கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 மார்ச், 2016

பகிடிவதைகள்: நட்பா? நோயா?

உலகளவில் மட்டுமல்லாது இலங்கையிலும் பகிடிவதை என்பது பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் என சகல இடங்களிலும் அதிகரித்த நிலையில் இருக்கின்றன. பகிடிவதை தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில் இன்றும் கூட பகிடிவதை என்பது முறியடிக்கப்பட முடியாத ஒரு செயலாகவே இருக்கின்றது. பகிடிவதை என்பது கல்வி நிறுவனங்களில் இணையும் புதிய மாணவர்கள், பழைய மாணவர்களால், உடல், உள ரீதியாக துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை உள்வாங்குவதற்காகச் செய்யப்படும் இவ்வாறான நடவடிக்கையால் பல விபரீதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் காரணமாக உயிரிழப்புகள், தற்கொலைகள் என்பனவும் இடம்பெற்றுள்ளதை மறுப்பதற்கில்லை. அண்மையில் பேராதனை  பல்கலைக்கழக விடுதியிலிருந்து 130 மாணவிகள் நிர்வாகத்திற்கு அறிவிக்காமல் வெளியேறிச்சென்றுள்ளமை பகிடிவதையின் விளைவாக இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு கனவுகளோடும் எதிர்கால இலட்சியத்துடனும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு காலடியெடுத்து வைக்கும் மாணவர்கள், இவ்வாறு பகிடிவதை எனும் மிகப்பெரும் அவலத்தை எதிர்நோக்க முடியாமல் திணறுகின்றனர். இது காலங்காலமாக
இடம்பெற்றுவரும் சம்பிரதாயமாக மாறிப் போயிருக்கின்றமை ஒரு முட்டாள் தனமான விடயமாகும்.

ஆரம்ப காலங்களில் பகிடிவதையென்பது புதியவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக அமைந்திருந்தாலும் தற்போது அது வன்முறையாக கொள்ளப்படுகிறது. இன்று புதிதாக கல்வி நிறுவனங்களுக்குள் நுழைபவர்களுக்கு பகிடிவதை என்ற பெயரில் கொடுக்கப்படும் வேதனையான சோதனைகள், நாளை வேறொருவருக்கு, இந்தப் புதியவர்களால் வழங்கப்படும். இது தொடர்ச்சியானதொரு சம்பவமாக இருப்பதால் தடுக்க முடியாமலிருக்கிறது. பகிடிவதைகள் பொதுவாக மூன்று வகைகளில் முன்னெடுக்கப்படுகின்றது. உளரீதியான, உடல் ரீதியான, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பவனவாக அவை அமைகின்றன.

இலங்கையில் அதிகமாக பல்கலைக்கழகங்களில் இவ்வாறான பகிடிவதைகள் அதிகம் இருக்கின்றன. பல்கலைக்கழகம் செல்லும் அனைத்து மாணவர்களும் வசதி படைத்தவர்களாக இருப்பதில்லை. இவற்றில் ஏழ்மையான மாணவர்களும் இருக்கின்றனர். இவர்கள் பட்டம்பெற்று தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் அதிகமானோர் இருக்கின்றனர். ஆனால் பகிடிவதைகள் சிலவேளைகளில் இவர்களின் வாழ்க்கை கோலத்தையே மாற்றியமைத்து விடும். இது ஏன் எதிர்காலத்தில் பட்டதாரிகளாக சமூகத்தில் பிறரை வழிநடத்திப் போகும் பல்கலை மாணவர்களான இவர்களுக்குத் தெரியவில்லை. எதிர்காலத்தில் இவர்களுடைய பிள்ளைகளும் இவ்வாறானதொரு நிலைமையை எதிர்நோக்குவார்கள் என்பதை இவர்கள் மறந்து விட்டார்களா?

இன்றைய சிரேஷ்ட பல்கலை. மாணவர்கள் புதுமுக மாணவர்களிடம் பாலியல் ரீதியான தாக்குதல்களையே அதிகம் மேற்கொள்ள விரும்புபவர்களாக இருக்கின்றனர். முன்னைய தரவுகளின் படி சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதையினால் இதுவரையும் 15 மாணவர்கள் உயிரிழந்தும் இருவர் தற்கொலை செய்துமுள்ளனர். 25 பேர் அங்கவீனர்களாகவும் 6 பாலியல் துஷ்பிரோயங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் 6000 க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டே வெளியேறி இருக்கின்றனர். தற்போது பல்கலைக்கழகக் கல்விபயில்பவர்கள் பட்டம்பெற்று ஒரு ஆசிரியராக கடமைபுரிகையில் அவருடைய பகிடிவதை அனுபவங்களை மாணவர்களுடன் பகிரும் போது மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களை எமன்போல பார்க்கும் நிலை உருவாகி வருகிறது.
வெவ்வேறு சமூகம் மற்றும் பொருளாதார பின்புலங்களைக் கொண்டவர்களாகவே பல்கலை. மாணவர்கள் இருக்கின்றனர்.

இவர்களிடையே ஒற்றுமையையும் நட்புறவையும் ஏற்படுத்துவது பல்கலையின் ஆரம்பகால நோக்கமாகவிருந்தாலும் இன்று அது நெறிபிறழ்ந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. பகிடிவதைக்காரர்களால் பகிடிவதை இருவழிகளாக மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று பொதுவாகவும் மற்றொன்று தனிபட்ட ரீதியாகவும் இருக்கின்றது. பொதுவான பகிடிவதை அதிக நேரத்திற்கும் அதிகமான பகிடிவதைகாரர்களாலும் மேற்கொள்ளப்படும் வதையாக இருக்கின்றது.

 இங்கு கட்டாயப்படுத்தப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் பல்வேறு விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சில பல்கலைக்கழகங்களில் மீன் முற்களை உண்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால் பெரும்பாலானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையிலும் சிலர் தற்கொலை அல்லது அங்கவீனர்களாக மாற்றப்படும் சாத்தியமும் இருக்கின்றது. சிலவேளைகளில் சோற்றுக்கலவையை உண்பதற்கும் இனிப்புகள் அல்லது முட்டையை ஒருவர் வாயிலிருந்து இன்னொருவர் வாய்க்கும் மாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவை அதிகமாக இரவு நேரங்களிலேயே இடம்பெறுகின்றன. மாணவிகள் பல்வேறு வகையிலான பாலியல் செயற்பாடுகளை மேற்கொள்ள சிரேஷ்ட மாணவிகளால் தூண்டப்படுகின்றனர். விடுதியில் இவர்கள் மசாஜ் நிலையங்களில் ஓயில் மசாஜ் செய்பவர்களுக்கான பாத்திரத்தை ஏற்க வேண்டிய நிலையும் இருக்கின்றது.

தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் பகிடிவதைகள் உடல் மற்றும் உளரீதியான பாதிப்பினை அதிகம் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. பெரும்பாலும் இவை பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் அல்லது ஏனைய கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இப் பகிடிவதைக்கு உள்ளாவோர் முழுமையாக ஆடைகள் களையப்பட்டு இயற்கைக்கு மாறான அல்லது துன்பகரமான பாலியல் செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுவர்.

இவ்வாறு உடல் மற்றும் உளரீதியாக துன்பப்படுவதை அமர்ந்து இரசிப்பவர்களாக சிரேஷ்ட மாணவ பகிடிவதையாளர்கள் இருக்கின்றனர். இங்கு ஆண், பெண் என்று பகிடிவதையாளர்களில் வித்தியாசமில்லை. ஆனால் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவது பெண்களில்  சற்று குறைவாகும். இவ்வாறான விடயங்களை கேள்விப்படுமிடத்து பகிடிவதைக்காரர்கள் ஏன் உருவாகின்றனர் என்பதை அறிய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதிகமான பகிடிவதைகாரர்கள் கல்வியறிவற்ற மற்றும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் அல்லது குடும்பபின்புலம் மோசமானதாக இருத்தலும் ஒரு காரணம்.

அதிகமான பகிடிவதையாளர்கள் அவர்களுடைய சிறுவயதில் பலவந்தமான துஷ்பிரோயகங்களுக்கு உட்பட்டவராக இருத்தலும் அந்நினைவுகள் அவர்களுடைய ஆழ்மனதில் இன்னும் மோசமாக பதிந்திருப்பதும் ஒரு காரணம். அதிகமான நேரங்களில் இவர்கள் தம்முடைய எதிர்தரப்பினரையே குறி வைக்கின்றனர். இவர்களின் பிரதான இலக்கு நகர்ப்புறத்திலுள்ள அல்லது நகரை அண்மித்துள்ள மாணவர்கள், நன்றாக கல்வி கற்றவர், உயர் குடி குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே பகிடிவதையாளர் தமது உளவியல் ரீதியான பிரச்சினைகளை மறைக்கவே அதைப் பிறர் மீது திணிக்க முற்படுவதை இதன் மூலம் அறியமுடிகிறது. எனவே பகிடிவதையாளர் ஒரு உளவியல் நோயாளியாகவும் இருக்க முடியும் என்பது என் கருத்து.

 அத்தோடு பகிடிவதையாளர்கள் எங்கிருந்து உருவாகிறார்கள் என்றால் அவர்களுக்கு பாடசாலைகளும் தொழில்நுட்பக் கல்லூரிகளுமே ஆரம்பகளமாக அமைந்திருக்கின்றன. ஆனால் பல்கலைக்கழகத்தில் இந்நிலைமை வேறாக இருக்கிறது. மேலும் பல்கலைக்கழகத்தில் அரசியல் பகிடிவதைகளும் முக்கிய விடயமாக இருக்கின்றன. சில அரசியல் தொழிற்சங்கங்கள், மாணவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சில மாணவத் தலைவர்கள், அவர்களை கட்டுப்படுத்துபவர்களாகவும், வழிநடத்துபவர்களாகவும் இருக்கின்றனர். பின்னர் இவர்கள் பட்டம் பெற்றதும் குறிப்பிட்ட அரசியல் கட்சியில் உறுப்பினர்களாகி விடுகின்றனர்.
எனவே பகிடிவதையானது ஒரு மனிதனின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைக்கும் திறனுடையதாக இருக்கின்றது. அதிகமாக மனித வாழ்வை சீரழிப்பதாகவும் இருக்கிறது. கடந்த காலங்களில் பகிடிவதை மற்றும் குறைந்த மட்டத்தில் கல்வித்தேவையை பூர்த்தி செய்யும் உலக பல்கலைக்கழகங்களில் இலங்கைப் பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றிருந்ததுடன் மூன்றாம் உலக நாடுகளின் பல்கலைக்கழகங்களே இப்பட்டியலில் அதிகம் இடம்பிடித்திருந்தன.இதன்படி ஹாவார்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தையும் இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகம்-2690, மொரட்டுவை பல்கலை.-2324, பேராதனிய பல்கலை.-2615, ருஹூணு பல்கலை.-2552, திறந்த பல்கலை.- 4189 ஆகிய இடங்களை பெற்றிருந்தன.

உலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது மோசமான நிலையாகவே இருக்கின்றது. இலங்கையில் பகிடிவதைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுலில் இருக்கின்ற போதும் பெரும்பாலான பல்கலை. நிர்வாகங்கள் தம்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்க அதிக விடயங்களை மூடி மறைக்கின்றன. மாணவர்கள் தமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உண்மையை தங்களுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக் கொள்கின்றனர். இதனால் பகிடிவதையின் ஆபத்துகள் அதிகமாக சமூகத்தால் உணரப்படாமல், கணக்கில் எடுபடாத விடயமாக மாறியிருக்கிறது.

பல்கலை. நிர்வாகங்கள் கண்காணிப்புக் குழுக்களை அமைத்தாலும் விடுதிகளிலுள்ள மாணவர்களின் மலசல கூடத்தில் நடைபெறும் பகிடிவதைகளை எப்போதும் தடுக்க முடியாது. எனவே மாற்றம் உளவியல் ரீதியாகவே ஏற்படுத்தப்பட வேண்டும். பாடசாலைகள் முதல் பகிடிவதைகள் தடுக்கப்பட வேண்டும். சட்டங்களை உருவாக்குவதை விடவும் அதனை அமுல்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பகிடிவதைக்கு உடனடி நிவாரணியாக மாணவர் தோறும் ஆலோசனை வழங்கி அறிவூட்டப்படுதல் அவசியம்.

க. பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக