கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2016

கூட்டு ஒப்பந்தம் மிகப்பெரிய சாபக்கேடு

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தி அண்மையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆனால் மலையக வாழ்வியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. மலையக மக்கள் இன்னும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தினை குறிப்பிடமுடியும். ஆனால் மலையகத் தலைமைகளின் கொண்டாட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. மலையகத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசியலை கலந்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கும் நிலையில் இவர்களின் கொண்டாட்டங்கள் மக்களை இன்னும் வேதனைப்படுத்தியிருக்கிறது.
தைப்பொங்கலுக்காவது  மலையகத் தொழிலாளர்களுக்கு விடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்து போனதே மிச்சம். அண்மையில் புஸல்லாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தராவிட்டால், தோட்டங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கோரியிருந்தார். இவர் 2001- 2004 ஆம் ஆண்டு ஐ.தே.க. அரசாங்கத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் பெருந்தோட்டங்களை கையேற்கவும் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கான முதலீட்டாளர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவ்விடயம் அரசியல் பேச்சா? அல்லது அர்த்தமுள்ள பேச்சா என்பதே கேள்வி.

தற்போதைய (நல்லாட்சி) அரசாங்கத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருக்கின்ற நவீன் திசாநாயக்க, பெருந்தோட்டங்கள் அனைத்தும் அரசதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரான கபீர் ஹாசிமின் கீழ் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவ்வாறெனின் பெருந்தோட்டங்களின் அபிவிருத்தியில் கரிசனை கொள்ளப் போவது நவீன் திசாநாயக்கவா? அல்லது கபீர் ஹாசிமா என்பதற்கே முதலில் தீர்வு சொல்ல வேண்டும். அவ்வாறெனின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு என்பது என்ன? பெருந்தோட்டங்கள் எவ்வமைச்சின் கீழ் செயற்படும்? தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் தலையிடப்போவது யார்? உயர்கல்வி அமைச்சரின், தொழிலாளர்கள் மீதான நிலைப்பாடு சாத்தியமாகுமா?

பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கடந்த பொதுத் தேர்தலின் போது, தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளவுயர்வை பெற்றுத்தருவதாக பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன. இதன்படி தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 620 ரூபாவுக்கான இணக்கமே எட்டப்பட்டது. 1000 ரூபா என்பதை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்திருந்தது. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் கூறப்பட்டது போல 2500 ரூபா அதிகரிப்பை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை ஜனவரி முதல் 100 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்திருந்தது. இத்தீர்மானமாவது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும்.

முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு கம்பனிகள் இலாபத்தில் இயங்கவில்லையென கூறுகின்றனர். இலங்கையில் 400,000 சிறு தேயிலை தோட்ட முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். இங்கு தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்ட 500 ரூபாவும் மேலதிக கிலோவுக்கு 40 ரூபாவும் வழங்கப்படுகிறது. ஒருநாளைக்கு 15 கிலோ தேயிலையை கட்டாயமாக பறித்தல் வேண்டும். அவ்வாறாயின் 25 கிலோ தேயிலையை ஒருவர் பறித்தாலே 1000 ரூபா என்ற இலக்கை எட்ட முடியும். இந்த திட்டத்தை முதலாளிமார் சம்மேளனம் பரிந்துரைத்தாலும் அது அவ்வளவு சாத்தியமானதல்ல என்பது தொழிலாளர்களுக்கு தெரியும். பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் ஒருநாளைக்கு கட்டாயம் 18 கிலோ தேயிலையை பறித்தல் வேண்டும்.

ஆனால் மோசமான காலநிலை காணப்பட்டால் தொழிலாளர்களினால் 12-14 கிலோக்களையே பறிக்க முடியும். தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமையால் இந்நிலைமை தோன்றியுள்ளது. எனவே முதலாளிமார் சம்மேளனத்தின் இந்தத் திட்டம் நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால், இதற்காக தொழிலாளர்களின் சம்பள விடயங்களில் விட்டுக்கொடுப்பைச் செய்ய முடியாது. தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் எங்களுக்கு அதிகாரம் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டவர்களே இன்று இதைப்பற்றி வாய்திறப்பதே இல்லை. தற்போது நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முக்கிய கட்சியான இ.தொ.கா.வின் ஆறுமுகன் தொண்டமான் பெற்றுள்ள நிலையில் மலையகத்தில் நிலவும் போட்டி அரசியலில் இன்னும் பரபரப்பு உச்சம் கொண்டுள்ளது.
அமைச்சர் பதவி பெற்றாலும் பழனி திகாம்பரத்தால் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தர நிலைகளை உயர்த்த முடியாது என்ற கோஷத்துக்காகவே, இ.தொ.கா. இதுவரையும் பதுங்கியிருந்து செயற்படுவதாக தெரிகிறது. அதுபோலவே அமைச்சர் பதவியேற்றதும் இவ்விடயத்தை மறந்தே போனார் திகாம்பரம். இவ்வாறு அரசியல் ரீதியாக பெருந்தோட்ட மக்களின் கூட்டு ஒப்பந்தம் இழுபட்டுள்ளதால் இவ்விடயம் சாத்தியமற்றதாக இருக்கின்றது. இலங்கையில் அதிகம் உழைத்துக் கொடுத்தும் முன்னேறாதவர்கள் நாங்கள் மட்டும்தான்.

மாறி மாறி வரும் அரசாங்கங்களும் இவர்களை பகடைக் காய்களாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். 22 பெருந்தோட்டக் கம்பனிகளில் தொழில்புரியும் சுமார் 180,000 தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மிகப்பெரிய சாபக்கேடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக