந்துவிட்டது என பெருமைப்பட்டுக் கொண்டாலும் இடம்பெற்ற கொலைகள் மிகவும் மோசமானவை என்பதை மறந்துவிடக்கூடாது. குற்றவாளிகள் இனங்காணப்பட்டாலும் இழுபட்டுவரும் விசாரணைகளால் தண்டனைகள் தாமதமாகிச் செல்கின்றன. எனவே தொகைகளைக் கொண்டு ஒரு சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள முடியாதென்பதை விளங்குதல் அவசியம். இவற்றோடு 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற குற்றங்களில் மிகவும் கேடான விடயமாக பெண்கள் மீதான துஷ்பிரயோகச் சம்பவங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் தினந்தோறும் எங்கோவோரிடத்தில் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணமேயுள்ளன.

இவற்றில் ஒரு சில சம்பவங்கள் வெளிவந்தாலும் பெரும்பாலும் அதிகமான சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. இதன்படி 2014 ஆம் ஆண்டு 2,008 துஷ்பிரயோகச் சம்பவங்களும் 2015 ஆம் ஆண்டு 1,854 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறு 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற துஷ்பிரயோகச் சம்பவங்களில் 1,501 சம்பவங்கள் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றில் 1,209 சம்பவங்கள் அவர்களது விருப்பத்துடனேயே இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் வயது என்ற ஒரு அடிப்படையில் மாத்திரம் குற்றமாக இனங்காணப்படுகின்றது. ஒருவேளை மேற்குலக கலாசாரத்தைப் போல் இலங்கையில் பெண்களும் ஆண்களும் திருமணத்திற்கு முன்பான உறவினை விரும்புகின்றார்களா? என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

சில துஷ்பிரயோகச் சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்களாலும் அல்லது தாயாரின் துணையுடனோ மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இன்றைய இளந் தலைமுறையினர் எதை விரும்புகின்றனர்? அவை கிடைக்காத சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதைப் பொறுத்தே இவ்விடயங்களுக்குத் தீர்வு காண முடியும். பெற்றோரும் பாடசாலைகளும் சமூகமும் இன்னும் அதிகமான நன்நடத்தைகளை பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டிய தேவையுள்ளது என்பதையே இவ்விடயங்கள் எமக்கு சுட்டிக் காட்டுகின்றன என்பதோடு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மேலும் பொலிஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தற்கொலை விடயங்களில் 2014 ஆம் ஆண்டு 2,484 ஆண்களும் 660 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர். அதேபோல 2015 செப்டெம்பர் 30 வரையான காலப்பகுதியில் 1,856 ஆண்களும் 519 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறான  விடயங்கள் பெரும்பாலும் குடும்ப வன்முறைகளினாலேயே அதிகம் ஏற்படுகின்றன. அண்மைக் காலங்களில் காதல் தோல்வி மற்றும் பாடசாலை மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதற்காகவும்  தற்கொலைகளுக்கு முயற்சிக்கும் சூழல் உருவாகியுள்ளது. பேஸ்புக்கில் லைக் வாங்குவதற்காக போலியாக மேற்கொண்ட முயற்சி கூட இறுதியில் தற்கொலையில் முடிந்த சம்பவங்களும் இலங்கையில் ஏற்பட்டுள்ளதை அறியாமலில்லை.

 குடும்பத் தகராறு மற்றும் மனவிரக்தி என்பன காரணமாகவே அதிகமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே சமூக மாற்றம் மற்றும் உளவியல் ரீதியாகவே இப்பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மிக முக்கிய விடயமாக இருப்பது விபத்துகளாகும். இவற்றில் வீதி விபத்துகள் இலங்கையை அதிகம் பாதிக்கும் விடயங்களாக இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு 2,260 விபத்துகளும் 2,440 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட 2,566 விபத்துகளில் 2,771 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மோட்டார் வாகன விபத்துகளில் மட்டும் உயிரிழந்தோர் 1,000 பேர்.

பெரும்பாலும் இவ்விபத்துகளுக்கு வீதி ஒழுங்கை முறையாக கடைப்பிடிக்காமையே முக்கிய காரணம். பொலிஸாரும் எவ்வளவு இறுக்கமான சட்ட நடைமுறைகளை கொண்டு வந்தாலும் விபத்துகளைத் தடுக்க முடியாமலிருக்கின்றது. கடந்த வருடம் நவம்பர் 1 - 30 வரை 60,336, டிசம்பர் 1 -11 வரை 33,489 சம்பவங்கள் வீதி விதிமுறைகளை மீறியதாக பதிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதிக வேகம், வாகன அதிகரிப்பு என்பனவும் விபத்துகளுக்கு தூண்டுதலாக இருக்கின்றன. கடந்த வருடம் மிக கோரமான விபத்துகளை இலங்கை சந்தித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கையை அச்சுறுத்தும் இன்னுமொரு முக்கிய விடயம் கஞ்சா, உள்நாட்டு உற்பத்தியான கஞ்சா இன்று முக்கிய போதைப் பொருளாக இலங்கையில் மாற்றமடைந்து வருகிறது. எத்தனையோ கஞ்சா தோட்டங்கள் இதுவரையும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தடுக்க முடியவில்லை. இலங்கையில் 2014 ஆம் ஆண்டு 19,644 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் 43,683 பேர் இவை தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 2015 இல் 6,569 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் 50,000 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  இதன் மூலம் கஞ்சாவுக்கு இலங்கையிலுள்ள கேள்வியினை அறிய முடியும்.

மருத்துவத் தேவைக்காக கஞ்சா பயிர்ச் செய்கைக்கு அனுமதியளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதாக சுகாதார அமைச்சர் கூறியிருக்கும் நிலையில், இலங்கையில் கஞ்சா பாவனையாளர்கள் அதிகரித்திருப்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அத்தோடு நீரில் மூழ்கி மரணித்தோரின் தொகை 2014 இல் 859 ஆகவும் 2015 இல் முதல் ஒன்பது மாதங்களில் 688 ஆகவும் காணப்படுகின்றன. இவற்றில் அதிகமான குழந்தைகள் கடந்த காலங்களில் பாதுகாப்பற்ற கிணறு, பெற்றோரின் கவனயீனம் என்பவற்றால் உயிரிழந்தமையையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

எனவே வருடந்தோறும் அறிக்கைவிடுவதில் இருக்கும் அக்கறை அக்குற்றங்களை குறைப்பதிலும் இருக்க வேண்டும். இலங்கையில் இன்னும் முழுமையான பாதுகாப்பு உணரப்படவில்லை. என்று அறிக்கைகளில் இருக்கும் தொகை மறை விகிதத்தில் செல்கின்றதோ அப்போதே ஓரளவு பாதுகாப்பை உணர முடியும். இலங்கையில் ஏற்படுகின்ற அபிவிருத்திகள், சமூக மாற்றங்கள், கலாசார வளர்ச்சி என்பன ஆரோக்கியமாக அமையாத பட்சத்தில் எதிர்வரும் ஆண்டில் பொலிஸ் திணைக்களம் வெளியிடப்போகும் அறிக்கையில் அதன் பாதிப்பை அறியக்கூடியதாக இருக்கும்.

க.பிரசன்னா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக